No icon

என் தந்தையின் கட்டளையின்படியே நான் மேய்ப்புப் பணியை செய்கிறேன் - 25.04.2021

 

என் தந்தையின் கட்டளையின்படியே நான் மேய்ப்புப் பணியை செய்கிறேன் - U. Agnel Coimbatore

ஒருவர் துறவற அழைப்பை ஏற்பது என்பது அதற்குத்தான் தகுதியுடையவர் என்ற உணர்வு அல்லது இறைவனின் தனிச் சலுகை பெற்ற திருப்பணியாளர்களாகவும் சாட்சிகளாகவும் இருப்பதற்கு போதுமான உறுதி கொண்டவர் என்பது அல்ல. மாறாக இது தன்னை அழைக்கும் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையினால் ஏற்பதாகும். ஒரு மனிதரால் ஊருக்கு பெருமை, ஒரு ஊரில் ஒரு மனிதனுக்குப் பெருமை என்றும் சொல்லலாம் அது பொதுவான ஒன்று. நாம் கிறிஸ்துவில் பார்த்தோமானால் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து ஒருவர் இறைப்பணிக்கு வந்தால் அந்த ஒருவரால் அவர் பெற்றோர்களுக்கு பெருமை, திருஅவை முழுவதற்கும் பெருமை, அவர் சொந்த ஊருக்கு, உற்றார், உறவினருக்கு, நண்பருக்கு, நம் நாட்டிற்கு, நம் உலகிற்கு, நம் சமூகத்திற்கு, அவர்கள் எங்கெல்லாம் தன் துறவற பணி செய்கிறாரோ அங்கெல்லாம், ஏன் நம் கிறித்துவத்திற்கு எல்லாம் பெருமை. இறுதியாக துறவறத்தார் இறந்தாலும் விண்ணகத்திற்கு பெருமை சேர்க்கிறார். அன்பானவர்களே ஒரு யானை வாழ்ந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வது போல ஒரு துறவறத்தார் உலகத்தில் வாழ்ந்தாலும் இறந்தாலும் கோடிக்கணக்கான பொன் மதிப்புக்கு சமம். விலை மதிக்க முடியாத அளவிற்கு விளங்கும் குருத்துவத்திற்கு அடித்தளம் இறை அழைத்தல் தான்.
இறை அழைத்தல் வாரத்தின் முதல் வாசகத்தில் உடல் நலம் பெற்று இருந்தவர்கள் இயேசுவின் பெயரால் நலமடைந்து நம்முடன் இருக்கிறார்கள் என இஸ்ரயேல் மக்களுக்கும் ஏன் நமக்கும் கூட தெரியும் அதேபோல கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக உயிர்த்து மாட்சிமை பெற்று உயிர்த்தெழுந்தார் “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” என்ற இறை வசனத்தின்படி உங்களை மற்றவர்கள் இழிவுப்படுத்தலாம், துன்புறுத்தலாம், அப்படியெனில் இயேசு இந்த ஆறுதல் இறை வசனங்களைக் கூறி நம்மை முழுவதுமாக ஆற்றி தேற்றுகிறார். 
இரண்டாம் வாசகத்தில் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் நாம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாம் கடவுளின் மக்களாய் இருப்போமானால் கடவுள் நம்மீது மிகவும் அன்பு பாசம் கொண்டுள்ளார். அவரின் பிள்ளைகள் என்பதற்கு இயேசுவின் கட்டளையின்படியும் விசுவாசத்தின் படியும் வளரும் போதுதான் நாம் இயேசுவின் பிள்ளைகள் ஆகிறோம்.
நற்செய்தி வாசகத்தில் “நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்” (யோவா 10:11).  இயேசு நல்ல ஆயனாக எப்பொழுதும் நமக்கு விளங்குகிறார்.  நாம் இயேசுவைப் போல வாழவேண்டும். இயேசுவைப் பின்பற்றி நல்வாழ்வு வாழவேண்டும். இயேசுவின் இறைச் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். இயேசுவின் மீட்புப் பணியில் சீடர்கள் எப்படி தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இறையழைத்தலை செம்மையாக செய்தார்களோ அதேபோல நாமும் இறையழைத்தல் பணியை செம்மையாக செய்யவும் வாழவும் அழைக்கப்பட்டு இருக்கிறோம். 
