No icon

இயேசுவின் தூய இதய பக்தி

 கத்தோலிக்கத் திருஅவை, ஜூன் மாதத்தை இயேசுவின் தூய இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக சிறப்பிக்கிறது. இம்மாதம் (28 ஆம் தேதி) இயேசுவின் தூய இதயத்தின் பெருவிழாவையும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இத்தருணத்தில், தூய இதய பக்தி வளர்ச்சி அடைந்த வரலாற்றை இக்கட்டுரை வழியாக அறிந்துகொள்வோம்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர் களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத் 11:28-30) என்ற இயேசுவின் வார்த்தைகள், மனித குலத்தின் மீது அவரது இதயம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகின்றன. “உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்” என்று திருத்தூதர் யோவான் (13:1) எடுத்துரைக்கிறார்.
“தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப் பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13) என்று கூறிய இயேசு, நம்மைத் தமது நண்பர்களாகக் கருதி நம் மீட்புக்காக சிலுவையில் தமது உயிரைக் கையளித்தார். குத்தி திறக்கப்பட்ட அவரது விலாவிலிருந்து வடிந்த இரத்தமும் தண்ணீரும் மீட்பளிக்கும் அருளடையாளங்களை வெளிப்படுத்தின. இவ்வாறு இயேசுவின் இதய அன்பின் ஆழத்தை நாம் அறிந்திருக்கிறோம். “கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எதுவும் இல்லை” (உரோ 8:35) என திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.
மறைசாட்சியான புனித ஜஸ்டின்  (-கி.பி.165), “கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் இருந்து துளிர்த்த உண்மை இஸ்ரயேலராக இருக்கிறோம். ஏனெனில், ஒரு பாறையைப் போன்று அவரது இதயத்தில் நாம் செதுக்கப்பட்டுள்ளோம்” என்று கூறுகிறார். லியோன்ஸ் புனித இரனேயுஸ் (-202), “திருஅவை என்பது கிறிஸ்துவின் இதயத்தில் இருந்து நம்மிடம் வழிந்துவரும் வாழ்வளிக்கும் தண்ணீரின் ஊற்றாகும்” என்கிறார். இவ்வாறு திருஅவைத் தந்தையர்கள் காலத்தில் இருந்தே, இயேசுவின் இதயம் பற்றிய சிந்தனைகளைக் காண்கிறோம்.
இருப்பினும் முதல் 11 நூற்றாண்டுகளில், இயேசுவின் இதயத்தின் மீதான பக்தி முயற்சி எதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை. சிலுவைப்போர்கள் காலத்தில் இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் மீதான பக்தி முயற்சி தோன்றி வளர்ந்தது. கிளைர்வாக்ஸ் புனித பெர்னார்து (-1153), அசிசி புனித பிரான்சிஸ் (-1226) உள்ளிட்டோர் இந்த பக்தியை ஊக்குவித்தனர். அதிலிருந்து, இயேசுவின் தூய இதயத்தின் மீதான தனிநபர் பக்தி முயற்சிகள் உருவாயின. “கிறிஸ்துவின் குத்தித் திறக்கப்பட்ட விலாவில், அவரது நன்மைத்தனமும் அவரது இதயத்தின் அன்பும் வெளிப்பட்டன” என்று புனித பெர்னார்டு குறிப்பிடுகிறார்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த புனித லுத்கார்தே (-1246), ஹெல்ப்தா புனித மெக்தில்து (-1298), புனித பெரிய ஜெர்த்ருத் (-1302) ஆகியோர் இயேசுவின் இதய பக்தியைத் தனிப்பட்ட விதத்தில் கடைபிடித்து வந்ததாக வரலாறு பதிவு செய்கிறது. “இயேசுவின் தூய இதயமே, நிலைவாழ்வின் உயிரளிக்கும் ஊற்றே, இறைத்தன்மையின் முடிவில்லாப் புதையலே, இறையன்பின் அணையாத சூளையே உம்மை வணங்குகிறேன். நீரே எனக்கு இளைப் பாறுதலும் அடைக்கலமும் தந்தருளும்” என்று புனித ஜெர்த்ரூத் வேண்டுகின்றார்.
