No icon

அருள்பணி. ஆ. தைனிஸ், க.ச.

புனித தேவசகாயம்

இளமைப்பருவம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் வாசுதேவன் நம்பூதிரி மற்றும் தேவகி அம்மாள் ஆகியோரின் மகனாக 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் நட்டாலம் என்ற ஊரில் தாய்வழி மரபைப் பின்பற்றும் இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். நட்டாலம் தமிழகக் கேரள எல்லையில் அமைந்திருப்பதால் இங்கு வாழ்கின்ற மக்களால் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. நீலம் என்ற நீலகண்டன் பிள்ளை இந்த இரு மொழிகளிலும் புலமை பெற்றவராக இருந்தார். இவரது தாய்மொழி மலையாளமாக இருந்ததால் வீட்டில் மலையாள மொழியையும், வெளியில் தமிழ் மொழியையும் பேசினார். இவரது தந்தை வாசுதேவன் நம்பூதிரி கேரளாவின் காயம்குளம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பிராமணர். மேலும் இவர் திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் ஆலயக் குருக்களாகப் பணியாற்றினார். இவரது தாய் திருவட்டாறு பகுதியைச் சார்ந்தவர். நீலகண்டன் தனது தாய்வழி இனமான இந்து நாயர் முறைப்படித் தனது தாய்மாமனால் வளர்க்கப்பட்டார். நீலம் அல்லது நீலகண்டன் என்றால் இந்துக்கடவுள் சிவனைக் குறிக்கும். நீலகண்டன் சிவன் மற்றும் பத்ரகாளியின் தீவிர பக்தனாக விளங்கினார். வடமொழி மற்றும் வில்வித்தை, வர்மக்கலைகளைச் சிறுவயதிலே கற்றுத் தேர்ந்தார். சிறுவயது முதல் தீமைகளை அகற்றி நல்லொழுக்கத்துடன் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். சுறுசுறுப்புடன் செயல்பட்டு இயற்கையாக, தீமைகளை எதிர்த்துப்போராடுகின்ற பண்பினைப் பெற்றிருந்தார். தனக்குக் கிடைத்த உயர்கல்வியினாலும், நுணுக்கமான அறிவுத்திறனாலும் சிறந்த மனிதராகத் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

அரண்மனைக் கருவூல அலுவலர்

திருவிதாங்கூர் அரசர், பிரபுக்கள் குடும்பத்தினர் மற்றும் போர்ப்படைத் தளபதிகள் நாயர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். எனவே நீலகண்டனின் நாயர் குடும்பமும் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா மன்னரின் அரசவையில் செல்வாக்குடன் திகழ்ந்தது. நீலகண்டன் இளம் வயதில் ஒரு போர் வீரனாகத் தனது பணியைத் துவங்கினார். அதன்பிறகு பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி திருக்கோவில் அதிகாரியாகப் பணியாற்றினார். இறுதியாக அரண்மனையில் கருவூல அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். துடிப்பாகவும் விவேகத்துடனும் செயல்பட்ட நீலகண்டன் திருவிதாங்கூர் திவானாகிய இராமையன் தலவா என்ற அதிகாரியின் கீழ் மாநிலப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று உதயகிரிக் கோட்டையில் பணியாற்றி வந்தார். இந்நாட்களில் தனக்கு விருப்பமான சிவன் மற்றும் ஆனந்தவள்ளி  தெய்வங்களுக்கு  உதயகிரிக் கோட்டையில் தினசரி பூஜை மற்றும் வழிபாடு நடத்தி வந்தார். மேலுமாக, தான் பிறந்த ஊரான நட்டாலத்தில் அமைந்த திருக்கோவிலின் திருப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடை வழங்கும் தர்மகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

