No icon

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு (திப 9:26-31, 1 யோவா 3:18-24, யோவா 15:1-8) - 02.05.2021

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு
(திப 9:26-31, 1 யோவா 3:18-24, யோவா 15:1-8)
கொடியோடு இணைய மறுக்கும் கிளைகள்

இன்றைய சமுதாயத்தை வாட்டிக் கொண்டிருக்கும் ஒரு தீக்குணம் அளவுகடந்த தனிமனித சுதந்திரம். தான் நினைப்பது எல்லாம் சரி, என் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் உரிமை எனக்கு உண்டு என்றபடி சிலர் செயல்படுகின்றனர். உயர்பதவிகளில் அமர்ந்திருப்போர் (அமரவைக்கப்பட்டோர்) பலர் தாங்கள் பேசுவது அனைத்துமே தெய்வவாக்கு என்றும், அதற்கு அனைவரும் கைக்கட்டி வாய்பொத்திக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கின்றனர். தலைவர்கள் தாங்கள் பேசுவது உண்மை என்னும் உயரிய நிலையிலிருந்து வருகின்றதா? என்று அவர்கள் கவலைப்படுவது இல்லை. கடந்தகாலத்தில் உழைத்து உலகை இந்த நிலைக்குக் கொண்டுவந்த மனிதர்களையெல்லாம் கற்காலத்தவர்களாகக் கணித்து, அவர்களின் அறிவுரைகளைப் புறந்தள்ளுவது விவேகம் அல்ல. பாரம்பரிய நற்சிந்தனைகளையும் பழமைவாதமாக நவீன உலகம் கருதி, அதிலிருந்து விலகிவாழ முற்படுகின்றது. அனுபவசாலிகளான பெற்றோர், பெரியோர், மகான்கள் கொடுத்த அறிவுரைகளை எல்லாம் கடந்தகால கடைச்சரக்குகளாக ஒதுக்குவோர் கொஞ்சம் அதிகமாகிப் போய்விட்டனர். கூட்டுக்குடும்பத்தின் மூலம் கிடைக்கும் வளர்ச்சிப் பாதைகளை அடைத்துவிட்டு, தனியாக வாழத்துடிக்கும் இளம் சமுதாயத்தில் உளவியல் முதிர்ச்சி குறைவு என்பது உலகறிந்த உண்மையாகும். சமூகப் பிராணியாகிய மனிதன் மற்றவர்களோடு இணைந்திராத வேளையில் இயற்கையான வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனிடம் இருப்பதில்லை. மற்றவர்களோடு இணைந்து வாழும் வாழ்வில் சிந்தனைத் தெளிவுகள் அதிகம். செடியோடு இணையாதக் கொடிகள் காய்ந்து சருகாவதுபோல், அனுபவசாலிகளைச் சார்ந்து வாழாத நவீன சமூகம் குறைபிரசவ குழந்தைகளையே பெற்றெடுக்கும். கடவுள் பயம் காணாமல் போய்விட்டதாலே பெருங்குற்றம் செய்யும் பலர் மனசாட்சியின்றி அலைகின்றனர். கடவுளைச் சார்ந்து வாழும் சமுதாயத்தில் பெரும் பிரச்சனைகள் குறைவு. கடவுளிடம் சரணடைந்து அவரைச் சார்ந்து வாழ இன்றைய நற்செய்தி அழைக்கின்றது. 
செடியுடன் இணைந்த கொடிகள்
வழக்கமாக இஸ்ரயேல் மக்களுக்கு உருவகமாகக் காட்டப்படும் திராட்சைச் செடி, இங்கு இயேசுவின் உருவகமாகின்றது. அதை நட்ட கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நிறைபலன் தந்தமையால், ‘உண்மையான’ என்ற அடைமொழி இங்கு சேர்க்கப்படுகின்றது. இஸ்ரயேல் இனம், செய்ய மறுத்ததை இயேசு தமது கீழ்ப்படிதலால் செய்து முடிக்கின்றார் (திபா 80:7-9, 14-17). இயேசு இறுதிவரை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார். இயேசு என்ற அந்த திராட்சைச் செடியில் பொய் இல்லை, களையில்லை, கறையில்லை. இஸ்ரயேல் மக்கள்போல் அது கசக்கும் அல்லது புளிக்கும் அல்லது அழுகிய பழங்களை (எசா 5:1-7) ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை. கடவுளால் நடப்பட்ட அது உயர் இரகத்தைச் சேர்ந்தது. அது கொடுக்கும் பலன்கள் அனைத்தும் விண்ணக இரகத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும். எனவேதான் மக்களுக்கான நிறைவாழ்வு இயேசுவிடமிருந்து வருகின்றது. கொடிகள் (சீடர்கள், கிறிஸ்தவர்கள்) தன்னகத்தே உயிரற்றவை. வேரற்றவை. செடியைச் சார்ந்திருக்க மறுக்கும் நேரத்தில் அவை தமது சொந்த உயிரை இழந்துவிடும். உளப்பூர்வமாக இணைந்திருந்தால் அவை உயர்தர விளைச்சலைத் தரும். 
தறிப்பதும் - கழிப்பதும்
அய்ரோ என்ற கிரேக்கச்சொல் தறித்துவிடுதல் என்று தமிழில் பொருள் கொள்ளப்படுகின்றது. அய்ரோ என்பதை உயர்த்துதல், தரையிலிருந்து மேலெழும்ப செய்தல், தாமே (பொறுப்பு) எடுத்துக்கொள்ளல், அந்த இடத்திலிருந்து வெட்டி எடுத்துவிடல் என்றும் பொருள் கொள்ளலாம். வீழ்ந்து கிடப்பவை பலன் கொடுப்பதில்லை. எனவே, கீழே விழுந்து கிடக்கும் கொடிகளை மேலே தூக்கி தோட்டக்காரர் பந்தலில் வைத்துக் கட்டுகின்றார். கிறிஸ்து என்கின்ற சூரியன் சில நம்பிக்கையாளர்கள் மீது ஒளி வீசாமையால் அவர்கள் போதிய பலன்கொடுப்பதில்லை. அவர்களுக்குத் தெய்வீக ஒளி படும்படி உயர்த்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் கண்ணோக்கும்போது ‘தறித்தல்’ மூலம் தற்போது பலன்தராத நம்பிக்கையாளர்கள் வருங்காலத்தில் கட்டாயம் நிறைபலன் தரும் வகையில் கடவுள் உருவாக்குகின்றார். மேலும், பலன்தராத சிலகொடிகளுக்கு அவர்தாமே தனிப்பட்ட பொறுப்பேற்றுக்கொள்கின்றார். யாரையும் வெட்டி தூரத்தில் எறிய கடவுளுக்குத் தெரியாது. இங்குவெட்டி எடுத்து எரித்துவிடல் (15:6) என்பது கடவுள் தீர்க்கமாகத் திருத்துவதைக் குறிக்கின்றது (எண் 14:22-24, எபி 12:4-11). தூய்மையாகும்வரை கடவுள் அவர்களுக்குள் இருக்கும் குற்றங்களை நீக்குகின்றார் (யாக் 1:2-3). ஏனெனில் தவறுசெய்யும் நகர்களையெல்லாம் கடவுள் தம் நீதியின்படி தண்டித்தால் பலநகர்கள் சோதோம், கொமோராவாக மாறிவிடும். தனிப்பட்ட மனிதர்கள் நீதியின்படி தண்டிக்கப்பட்டால் பலருக்கு குறைந்தது ஐந்து ஆயுள் தண்டனைகளும், மூன்று தூக்குத் தண்டனைகளும் கிடைக்கும். சிலசமயங்களில், கடவுள் கண்டிப்புடன் திருத்துகின்றார். அதுவும் கடவுளன்பின் வெளிப்பாடாகும். ‘கழித்துவிடுவார்’ (கிரேக்கத்தில் காத்தைரோ) என்பதைச் சுத்தப்படுத்தல் என்றும் பொருள்கொள்ளலாம். அதாவது, அது முழு பலன்கொடுப்பதைத் தடுக்கும் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளிலிருந்து தோட்டக்காரர் அதைச் சுத்தமாக்குவார். மனிதர்களைப் பரிசுத்தப்படுத்தும் கருவி கடவுளின் வார்த்தையாகும் (யோவா 8:31). அவரைச் சார்ந்துவாழும் அனைவரும் அவரைப்போல் நிறைபலன் தரவேண்டும் என்பதே கடவுளின் நோக்கம் (15:5). இணைந்திருக்கும் கொடியால் பலன்தராமல் இருக்க இயலாது. 
