திருவழிபாட்டிற்கு பொது முன்னுரை
- Author திருவழிபாட்டிற்கு --
- Tuesday, 12 Jan, 2021
திருவழிபாட்டிற்கு பொது முன்னுரை
அன்பார்ந்த இறைமக்களே!
ஆண்டின் பொதுக்கால 24ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இன்றைய ஞாயிறு திருவழிபாடு நாம் இரக்கம் உள்ள மக்களாக, மன்னிப்பை தாரளமாக வழங்கும் தகைமை உள்ளத்தினராக வாழ அழைப்பு விடுக்கிறது. மனித மனம் இயல்பாகவே சுய நலத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே மனிதன் சுயநலமிக்கவன். ஆகையால் தான் தன்னைத்தான் நேசித்தல் போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்றே இயேசு நமக்கு கட்டளையிட்டார். தன்னலத்தைக் கடந்து ஒருவர் சிந்திக்கிற போது செயல்படுகிறபோது அவர் தன்னுடைய மனித இயல்பைக் கடந்து நிற்கிறார். இன்றைய இறைவார்த்தை மன்னிக்கிற மனம் படைத்தவர்களாக, மனித நேயம் மிக்கவர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. வெகுளி- சினம் ஆகிய இரண்டையும் தவிர்க்க வலியுறுத்துகிறது. தந்தையாம் இறைவன் இரக்கமுள்ளவராக இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவராக இருக்க வேண்டுகிறது. மன்னிப் பெற்றவர், தம்மிடம் மன்னிப்பு வேண்டுபவரை மன்னித்து ஏற்று அரவணைக்க வேண்டும் என்று பாடம் கற்பிக்கிறது. ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த அந்த ஒற்றைச் செபம் கூட, எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்றுதான் வலியுறுத்துகிறது. ஆகையால் இத்திருப்பலியில் மன்னிக்கிற மனம் படைத்தவர்களாக. இரக்கம் சுரக்கும் நெஞ்சத்தினராக வாழ மன்றாடுவோம். பக்திப் பற்றுதுலுடன் பங்கேற்போம்.
இறைவார்த்தை வழிபாட்டிற்கு முன்னுரை
சீராக்கு நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் வெகுளி, சினம் ஆகிய வெறுப்புக்குரிய இக்குணங்களைக் கைவிட்டு, பழிக்குப் பழி வாங்காமல், மன்னிக்கிற மனம் படைத்தவர்களாக விளங்க அழைப்பு விடுக்கிறது. இவ்வுலகில் மனிதர் ஒருவர் மற்றவரை மன்னித்து அன்பு செய்யாதபோது இறைவன் எப்படி இரக்கம் காட்டுவார் என்று கேள்வி கேட்டு, அதற்கு அத்தாட்சியாக, "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்" என்று பதிலுரைப்பாடல் ஆண்டவரின் இயல்பை எடுத்துரைக்கிறது. உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் தமக்காக வாழாமல் ஆண்டவருக்காக வாழவேண்டும் என்று புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். இன்றைய நற்செய்தியில், எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று சீடர் பேதுருவிடம், எழுபது தடவை - ஏழுமுறை, அதாவது எண்ணற்ற முறை என்று பதிலிறுத்து, பத்தாயிரம் தாலந்து கடன் பெற்று, அதிலிருந்து தள்ளுபடி பெற்ற ஒருவர் வெறும் நூறு தெனாரியம் கடன்பட்ட ஒருவனை மன்னிக்காத உவமையை எடுத்தியம்பி. நீங்கள் மன்னிக்காவிட்டால் தந்தையாம் இறைவனும் மன்னிக்கமாட்டார் என்று இயேசு கற்பிக்கிறார். நாமும் நமக்கு எதிராக குற்றம் செய்தோரை மன்னிக்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் உறுதியோடு இன்றைய இறைவார்த்தைகளுக்குச் செவிசாய்ப்போம்.
நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்
1.பொறுமையும் பேரன்பும் மிக்க இறைவா! எம் தாய்த்திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குறிப்பாக எம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு..................., அருள்பணியாளர்கள் எம் பங்கை வழிநடத்தும் எம் பங்குத்தந்தை அருள்திரு................... துறவியர் ஆகிய அனைவரும் தங்களின் அழைப்பின் மேன்மையை உணர்ந்து கிறிஸ்துவின் பதிலாள்களாக ஒப்படைக்கப்பட்ட மந்தையை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.அனைத்தையும் படைத்து பராமரிப்பவரே இறைவா! அகில உலக அளவில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், அக்டோபர் நான்காம் தேதி வரை சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தில் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து, படைப்பின் இறைவன் மீது தங்கள் நம்பிக்கையைப் புதுப்பிப்பதுடன், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் மீது நம் அக்கறையை வெளிப்படுத்தி உழைக்கவும், செபிக்கவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.நலம் அளிப்பவரே இறைவா! கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வுலகில், வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகும் மக்களுக்கு ஆறுதலையும் வாழ்வை திர்கொள்ளக் கூடியதுணிச்சலையும் தந்து, தங்களாலும் போராட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து தொடர்ந்து வழிநடத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.ஞானத்தின் பிறப்பிடமே! கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வீட்டிலிருந்து கல்வி கற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள மாணவ-மாணவியருக்கு ஞானத்தையும் பாடங்களைப்புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றலையும், NEET. JEE போன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குநல்ல எதிர்காலத்தையும், போதுமான ஊட்டச் சத்தின்றி அவதியுறும் குழந்தைகளுக்கு போதுமான உணவையும் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment