No icon

தேர்தலுக்குப் பின் தேவை அருள்தந்தை ம.டைட்டஸ் மோகன் - 18.04.2021

தேர்தலுக்குப் பின் தேவை

இனி தேர்தலின் மூலம் மாற்றமல்ல, தேர்தலுக்கு முன்பே மாற்றம் - அருள்தந்தை ம.டைட்டஸ் மோகன் 

பிரச்சார மமதையில் பேசிய பேச்சுகள், வெடித்த எதிர்ப்புகள், வறுத்தெடுத்த வார்த்தைகள், நடித்த நடிப்புகள், வடித்த நீலிக்கண்ணீர்கள், உதிர்த்த காமெடிகள்... அண்டவெளியில் பல நூறாண்டுகள் தொலைந்து போகாமல் நிலைபெறும் என்பதே அறிவியல் உண்மை. ‘எல்லாம் கடந்துபோகும்’ என்பதுபோல் நமது தேர்தலும் நிறைவேறிற்று. வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் எதிர்கட்சிகளுக்கு; முடிவு எப்படியிருக்குமோ?! என்கிற பதட்டம் உண்மை தொண்டர்களுக்கு. நல்லது நடந்தால் சரிதான் என்கிற ரீதியில் அன்றாட வேலைப்பாடுகளில் நம்மைப் போன்ற சாமானியர்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்ம கதி இதுதான் என்கிற விரக்தியில் இன்னும் பலர். முடிவுகளுக்காய் காத்திருக்கும் நமக்கு தீர்க்கமான முடிவெடுப்புகள் தேவை என்பதனை உரக்கச் சொல்லவே இப்பதிவு. இந்தக் கட்டுரை. 
தேர்தல் முடிந்ததும் நாம் எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளப் பழகி விடுகிறோம்; இல்லையேல், அவ்வப்போது முணுமுணுப்புகளை ஏற்படுத்தி காலத்தை நகர்த்திவிடுகிறோம். இதுவரை நடந்த தேர்தல்களுக்குப்பின் நமது நிலைப்பாடு பெரும்பாலும் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. இதனால் பதவி நாற்காலிகளில் அமர்பவர்களும் மீண்டும் மீண்டும் தவறிழைத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுகிறார்கள். தேர்தல் காலத்தில் நமக்குள் எழுந்த எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள், கோரிக்கைகள், அதிகாரப்பகிர்தல்கள் ஒருபோதும் மூடுவிழா கண்டுவிடக்கூடாது. மாற்றங்கள் நிகழும் வரை, சமத்துவம் மலரும் வரை, பேதமைகள் மறையும் வரை தொடர்ந்து மக்கள் சக்தியாய் நாம் எழுச்சி கொள்ள வேண்டும். ஆட்சிவெறியில் மக்களுக்கும் மண்ணிற்கும் பண்பாட்டிற்கும் எவ்விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஊடகங்களாய் செயல்பட வேண்டும். தேர்தல் நாட்களில் நமக்குள் எழுந்த வேகங்கள், கோபங்கள், ஆவேசங்கள், விழிப்புநிலைகள் தொடர்வதற்கு நமது இருப்பு நிலைதனை உணர்தல் அவசியம்.
புதைக்கப்பட்ட நம்பிக்கைகள் ஏராளம் - துளிர்விடுமா?
சனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல். தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுகிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இப்பல்லவிகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்? உலகின் மிகப்பெரிய சனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை மோடி அரசின் ஆட்சிமுறைகள் ஒரு தேர்தல் ஏதேச்சதிகார நாடாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்வீடனின் வி-டெம் நிறுவன ஆய்வு. இக்கூற்றை நாம் எளிதாக கடந்துவிட முடியாது. காரணம், ஒவ்வொரு தேர்தல்களிலும் திரைக்கு முன்னும் பின்னும் அரங்கேறும் காட்சிகள் இதனை உண்மையென உறுதிபடுத்துகின்றன.
வாக்குச்சீட்டு முறையிலிருந்து மாறி, வாக்கு இயந்திர அரசியலுக்கு மாறிய தருணமே தில்லுமுல்லுகள் அரங்கேறத் துவங்கின. ஆட்சியைப் பிடிக்க, ஆட்சிக்கு வந்து பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான எளிய வழியாக, கட்சித்தாவும் பிழைப்புவாதமாக, எலெக்சன் - செலக்சன் - கலெக்சன் என ஊழலில் தத்தளிக்கும் நிலையாக, குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் தளமாக இன்றைய அரசியல் இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா? இந்நிலையில் இந்தியா சனநாயக அமைப்பு முறையின் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் சூறையாடப்பட்டுள்ளது. இந்தப் பெருமை அனைத்து கட்சிகளையும் சாரும். குறிப்பாக மோடி அரசிற்கு ரொம்பவே பொருந்தும். மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சிமுறை. இத்தகு அடிமைநிலை தொடராமல் இருக்க மக்கள் சக்திகளாகிய நாம் தேர்தலுக்குப் பின்னரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது.
