No icon

புதன் மறைக்கல்வியுரை - புகழுரையின் இறைவேண்டல்

புதன் மறைக்கல்வியுரை - புகழுரையின் இறைவேண்டல்
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இவ்வாரமும் இறைவேண்டல் குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையை ’புகழுரையின் இறைவேண்டல்’ என்ற தலைப்பில் நூலக அறையிலிருந்தே திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார். முதலில் 145 ஆம் திருப்பாடலிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று நாம், புகழுரைப்பின் இறைவேண்டல் குறித்து சிந்திப்போம். மக்களின் வெறுப்புணர்வையும், ஒதுக்கிவைத்தலையும் சந்தித்தபோது, இயேசுவின் பதில்மொழி, இறைவனைப் புகழ்ந்து பாடுவதாக இருந்தது. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் (மத்.11:25) என இறைவனைப் இயேசு புகழ்கிறார். நாமும் துன்ப காலங்களில், அதாவது, இறைவன் நம் அருகில் இல்லை என்றோ, தீயோன் வெற்றியடைந்துள்ளான் என்றோ மயங்கி, கலங்கி நிற்கும் காலங்களில், இறைவனைப் புகழ்ந்தேற்ற வேண்டும் என இயேசுவின் இந்த எடுத்துக்காட்டு நமக்கு கற்றுத்தருகிறது. அவ்வாறு நாம் செய்யும்போது, அனைத்தையும் புதிய, வேறுபட்ட கண்ணோட்டத்தோடு நம்மால் காண முடிகிறது. ஏனெனில், திருஅவையின் மறைக்கல்வி ஏடு கற்பிப்பதுபோல், "இறைவனுக்கு புகழுரைப்பதன் வழியாக, நாமும், மகிமையில் இறைவனைக் காண்பதற்கு முன்னர் நம்பிக்கையில் அவரை அன்புகூரும் தூய உள்ளத்தோரின் ஆசிர்வதிக்கப்பட்ட அன்பில் பங்கெடுக்கிறோம்" (எண். 26,39). இதை நாம், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டில் மிகத் தெளிவாகக் காண்கிறோம். நோயாலும், பார்வை இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாலும் பல்வேறு துயர்களை சந்தித்த புனித பிரான்சிஸ், அவ்வேளையில்தான், புகழ்மிக்க, "படைப்புகளின் கவிதை" (Canticle of the Creatures) என்பதை உருவாக்கினார். வாழ்வின் அனைத்திற்காகவும், ஏன், மரணத்தைக்கூட சகோதரியாக அழைத்து, இறைவனைப் புகழ்கிறார். எப்போதும் பிரமாணிக்கமாக இருக்கும், மற்றும், முடிவற்ற அனபைக் கொண்டிருக்கும் இறைவனை, நாம் நம் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் புகழ்ந்து பாடவேண்டும் என்பதன் முக்கியத்துவம் குறித்து ஏனையப் புனிதர்களுடன் இணைந்து, அசிசியின் புனித பிரான்சிஸ் நமக்கு கற்றுத் தருகிறார்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இறுதியில், தன் எண்ணங்கள் முதியோர், இளையோர், மற்றும், நோயுற்றோர் நோக்கிச் செல்கின்றது என்று அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment