No icon

இன்றைய உலகில் இறைஅழைத்தல் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் - 25.04.2021

இன்றைய உலகில் இறைஅழைத்தல் வாழ்வில் சந்திக்கும் சவால்கள்

அருள்தந்தை. C. கிறிஸ்பின் பொனிப்பாஸ், செயலர்
தமிழக இறையழைத்தல் பணிக்குழு

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் (மத் 28:19) என்ற இயேசுவின் அன்பு வார்த்தைகள்தான், திருஅவையின் நற்செய்திப் பணிக்கு அடித்தளமாக இருக்கிறது. இயேசுவினுடைய வாழ்வும் பணியும், இறப்பும் உயிர்ப்பும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் அவர் வழங்கும் சீடத்துவ வாழ்வில் பங்கேற்பவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளது. அவர் கொடுத்த அறைகூவல்தான் “அறுவடை மிகுதி; ஆனால் பணியாளர்களோ குறைவு” (மத் 9:37) சீடத்துவ வாழ்விற்கு தூண்டுதலாக உள்ளது எனலாம். இவ்வாறு நாம் பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், அச்சீடத்துவ வாழ்வு இன்றைய உலகில் பல்வேறு சவால்களைச் சந்திக்கிறது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திருஅவைக்கு புதிய உத்வேகத்தை அளித்தாலும், இன்னும் நாம் முன்னேற வேண்டியுள்ளது. இது திருஅவை வழங்கிய போதனைகளை சரியாக புரிந்துகொள்ளாததால்கூட இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் சவால்கள், சவால்களாகவே இருக்கின்றன.
1. உலகியல் சார்ந்த சிந்தனைகள்
தான் ஒரு குருவானவராக, அருள்சகோதரியாக அல்லது அருள்சகோதரனாக மாற வேண்டும் என்ற தாக்கம் 90ள கிட்ஸ் என்றழைக்கப்படும் தலைமுறையினரிடத்தில் அதிகமாக இருந்தது. ஆனால், 2மு கிட்ஸ் என்றழைக்கப்படும் தலைமுறையினரிடத்திலோ அந்த உத்வேகம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. நாகரீகம் வளரவளர மனிதர்கள் இறைவனை மையப்படுத்தியச் சிந்தனையிலிருந்து மெதுவாக ஒதுங்குகிறார்களோ என்ற ஐயப்பாடு எழலாம். ஆனால் அவ்வாறு அல்ல. இறைவனைப்பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை. தன்னை ஆய்வு செய்தால்தானே இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடுபடத் தோன்றும். தன்னைப்பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களால், எப்படி காலமும் நேரமும் கடந்து வாழும் இறைவனைப்பற்றி சிந்திக்கத்தோன்றும்? இன்றைய உலகில் பெரும்பான்மையான இளையோரின் இலக்கு என்னவென்றால்; நன்கு படிக்க வேண்டும், அதிகமாக சம்பாதிக்க வேண்டும், அழகான மங்கையைக் கரம்பிடிக்க வேண்டும் மற்றும் நிம்மதியாக வாழவேண்டும். நினைத்ததை அடைவதற்காக எந்த அளவிற்கும் இறங்க வேண்டும் என்ற நிலையில்தான் பெரும்பாலானோர் உள்ளனர். தாங்கள் அறியாமலே உலகியல் சார்ந்த செயல்களுக்கு மனிதர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய சிந்தனைகள் சுயநலத்தினுடைய வெளிப்பாடாகும். வியாபார உலகில், யார் தகுதியுள்ளவர்களோ அவர்கள் மட்டும் பிழைத்துக்கொள்வார்கள் என்ற யுக்திக்கு ஏற்ப, பொய்யும் புரட்டும் சொல்லி தான் நினைப்பதை சாதிக்க முடிந்தால் அதுவே பிழைப்பதற்குரிய வழியாக பார்க்கப்படுகிறது. எனவே, நான் என்ற ஆணவம் ஓங்குகின்றபொழுது, நாம் என்ற பரந்த மனப்பான்மை வருவதில்லை. நாம் என்ற சிந்தனை வந்தால்தான் கடந்து வாழும் இறைவனைப் பற்றி சிந்திக்கத் தோன்றும்.
2. இறை மறுப்பு கொள்கை சார்ந்த சிந்தனைகள்
“எதையும் நிரூபித்துக்காட்டினால்தான் நம்புவேன்” என்று கேள்வி கேட்டு சிந்தனையை சிதறடிப்பவர்கள் இருக்கிறார்கள். மனிதர்கள் தாங்கள் பின்பற்றுகின்ற
மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பகுத்தறிவாளர்களால் கொடுக்கப்பட்டச் சிந்தனைகள் இன்று கடவுள் மறுப்பு கொள்கைகளாகப் பார்க்கப்படுகிறது. இது தவறான சிந்தனையாகும். “மனிதனை மனிதனாக மதிக்காத சமூகத்தில் கடவுள் வழிபாடு செய்து என்ன பயன்?” என்பதுதான் பகுத்தறிவாளர்களின் அடிப்படைக் கேள்வி. இதைத்தான் இயேசுவும் சொன்னார்: “மனிதன் சட்டத்திற்காக அல்ல: மாறாக சட்டங்கள் மனிதனுக்காகவே.” எனவே, இயேசுவை நெருக்கமாக பின்பற்றுவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய புரிதல் இல்லாமையால் சீடத்துவ வாழ்வை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கிறது. 
வாழ்வில் சில விஷயங்களை நமது கண்களால் பார்க்க முடியாது, ஆனால் புரிந்து கொள்ள முடியும். தினந்தோறும் சுவாசிக்கின்ற காற்றை நமது கண்களால் பார்க்க முடியுமா? தாய் தன்னுடைய குழந்தையை நேசிப்பதை அளப்பதற்கு ஏதேனும் கருவிகள் உண்டா? கணவன் மனைவி இடையே உள்ள அன்பை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியுமா? சிலவற்றை நாம் புரிந்துகொள்ளலாம், மேலும் சிலவற்றை நாம் உணர்ந்துகொள்ளலாம். இறைவனும் அப்படித்தான். காலமும் நேரமும் கடந்து உறையும் கடவுளை, காலத்திற்கும் நேரத்திற்கும் உட்பட்டு சிந்திக்கும் மனித கோட்பாடுகளுக்கு உட்பட்டு முழுமையாக வரையறுக்க முடியாது.
3. அடிப்படை மதவாதச் சிந்தனைகள்
"மதப்பற்று தேவை ஆனால் மதவெறி தேவையில்லை". நான் நினைப்பதும் சிந்திப்பதும் மட்டும்தான் சரி; மற்றவர்கள் சிந்திப்பது தவறு என்ற ஆதிக்க மனநிலை மிகவும் தவறானது. நமது அரசியல் சாசனம் தருகின்ற உரிமைகளைக்கூட சில இடங்களில் நாம் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றது. இதன் விளைவாக ஏன் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையில் நிம்மதியாக இருந்துவிடலாமே! என்கின்ற எளிதான போக்குகள் வளர்ந்துவிடுகின்றது. தொடக்ககால சீடர்களிடமிருந்த உறுதியான நிலைப்பாடு இன்றைய சீடர்களிடையே தகர்ந்து போனதுபோல தோன்றுகிறது. 
நான் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் என்கின்ற அடையாளம் வெறும் கோவில்களையுமோ சிற்றாலயங்களையுமோ அல்லது அலங்கார வளைவுகள் வைப்பதிலுமோ இல்லை. மாறாக, உண்மையான சாட்சியாக வாழ்வதிலேதான் இருக்கிறது. இத்தகைய மனப்பான்மை நம்மிடையே இல்லாதது ஓர் மாபெரும் குறைபாடே.
4. கிறிஸ்தவர்களுக்கிடையே ஏற்படும் தடுமாற்றங்கள்
ஒரு மதத்தினுடைய பெரியவர் சொன்னார்: “நமது சீடர்கள் இங்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களிலும் இருக்கிறார்கள். நாம் கடைபிடிப்பதைவிட நமது அடிப்படை கட்டமைப்புகளை அவர்கள் வெகு தெளிவாக கடைபிடிக்கிறார்கள்.” ஆனால், கிறிஸ்தவம் கூறுவதோ “இனி உங்களிடையே யூதரென்றோ அடிமையென்றோ கிரேக்கரென்றோ எந்தவித வேறுபாடும் இல்லை. இனி நீங்கள் கடவுளின் மக்கள் அவருடைய அன்புப் பிள்ளைகள்”. இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கிடையே ஒரு மாபெரும் பாதாள இடைவெளி இருப்பதை உணரலாம். நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மேற்கூறிய கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய மனநிலையோடு அழைத்தல் வாழ்வில் இருப்பது சரியானதல்ல.