கிறிஸ்தவ சமய அறிமுகம்

1741 ஆம் ஆண்டு எஸ்தாக்கியோ தெ லனாய் என்ற கப்பற்படை தளபதியின் கீழ் டச்சுப் படைகள் குளச்சல் துறைமுகத்தைக் கைப்பற்றுவதற்காக திருவிதாங்கூர் படைகளுடன் போரிட்டனர். இப்போரில் எஸ்தாக்கியோ தலைமையிலான டச்சுப்படைகள் தோற்கடிக்கப்பட்டு, திருவிதாங்கூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பின்னாட்களில் அரசனால் மன்னிப்புப் பெற்ற டச்சு வீரர்கள் திருவிதாங்கூர் போர்ப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அரசர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கை பெற்ற டச்சு கப்பற்படை தளபதி எஸ்தாக்கியோ திருவிதாங்கூர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்நியமனத்திற்குப் பிறகு திருவிதாங்கூர் படைகள் எஸ்தாக்கியோவின் தலைமையில் பல வெற்றிகளைக் குவித்தன. எஸ்தாக்கியோ உதயகிரிக் கோட்டையின் பொறுப்பை ஏற்றிருந்தார்.  அந்நாட்களில் அரசவையில் முக்கியப் பொறுப்புகளுடன் உதயகிரிக் கோட்டையில் வலம்வந்த நீலகண்டன் எஸ்தாக்கியோவின் செயல்பாடுகள் அவரின் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மறை சார்ந்த வழிபாடுகளைக் கண்டு அவர்மீது பெரும் மதிப்புக் கொண்டார். எனவே கிறிஸ்தவ மறையைப் பற்றி ஆழமாக எஸ்தாக்கியோவிடமிருந்து தெரிந்து கொண்டு கிறிஸ்துவின் மீது பற்றுக்கொண்டார். ஒருநாள் நீலகண்டன் பிள்ளை மிகுந்த கவலையில் இருந்ததைக் கண்ட தெ லனாய் அதற்கான காரணத்தைக் கேட்க, அதற்கு நீலகண்டன் தமது குடும்பத்துக்குச் சொந்தமான கால்நடைகள் மற்றும் பயிர் பச்சைகள் அடிக்கடி இழப்புக்குள்ளாகி பெரும் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துவதாக வருத்தப்பட்டார். அப்போது நீலகண்டனிடம் தெ லனாய் திருவிவிலியத்தில் வரும் யோபுவின் கதையைச் சொல்லி கிறிஸ்தவ சமயத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு நீலகண்டன் கிறிஸ்துவின் மீது கொண்ட ஆர்வம் அவரைக் கிறிஸ்தவ மறையை ஏற்பதற்கு உந்தித்தள்ளியது.

கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

நீலகண்டனின் ஆர்வத்தை அறிந்த எஸ்தாக்கியோ அவரை கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்திட இன்றைய தூத்துக்குடி மறைமாவட்டத்திற்குட்பட்ட  வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் பணியாற்றிய இயேசு சபைக் குரு ஜான் பாப்டிஸ்ட் புத்தாரி அவர்களிடம் அனுப்பி வைத்தார். "எவ்வித வற்புறுத்தலுமின்றி ஆத்ம தாகத்துடன் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மனமுவந்து வந்திருக்கிறேன். எனக்கு, திருமுழுக்குத் தாருங்கள்" என நீலகண்டன் பிள்ளை அருள்தந்தையைக் கேட்டுக்கொண்டார். உரிய மறை பயிற்சிக்குப் பிறகு, 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நீலகண்டன் கத்தோலிக்கத் திருமறையில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். கடவுள் உதவி செய்கிறார் என்னும் பொருள்படும் "லாசரஸ்’ என்ற பெயரை மாற்றி, தமிழில் "தேவசகாயம்’ என்ற கிறிஸ்தவப் பெயரால் அழைக்கப்பட்டார். கிறிஸ்தவ மறைக்குத் தம் மனைவி பார்கவி அம்மாளையும் அழைத்துவந்து ஞானப்பூ அம்மாள் என்ற பெயரில் திருமுழுக்குப் பெறச் செய்தார். ஞானப்பூ அவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் இலந்தவிளைப் பகுதியில் உள்ள குஞ்சுவீடு என்ற ஊரைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ மறையை ஏற்ற பிறகு ஞானப்பூ அம்மாள் தனது உறவினர்களோடு தங்குவதற்குத் தயங்கி நாட்டின் உட்புறப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மறைவாக வாழ்ந்தார். தேவசகாயம் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.

