No icon

மாற்றம் தேடும் பெண்கள் துறவு வாழ்வு - 25.04.2021

 

மாற்றம் தேடும் பெண்கள் துறவு வாழ்வு

அருள்சகோதரி முனைவர் விமலி லூர்து FIHM, இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்.

இறை அன்பு அனுபவத்தில் ஆழமாக வேரூன்றி, சமத்துவ உறவையும் மாற்றுப் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட மிகப்பெரிய சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தவர் இயேசு. ஒரு புதிய புரட்சி சமுதாயத்திற்கு வித்திட்டவர். இந்த சமுதாயப் புரட்சியாளர் இயேசுவையும் இன்றைய வரலாற்றுச் சூழலையும் முன்னிறுத்தி துறவு சபைகள் தங்களது வேரோட்டமான வாழ்வையும், பணியையும் புதுப்பித்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். பொதுநிலையினரோடு நல்மனம் படைத்த அனைவரோடும் தோழமை கொண்டு புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதில் முன்னணி வீரர்களாக, ஒருங்கிணைந்த விடுதலைக்காக ஏங்கும் ஏழைகளின் ஏக்கத்தை நிறைவு செய்யும் தோழர்களாகவும், துறவிகள் தங்களை அடையாளப்படுத்த வேண்டும். துறவு வாழ்வை வேரோட்டமாகப் புதுப்பிப்பதற்குப் புதுப்பிக்கும், உறுதியூட்டும் தூய ஆவியார் துணை நிற்கட்டும் (திபா 51:10). 
இன்றைய சூழலில் குடும்ப உறவின் மாண்பினைக் குலைக்கும் வகையில் பல்வேறு சிந்தனைகள், கருத்துக்கள், செயல்பாடுகள் உலகில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குடும்ப அன்பு, நுகர்வுப் பண்பாட்டின் தாக்கத்தால் போலித்தனத்தோடு கூடிய செயற்கையான, நிர்ப்பந்தங்களைக் கொண்டு, அன்பாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் குடும்ப அன்பு பற்றி ஆயர் மாமன்றத்தில் ஆழமான ஆழ்ந்து சிந்தித்து தேர்ந்து தெளிந்த கருத்துகளைத் திருத்தூது ஊக்கவுரையாக ’அன்பின் மகிழ்ச்சி’ என்னும் தலைப்பில் நமக்குக் கொடுத்துள்ளார். 
உணர்ச்சிமிக்க உறவுகளை எப்படிக் கையாள்வது என்ற கலையை இன்றைய சமுதாயத்திற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய உலகின் பார்வையில் நுகர்வு நோக்கோடு சுரண்டுதல், இரத்தத்தினை இறுதிச் சொட்டுவரை பிழிதல் என்கின்ற மனநிலைதான் மேலோங்கி நிற்கின்றது. இதே கண்ணோட்டம் உறவு நிலைகளிலும், குறிப்பாக திருமண உறவிலும் கலந்துவிட்டதை நம் காலத்தில் நன்கு உணர்கின்றோம். திருமண உறவிலும் துய்த்தெறிதல், நுகர்வுக் கலாச்சாரம் போன்ற கண்ணோட்டங்களினால் உந்தப்பட்டு தம்பதியரும் குடும்ப உறுப்பினர்களும், ஒருவர் ஒருவரைக் கையாண்டு கைவிடலாம். இதுவே மணமக்களின் மண முறிவுக்கும் பண முறிவுக்கும் காரணமாகின்றது. எனவே இளையோரின் இதயங்களைத் தாராளமாக அன்பு, அர்ப்பணம், வீரம் போன்ற திறன்களின்பால் ஈர்த்தது. 
திருமணத்தை ஆர்வத்துடனும், துணிவுடனும் அணுக அழைப்புவிடுக்க வேண்டும். இந்த சூழலில் உருவாகும் குடும்பத்திலிருந்துதான் பிறந்த பெண் குழந்தை அதன் தாய் தந்தையின் அன்பிற்கு உரிமை உடையது. இதைத் தனது தனிப்பட்ட பெயர், உணவு, மொழி, ஊட்டம், அன்பு கலந்த பார்வை, புன்னகை போன்றவற்றின் மூலம் உறுதி செய்துகொள்கின்றது. மேலும் தம்பதியரிடையே காணப்படும் வளமான அன்பும் அவர்களது குழந்தைக்கு பாதுகாப்பாக அமைகின்றது. அக்குழந்தை சுயநலம் கருதாது தன்னைப் பராமரிக்கும் தாயிடமிருந்து தன்மையச் சிந்தனையை விடுத்து, பிறரன்பைக் கற்றுக்கொள்கின்றது. மேலும் உயிரின் அழகையும் தெரிந்துகொள்கின்றது. அதேபோன்று தாயோடு சேர்ந்து தன்னை வளர்க்கும் தந்தையிடமிருந்தும் கற்றுக்கொள்கின்றது. இந்த நிலையிலிருந்துதான் அழைத்தல் உருவாகுகின்றது. 
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனது கடமைகளை உணர்ந்து நேர்மையான வழியில் நடந்து பிறர்மேல் அன்பு காட்டி, தனது குழந்தைகளையும், இளையோர்களையும், முதியவர்களையும் பேணி, நல்வழியில் பணம் சேர்த்து, பிறருக்காக வாழ முற்படும்பொழுது நாம் நம்மை அறியாமலேயே தியாக வாழ்க்கை வாழ்கிறோம் என்பதுதான் அசைக்க முடியாத உண்மை. ‘தியாகம்’ செய்து வாழ்வது என்பது ஓர் ஆரோக்கியமான வாழ்வு. அத்தியாக வாழ்க்கையே நம் இதயம் காணுகின்ற அறமாகும். இந்த அறத்திலிருந்து உருவாகும் பெண்கள் தான் துறவியர் பயிற்சி இல்லங்களுக்குள் நுழைகின்றனர். குடும்பத்தில் இப்பெண்கள் சந்திக்கும் உலகமானது இன்றையச் சூழலில் இளம்பெண்களை பல நிலைகளில் பாதிக்கின்றது. உருவமற்ற உலகிலே உருகொடுத்த கடவுள் தன் சாயலான மனிதர்களுக்கு வழங்குகின்ற மாபெரும் கொடை இறைஅழைத்தல் அது அர்ப்பணத்தில் மலர்கிறது. தியாகங்களை உள்ளடக்கிய தனித்துவ வாழ்வு பலவீனங்களிலும், பலமானவரான இயேசுவை சிக்கென பிடித்துக்கொண்டு பணிவாழ்வில் பந்தய வீரரைப் போல, இறைமக்களை வழிநடத்துவதில் நல்லாயனைப் போல, செயல்படும் பெண்கள் துறவு நிலையில் அர்ப்பண வாழ்வில் இணைந்து கற்கின்றனர். 
குடும்பம் என்பது மற்றவரோடு உறவுகொள்ள, ஒருவர் ஒருவருக்குச் செவிமடுக்க, பொறுமையாக இருந்து ஒருவர் ஒருவரை மதிக்க, ஒருவர் ஒருவருக்கு உதவி செய்து வாழக் கற்றுக்கொள்ளும் இடமாகும். எனவே, அடுத்தவரோடு நெருக்கத்தை ஏற்படுத்தவும், அடுத்தவரைக் கவனித்துக்கொள்ளவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் “தனது - தன்னைச் சார்ந்த” என்ற அழிவுக்குரிய நிலையிலிருந்து நம்மை உடைத்துக்கொண்டு கனிவும், பாசமும் உடைய குடும்பத்தில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் நம்மில் ஏற்படும் என்று திருத்தந்தை குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்டப் பெற்றோர்கள் மட்டும் பிள்ளைகளிடத்தில் மாற்றத்தினை ஏற்படுத்திவிட முடியாது. எனவே, கத்தோலிக்க சமூகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அறம் சார்ந்த விழுமியங்களை ஏற்படுத்த விழைந்திட வேண்டும். பெண்கள் முதிர்ச்சியடைந்த மனிதர்களாய் வளர்ந்தோங்குவதற்குப் பொறுப்பு கொண்ட நிறுவனங்களின் பணி ஊக்கப்படுத்தப்பட வேண்டும். 
நாம் வாழும் இந்த உலகு தகவல் தொழில் நுட்பப் புரட்சி நடைபெற்று வரும் உலகு. அதிக தொழில் நுட்பத்துடன் அதே நேரத்தில் அதிக நாள் பயன்பாட்டிற்கு உதவாத அலைபேசியை வைத்துக் கொண்டு, அயலவரோடு அளவளாவதற்கு அதிக நேரம், அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை எவ்விதத் தங்குதடையின்றிப் பயன்படுத்தப் பழகியுள்ளனர். இதற்கு இளம் பெண்களும் விதிவிலக்கல்ல. அதிகத் தொழில் நுட்ப வசதியுடன் கூடிய அலைபேசியில் உள்ள முகநூல் (குயஉநbடிடிம), கட்செவி அஞ்சல் (றுhயவள ஹயீயீ) சுட்டுரை (கூறவைவநச), பிற சமூக வலைதளங்கள் ஆகியன உறவை வளர்த்தெடுக்கவும், சில நேரங்களில் இவற்றால் ஏற்படும் தவறா நட்பினால் உயிர் பிரிவதற்கும் காரணமாக அமைகின்றன. இத்தகைய ஊடகப் பாதிப்புகள் மையத்திலிருந்துதான் அழைத்தல் உருபெறுகின்றது. 
நீந்துபவர்கள் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் நீந்தும்போதுதான் தூய நீரைப் பெறுவர் என்பது ஜெர்மானிய பழமொழி ஒன்று. இதனைப் போன்றுதான் இன்றைய உலகில் கவலை: மற்றொன்று நம்பிக்கை: கவலையைப் புறந்தள்ளி நம்பிக்கையோடு பெண்கள் அன்பாலும், பொறுமையாலும், பரிவாலும், ஞானத்தாலும், மனத்திண்மையாலும் எப்போதும் பிறரை எண்ணி வாழவே, தம்மையே வெறுமையாக்கி, இறுதி மூச்சுவரை எண்ணிலடங்கா தியாகங்கள் புரிவதற்காக தங்களை வாழ்நாளெல்லாம் தயாரித்துக்கொள்ளக் கடன்பட்டிருக்கிறார்கள். உலகையே நிர்வகிக்கும் கடவுளுக்குச் சேவை செய்யப்போகிறேன் என்ற எண்ணம் இன்று குறைந்து கொண்டே செல்கின்ற நிலையினைதான் இன்றைய துறவு நிலையில் உள்ளப் பெண்களிடம் அதிகம் காண்கின்றோம். ஏனென்றால் அவர்கள் வந்துள்ள சமூகம் பாதிப்புகள் என்று சொன்னால் மிகையாகாது. 
நாம் வாழும் இன்றைய உலகம் மனச்சான்று மங்கி, மழுங்கி, மரணப் படுக்கையில் கிடந்து உயிருக்காக ஊசலாடுவது போல் இருக்கிறது. கோடிக்கணக்கான பண ஊழலில் பிடிபட்டவர்களுக்கு ஆரவார வரவேற்பும், விழாவும் நடத்துகின்றனர். இவ்வாறு மழுங்கிப்போன பழைய ஏற்பாட்டு மக்கள் மத்தியில், இறைவாக்கினர்கள் என்பவர்கள், மக்களின் மனச்சான்றாகச் செயல்பட்டனர். இதுபோல துறவியர் குரல் எழுப்ப, உரக்க சப்தமிட வேண்டும். இது குழப்பம் ஏற்படுத்தலாம், பரவாயில்லை என்கிறார் திருத்தந்தை. ஆக, மனச்சான்று மழுங்கிப்போன, அறம் சிதைந்துபோன நம் உலகில் பெண் துறவியர் மனச்சான்றாகச் செயல்பட வேண்டும். அறநெறிக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். அழைத்தலின் நோக்கம், இலக்கும் எந்தக் காலமும் மாறாமல் பாதைகளும், பயணங்களும் புதிய வழிகளில் அமைய துறவற சபைகள் முயற்சிக்கலாம். அர்ப்பணிக்கப்பட்டவர்கள் இறைமக்கள் மத்தியில் நற்கனிகள் தரவேண்டிய மரம். சில வேளை கல்லடிப்படுதல், தேவையற்ற விமர்சனங்கள், புரிதலின்மைகள், குற்றச்சாட்டுகள், அவர்கள் பணியைத் தளர்வுறச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் அத்தகைய நிலைக்கான காரணிகளை ஆராய்ந்து, அதைத் திறந்த மனதுடன் ஏற்பதும், பிரச்சனையைக் களைய முற்படுவதும் அது விஷமிகளின் தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அவற்றை இயேசுவின் பாடுகளோடு ஒன்றித்து ஏற்பதும் துறவு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை மனநிலையாகும். 
இந்த ஆழமான ஆன்மீகத்தை துறவுப் பயிற்சி இல்லங்கள் இளம் பெண்களில் மனதில் பதியவைத்தல் வேண்டும். துறவு வாழ்வு என்பது பாவமே செய்யாத வாழ்வு என்பதல்ல. இறை திருவுளத்தை நிறைவேற்ற வாழ்க்கை முழுவதுமான போராட்டம். அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறைபக்தி, கருணை தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத் தன்மை, ஆயுதங்களை ஏந்தி, துயரங்களை எதிர்த்து யுத்தம் நடத்த புதிய அன்னை தெரசாக்கள் தேவை இன்றைய உலகிற்கு. “ஏழ்மையும் நோயும் நிலாவில் இருக்குமானால், அங்கும் சென்று சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார் அன்னை தெரசா. இத்தகைய மனநிலை இன்றைய துறவியராக வந்துள்ள இளம் பெண்களிடம் அதுவும் துறவு பயிற்சி நிலையில் இருக்கும் பெண் துறவியர்களுக்கு தேவை. 
ஆதியில் அன்று “மக்களின் போராட்டங்களிலும், ஏக்கங்களிலும் அவர்களோடு மிக அருகில் வனத்துறவிகள் இருந்தனர்” எனப் புனித பேசில் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ விழுமியங்களை வாழ்ந்து காட்ட எழுந்ததுதான் முதல் மடாலயத் துறவு. ஆக தொடக்ககாலத்தில் கிறிஸ்தவ துறவு வாழ்வு, பொதுநிலையினரின் குழுமமாக, இயக்கமாகவே இருந்தது அல்லாமல், துறவு வாழ்வு என்பது பொதுநிலையினரை மையப்படுத்தியதாகவே இருந்தது. துறவு வாழ்வின் தொடக்க வரலாற்றைப் பார்க்கும்போது, அது கிறிஸ்துவை மிக நெருக்கமாகப் பின்பற்ற எண்ணி, இவ்வுலகின் போக்கை எதிர்த்து நின்றது. வனத்துறவியர் வாழ்வில் இதைக் காணலாம்.
