No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

நோயுற்றோரின் தனிமை, வேதனைகளை அனுபவித்துள்ளேன்

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மூச்சுவிடுவதற்கு படும் சிரமங்களையும், அவர்களின் தனிமையையும் வேதனைகளையும் தானும் 21 ஆம் வயதில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தபோது அனுபவித்துள்ளதாக நூல் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார்.

ஆஸ்டன் இவ்ரெய் என்ற எழுத்தாளரின் துணையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ’கனவு காண திரும்புவோம்’, (“சுவைடிசnயைஅடி ய ளடிபயேசந”) என்ற நூல் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் ஒருசில பகுதிகள், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளதில், திருத்தந்தையின் இந்த கூற்று காணப்படுகிறது.

தன் 21 ஆம் வயதில், புய்னோஸ் ஏர்ஸ், மறைமாவட்ட அருள்பணித்துவ பயிற்சி இல்லத்தில் பயின்றுகொண்டிருந்தபோது, நோயுற்று, வாழ்வா சாவா என போராடிக்கொண்டிருந்ததில் பல கண்ணோட்டங்கள் மாறியதாகவும், நுரையீரலின் மேல்பகுதி அகற்றப்பட்டபோது, மூச்சுவிடுவதில் உள்ள சிரமங்களை அனுபவித்துள்ளதாகவும், திருத்தந்தை அந்நூலில் கூறியுள்ளார்.

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலில் தன் நுரையீரலிலிருந்து ஒன்றரை லிட்டர் தண்ணீரும், பின்னர் நுரையீரலின் மேல்பகுதியும் நீக்கப்பட்டது குறித்த விவரங்களை அதில் வெளியிட்டு, கொரோனா நோயாளிகள் படும் துயர்களை தன்னால் உணரமுடிகிறது என திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தான் மருத்துவமனையில் அந்த இளவயதில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இரு செவிலியர்கள் தன்மீது பாசம் காட்டி தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டதாகவும், அவர்களுக்கு தான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் எனவும், அந்நூலில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

தன்னை மருத்துவமனையில் பார்க்க வந்தவர்கள் பலர், வெறும் வார்த்தையளவில், நம்பிக்கைகளை வழங்கிவிட்டுச் சென்றதும், தன் சிறுவயது ஆசிரியையாக இருந்த அருள்சகோதரி மரிய டோலரஸ் டோர்டோலோ அவர்கள், தன்னைப் பார்க்க வந்து, ’நீ இயேசுவைப் பிரதிபலிக்கிறாய்’ என்ற நம்பிக்கை சொற்களை சொல்லிவிட்டுச் சென்றதும்தன் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியதாகவும், நோயாளிகளை பின்னர் சந்திக்கச் சென்ற வேளைகளில் எல்லாம், தான் வார்த்தைப் பயன்பாட்டை குறைத்ததாகவும் திருத்தந்தை அந்நூலில் கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்கு மொழியைப் பயில சென்றபோதும், 1990 ஆம் ஆண்டிலிருந்து 92ஆம் ஆண்டுவரை கார்டோபோ நகரில் பணியாற்றியபோதும், தனிமையை அதிகம் உணர்ந்ததாகவும், அவ்வேளைகளில் செபத்திலும் புத்தக வாசிப்பிலும், குறிப்பாக, திருத்தந்தையர்களின் வரலாற்று நூலை வாசிப்பதில் ஆர்வம் பிறந்ததாகவும் திருத்தந்தை கூறுகிறார்.

துன்பம் நிறைந்த நேரங்கள், தனக்கு, செபிக்கும் வல்லமையையும், மன்னிக்கும் திறனையும், பொறுமையையும், ஏழைகள் மீது அக்கறையையும், வளர்க்க உதவியுள்ளன என கூறும் திருத்தந்தை, கடந்த கால தவறுகள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதில் தான் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அந்நூலில் கூறியுள்ளார்.

Comment