பிராமணக் குருக்களின் குற்றச்சாட்டு

கிறிஸ்தவ மறைக்கு மாறிய தேவசகாயம் அவரது சமூகத்தினரின் கோபத்திற்குள்ளானார். அதிலும் குறிப்பாக,  பத்மநாபபுரம் பத்மநாப சுவாமி ஆலய பிராமணக் குருக்கள் தேவசகாயத்தைப் பற்றி பல்வேறு அவதூறுகளைப் பரப்பினர். நாயர் குலத்தைச் சேர்ந்த தேவசகாயம், கிறிஸ்தவ மறையைத் தழுவிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுடன் சகோதர மனப்பான்மையுடன் உறவாடினார். உயர்குடியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இதனால் தேவசகாயத்திடம் வெறுப்புடன் நடந்துகொண்டனர். உயர்குடியைச் சேர்ந்த இந்துக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவக்கூடாது என்று அன்றைய திருவிதாங்கூர் அரசாணையை மேற்கோள்காட்டி மீண்டுமாக அவரை இந்துமதத்திற்கு வந்துவிடுமாறு வற்புறுத்தினர். ஆனால், அவரோ அவற்றைப் புறந்தள்ளவே காழ்ப்புணர்ச்சிகொண்ட பிராமணர்கள் இச்செய்தியை மன்னரிடம் தெரிவித்தனர். தேவசகாயத்தைத் தொடர்ந்து பலரும் கிறிஸ்தவ மறையைத் தழுவவே, அச்சமடைந்த பிராமணர்கள் அரசன் மார்த்தாண்ட வர்மனை சந்தித்துத் தேவசகாயத்தைக் குறித்த தங்கள் அச்சத்தையும், ஆட்சேபனையையும் தெரிவித்தனர். இந்நிலை தொடர்ந்தால் நமது வேதங்கள் மற்றும் புராணங்களைக் கிறிஸ்தவர்கள் முடிவுக்குக் கொண்டுவந்து விடுவார்கள். மேலுமாக நமது புகழ்பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோவிலையும் இழுத்து மூடவேண்டிய இழிநிலை ஏற்படும் என அரசனிடம் முறையிட்டனர். திருவிதாங்கூர் திவான் இராமையன் தலவா அவர்களிடம் ஐரோப்பியர் மற்றும் அரசின் எதிரிகளுடன் மிக நெருக்கமாக உறவாடி அரசு இரகசியங்களைக் கசிய விடுவதாக, பொய்க்குற்றம் சுமத்தினர். பிராமணர்களை பெரிதும் மதித்த அரசன் மார்த்தாண்ட வர்மன் அவர்களின் மனம் நோகாதவாறு உடனடியாக, தேவசகாயத்தைச் சிறையிலடைக்குமாறு கட்டளையிட்டான். தேவசகாயம் கைது செய்யப்படப்போவதை முன்கூட்டியே அறிந்த தளபதி எஸ்தாக்கியோ அவரை உடனடியாக வடக்கன்குளத்திற்கு அனுப்பிவைத்து, அருள்தந்தை புத்தாரி அவர்களிடம் நல்லதொரு பாவசங்கீர்த்தனம் செய்ய வைத்தார்.