இணைந்திருத்தல்
நம்பிக்கை கொள்வோர், நன்மை செய்வோர் அனைவரும் இயேசுவோடு இணைந்திருக்கின்றனர் (யோவா 8:31-32, 15:10). இணைந்திருத்தல் - ஐம்புலன்களும் ஒன்றுசேர்ந்து எந்தப் பிரிவினையும் இல்லாமல் உணர்வளவில் சங்கமித்தல். அதாவது, முற்றிலும் சார்ந்தநிலை இதுவாகும். ‘என்னிடமுள்ள’ என்ற வாக்கியம் பதினாறுமுறை யோவான் நற்செய்தியில் வருகின்றது. ஒவ்வொருமுறையும் இயேசுவோடு நாம் கொள்ளவேண்டிய தொடர்ந்த உள்ளார்ந்த உறவை அடிக்கோடிடுகின்றது. உண்மையான இணைப்பு இரு இதயங்களுக்கிடையில் நிகழும் உள்ளார்ந்த ஒன்றிப்பாகும். இது நாம் அன்றாடம் (சொல்லிடை பேசி மூலம்) கொள்ளும் சாதாரண தொடர்பிலிருந்து வேறுபட்டது. நாம் பலரோடு தொடர்பில் இருக்கின்றோம். ஆனால், அனைவரோடும் இணைந்திருப்பதில்லை. உண்மையில் இணைந்திருப்போர் ஒருவர் மற்றவரின் வாழ்வில் பங்கெடுக்கின்றனர். 15:4 இல் மூன்றுமுறை இந்த இணைந்திருத்தல் (யbனைந) வருகின்றது. அதாவது தொடர்ந்து இணைந்திருத்தல், தொடர்ந்த சார்புநிலை, இடைவிடாது ஆன்மீக நலன்களை அள்ளிப் பருகுதல் போன்றவற்றைக் குறிக்கின்றது. 
ஒருவர் தாம் வெளிக்காட்டும் அன்பு மற்றும் கீழ்ப்படிதலைப் பொறுத்து, இயேசுவோடு கொள்ளும் உறவு உயிரோட்டம் நிறைந்தது, உள்ளார்ந்தது (யோவா 14:23-24). இணைந்திருக்கும் தரத்தைப் பொருத்தே பலன்கள் விளையும். கடவுளே வேண்டாம் என்று வெறுத்துச் செல்வோரின் வாழ்வில் சாத்தானின் சரக்குகளே மிஞ்சும். முழுமையான பிரமாணிக்கத்துடன் இணைந்திருக்கும் வேளையில் மிகுந்த கனிதர இயலும். இல்லாவிட்டால் மரங்களை அழகுபடுத்த வைக்கப்படும் பிளாஸ்டிக் பழமாகவே நாம் இருப்போம். பலன்தராதவர் கடவுளிடமிருந்து தனியே தூக்கி எறியப்பட்டுள்ளார் என்று சொல்வதற்கில்லை. மாறாக, ஆன்மீக வாழ்வில் நோயாளிகளாக இருக்கும் கிறிஸ்தவர்கள் இன்னும் கடவுளை நோக்கி நகர்ந்துசென்று கிறிஸ்துவுக்குள் மேலும் வளரவேண்டும். இங்கு இணைந்திருத்தலை நான்குவகைகளில் விளக்கலாம்: கிறிஸ்துவில் வாழ்வது மீட்பு. கிறிஸ்துவுடன் வாழ்வது உள்ளார்ந்த உறவு. கிறிஸ்துவால் வாழ்வது மிகுந்தபலன் தருவதாகும். கிறிஸ்துவுக்காக வாழ்வது பணியாற்றுவதாகும். இணைந்திருப்பதன் பலபரிமாணங்கள் இவை. கடவுளோடு இணைந்திராத இஸ்ரயேல் எதிர்பார்த்தபலன் தரவில்லை. தந்தையோடு இணைந்திருந்த மகன் சென்ற இடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார். இயேசுவோடு இணைந்திருக்கும் சீடன் நன்மைத்தனங்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக சுனை. 
கடவுளோடு இணைந்த வாழ்க்கை
நாம் யாரை அல்லது எதைக் கடவுளாக அல்லது தலைவனாக (முன்மாதிரியாக) நினைத்துச் செயல்படுகின்றோம் என்பது முக்கியமாகும். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் மதிப்பீடுகளை நாம் உள்வாங்கிக் கொள்கின்றோம். பணப்பித்துப் பிடித்து அலைவோர்களிடமிருந்தும் கூட காசு கறக்கவே துடிப்பர். நட்புக்களைத் தேடி அலைவோர் எதிரிகளைக்கூட நண்பர்களாக்க விரும்புவார். உள்ளத்தளவில் கடவுளோடு இணைந்திருப்போர் அவரின் போதனைகள் காய்த்துக் குலுங்கும் செபத்தோட்டமாக வாழ்வர். இயேசு என்ற செடியின் சாரத்தையே கொடிகள் வெளிப்படுத்த வேண்டும். இந்தப் பலன்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் மற்றவர்களுக்கு வாழ்வுதரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அன்னைத் தெரசா கடவுளோடு இணைந்திருந்த வாழ்வில் ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காணாமல் அமைதி கொள்ள முடியவில்லை. அன்னைத் தெரசா, மௌனத்தின் கனி செபம். செபத்தின் கனி அன்பு, அன்பின் கனி சேவை. சேவையின் கனி மகிழ்ச்சி என்று கூறுகின்றார். கருணை இல்லங்களை நடத்துவோர் அங்குள்ளவர்களைக் கடவுளின் இதயக் குவியல்களாகக் காண்கின்றனர். உண்மையாகவே கடவுளோடு செபத்தில் இணைந்திருப்போர் பசித்த வயிற்றிற்கு எல்லாம் சோறிடுவதை ஆன்மீகச் செயலாகவே கருதுவர். கடவுளை நாடித்தேடுவோர் கடுஞ்சொற்களுக்கும் புன்முறுவலோடு பதிலுரைப்பர். இயேசுவோடு இணைந்திருப்போர் அவரைப்போல் பிறர்வாழத் தம் வாழ்வை அடகு வைப்பர். கல்வாரிவரை பிறரின் சிலுவையைத் தூக்கிச் சுமப்பர்.
அன்புக் கட்டளை
இயேசுவின் அன்புக் கட்டளைகளைக் கடைபிடித்தால் நாம் மிகுந்த கனி தருவோம் என்று இரண்டாம் வாசகம் கூறுகின்றது. அன்புடைய நெஞ்சத்தில் அழுக்காமை எதுவும் இல்லை. அதன் பேச்சுக்களில் அழுகியவாடை அடிப்பதில்லை. அன்பிற்கு எதிரிகள் இல்லை. அன்பிற்கு அடங்காதது எதுவுமில்லை. அன்புசெய்வோர் எதையும் இழப்பதில்லை. ஆனால், நன்மைத்தனங்கள் பலவற்றைப் பெரும்வரமாகப் பெற்றுக்கொள்கின்றனர். அன்பு வெற்றுப் பேச்சல்ல. மாறாக உண்மையிலும் இரக்க செயல்களிலும் மறைந்துள்ள செயல்முறை. நற்கருணையை உண்ணும்போது நாம் கிறிஸ்துவோடு இணைகின்றோம். செடியோடு இணையும் வேளையில் இயேசுவின் அன்பே நம்முள் ஊற்றப்படுகின்றது. நம்முள் ஒன்றாகும் இறைவன் மற்ற மனிதர்களை நம்முன் காட்சிப்படுத்துகின்றார். கடவுளின் அன்பைக் குறைவுபடாமல் அடுத்தவர்களுக்கும் அள்ளித்தருவது நம் கடமையாகின்றது. 
இணைந்திருப்போம்
மனைவியோடு மனத்தளவில் இணைந்திராத கணவன் குடும்ப வாழ்வைக் குட்டி நரகமாக்குவான். மக்களோடு உணர்வளவில் இணைந்திராத தலைவன் நடத்துவது காட்டு தர்ப்பாராகவே இருக்கும். ஆசிரியர்களைச் சார்ந்திராத மாணவர்கள் பெரும் அறிவாளிகளாக உருவாவது கடினம். செடியிலிருந்து தனித்திருக்க விரும்பும் மொட்டு மலராகாது. இயேசுவோடு செபத்தில் இணைந்திராத குரு நடத்துவதெல்லாம் தனிமனித நாடகமாகவே தென்படும். ஒழுக்க செயல்களோடு இணைந்து செல்லாத சமுதாயம் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும். அனுபவம், அறிவுரை, முன்னோர்கள், வாய்மையாளர்கள், வழிகாட்டிகள் போன்றவர்களோடு இணைந்திராத மரங்கள் விரைவில் சாய்ந்துவிடும். 
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி அதிசயங்களைப் படைக்கின்றது. ஆனால், மனிதர்களோடு உண்மையான உறவைத் தேடாது தொலைத் தொடர்பு சாதனங்களில் அதிக நேரங்களைச் செலவிடுவோரின் வளர்ச்சி முறையானதாக இருக்க வாய்ப்பில்லை. மனித சமுதாயத்தோடு  இணைந்திருப்பது அவசியமாகின்றது. ஓயாது ஓடோடி உழைப்போர் கால ஓட்டத்தில் வெற்றிடத்தைச் சந்தித்து வாழ்வில் விரக்தி அடைவதுண்டு. ஆனால், தொடர்செபத்தில் கடவுளுடன் இணைந்திருந்தால் மக்கள் பணியாற்றும் சக்தி பலுகிப்பெருகும். கடவுளோடும் அவர் கற்றுத் தரும் பாடங்களோடும் இணைந்திருப்போம். நிறைபலன் கொடுப்போம். 

Comment