No icon

ஜோ. விண்ணரசன் , மேல்வழி. கள்ளக்குறிச்சி

யார் உயர்ந்தவர்???

 

காட்டு வழியே கடந்து சென்றான்

             நாட்டுப் புறத்து மனிதன்

வீட்டு நகைகள் விற்றுத் தனது

              பாட்டை மெல்ல நகர்த்த

 

நோட்ட மிட்ட கள்வர் கூட்டம்

              போட்டுத் தாக்கி பறித்து

ஓட்ட  மிட்டு ஒளிந்து போயினர்

              மாட்டிக் கொள்ள மறுத்து

 

குற்று உயிராய் கிடந்தா னவன்

              இதயம் மெல்லத் துடிக்க

மற்ற யவர் உதவினா லவன்

              உதய மென்றே  தவிக்க

 

வேதம் குடித்த ஞானி ஒருத்தர்

              போகும் வழியில் பார்த்தார்

ஓதும் தனது கடமை எண்ணி

              மேவும் பயணம் காத்தார்

 

உயர்ந்த சாதியாய் மெச்சிக் கொள்ளும்

              செல்வ சீமானும் தொடர்ந்தார்

தாழ்ந்த சாதியாய் இருப்பா  னென்றெண்ணி

              செல்லும் இடமே நகர்ந்தார்

 

தொட்டால் தீட்டு என்று ஒதுக்கிய

              பட்டி காட்டான் வந்தான்

விட்டால் மடிந்து போவா ரென்றெண்ணி

             கட்டி அணைந்து கொண்டான்

 

பயணம் வந்த குதிரையில் ஏற்றி

            மருத்துவ மனைக்குச் சென்றான்

பணத்தை செலுத்தி சிகிச்சை நிகழ்த்தி

            மனிதம் காத்து வென்றான்

 

யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?

            எவர் என்பது தெரியும்

வான் உயர்தவர் வார்த்தை யானவர்

             வழி நடந்தால் புரியும்


             

Comment