தேவசகாயம் கைதுசெய்யப்படல்

தேவசகாயத்தின் அரச அலுவலர் உடைகள் அகற்றப்பட்டு, கைது செய்யப்பட்டு அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டார். அங்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள், உடன் அலுவலர்கள், கிறிஸ்தவ மறையை விட்டுவிடுமாறு அவரிடம் மன்றாடினர். ஆனால், தேவசகாயமோ மனஉறுதியுடன் "கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுவேன்" என்றார். "உண்மையான மறைக்காக என்னுயிரை இழந்தேன் என்றால் எனக்கு விண்ணக வாழ்வு நிச்சயமுண்டு" என்றார். இந்நிகழ்வைக் கண்ட திவான் இராமையன் தலவா அவர்கள் அரசனிடம் "தேவசகாயம் தனது புதிய மறையில் மிகுந்த உறுதியோடு இருக்கின்றான்" எனத் தெரிவித்தார். மீண்டுமாக அரசன் தேவசகாயத்திடம் பேசிப்பார்த்தார். ஆனால் எதற்கும் இடங்கொடுக்காமல் தான் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தார். இதனால் சினங்கொண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மன் தேவசகாயத்தைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டார். அச்சிறை ஐந்து ஜாண் அளவு உயரமும் ஓர் அடி அகலமும் கொண்டது, அதற்கான நுழைவாயில் இரண்டு ஜாண் உயரத்தைக் கொண்டதாக இருந்தது. இவ்வாறு ஒரு சிறிய இருட்டறையில் தேவசகாயம் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். இவ்வாறு பல மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டும் தேவசகாயம் தனது மறையின் இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்ததால் நம்பிக்கையிழந்த மன்னன் தேவசகாயத்தின் கீழ்ப்படியாமையை அரச துரோகமாகக் கருதி அவருக்கு மரண தண்டனை விதித்தான்.

கொடிய வாதைகள்

தேவசகாயத்தைக் கொல்வதற்கு முன் ஏனைய நாட்டு மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கும் வகையில் தேவசகாயத்தை எருமை மாட்டின்மீது பின்னோக்கி அமர்த்தி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுத்தில் எருக்கம்பூ மாலை அணிவித்து அவமதித்து அவரை ஊர் ஊராகப் பதினாறு நாட்கள் அழைத்துச் சென்று கேலியும் கிண்டலும் செய்தனர். பல நேரங்களில் எருமை மாட்டிலிருந்து கீழே விழ பலத்த காயங்கள் அவர் உடலில் ஏற்பட்டன.  ஒரு சிலர் அவர்மீது மண்ணையும் கற்களையும் வாரி இறைத்தனர். கிறிஸ்தவ மறையைப் புறக்கணிக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்தினர். அதே நேரத்தில்  தேவசகாயம் இழுத்துச்செல்லப்பட்ட இடங்களிலெல்லாம் அவரிடம் ஆசி பெற்ற மக்களுக்குப் புதுமைகள் நிகழ்ந்தன. பெருவிளை என்ற இடத்தில் அவரைக் கட்டி வைத்திருந்த பட்டுப்போன வேப்பமரம் ஒன்று துளிர்விட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்நிகழ்வினால் தேவசகாயத்தினுடைய புகழ் மக்களிடையே வேகமாகப் பரவியது. இதனால் அச்சமடைந்த அரசன் வெளிப்படையாக அவரைக் கொலை செய்யாமல் இரகசியமாகக் கொலை செய்யுமாறு வீரர்களுக்கு ஓலை அனுப்பினான். தேவசகாயத்தைக் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தயாரித்த தளபதி எஸ்தாக்கியோ நடப்பதையெல்லாம் கண்டு மிகுந்த வேதனையடைந்தார். மறைமுகமாக தேவசகாயத்திற்குச் செய்தியனுப்பி உறுதியுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். எஸ்தாக்கியோவின் செயலைக் கேள்விப்பட்ட மன்னன் மார்த்தாண்ட வர்மன் அவரை அழைத்து எச்சரித்தான். சிறைச்சாலையில் தன்னைச் சந்தித்த தனது அன்பு மனைவி ஞானப்பூவிடம் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியுடன் இருக்குமாறு தேவசகாயம் கேட்டுக் கொண்டார்.

தேவசகாயம் உடல் முழுவதும் இரும்புச்சங்கிலிகளை இணைத்து இழுத்துச் சென்றனர். இதனால் நடக்கமுடியாமல் அடிக்கடித் தடுமாறி விழ உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. இழுத்துச் சென்ற வீரர்கள் அவரை ஆலமர விழுதுகள், புளியமரக்குச்சிகள் மற்றும் முட்களால் அடித்துத் துன்புறுத்தினர். இதனால் அவரது உடலில் 35 இடங்களில் சதை கிழிந்து தொங்கியது. மேலும், நாட்கள் செல்லச்செல்ல, தேவசகாயத்திற்குக் கொடுமைகள் அதிகரித்தன. சிறைச்சாலையில் அவரை அடைத்து வைத்து மிளகாய் மற்றும் மிளகு கலந்த நீரைக் கொதிக்க வைத்து அவற்றிலிருந்து வெளிவரும் காரநெடியுடைய நீராவியினால் கொடுமைப்படுத்தினர். கட்டெறும்புகள் இருக்கும் இடத்தில் அவரைக் கட்டிவைத்தனர். மேலுமாக அவரது சிறையில் நச்சுப்பாம்புகளையும், தேள்களையும் வீசியெறிந்தனர். மூன்றாண்டு கால சிறை வாழ்க்கையில் ஒருமுறை கூட அவரைக் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு அனைத்துவிதமான வாதைகளையும் உறுதியுடன் தாங்கினார்.

இறைவன் அருளிய நீர்ச்சுனை

அவரது கண், மூக்கு, வாய், முகம், உடல் போன்ற பகுதிகளில் மிளகாய்ப்பொடியைத் தூவிக் கொடுமைப்படுத்தினர். ஆனால், மிளகாய்ப்பொடியின் எரிச்சல், நெடி அவரை வாட்டாமல் அவரின் காயங்களையெல்லாம் குணமாக்கியதுதான் ஆச்சர்யம். ஆனால், தேவசகாயம் இக்கொடுமை களையெல்லாம் வாய்மூடி மிகுந்த பொறுமையுடன் இயேசுவின் பாடுகளோடு சேர்த்து ஒப்புக்கொடுத்து மன்றாடிக் கொண்டே வந்தார். உடல் முழுவதும் இரத்தம் கொட்டியது. புலியூர்க்குறிச்சி என்ற ஊரிலுள்ள ஒரு பாறையின்மீது அவரை அமரவைத்தனர். அந்நேரத்தில் தாகத்தால் தேவசகாயம் துடித்தார். அப்போது துர்நாற்றம் வீசக்கூடிய நீரை ஓர் உடைந்த பானையோட்டில் வழங்கினர். ஆனால் அதைக் குடிக்கமுடியாமல் தவித்த தேவசகாயம் இறைவனிடம் மன்றாடி, தனது முட்டியினால் அப்பாறையின்மீது மோதினார். அதிலிருந்து நீர்ச்சுனை சுரந்தது. அதைப்பருகி தனது தாகம் தணித்ததாக நம்பப்படுகிறது. இன்று இவ்விடம் முட்டியடிச்சான்பாறை என அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் சிறை வைக்கப்பட்டபோது படைவீரர் ஒருவர் தன் மனைவியுடன் வந்து தனக்குக் குழந்தைவரம் வேண்டுமென தேவசகாயத்தை மன்றாடினார். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே அவ்வீரர் தேவசகாயத்தை மதிப்புடன் நடத்தினார். மேலும் சில படைவீரர்களின் உதவியால் மதுரை மி­ஷன் தலைவர் அருள்தந்தை பீமந்தல் சே.ச., மற்றும் கோட்டாறு பங்குத்தந்தை தொமாசோ தெ பொன்சேகா ஆகியோர் தேவசகாயத்தை இரவில் சந்தித்து உறுதிப்படுத்தினர். மேலும் ஒப்புரவு அருள்சாதனம் தந்து அவருக்கு நற்கருணை வழங்கினர். இங்கு இவரது கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரர்கள் தேவசகாயத்தை தப்பித்துச் செல்லும் வாய்ப்பை வழங்கினர். இதைப்பற்றி வடக்கன்குளம் பங்குத்தந்தை புத்தாரி சே.ச., மற்றும் எஸ்தாக்கியோ தெ லனாய் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார். அதற்கு அவர்கள் தப்பித்துச் செல்வது கோழைத்தனமாகும். ஆகவே துணிவுடன் விசுவாசத்திற்காக மறைசாட்சி மரணத்தைத் தழுவுவதே சிறந்தது என அறிவுறுத்தினர். அவர்களது பதிலால் மகிழ்ச்சியடைந்த தேவசகாயம் மறைசாட்சி மரணத்தை எதிர்கொள்ளத் துணிவு கொண்டார். தனது வேதனைகளைக் குறித்து வருத்தப்பட்ட மக்களிடம் இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசினார். இவ்வாறு நூற்றுக்கணக்கான மக்கள் அவரை அடிக்கடி சந்தித்துப் புனிதரின் செப உதவியைப் பெற்றுச் சென்றனர்.