14ஆம் நூற்றாண்டில், மடங்களில் வாழ்ந்த துறவிகள் மத்தியில் மட்டுமே இயேசுவின் இதய பக்தி கடைபிடிக்கப்பட்டது. 1353ஆம் ஆண்டு திருத்தந்தை 6 ஆம் இன்னொசென்ட், இயேசுவின் தூய இதய மறைபொருளைக் கொண்டாட சிறப்புத் திருப்பலியை ஏற்படுத்தினார். 15ஆம் நூற்றாண்டில், இயேசுவின் தூய இதய பக்தி சார்ந்த செபங்களும் பாடல்களும் பொதுநிலையினரிடமும் பரவின. 16ஆம் நூற்றாண்டில் பல்வேறு ஒழுங்குகளைச் சார்ந்த துறவிகள் இந்த பக்தியை மக்களிடையே ஊக்குவித்து வளர்த்தனர்.
17ஆம் நூற்றாண்டில் போலந்தைச் சேர்ந்த இறையியலாளரான காஸ்பர் (-1662) எழுதிய ‘இதயங்களின் இலக்கு - இயேசுவின் இதயம்’ என்ற நூல், தூய இதய பக்திக்கான இறையியல் அடிப்படையை வழங்கியது. அக்காலத்தில் பிரான்சில் வாழ்ந்த புனித ஜான் எவுதெஸ் (-1680), இயேசுவின் இதய அன்பை மையப்படுத்திய கருத்துகள் மூலம் இந்தப் பக்தியை பரப்பி வந்தார். அவரது முயற்சியால் 1670 ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பிரான்சின் ரென்னெஸ் குருமடத்தில் மறைமாவட்ட ஆயரின் அனுமதியுடன் இயேசுவின் தூய இதயத்திற்கு முதல்முறை விழா கொண்டாடப் பட்டது. அதற்கான திருப்பலி, திருப்புகழ்மாலை செபம் ஆகியவற்றையும் அவரே இயற்றினார்.
பிரான்ஸ் நாட்டு அருட்சகோதரி புனித மார்கரெட் மரி அலகோக் 1673 டிசம்பர் 27 ஆம் தேதி, தூய இதய ஆண்டவரின் காட்சியைக் கண்டார். அன்புத்தீ பற்றியெரியும் இதயத்துடன் தோன்றிய இயேசு, தமது தூய இதய பக்தியைப் பரப்பும் திருத்தூதராக மார்கரெட்டைத் தேர்வு செய்தார். அதன்பிறகு பதினெட்டு மாதங்கள் அவருக்கு இயேசு பலமுறை காட்சி அளித்தார். கெத்சமனி தோட்டத்தில் தாம் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு மார்கரெட்டிடம் கூறினார்.
ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையும் கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்று தூய நற்கருணையை உட்கொள்ள வேண்டும். அன்றையத் திருப்பலிக்கு முன்பு ஒரு மணி நேரம் மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டும் என்று இயேசு அறிவுறுத்தினார். முதல் வெள்ளிக்கிழமை பக்தியைக் கடைபிடிப்போருக்கு விண்ணகம், மண்ணகம் சார்ந்த பல வரங்களையும் ஆண்டவர் வாக்களித்தார். இதையடுத்து, இயேசுவின் தூய இதய பக்தியைப் பரப்ப மார்கரெட் ஆர்வமுடன் உழைத்தார்.
இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெரு விழாவுக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையில் தூய இதயப் பெருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டவர் பணித்தார். அவ்வேளையில் மார்கரெட்டின் ஆன்ம ஆலோசகராக இருந்த புனித கிளாவ்த் தெ லா கொலம்பியர், அவரது காட்சிகளின் மெய்மையை முதன்முதலில் ஏற்றுக்கொண்டார். 1686ல் அந்த துறவற மடத்தில் முதல்முறையாக இயேசுவின் தூய இதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு இயேசுவின் தூய இதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.
