No icon

 கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

இந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்

இந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்


நமது நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. நமது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மிக பிரமாண்டமான தேர்தல் வழிமுறை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 90 கோடி  மக்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதற்குச் செல்ல உள்ளனர். ஐரோப்பியர்களையும் ஆஸ்திரேலியர்களையும் ஒன்று சேர்த்தால்கூட இவர்களின் எண்ணிக்கை அதிகமே! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரசும், இயல்பான-அமைதியான தேர்தல்நடைமுறையை, முன்பு இருந்ததைவிட முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால் அது சீர்மையடைந்துள்ளது. நாம் நம் நாட்டைக் குறித்து நாம் அனைவரும் உண்மையிலேயே பெருமை கொள்கிறோம். நடைமுறைச் சூழ்நிலைகளைப் பின்பற்றி தழுவிக்கொள்ள ஏனைய நாடுகளுக்கு இந்தியா உண்மையிலே ஒரு முன் மாதிரியாக உள்ளது.

நமது இறைமக்களின் மேய்ப்பர்களாக, ஆயர்களாகிய நாங்கள் இந்த மேய்ப்புப் பணிக் கடிதத்தின் வழியாக எங்கள் எண்ணத்தைத் தெரிவிப்பதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.  இதனால் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களோடும் கைகளைக் கோர்த்து, நமது சமூகம் நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க இன்னும்  ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க முடியும். 

வெளிப்படையாக,  நாங்கள் கத்தோலிக்கத் திருஅவையான தம்மை எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையதாகவோ சார்புடையதாகவே அடையாளப்படுத்திக்கொள்ளாது என்பதை மிகவும் வெளிப்படையாக தெளிவுப்படுத்திக் கொள்ள விழைகிறோம்.  இதுவே கத்தோலிக்கத் திருஅவையின் வரையறுக்கப்பட்ட கொள்கையாகும்.  இருந்தபோதிலும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாக எம் மக்களுக்கு சில பொதுவான வழிகாட்டுதல்களை நமது நாட்டின் நலன் கருதி தரவேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.  நமது நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் மிகச் சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.  உள்கட்டமைப்பும் பொதுமக்களுக்கான வசதிகளும் ஒருபடி முன்னேறியுள்ளது. நாம் வேகமாக வளரும் பொருளாதரத்தைக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு அரசும் கடந்த பல ஆண்டுகளாகவே  அதன் அதீத வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது.  ஓர் எதிர்காலத்திற்கான நம்பிக்கை உள்ளது. அதே சமயம் நாம் கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு துறைகளும் உள்ளன.  ஏழைக்கும் பணக்காரனுக்குமான பெரிய இடைவெளி இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள்,  அவர்கள் சம்பாதிப்பதைக் கொண்டு வாழ்வது என்பதே மிகக் கடினமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளும் விவசாயத் துறைகளில் உள்ளவர்களும் மிகப்பெரிய மன அழுத்தத்தில் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சமூகத்தை வழிநடத்துக்கூடிய ‘அறம்’ என்பது அதற்குரிய முதன்மை நிலையை இழந்து வருகிறது. பல்வேறு முடிவுகளுக்கு பின்னால், அனைத்தையும் இயக்கும் சக்தியாக பொருளாதாரம் இருக்கிறது. இந்தியா ஓர் ஆன்மிக நாடு. இருப்பினும் கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளிம்பிற்கு தள்ளப்படுகிறார். இந்தப் பின்னனியில்தான்,  வரலாற்றின் இந்தத் தருணத்தில்தான் நாம் தேர்தலுக்குச் சென்றுக்கொண்டிருக்கிறோம். 