காற்றாடி மலையில்  தேவசகாயம்

புனித தேவசகாயத்தை அடைத்து வைத்திருந்த இடம் செபக்கூடமாக மாறவே அரசன் அங்கிருந்து அவரை அகற்றி ஆரல்வாய்மொழிக்கு இழுத்துச் செல்லக் கட்டளை பிறப்பித்தான். பிரம்மாபுரம், மணக்காரா, அப்பட்டுவிளை, பெருவிளை போன்ற இடங்களில் உள்ள மரங்களில் இரவு, பகல், வெயில், மழை என்று பாராமல் ஏழு மாதங்களுக்கும் மேலாக சரியான உணவின்றி கட்டிவைத்து வதைத்தனர். ஒருநாள் தேவசகாயத்தின் கனவில் குழந்தை இயேசு, புனித கன்னி மரியாள் மற்றும் புனித சூசையப்பர் தோன்றினர். இக்கனவைப் பற்றி உடனடியாக வடக்கன்குளம் பங்குத்தந்தைக்கு சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர் அக்காட்சியில் கண்டது வடக்கன்குளம் பாதுகாவலரான திருக்குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காட்சிக்குப் பிறகும் ஏராளமான இந்துக்கள் ஒவ்வொருநாளும் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சந்தித்து ஆசீர் பெற்றுச் சென்றனர். பலர் இவரது புனிதப்பாடுகளைக் கண்டு கிறிஸ்தவர்களாகினர். மூன்று ஆண்டுகளாகத் தகுந்த உணவு நீரின்றி கொடுமைப்படுத்தப்பட்டபோதும் அவரது உடல் சீராகவும், பேச்சுத் தெளிவாகவும் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவரது கிறிஸ்தவ நம்பிக்கை ஒவ்வொரு நாளும் ஆழப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் கண்ட பிராமணர்கள் மிகுந்த கோபத்திற்குள்ளாகி மீண்டுமாக அரசனிடம் சென்று தேவசகாயத்தைப் பற்றி முறையிட்டனர்.

