No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

’ Zayed' விருதினை பெறுவோருக்கு திருத்தந்தை பாராட்டு

பிப்ரவரி 4 ஆம் தேதி  ’மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்’ முதல் முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில் வழங்கப்பட்ட சையத் (Zayed') விருதினைப் பெற்ற இருவருக்கு தன் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் டுவிட்டரின் மூலம் தெரிவித்தார்.  

உலகளாவிய மனித உடன்பிறந்த நிலை அறிக்கையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும், ஷ்யலநன விருதினை பெற்றனர் என்றும், அவர்களுக்குப் பின் இந்த விருது, லத்திஃபா இபின் ஷியாட்டன் (Latifah Ibn Ziaten) என்ற பெண்மணிக்கும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்றும் நீதிபதி அப்தெல் சலாம் அவர்கள், அறிவித்தார்.

ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்

ஐ.நா. அவையின் ஒன்பதாவது தலைமைப் பொதுச்செயலராகப் பணியாற்றும் போர்த்துக்கல் நாட்டவரான அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கடந்த ஆண்டு முழுவதும் இவ்வுலகம் கோவிட்-19 பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருந்த வேளையில், உலகெங்கும் போர் நிறுத்தம் நிலவவும், வறுமை நாடுகளின் கடன்கள் நீக்கப்படவும் குரல் கொடுத்தவர் என்ற அடிப்படையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக நீதிபதி அப்தெல் சலாம் அவர்கள், அறிவித்தார்.

"நான் இந்த விருதை, மிகுந்த பணிவுடன் பெற்றுக்கொள்கிறேன். லத்திஃபா இபின் ஷியாட்டன் அவர்களுடன் நான் இதைப் பெறுவதை மேன்மையானதாகக் கருதுகிறேன். இவ்விருதை, ஐ.நா.வில் பணியாற்றும் அனைவரின் சார்பிலும் நான் பெற்றுக்கொள்கிறேன்" என்ற சொற்களை, கூட்டேரஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

இமாத் (Imad) கழகத்தை நிறுவிய லத்திஃபா இபின் ஷியாட்டன்

மொரோக்கோ நாட்டில் பிறந்த லத்திஃபா இபின் ஷியாட்டன் அவர்கள், 1977 ஆம் ஆண்டு, தன் 17வது வயதில், பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அவரது 5 குழந்தைகளில் ஒருவரான இமாத், பிரான்ஸ் நாட்டின் துணை இராணுவத் துறையில் பணியாற்றிய வேளையில், 2012ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்டார்.

தன் மகனைக் கொலைசெய்த மொகமத் மேரா என்பவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர் கொலை செய்ததற்கு காரணம் கேட்டபோது, இளையோர் சந்திக்கும் பாதுகாப்பற்ற உலகைக் குறித்து லத்திஃபா உணர்ந்தார்.

வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்திருக்கும் இளையோர் பிரான்ஸ் நாட்டில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையால் துன்புறுவதை அறிந்த லத்திஃபா அவர்கள், கொலையுண்ட மகன் இமாத் அவர்களின் பெயரால், ஓர் அறக்கட்டளையை உருவாக்கி, குடிபெயர்ந்த இளையோருக்கு உதவிகள் செய்துவருகிறார்.

தான் பெறும் விருதுக்கு ஷ்யத் குழுவுக்கு நன்றி கூறிய லத்திஃபா அவர்கள், உலகெங்கும் குடிபெயர்வால் துன்புறும் இளையோரைக் குறித்த புரிதல் வளர்வதற்கு, இந்த விருது, ஒரு வழியாக அமைந்தால் தான் மகிழ்வேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பிப்ரவரி  4 ஆம் தேதி பிற்பகல், உரோம் நேரம், 2.30 மணிக்கு நடைபெறும் இணையவழி மெய் நிகர் கூட்டத்தில் இந்த விருதினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும் வழங்கினர். இந்த மெய் நிகர் கூட்டம், வத்திக்கான் செய்தித்துறையால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Comment