No icon

Poor and the Lent

ஏழைகளின்  நலம்  விரும்பும்  தவக்காலம்

ஓர் ஆண்டு கால சுழற்சிக்குள் (திருவழிபாட்டு ஆண்டு)கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, பாடுகள், இறப்பு, உயிர்த்தெழுதல்,விண்ணேற்றம் ஆகிய மீட்பளிக் கும் பாஸ்கா மறை நிகழ்வுகள் நம் தாய் திருச்சபையால் நினைவு கூறப்படுகின்றன, மற்றும் கொண்டாடப்படுகின்றன திருநீற்றுப் புதன் அன்று ஆரம்பமாகி, திருப்பாடுகளின் வாரத்தோடு அதாவது புனித வாரத்தோடு நாற்பது நாள்களை உள்ளடக்கியது தவக்காலம்.

‘40’ என்ற எண்ணிற்குப் பின்னணியில் பல முக்கியமான அம்சங்கள் அடங்கி இருக்கின்றன: நோவா காலத்துப் பெரு வெள்ளம் 40 நாள்கள், இஸ்ரயேல் மக்களின் பாலை நிலப் பயணம் 40 ஆண்டுகள்,எலியா இறைவாக்கினரின் உண்ணாநோன்பு 40 பகலும் 40 இரவும், மோசே சீனாய் மலையில் உண்ணா நோன்பு 40 நாள்கள், நினிவே மக்களின் தவம் 40 நாள்கள், இயேசுவின் பாலை நில அனுபவம் 40 நாள்கள்.

இயேசு பாலை நிலத்திற்கு சென்று இறைவேண்டல், தவம் செய்ததை நாம் கண்டு உணர்ந்து கடைபிடிக்கவும், நம் பாவங்களுக் காக உயிர் துறந்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளோடு நம்மை ஐக்கியப் படுத்தவும், நம் ஆண்டவரின் தியாகப்பலியின் நோக்கம் நிறைவேறும் வண்ணம் நாம் ஒறுத்தல் முயற்சிகளின் உதவியால் நம் பாவ வாழ்க்கையை விட்டு மனம் மாறி, மன்னிப்புப் பெற்று பாஸ்காத் திருவிழாவைத் தகுந்த முறையில் கொண்டாடத் திருஅவையால் ஒதுக்கப்பட்டது இந்தத் தவக்காலம்.

ஆண்டு தோறும் தவறாமல் வரும் தவக்காலம் இந்த ஆண்டு நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? நம்முடைய ஒறுத்தல் முயற்சிகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இல்லாமல், பிறருக்கு குறிப்பாக, ஏழை எளியோர்க்குப் பயன்படும் வண்ணம் அமையுமேயானால் அதுவே அர்த்தமுள்ள ஒறுத்தல் முயற்சி. பசியுற்றோர், ஆதரவற்றோர், அனாதைகள் மற்றும் கைவிடப்பட்டோருக்கு உதவும் ஒறுத்தல் முயற்சிகளே நம் ஆண்டவருக்கு உகந்தவையாகும். நம் திருஅவை அதன் இயல்பிலேயே ஒரு தாயின் பண்பு நலங்களைக் கொண்டது,

எனவேதான் நாம் நம் திருஅவையைதாய் திருஅவைஎனக் குறிக்கிறோம். நம் திருத்தந்தை பிரான்சிஸின் வேண்டுகோளுக்கு இணங்க, நம் தாய்த் திருஅவையின் அங்கங்களாகிய நாம் ஏழ்மையின் காயங்களால் உருக்குலைந்து இருக்கும் மனிதத்தின் அழுகுரலுக்குச் செவி கொடுப்போம்.. ஏழ்மையில் வாழும் நம் சகோதரர், சகோதரி களோடு உடனிருப்போம். தோள் கொடுப்போம். உதவுவோம். நம் ஒறுத்தல் முயற்சிகள் இந்த ஆண்டின் தவக்காலத்தை ஏழைகளின் நலன் விரும்பும் தவக் காலமாக மாற்றுவதாக.

Comment