மன்னன் மார்த்தாண்ட வர்மனின் ஆணையின்படி திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள காற்றாடி மலைப்பகுதிக்கு கொலை செய்யப்படுவதற்காக இழுத்து வரப்பட்டார். உடல் முழுவதும் சங்கிலிகளால் இணைக்கப்பட்டதால் நடக்கமுடியாமல் தடுமாறவே படைவீரர்கள் சங்கிலிகளை இரண்டு மரங்களில் இணைத்து விலங்குகளைத் தூக்கிச் செல்வதுபோல அவரது உடலைத் தொங்கவிட்டுத் தூக்கிச் சென்று ஆரல்வாய்மொழியில் கட்டிவைத்தனர். இங்குள்ள பூவரசு மரத்தில் கட்டிவைத்து எவ்வித உணவு நீரின்றிக் கொடுமைப்படுத்தப்பட்டார். இம்மரத்தில் அவரால் அமரவோ, படுக்கவோ இயலாத இக்கட்டான சூழ்நிலைக்கு உட்படுத்தப்பட்டார். ஆரல்வாய்மொழி முக்கியமான சந்தைப்பகுதியாக விளங்கியதால் வடக்கன்குளம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் சுற்றுப்புறங்களில் வாழ்ந்தோர் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றனர். பூவரச மரத்தில் இரவு பகலென்று பாராமல் வேதனைப்படுத்தப்பட்ட தேவசகாயத்தைக் கண்டு வேதனையடைந்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிச் சென்றனர். அங்கு வந்து சென்ற மக்களுக்காக, தேவசகாயம் செபிக்கவே பல புதுமைகள் நடைபெற்றன. தேவசகாயத்தின் மரணதண்டனைக்கு ஏற்பாடுகள் செய்ய வந்த பிராமணர்கள் இங்கு நடப்பதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்து அவரை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடுமாறு அரசனைக் கேட்டுக் கொண்டனர். எனவே தேவசகாயத்தைக் காற்றாடி மலை உட்பகுதிக்கு அழைத்துச் செல்ல மன்னன் ஆணையிட்டான். இந்நாட்களில் தனது கணவரைத் தேடி அலைந்த ஞானப்பூ அம்மாள் ஆரல்வாய்மொழியில் பூவரச மரத்தில் கட்டிவைக்கப்பட்ட கணவனைக் கண்டு அவரது காலில் விழுந்து கதறினார். தனது மனைவியின் கண்ணீரைத் துடைத்து "இக்கொடுமைகளின் முடிவில் நிறைவான, நிலையான விண்ணக வாழ்வு நமக்குண்டு" என அவரை ஆறுதல்படுத்தினார்.

மறைசாட்சி தேவசகாயம்

வடக்கன்குளம் பங்குத்தந்தை புத்தாரி அவர்களுக்கு எழுதிய பல்வேறு மடல்களில் தனது பாடுகளைப்பற்றி தேவசகாயம் பேசுகின்றார். அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்கும், ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித கன்னி மரியாவுக்கும் நோன்பிருந்து செபிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஆரல்வாய்மொழியில் இருந்தபொழுது மூன்றுமுறை இரவுநேரத்தில் குருவானவர் இவரைச் சந்தித்து நற்கருணை வழங்கிச் சென்றார். நற்கருணை பெறுவதற்கு அவர் அடிக்கடி விரும்பினாலும் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. தான் இறப்பதற்கு முன் நல்லதொரு பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை பெற்றுக் கொண்டார்.