நம் முன்னோர்கள் துறவு என்பதற்குத் தங்கள் வாழ்க்கையில் அனுபவத்தில் தரும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கது. கல்லாக இருக்கும் ஒரு குழந்தையை நல்ல ஆசிரியரால் மட்டும்தான் பிறர் வணங்குகின்ற அழகிய சிலையாக மாற்றமுடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. அவ்வாறு உருவாக்கும்பொழுது அக்கல்லாகிய குழந்தை பல ஆசிரியர்களாகிய சிற்பிகளின் கைகளில் தவழ்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்புடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் கைகளில் முரட்டுத்தன்மையும் இருக்கலாம். மென்மைத்தன்மையும் இருக்கலாம். ஆனால், தங்களின் கைகளில் தவழ வரும் குழந்தையைத் தங்களது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து, அக்குழந்தையின் தன்மையறிந்து, அக்குழந்தையைத் தட்டிக் கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து, வலி ஏற்படுத்த வேண்டிய இடத்தில் வலி ஏற்படுத்தி, அழகிய சிற்பமாக மாற்றி, பிறர் கைகூப்பி வணங்குமாறு செய்வதே ஒரு நல்லாசிரியர் கடமை. எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவிகளின் குடும்பத்தில் ஆரோக்கியமான அங்கத்தினராக இருக்க வேண்டும். அதேப் பணியினைதான் துறவியர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் செய்ய வேண்டும். 
துறவிகள் வாழ்வை "உள்ளும் புறமும் அனுபவ அலகால் ஆழ்ந்து அளந்து நோக்குங்கால், துறவைத் துறந்து விட்டனரோ துறவியர்" என எண்ணத் தோன்றுகிறது. நேற்றைய சமூகச் சூழலில் உருவான துறவு சபைகள், இன்றைய எதார்த்தங்களைச் சந்திக்கின்றபோது தங்களைச் சரி செய்து கொள்வதுமுண்டு. சருக்கி விழுவதுமுண்டு. சந்திக்க வேண்டிய சவால்கள் பல இருப்பினும் மேலோங்கி நிற்கும் சவால்களை இங்கே நோக்குவோம். பல்வேறு மதங்கள் இனங்கள், இணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மத அடிப்படைவாதத்தைப் பரப்பி மக்களின் சகிப்புத் தன்மையை அரித்துக்கொண்டிருக்கும் கிருமியைக் கொல்வது யார்? நான், எனது, எனது பணி என்பது தேய்ந்து நாம், நமது, நம் சபையின் பணி, நம் திருஅவை என்று வளர்வதுதானே துறவு வாழ்வின் உன்னத நோக்கம்! 
“மக்களுக்கான அர்ப்பணமும், அன்புப் பணிகளும் இல்லையெனில் மனத்துறவும் கன்னிமை உறுதியேற்பும் பொருளற்றவைகளே, போலியானவைகளே.” கடவுளை நம்புவது என்பதை அவரைப்போல, அவருடன் ஒன்றுபட்டு மக்களின் கண்ணீரைத் துடைக்கும், கவலைகளைப் போக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதுதான். இன்று கன்னிமையின் உண்மையான, உயர்வான பொருள் என்பது பிறர் நலனுக்காக, மகிழ்வுக்காக, சமூக நீதிக்காக, நலிந்தோர் நல்வாழ்வுக்காகத் தன்னலம் கருதாத தன்மை அன்புப் பணிகளிலும், அறச் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்துவதன் வழி இறைவனுக்குத் தம்மை அர்ப்பணிப்பதே.
பிறர் காயங்களைக் குணமாக்குவதால்தான்  நம் காயங்கள் ஆறுகின்றன. பிறர் பாரங்களைப் பகிர்ந்து கொள்வதால்தான் நம் சுமைகளும் எளிதாகின்றன. பிறர் வாழ்விற்குப் பொருள் தருவதால்தான் நம் வாழ்வும் பொருள் பெறுகின்றது. பிறரின் பாதைகளில் விளக்கேற்றுவதால்தான் நம் பாதைகளும் ஒளி பெறுகின்றன. இறைவனிலே இணைந்து உறவின் வாசலைத் திறப்பது பெண் துறவியர்களின் ஆழமான ஈடுபாடு. துறவற வாழ்வில் அடியெடுத்துவைத்த துறவிகள் கற்பு, ஏழ்மை, மற்றும் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகளின் வழி கிறஸ்துவின் அன்பில் ஒன்றிக்க முயல்வதையும், போராட்டங்கள் மத்தியிலும் இறைவார்த்தையைப் போர்வாளாக ஏந்தி கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பிற்கு, சான்று பகர்ந்திட தூண்டுவதாகவும், அர்ப்பண வாழ்வில் உப்பாக, ஒளியாக, நல்விதையாக பலன் கொடுத்திட தன்னையே தயாரித்தல் வேண்டும். இந்த மனநிலைகள் இன்று குறைந்துக் கொண்டே செல்கின்றது. இக்குறைகளில் இன்று இளம் பெண் துறவியர்களிடம் சமூகம் காக்கும் ஆழமான மனமாற்றம் தேவை. 
நிறைவை நோக்கி “துறவிகள் மாற்றுச் சமுதாயம், மாற்று உலகம் படைக்க நல்மனது கொண்ட அனைவரோடும் ஈடுபட்டுச் செயல்பட வேண்டும். மாற்று உலகம் சாத்தியமில்லை என்று எண்ணுகிறவர்களுக்கு மத்தியில் மாற்றுச் சமுதாயம் சாத்தியம்  என்று புதிய நம்பிக்கையைத் தருபவர்களாக துறவிகளது கூட்டுவாழ்வு சான்ற பகர வேண்டும். துறவிகள் உலகை (சமுதாயத்தை) உசுப்பிவிட வேண்டும்” எனத் துறவியருக்கு எழுதிய மடலில் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகை, சமுதாயத்தை மட்டுமல்ல திருஅவையை விழித்தெழுச் செய்ய வேண்டிய பணியும், கடமையும் துறவறக் குழுமத்திற்கு உண்டு என்பதைத் துறவியர் மனதில் பதிக்க வேண்டும். இப்படித்தானே தொடக்ககாலத்தில் துறவு சபைகள் தோன்றின என வரலாறு கூறுகிறது.
இயேசு பலருடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமானவர். எதிர்க்கப்படும் அடையாளம். இறைவாக்கினர் பணியில் இயேசுவும் கொலை செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தவர். துறவியரும் இவர்களைப் போல இறைவாக்கினராய், இன்றைய அநீத உலகில் வாழ்ந்து தேவைப்பட்டால் உயிரை இழக்கவும் முன்வர வேண்டும் என்று அழைக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். துறவியர் இன்று இறைவாக்கினர்களாய் வாழ்வில், பணியில், சமுதாய ஈடுபாட்டில் சாட்சிகளாகத் திகழ வேண்டும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை என்கிறார். இறைவாக்கினர் இறைவனிடமிருந்து ஆற்றலைப் பெற்று, இன்றைய சமுதாயத்தை, உலகை ஆய்வு செய்பவர்கள். இரவுக் காவலர்கள் போல விழித்திருந்து, விடியலை உணர்பவர்கள், உணர்த்துபவர்கள் (எசா 21:11-12). இவர்கள் இறைவனையும் தங்களோடு வாழும் சகோதர சகோதரிகளையும் அறிந்தவர்கள். பாவத்தையும் அநீதியையும் இடித்துரைப்பவர்கள் (எரே 1:10). கடவுளைத் தவிர எதற்கும் அஞ்சாத சுதந்திரமானவர்கள். 
ஒடுக்கப்பட்ட ஏழைகள், பலவீனர்கள் பக்கம் நின்று நிலைப்பாடு எடுப்பவர்கள். கண்களில் கனிவு, இதழில் புன்னகை, வார்த்தை வலிமை, தவறுவோரைக் தடுத்து நிறுத்தும் பண்புக்கொண்டவர்களாக உருவாக்குதல் இன்றைய தேவையாகும். துறவற அழைப்பின் ஆழத்தை உணர்ந்து, நற்செய்திப் பணிகள் புரியும் துறவியர் பலர் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் அனைத்து சமயத்தினரும் வாழும் இந்தச் சமூகத்தில், பல்வேறு அறப்பணிகள், சமூகப்பணிகளைச் சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றனர். இத்தகையோரை வாழ்த்திடுவோம். வளர்ந்திட வழிகாட்டிடுவோம். 

Comment