No icon

பணி. அல்போன்சு, நாகர்கோயில்

எளிமையே இறைமை

முன்னுரை

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பற்றி எனக்குத் தெரிந்த கதைகளுள் மிக அருமையான ஒன்று சென்ற ஆண்டு ஏதோ ஓர் இதழில் நான் படித்தது. விவிலிய விருந்து வாசகர்கள் சிலர்கூட அதைப் படித்திருக்கலாம் அல்லது யாராவது சொல்லக் கேட்டிருக்கலாம். எனினும் அதையே முதலில் சொல்லிக் கட்டுரையைத் தொடரலாம் என நினைக்கிறேன். காரணம், இக்கட்டுரைத் தலைப்பிற்கு அது மிகவும் பொருந்தும் என்பதே.

ஓரளவு பொருளாதார வசதி உள்ள கத்தோலிக்க மக்கள் வாழும் ஒரு கிளைப் பங்கு அது. அங்குள்ள மக்கள் பெரிதும் கடமைக்காக ஞாயிறு திருப்பலிக்கு வந்து செல்கின்றவர்களேஅன்றி ஏனையப் பங்குச் செயல்பாடுகளில் அதிக அக்கறை காட்டியவர்கள் அல்ல; ஆனால், அதன் புதிய அருள்பணியாளர் மிக்க பணி ஆர்வம் கொண்டவர். எனவே, பங்கு மக்களை வரவிருந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் பயனுள்ள முறையில் நன்கு பங்கேற்கச் செய்வது எவ்வாறு எனப் பொதுநிலைத் தலைவர்களுடன் கலந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். அது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை குடில் போட்டி நடத்துவது என்பதுதான்.

அவ்வாறே இரு வாரங்களுக்கு முன்பே போட்டி பற்றி அறிவிப்புத் தரப்பட்டது. பங்கேற்பாளர்கள் தங்களது வீட்டு முற்றத்தில் அல்லது முன் அறையில் குடில் அலங்கரித்து வைக்கவேண்டும்; பங்கு அருள்பணியாளரும் இரு பொதுநிலை நடுவர்களும் அவற்றை டிசம்பர் 24 மாலை பார்வையிட வருவர்; பங்கேற்பாளர் எல்லாருக்கும் பரிசு உண்டு என்றாலும் மிக அருமையான முதல் மூன்று குடில்களுக்கும் சிறப்புப் பரிசுகள் தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஊரில் உள்ள செல்வர் ஒருவர் இதைக் கேட்டு தானே முதல் மூன்று பரிசுகளாக ரூ.5000ரூ, 3000ரூ, 2000ரூ தருவதாக அறிவித்தார். குடில் கட்டுவதற்கானத் தயாரிப்பை சிலர் உடனேயும் வேறு சிலர் ஒரு வாரத்திற்கு முன்பும், பலர் நாலைந்து அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பும் எனத் தொடங்கி முடித்தனர். நடுவர்களும் முன்குறித்த நேரத்தில் வந்து எல்லாக் குடில்களையும் பர்வையிட்டனர். முடிவில், எல்லாரும் எதிர்பார்த்தது போலவே டைட்டானிக் கப்பல், தாஜ்மகால், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை என்பவற்றின் தோற்றத்தில் பிரமாண்டமாகவும் மிக ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த குடில்களுக்கும் முறையே முதல் முன்று பரிசுகள் என மகிழ்ச்;சி ஆரவாரத்துக்கு இடையே அறிவிக்கப்பட்டது. அது கிளைப் பங்கு என்பதால் அங்கு காலையில்தான் திருப்பலி. எனவே எல்லாரும் மெல்லமெல்ல தூங்கச் சென்றனர்.

காலையில் அவர்கள் கண்விழித்துப் பார்த்தால் எல்லாக் குடில்களிலும் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசு, மரியன்னை, யோசேப்பு திருவுருவங்கள் காணாமல் போயிருந்தன. அவை எங்கே போயின, அவற்றிற்கு என்ன ஆயிற்று என ஊர் முழுவதும் அமளி துமுளிக்கு ஆளானது. அந்நிலையில் காலையில்தான் ஊருக்கு வந்துசேர்ந்திருந்த ஒருவர்நான் ஊருக்குள் வரும்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் அவளுடன் ஓர் ஆணும் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அந்த ஆண் ஒரு துணிக்கட்டு வைத்திருந்தார். அந்த ஆள்தான் ஒருவேளை நம் திருவுருவங்களை எல்லாம் திருடிட்டு போறானோ என்னவோஎன்றார். எனவே ஊர் முழுவதும் அவர்களைப் பிடிக்க விரைந்தது.

ஊருக்கு வெளியே வந்ததும் அவர்கள் ஒரு ஏழையின் குடிசைத் திண்ணையில் அமர்ந்திருப்பதை ஊரார் கண்டனர். ஆனால், திருடனைப் பிடிக்க வந்தவர்களுக்கு ஒரே வியப்பு. எனெனில், அவர்கள் அக்குடிசைத் திண்ணையில் அமர்ந்திருக்கக் கண்டது திருட்டுக் குடும்பம் அல்ல; மாறாக திருக்குடும்பம். ‘என்ன, நாங்க உங்களுக்கென அழகழகாக எத்தனையோ குடில்கள் கட்டி வைச்சிருக்கோம். ஏனுங்க, நீங்க அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு குடிசையில வந்து தங்கியிருக்கிறீங்க?” என அவர்களைக் கேட்டார் ஊர் தலைவர். அதற்கு யோசேப்பு, ‘கொஞ்ச நேரம் அவற்றில் இருந்து பார்த்தோமுங்க. ஆனால், அந்தப் பிரமாண்டமான குடில் அமைப்புகளையும், ஆடம்பர அலங்காரங்களையும் பளிச்சென ஒளிர்ந்த மின் விளக்கு வரிசைகளையும் பார்த்து குழந்தை அரண்டுபோய் ஒரே அழுகைங்க. எளிய மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தை இல்லீங்களா. எனக்கும் மரியாவுக்கும்கூட உங்க ஆடம்பரக் கோயில்கள், குடில்கள் எதுவும் ஒத்து வரலங்க. ஏண்ணா, நாங்க நாசரேத்ல எளிமையான குடிசையில வாழ்ந்த ஏழைக் குடும்பம்தானே. அதனால இந்த எளிய குடிசையில நாங்க தங்கிக்கிறோம். இந்த ஏழைக் குடும்பத்துக்கு நீங்க ஏதாவது உதவி செய்யுங்க. அதுதாங்க இந்தக் குடும்பத்திற்கும் உங்களுக்கும் எங்களுக்கும் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்என்றார் யோசேப்பு.

எளிமையின் சிகரம் ஏழைப் பங்காளர் இயேசு

உங்க ஆடம்பரக் கோயில்கள், குடில்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்து வரலங்கஎன இந்தக் கதையில் புனித யேசேப்பு கூறுவது கற்பனையே என்றாலும் அது திருக்குடும்பத்தை மட்டும் அல்ல; மூவொரு இறைக் குடும்பத்தையும் பற்றிய ஒரு மறக்கப்பட்ட உண்மையை நமக்கு நன்குப் புலப்படுத்துகிறது. ஏனெனில், கடவுள் எத்தகையவர் என நமக்கு வெளிப்படுத்துகின்றவர் இயேசுவே. அவரது படிப்பினைகள், பணிகள், இறப்பு-உயிர்ப்பு என்பவற்றில்தான் உச்ச இறைவெளிப்பாடு மாந்தருக்கு அனுபவம் ஆகியுள்ளது. அதை வைத்துத்தான் மானிடர் நாம் கடவுளைப்பற்றிச் செய்துவைத்துள்ள ஊகப் புரிதல்களையெல்லாம் சரியா தவறா என இனம்கண்டறிய முடியும். இதை இயேசுவே நமக்கு அறிவித்துள்ளதாக யோவான் நற்செய்தி பின்வருமாறு கூறுகிறது: ‘கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்” (யோவா 1:18). ‘என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” (யோவா 14:10) எனும் அவரது கூற்றும் இதை உறுதிப்படுத்துகிறது. அவரின் வாழ்வளிக்கும் சொற்களிலும் வல்ல செயல்களிலும் ஆளுமையிலும் மக்கள் தங்களைத் தேடிவரும் கடவுளையே கண்டார்கள் என்பதற்கு அனுபவச் சான்றும் உள்ளது. அது நயீன் ஊர் விதவையின் இறந்துபோன மகனுக்கு அவர் உயிர்அளித்த நிகழ்வைப் பார்த்த மக்கள்கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” (லூக் 7:16) எனக் கூறுவதுதான். இவ்வாறு, இயேசு நமக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தந்துள்ளது மட்டும் இன்றி தம் ஆளுமையிலேயே அவர் வேறு உங்கும் இல்லாத துலக்கத்துடன் அவரை வெளிப்படுத்தியும் உள்ளார். இதனால் இயேசுவின் ஆளுமைப் பண்புகளைக் கண்டறிவது இறைமையையே கண்டறிவது ஆகும்.