முதலாவதாக. நமது வாக்குரிமையை செயல்படுத்துவது நம் கடமை என்பதை நாம் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.  பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும்  குடிமகளுக்கும்  வாக்களிக்க உரிமையுண்டு. வாக்களிப்பதும் கூட நாம் நாட்டிற்கு செய்ய வேண்டிய ஒரு புனிதக் கடமை.  நமது பங்குத்தந்தையர் அனைவரும் இந்தக் கடமையைக் குறித்து நமது மக்களுக்கு வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது. ஆகையால், இந்தத் புனிதக் கடமையை நிறைவேற்றவும் இதன் மூலம் நமது நாட்டிற்கு நல்வழிகாட்டுவதில் ஈடுபடவும் நமக்கு நாமே, நமக்கு பிள்ளைகளுக்காக, நமது நாட்டிற்காக கடமைப்பட்டிருக்கிறோம்.
நமது நாட்டிற்கு எவை நன்மைப் பயக்கும் என்பதைப் பற்றி ஒவ்வொரு சமூகமும் செபிக்கவும் செபத்தில் நுணுக்கமாக தேர்ந்து தெளிந்திடவும் நான் வேண்டுகிறேன்.  இந்தப் பொதுத்தேர்தல் மக்களுக்குச் செவிசாய்க்கிற, அவர்கள்தம் கவலைகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ளக் கூடிய, பலன் தரும் விதமாக பதிலிறுக்கக்கூடிய   தலைவர்களை நமக்குத் தரும் என்பதை கத்தோலிக்கத்  திருஅவை நம்புகிறது.

தங்கள் அதிகாரம் என்பது தொண்டாற்றுவதற்கே என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய தலைவர்களே இந்தியாவில் நமக்கத் தேவைப்படுகிறார்கள்.  எனவே
1. ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உதவி, அவர்கள் தம் மாண்பைப் பாதுகாத்து, நம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு பங்களிப்பைச் செய்யும் விதத்தில் அவர்களுக்கு ஆற்றல்தந்து, அவர்களை முன்னேற்றுவதற்காக செயல்படக்கூடிய பொருளாதாரத்திற்காக உழைத்தல்
2. அனைத்து மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முழுக்க முழுக்க பாதுகாப்பானச் சூழலை உறுதிச் செய்தல்.. 
3. நீர், நிலம், வனங்கள்ஆகியவற்றின்மீது பழங்குடியினருக்கு உரிய உரிமைகளைப் பாதுகாத்தல்
4. குறிப்பாக தலித்துகளைப் பாதுகாத்து, அவர்கள் எதற்கு எதிராகவும் பாகுப்படுத்தப்படவில்லை என்பதை உறுதிச் செய்து  எல்லா தலித்துகளுக்கும் சம உரிமைகளைத் தருதல் 
5. பல்சமய உரையாடல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் வழியாக சமூக ஒற்றுமையையும் தேச ஒற்றுமைக்கான உணர்வையும் வளர்த்தெடுத்தல் 
6. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, நம் எதிர்காலத் தலைமுறைக்காக இயற்கையின் வளங்களைப் பாதுகாத்தல்.. 
 இவையெல்லாம் நம் நாட்டின் பிரச்சினைகள். இவற்றோடு வட்டார ரீதியாகவும் குறிப்பிட்ட தேவைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆலயத்திலும் இல்லத்திலும் செபத்தில் நேரத்தைச் செலவழிக்க நம் இறைமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.  இதன் மூலம் இந்தியாவிற்கும் நமது பொது நலனுக்கும் எது தேவை என்பதைத் தேர்ந்து தெளிந்து அறிந்திட இயலும். ஒரு நல்ல அரசுக்காக நாம் அனைவரும் பேரார்வத்துடன் செபிக்க வேண்டும்.  கடவுள் அவர் தம் திருமகன் இயேசுவை நாம் வாழ்வு பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாழ்வுப் பெரும்பொருட்டு அனுப்பினார் (யோவா 10: 10).  நம் ஆண்டவரின் வலிமையோடு தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு சிறந்த இந்தியாவிற்காக உழைக்க வேண்டும். நம் நாட்டை எப்பொழுதும் பாதுகாக்கவும் அளவில்லாத இறையருளை நமக்குப் பெற்றுத்தரவும் நம் நாட்டை அன்னை மரியாவிடம் நாம் ஒப்புக் கொடுக்கிறோம்.
இறைவன் இந்தியாவை ஆசிர்வதிப்பாராக. 

கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

தலைவர், 
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை

மார்ச் 14, 2019                              

Comment