இறையழைத்தல் என்பது இரு முக்கிய படி நிலைகளைக் கொண்டுள்ளது . 
* மனத்தாழ்மை  * முழு ஈடுபாடு 
மனத்தாழ்மை:
இறையழைத்தல் ஆனது முழுமையாக அர்த்தம் பெறுவது மனத்தாழ்ச்சியால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. கடவுள் இறைவாக்கினர் எசாயாவை இறைப்பணிக்கு அழைக்கும்போது, "தான் ஒரு தூய்மையற்ற உதடுகள் பெற்றவன்" என தனது குறைபாடுகளை ஏற்று தனது தகுதியை காண்பிக்கின்றார்.
அன்னை மரியாவின் மனத்தாழ்மை: இயேசுவின் தாயாக நம் மீட்பின் தாயாக விளங்கும் நம் அன்னை மரியா இறைவன் தேர்ந்தெடுத்த பொழுது,“நான் உமது அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று லூக்கா நற்செய்தி 1: 38 இல் தனது மனத்தாழ்மையை வெளிப்படுத்துகின்றார்.
மனத்தாழ்ச்சியானது இறை சாட்சியத்தின் முதல் படிநிலையாக இருக்கிறது. மனத்தாழ்ச்சி நம்மில் அடித்தளமாக இருக்கும்போது இறையாட்சி என்னும் மகுடம் நம் வாழ்வை அலங்கரிக்கும். 
முழு ஈடுபாடு :
முழு ஈடுபாடு என்பது எல்லாரிடத்திலும் காணப்படுவது அரிது. இயேசுவின் சீடர்கள் அவரின் உயிர்ப்புக்குப் பின் முழு ஈடுபாட்டோடு நற்செய்தியை ஊரெல்லாம் பறைசாற்றினர். கிறிஸ்துவின் மேல் கொண்ட நம்பிக்கையே இயேசுவின் மீட்பு பணியை செய்ய காரணம் "இதோ ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்" (மத் 10:16) என்ற வசனத்தில் இயேசு கூறுகிறார்.
முழு ஈடுபாட்டிலும் இறைப்பணியை தொடங்குவது கடினம். தொடர்வதும் கடினம். இறைப்பணியை செய்ய வழிமுறைகளை நாம் தேடவேண்டும். இத்தகைய சவால் நிறைந்த மீட்பு பணி அனைத்திற்கும் நமது நிலைப்பாடு என்ன? இறை அழைத்தல் என்பதில் 
-பணிக் குருத்துவம் 
-பொதுக் குருத்துவம் 
என்று இரண்டையும் உள்ளடக்கியது.
பணிக் குருத்துவம்:
பணி குருத்துவம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குருத்துவத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருள்சகோதரர்கள், அருள்சகோதரிகள் இவர்கள் அனைவரும் தங்களின் இறைப்பணி ஆகிய மீட்பு பணியை செய்ய துறவறத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுக் குருத்துவம்:
பொது குருத்துவம் இறைபணியாளர்களை போலவே இறைமக்களும் இறை விருப்பத்தை நிறைவேற்றுவதில் பங்குதாரர்கள். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இவ்வாறு உரைக்கிறது “திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும் அதன் அங்கத்தினராக இருப்பதால் தூய வாழ்விற்கான பொதுக் குருத்துவ அழைப்பில் பங்குபெறுகிறார்கள்” (இன்றைய உலகத் திருச்சபை 40).
இறை அழைத்தல் ஆனது எவ்வகையிலாவது பிறர் பணிபுரிந்து தூய வாழ்வு வாழ துணை நிற்கிறது. "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைபட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்" (எசா 61:1).  இறைப்பணி நோக்கத்தில் தான் நம்முடைய துறவறத்தார் மற்றும் இறைமக்கள் அனைவரும் இறைப்பணியே செய்து வருகின்றனர். இறைப் பணி என்றும் தொடரட்டும். அதற்காக நாம் தினம் தினம் ஜெபத்தில் ஒப்புக்கொடுப்போம். இயேசுவின் சீடராக எப்பொழுதும் வாழ்வோம்! வளர்வோம்!

Comment