புனித மார்கரெட்டின் காட்சிகள் அடிப் படையில், பல்வேறு நாடுகளில் இயேசுவின் தூய இதய பக்தி விரைவாகப் பரவியது. இந்த பக்தியைக் கடைபிடிக்கும் கிறிஸ்தவர்களுக்கு 1693ல் கத்தோலிக்கத் தலைமைப்பீடம் ஞானப்பலன்களை வழங்கியது. தூய இதயத்திற்கான திருப்பலியை நிறைவேற்ற போலந்து, போர்த்துக்கல் நாடுகள் 1765லும், வெனிஸ், ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகியவை 1788லும் திருத்தந்தையின் அனுமதி யைப் பெற்றன. 1856 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ், இயேசுவின் தூய இதய விழாவை நிறுவி, அதைக் கடன் திருநாளாக அறிவித்தார்.
1899 மே 25 ஆம் தேதி திருத்தந்தை 13 ஆம் லியோ, ‘புனித ஆண்டு’ என்ற சுற்றுமடல் வழியாக ஜூன் மாதத்தை ‘இயேசுவின் தூய இதய’ வணக்க மாதமாக அறிவித்தார். முதல் வெள்ளிக்கிழமை பக்தியை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஊக்குவிக்கவும் அதில் அறிவுரை வழங்கியிருந்தார். அருளாளர் இறை இதயத்தின் மரியா (-1899) வழியாக ஆண்டவர் விடுத்த கோரிக்கைப்படி, 1899 ஜூன் 11 ஆம் தேதி இவ்வுலகை இயேசுவின் தூய இதயத்துக்கு அர்ப்பணித்த திருத்தந்தை 13 ஆம் லியோ, தூய இதய விழாவை முதல் வகுப்பு (1st Class Feast) திருநாளாக உயர்த்தினார்.
1928-ல் இத்திருநாளை இரட்டை நிலை விழாவாக உயர்த்திய திருத்தந்தை 11 ஆம் பயஸ், அதில் எண்கிழமை கொண்டாட்டத்தையும் இணைத்தார். 1929ல் இவ்விழாவுக்கான திருப்பலி செபங்களும் வாசகங்களும் புதுப்பிக்கப் பெற்றன. 1955ஆம் ஆண்டு விழாக்களின் சீர்திருத்தத்தில், இயேசுவின் தூய இதயத் திருநாளின் எண்கிழமை நீக்கப்பட்டு, பெருவிழாவாக அங்கீகாரம் பெற்றது. 1956ல் திருத்தந்தை 12 ஆம் பயஸ் எழுதிய ‘ஊற்றுக்களில் இருந்து முகர்வீர்கள்’ என்ற சுற்றுமடலில், “இயேசு நம் அனைவரையும் ஒரு மனித இதயம் கொண்டு நேசித்திருக்கிறார். இதன் காரணமாக, நமது பாவங்களாலும் நமது மீட்புக்காகவும் குத்தி துளைக்கப்பட்ட இயேசுவின் தூய இதயம், அன்பின் மிகச்சரியான குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது” என்று கூறுகிறார்.
1970-ல் வெளியான உரோமைத் திருப்பலி நூலில், வேறுபட்ட 3 தொகுப்புகளாக செபங் களும் வாசகங்களும் தரப்பட்டுள்ளன. முதல் வெள்ளிக்கிழமை மற்றும் சிறப்பு நேர்ச்சித் திருப்பலிகளில் இவற்றைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “கடந்த காலம் உங்களைத் தொந்தரவு செய்ய விடாதீர்கள். அனைத்தையும் இயேசுவின் தூய இதயத்திடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வைத் தொடங்குங்கள்” என்று புனித அன்னை தெரசா (-1997) நமக்கு அறிவுரை வழங்குகிறார்.
2002 ஆம் ஆண்டு முதல் இயேசுவின் தூய இதயப் பெருவிழா, குருக்களின் புனிதத் துவத்திற்காக மன்றாடும் சிறப்பு நாளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. 2009ல் இவ்விழா நாளில் தான் ‘குருக்கள் ஆண்டு’ தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. “இயேசுவின் தூய இதயம் கடவுளது இரக்கத்தின் ஒப்பற்ற அடையாளமாக இருக்கிறது. அதிலிருந்தே மனிதகுலம் முழுவதற்குமான மீட்பு ஊற்றெடுத்து புறப்படுகிறது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் புகழ்ந் துரைக்கிறார். நாமும் இயேசுவின் தூய இதயத்துக்கு உகந்த பதிலன்பு செலுத்தும் வகையில் வாழ உறுதியேற்போம்.

Comment