சிதைக்கப்பட்ட அறநெறிகள் - சீர்படுமா?
“முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும் திரைச்சீலையே நாடாளுமன்றம்” என்பார் புரட்சியாளர் லெனின். இன்றைக்கு பெரும்பாலான சட்டமன்றங்களும் அப்படித்தான் உள்ளன! மக்களுக்கானத் திட்டங்கள் என்பதைவிட கார்ப்பரேட்டுகளுக்கானத் திட்டங்களே இங்கு முன்னிலை பெறுகின்றன. பல்வேறு நேரங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை அதிகார வர்க்கம்தான் வரையறுத்து தருகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரியது. எனவேதான் தேர்தல் பரப்புரைகளில் எவ்வளவு போலி வாக்குறுதிகள். பதவிக்கு வந்தபின், “நாங்கள் செய்வதற்கு தயார். ஆனால், மத்திய அரசு அனுமதிக்கவில்லை, போதிய பொருளாதாரமில்லை...” என்பது போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லி காலத்தைக் கடத்துகின்றன கட்சிகள். இச்செயல் அநாகரீகம், தவறு என்பதனை மக்களாகிய நாம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்துதல் அவசியம்.
வாக்கு சேகரிக்க ஓடி ஓடி, தரைவழியில் வந்த கூட்டங்கள் அரியணையில் தஞ்சமடைந்தபின் பாதுகாப்பு வளையத்திற்குள் அல்லது வானூர்தியில் வலம் வந்து சென்றால்; ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அன்றாடம் மக்களோடு நடமாடி உறவாடி உணர்வுகளுடன் கலந்த தலைமைகளை உருவாக்கும் தளங்களை இனம் காண்பதும் உடனடி அவசியம். 
ஓட்டுப்போட்டாச்சு, யாரோ ஆட்சிக்கு வந்தாச்சு, இனி ஐந்து வருடம் தாண்டி தானே என்கிற மெத்தனத்தில் நமது கடமைகளை இனியும் நாம் தட்டிக் கழிப்பது சரியல்ல. இத்தகு மனநிலைகள்தான் நம்மை கடைசி நேரத்தில் நோட்டுக்கும் வேட்டுக்கும், உணர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் அடிமையாக்கி உரிமையிழக்கச் செய்கிறது என்கிற விழிப்பு நிலை பெற்று உடனடியாக இனிவரும் நாட்கள் குறித்த திட்டங்களைச் செயல்பாடுகளை முன்னெடுப்போம். 
தேர்தலுக்கு முன்பே மாற்றம் வேண்டுமெனில்
கடந்து காலங்களில் தேர்தல் கோலங்களால் ஏற்பட்ட சேதாரங்களைச் சரிசெய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு என்பதில் உறுதி கொண்டால் தேர்தலால் மாற்றம் வராது என்கிற உண்மையை உணர்வோம். மாறாக, நம் செயல்பாடுகளால் மாற்றங்களை உருவாக்குவோம். பின்வரும் திட்டங்களை ஆய்வோம். 
* ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்கதான் ஆட்சி செய்வோம்’ - இதுதான் சமீப கால பாஜக ஆட்சி தத்துவம். அதற்கு முதலாவது நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடக அடிவருடித்துறை போன்றவற்றை விலைக்கு வாங்கிவிடுகிறது. பின்னர் மாற்றுக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறது. உதாரணத்திற்கு 2016 - இல் அருணாச்சலப்பிரதேசம், 2017 - இல் மணிப்பூர், 2018 - இல் மேகாலயா மற்றும் மத்திய பிரதேசம், 2019 - இல் சிக்கிம் மாநிலம், சமீபத்தில் புதுச்சேரி. இப்படி கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே உரிமையான வாக்குரிமையை கேலிக்கூத்தாக்கும் நிலைக்கு முடிவு பிறக்க வேண்டும். கட்சித்தாவுதல் தடைச்சட்டம் நடைமுறையாக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது கட்சித்தாவுதல் செய்தால் தங்களது பொறுப்பிலிருந்து இயல்பாகவே விலக்குதலுக்கு உள்ளாவது சட்ட வரைமுறையாக மட்டுமல்ல நடைமுறையாகவும் வேண்டும். 
* பல்வேறு நேரங்களில் மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படாமல் இன்னொரு கட்சியினர் பொறுப்பிற்கு வந்தால் அந்த மாவட்டங்களை கண்டுகொள்ளாமலிருப்பது அல்லது அவற்றிற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது வரையறுக்கப்படாத நடைமுறையாக நாம் காண்கிறோம். குமரியின் பொன்னார் கூட சமீபத்தில் சொன்னார் : இனி குமரியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் மாவட்டம் வளரும். அது தவிர்த்து யார் பொறுப்பிற்கு வந்தாலும் ஒன்றும் நடக்காது. இதன் அர்த்தம் என்னவென்று சொல்லாமலே உங்களுக்கு நன்கு புரியும். இத்தகு மாற்றான் தாய் மனப்பாங்கிற்கு மக்கள் நாமே அவ்வப்போது பதில் கொடுக்கும் சக்திகளாக உருவாக வேண்டும். எந்தத் தலைவனும் தனது சொத்திலிருந்து வாரி வழங்கவில்லை, எல்லாம் நம் வரிப்பணம். நினைவிருக்கட்டும்.
* தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் கொடுக்கும் வாக்குறுதிகளை பார்க்கும்போது நம்மை சிந்திக்கத் தெரியாத, எதுவுமே புரியாத பைத்தியக்காரர்கள் என்றே கருதுகிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் வெற்று வாக்குறுதிகளுக்கு முடிவு கட்ட வேண்டுமெனில், அதற்கான நிதி ஆதாரங்களையும், செயல்முறைப்படுத்தும் காலவரையறைகளையும், அவற்றை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் கிடைக்கும் தண்டனைகளையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்து சான்றளிக்கும் வரையறை நடைமுறைக்கு வர வேண்டும். 
* மாநில சுயாட்சியை மீட்க வேண்டும். நமது மாநிலத்தின் தனித்தன்மைகள், பண்பாட்டு மரபுகளைப் பேணிக் காக்கும் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். தேவையற்ற விதங்களில் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இருப்பதை எல்லா கட்சிகளும் தோழமையோடு இணைந்து நின்று எதிர்க்கும் சூழல் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் இன்று மாநில அரசுகளின் வருவாயில் கை வைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலிருந்து வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தும் மத்திய அரசிற்கு நாம் பாடம் கற்பிக்க முடியும்.
* மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அதிகாரங்களின் ஒன்று குவிப்பு, மையப்படுத்துதல்கள் நிகழ்கிற தென்றால்  ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, இவை அனைத்தும் இந்துத்துவ அரசியலை அமல்படுத்துவதற்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவையும் கார்ப்பரேட் கொள்ளைக்கான ஓர் ஒருங்கிணைந்த சந்தையாக மாற்றுவதற்குமான வழி. எனவே அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அதிகாரப் பகிர்வும், பணிப்பகிர்வும், இணைந்த செயல்பாடும் காலத்தின் தேவை. இனியும் பணபலம் கொண்டவர்களை போட்டியில் நிறுத்தி பதவியில் அமரவைக்கும் அவலமும், வாரிசுகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் கேவலமான அரசியல் அணுகுமுறைகளையும் விலக்கிடுவோம். அடிமாடாய் ஆண்டாண்டு காலமாய் கட்சிக்காய் உழைக்கும் சாமானியனும் பணிவிடை புரியும் மனநிலையோடு பொறுப்புகளுக்கு வர வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூழல்களை உருவாக்குவோம்.
* குடும்ப  அரசியல், செல்வாக்கு அரசியல் மற்றும் பணபல அரசியல் மறைந்து மக்கள் அரசியல் மலர வளரும் தலைமுறைக்கு நல்ல தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவோம். அரசியல் பழக வழிகாட்டுவோம். நல்ல கருத்தியல் சித்தாந்தங்களைக் கற்றுக்கொடுப்போம்; எதையும் விமர்சனப் பார்வையோடு அணுகும் நடைமுறைகளை பயிற்றுவிப்போம். நம்மிடையே நேர்மையோடு, உண்மையோடு அனைத்துவிதமான மக்களின் நலனுக்காக, இயற்கையின் நலனுக்காக, அடிப்படை உரிமைகளுக்காய் உழைக்கும் தலைவர்களை இனம் கண்டு பாராட்டுவோம், ஊக்கப்படுத்துவோம்,அவர்களை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவோம். அவர்கள் பின்னால் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அணியமாவோம்.
* இறுதியாக, மத்தியில் ஆளும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்று, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட தமிழக மக்களாகிய நமது பறிக்கப்பட்ட உரிமைகளும்,பண்பாடுகளும், எல்லாருடைய நல்வாழ்விற்கான வழிமுறைகளும் காக்கப்பட வேண்டுமெனில் அவ்வப்போது இனியும் நாம் வீதியில் இறங்க வேண்டும். வீதியில் வீறுகொண்டு நடத்தப்படும்  ஜனநாயகத்திற்கானப் போராட்டங்களின் மூலமே நலமான வளர்ச்சி சாத்தியம். இனியும் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. இன்றே மாற்றம் விரும்பிய நம் செயல்பாடுகளைக் களம் காண அணியமாவோம். 

Comment