மன்னனின் ஆணைப்படி 1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் மக்களனைவரும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாளில் இரவுவேளையில் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடிமலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இரகசியமாக இழுத்துச் செல்லப்பட்டார். கொல்லப்படுவதற்கு முன் தான் எப்பொழுதும் சொல்லும் செபங்களை மிகுந்த பக்தி பிரயாசையுடன் சொல்லிமுடித்தார். பின்பு அவரே சாவுக்குத் தயாரிக்கும்விதமாக துப்பாக்கியை நோக்கி நின்றார். அவ்வேளையில் படைவீரர் ஒருவர் மூன்று குண்டுகளால் தேவசகாயத்தைச் சுட்டார். அவ்வாறு சுட்டபிறகும் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததால், மீண்டுமாக இரண்டு குண்டுகள் அவர்மீது பாய்ச்சப்படவே உயிரிழந்தார். துப்பாக்கிக்குண்டுகள் தன்மீது பாய்ந்தவுடனே "இயேசுவே என்னை மீட்டருளும்" என்று கதறினார். இயேசுவே! மாதாவே! என்று உச்சரித்தவராக மறைசாட்சி மரணத்தைத் தழுவினார். படைவீரர்கள்  தேவசகாயத்தின் உடலைக் காட்டிலே தீ வைத்து எரித்தனர். தேவசகாயத்தின் மறைசாட்சி மரணத்தைப்பற்றி கேள்விப்பட்ட அப்பகுதி கிறிஸ்தவர்கள் ஐந்து நாட்களுக்குப்பிறகு எரிந்த உடலின் எஞ்சிய பகுதிகளான அவரது எலும்புகளை எடுத்துச் சென்று நாகர்கோவில், கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்தனர். பேராலயத்தில் ஆயர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுவது முறை. ஆனால் ஏழு ஆண்டுகள் மட்டுமே கிறிஸ்தவராக இருந்த பொதுநிலையினராகிய தேவசகாயம் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது அவரை வாழ்கின்றபொழுதே மக்கள் புனிதராகப் பாவித்தனர் என்பது வெளிப்படுகின்றது. தேவசகாயம் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி மரித்ததைப்பற்றி அறிந்த அன்றைய கொச்சி மறைமாவட்டத்தின் ஆயர் கிளமென்ஸ் ஜோசப் "நமக்கொரு மறைசாட்சி கிடைத்துவிட்டார்" என்று கூறி, சிறப்பு வழிபாடும், ஆராதனையும் நடத்தி இறைவனுக்கு நன்றி செலுத்தியதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

புனித தேவசகாயம்

மறைசாட்சி தேவசகாயம் கல்லறையில் செபித்த மக்கள் பலருக்கு அற்புதங்கள் நிகழவே கோட்டாறு மறைமாவட்டம் இவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டது. முதன்முதலில் கொச்சி மறை ஆயர் கிளமென்ஸ் ஜோசப் தேவசகாயம் கிறிஸ்தவ மறைக்காகக் கொல்லப்பட்டார் என்ற அறிக்கையை 1756 இல் உரோமைக்கு அனுப்பி, திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார். இதுவே அவரது புனிதர்பட்டத்திற்கான துவக்கமாகக் கருதப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு தேவசகாயம்பிள்ளைக்குப் புனிதர்பட்டத்திற்கான நடவடிக்கைகளை அன்றைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் லியோன் தர்மராஜ் துவங்கினார். 2004 ஆம் ஆண்டு மறைசாட்சி தேவசகாயம் இறைஊழியராக உயர்த்தப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார். அதே ஆண்டில் அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். 2012 டிசம்பர் மாதம் 2 ஆம் நாள் நாகர்கோவில் புனித கார்மெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க, தேவசகாயம் அருளாளராக அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அருளாளர் தேவசகாயம் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் ஆவணத்தில் 2020 பிப்ரவரி 21 ஆம் நாள் கையெழுத்திட்டார். 2022 மே 15 ஆம் தேதி வத்திக்கானில் புனிதராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவ்வாறு இந்தியாவிலிருந்து பொதுநிலையினர் ஒருவர் புனிதர்நிலைக்கு உயர்த்தப்படுகின்ற பெருமையைப் புனித தேவசகாயம் பெறுகின்றார். மறைசாட்சி தேவசகாயத்தின் விழா ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித தேவசகாயம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயம், அவர் கொல்லப்பட்ட காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலயம், அவரது தாகம் தணித்த பாறைக்கோவிலான புலியூர்க்குறிச்சி புனித மிக்கேல் அதிதூதர் (முட்டியடிச்சான்பாறை) ஆலயம் மற்றும் அவர் பிறந்த ஊரான நட்டாலத்தில் உள்ள ஆலயம் ஆகியவை இவரின் வாழ்வை ஒட்டிய திருத்தலங்களாகத் திகழ்கின்றன.

Comment