No icon

புதிய புனிதர் 3 – வரலாறு

புனித மரிய பிரான்செஸ்கா ருபாத்தோ

நற்செய்தியின் வழியில் உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, உண்மைக்கு சான்று பகர்ந்தவர். நீதியை மார்புக்கவசமாக அணிந்துகொண்டு, நீதியை நிலைநாட்டியவர். இறையன்பை தனதாக்கி ஏழைகளிடம் அன்பும், கரிசனையும் கொண்டவர். கர்வம் அற்றவராய், எளிமையான நடை, உடை, பாவனையைச் சொந்தமாக்கி நற்செயல்களால் நற்சான்று தந்தவர். மக்களின் நலனுக்கு உகந்தவற்றை செய்து இறைவார்த்தையை வாழ்வாக்குவதிலும், கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் கொணடவர். திருச்சிலுவையில் முழுநம்பிக்கை கொண்டு, சகோதர, சகோதரிகளை அளவில்லாமல் அன்பு செய்து, அனைவருக்கும் ஆதரவு தந்தவர். பணிவிடைகள் செய்வதில் பேரானந்தம் அடைந்தவரே புனித மரிய பிரான்செஸ்கா ருபாத்தோ.

மரிய பிரான்செஸ்கா ருபாத்தோ 1844 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார். உடன்பிறந்த சகோதரர்கள் எட்டு பேர். நான்காம் வயதில் தந்தையையும், பத்தொன்பதாம் வயதில் தாயையும் இழந்தார். பெற்றோரை இழந்தபோது, டூரின் பட்டணத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இத்தாலி­ பிரபு மரியானா ஸ்கோ அபோன் என்பவரின் நெருங்கிய நண்பரானார். அவரோடு கொண்டிருந்த உறவு அவரது வாழ்வில் நன்மைகள் செய்ய வழிவகுத்தது. முறையான கல்வி ஓரளவு பெற்றிருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் அறிவிலும், பக்தியிலும், நற்பண்பிலும் தூய்மையிலும் சிறந்து விளங்கினார்.

பிரான்செஸ்கா இறைவனை மாட்சிப்படுத்துவதை இலட்சியமாகக் கொண்டிருந்தார். அன்றாடவாழ்வின் மகிழ்வையும், துன்பங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். நற்கருணைமீதும், அன்னை மரியாவின்மீதும் அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். கிறிஸ்துவுக்கு தனது கற்பை அர்ப்பணித்து , கன்னிமையில் வாழ விரும்பினார். இளமைப் பருவத்தில் அவரை திருமணம் செய்ய பலர் முன்வந்தபோது, அவர்களிடம் இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்வதைக்கூறி தனது விருப்பமின்மையை தெரிவித்தார். பெண்களுக்கு அழகு சேர்ப்பது ஆடை அணிகலன்கள் இல்லை; மாறாக, இறையன்பும், அமைதியும் என்பதை உணர்ந்து வாழ்ந்தார்.

பிரான்செஸ்கா மருத்துவமனைகளுக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மறைக்கல்வி கற்பிப்பதில் முழுமனதுடன் உட்ப்பட்டார். 1885 ஆம் ஆண்டு துறவு வார்த்தைப்பாடுகள் வழியாக இயேசுவின் மரிய பிரான்செஸ்கா ருபாத்தோ என்ற நாமம் தனதாக்கி, இறைவனுக்கு முழுமையாக சொந்தமானார். அர்ப்பணம் மிகுந்த உள்ளத்துடன் தூரின் நகரில் இறைபணி செய்தபோது, இறைதூண்டுதலால் லொவானோவின் கப்புச்சின் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவிலும், மொந்தேயோவிலும் சிறப்பாக பணி செய்தார். சகதுறவிகளுக்கு சிறந்த முறையில் தலைமையேற்று வழிநடத்தினார். இவரது வழிகாட்டுதலால் எண்ணற்றோர் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்ந்தனர்.

ஒருமுறை கன்னியர் இல்லத்தின் அருகில் ஆலயகட்டுமான தளத்திலி­ருந்த கல் ஒன்று தொழிலாளி ஒருவர்மீது விழுந்தது. பிரான்செஸ்கா இந்நிகழ்வு நடத்த இடத்திற்கு விரைந்து சென்று, காயப்பட்டவரின் காயங்களைத் துடைத்து, மருத்துவம் செய்து வாழ்வுக்கும் உதவினார். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை தேடிச் சென்று உதவினார். இயேசுவின் மரிய பிரான்செஸ்கா அன்னை மரியாவின் அரவணைப்பில் நாளும் வாழ்ந்திட கவனம் செலுத்தினார். தினமும் பக்தியுடன் செபமாலை செபித்தார். நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை மெய்யாகவே உணர்ந்தார். ஒரு நண்பரோடு உரையாடுவது போல், இயேசுவுடன் உரையாடினார். இயேசுவின் பாடுகளைத் தியானித்தார்.

 உருகுவாய் நாட்டின் மொந்தேயோவில் தன் சபையின் குழுமத்தைப் பார்வையிடச் சென்றபோது, அங்கு நோயுற்றார். இத்தருணத்தில் இறைவனின் அளவில்லா அன்பையும், இரக்கத்தையும் உணர்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தார். இடைவிடாமல் இறைவேண்டல் செய்து இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்தார். துன்பங்களும், வேதனைகளும் தென்றலாய் தன்னை வருடியபோது, பொறுமையாகத் தாங்கிக்கொண்டார். நற்செயல்களால் இறைவனை மாட்சிப்படுத்திய பிரான்செஸ்கா 1904 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 4 ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை புனித ஆறாம் பவுல் 1965 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் இறைழியராக அறிவித்தார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் 1993 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 10 ஆம் நாள் அருளாளராக அறிவித்தார். திருத்தந்தைப் பிரான்சிஸ் 2022 ஆம் ஆண்டு, மே திங்கள் 15 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Comment