நம்முடைய நிறுவனங்கள் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும். கல்லாமை இல்லாமை ஆகி, எங்கும் அறிவொளி வீசிட வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்டது. நமது நிறுவனங்களில் பயின்றிட இன்று மாபெரும் போட்டி இருப்பது, நமது கடுமையான அர்ப்பணமிக்க உழைப்பை வெளிப்படுத்துகிறது. ஆனால், சமீப காலமாக நமது இலக்கிலிருந்து தவறிச் செல்வதுபோல நமது செயல்பாடுகள் இருக்கின்றது. இலக்கு மக்களோடு ஒருங்கிணைந்து அவர்களோடு நமது உறவை வலுப்படுத்துவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து நாம் அந்நியப்படுவது போல சில செயல்கள் இருப்பது தவறான முன்னுதாரணங்களாகும். நமது நிறுவனங்களில் தரம் இருக்கிறது. ஆனால் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு குணம் இருக்கிறதா? என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே. எனவே நிறுவன கட்டமைப்புகளைத் தாண்டி இன்னும் அதிகமாக மனிதநேயத்தோடு பணியாற்ற வேண்டும்.
5. இன்றைய சீடர்கள்
கிறிஸ்துவின் மறுவுருவங்களாக இருப்பவர்கள் சீடர்கள். ஆனால், தாங்கள் ஒரு பணியாளர்களே என்பதை அனைத்துச் சீடர்களும்
ஏற்றுக்கொள்கிறார்கள். அத்தகைய சீடர்களின் வாழ்வின் தனிப்பட்ட சவால்கள் இன்னும் அதிகமான சிக்கல்களை உருவாக்குகின்றது. உலகின் போக்கிலிருந்து அவர்கள் மாறுபட்டவர்களாக அதாவது ஒளியைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டியவர்கள் சில நேரங்களில் இருளின் செயல்களோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் நிம்மதியின்றியும் தவறான முன்னுதாரணங்களாகவும் வாழ்கிறார்கள். சில வேளைகளில் புதிய சிந்தனைகள் எழும்போது தங்களுக்குள்ளே மாபெரும் போராட்டத்தை சந்திக்கிறார்கள். அன்பைப் போதித்து அனைவரையும் சமாதானத்தோடு வாழச்சொல்லுகின்ற சீடர்கள், தங்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வாறு இயேசு கூறியது போல "உங்கள் தலைவர்கள் அனைவரும் இறைவார்த்தையைப் போதிப்பதைக் கவனமாகக் கேளுங்கள், ஆனால் அவர்கள் செய்வதுபோல செய்யாதீர்கள்" என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பதுபோல சில நேரங்களில் நடந்துகொள்கிறார்கள். இத்தகைய சூழல்கள் இறையழைத்தலுக்கு மாபெரும் தடைக்கல்லாகவே இருக்கிறது.
இவ்வாறு நாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தகைய சவால்களுக்கிடையே அர்ப்பண உணர்வோடு பணியாற்றுகின்ற சீடர்களும் இருக்கிறார்கள். திருஅவை புனிதமும் பாவமும் நிறைந்தது என்பதற்கேற்ப இரண்டும் கலந்து இருக்கின்றார்கள். நமது எத்தகைய வாழ்க்கைமுறையிலும் நிறைகளும் குறைகளும் இருப்பது இயல்பானதே. ஆனால், சீடத்துவ வாழ்வின் குறைகளை மட்டும் பெரிதுப்படுத்திப் பேசுவது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. எனவே தவறுகளைத் தாண்டி புதிய சீடத்துவ சிந்தனையோடு கிறிஸ்துவின் மக்களுக்கு பணியாற்ற இளையோரே விரைந்து வாருங்கள். அவர் பணியில் இணைந்திடுங்கள்.

Comment