இயேசுவின் ஆளுமைப் பண்புகளுள் தனிச் சிறப்பான ஒன்று அவரது எளிமை. இதனால்தான் அவரது பிறப்பு ஊருக்கு வெளியே ஒரு மாட்டுத் தொழுவத்தில் நிகழ்கிறது. அவருடைய தந்தையும் தாயும் ஏழை எளியவர்களே. அவரை முதலில் சந்திக்க வந்தவர்கள் எளிய மனிதர்களாகிய இடையர்களே. நாசரேத்தில் 30 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் தம் ஏழைக் குடும்பத்தின்; எளிய குடிசையில்தான். அவர் பணியாற்றியதும் பெரிதும் ஏழை எளிய மக்கள் வாழ்ந்த அன்றைய பாலஸ்தீன ஊர்ப்புறங்களில்தான். அவருடைய சீடர்களாக அவருடன் இணைந்து இறையாட்சிப் பணியாற்ற 12 எளிய மனிதர்களையே தம் சீடர்களாக அவர் தம்முடன் அழைத்துச் சென்றார். அவர் நெருங்கிப் பழகியதும் அன்றைய சமூகத்திலே தீட்டு எனக் கருதி ஒதுக்கப்பட்டவர்களே. இதனால்தான் அவர்வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பர்” (லூக்7:34) எனும் குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகிறார். பெரும் கூட்டமாக அவருடையப் போதனைக் கேட்க வந்தவர்களும் அதை நம்பி ஏற்றுக்கொண்டவர்களும் பெரிதும் ஏழை எளியவர்களே. இத்தகையோரையேஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்” (மத் 5:3) என அவர் வாழ்த்தவும் செய்கிறார்.

அந்த வாழ்த்துக்கு ஏற்ப அவரும் ஏழையரின் உள்ளத்தோராக, அதாவது எளியவராகவே வாழ்ந்தார், பணியாற்றினார், எல்லாரிடமும் உரையாடி உறவாடினார். அவர் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டதும் அன்றைய பாலஸ்தீன யூத சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய செல்வர்களாகிய சதுசேயருடனோ கற்றுத் தேர்ந்த மறைநூல் அறிஞருடனோ தூயவர்கள் எனத் தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டோருடனோ அல்ல; மாறாக, ஏழை எளியோருடன்தான். இதனால்தான் அவர்பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” (மத் 11:28) எனஅவர்களை அழைத்தார். அவர்களது பசி, தாகம், பாதுகாப்பின்மை என்பவற்றைத் தாமும் அனுபவித்தார். ‘மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” (மத் 8:20). அவர்களுடைய இன்பதுன்பங்களைத் தாமும் பகிர்ந்துகொண்டார். இதனால்தான்அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களை சுமந்துகொண்டார்எனும் இறைவாக்கினர் எசாயாவின் வாக்கை இயேசுவுக்கு ஏற்றிக் கூறுகிறார் நற்செய்தியாளர் மத்தேயு (மத் 8:17).

மேலும் அரசத் தோரணையிலோ ஆதிக்கப் பாணியிலோ அவர் செயல்படவில்லை. இதனால்தான் குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்தவர்களை அதட்டிய சீடர்களைக் கடிந்து அக்குழந்தைகளைத் தொட்டு அவர்களுக்கு அவர் ஆசி வழங்குகின்றார் (மத் 19:13-14). அவரது எளிய பழகுமுறை காரணமாகத்தான் புறவினத்தாரும் பாவிகளும்கூட துணிந்து அவரிடம் வருகின்றனர். அவரது எளிமையின் உயர்வை அவர் தம் சீடர்களோடு உறவாடிய முறையில் காண்கிறோம். ‘நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்...உங்களை நான் நண்பர்கள் என்றேன்” (யோவா 15:15). அனைத்திற்கும் மேலாகத் அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவித் துடைத்ததிலும் அவர்களுக்குக் காலை உணவு சமைத்துக் கொடுத்ததிலும் (யோவா 21) அவரது எளிமை இமாலய உச்சத்தை அடைகிறது.

ஆடம்பர அரசர் அல்ல; எளியவரான அப்பா

இயேசு தம் ஆளுமையிலும் உறவுப் பாணியிலும் பிறருக்கு அனுபவம் ஆக்கியது மட்டும் இன்றி, தம் படிப்பினைகள் வழியாக அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பேருண்மையும் கடவுள் எளிமையிலும், எளிமையான அம்மையப்பன் என்பதே. இதுவே கடவுளைப் பற்றி அவரது புதுமையும் புரட்சியுமான புரிதல். அதாவது, பெரும்பான்மையான அன்றைய, இன்றைய சமயவாதிகள் அரசர்களையும் ஆதிக்க சமூகத்தனரையும் சார்ந்துநின்று அவர்களது ஆதிக்கங்களைப் பல வேளைகளில் நியாயப்படுத்தி நிலைநிறுத்தும் வகையில் கடவுளை விண்ணகப் பேரரசர், மண்ணுலக மன்னருக்கெல்லாம் மன்னர், அணுக முடியாதவர், அஞ்சத்தகுந்த ஆற்றல் கொண்டவர், இந்த மண்ணையும் மனிதரையும் விட்டுவிலகி விண்ணின் தொலைவில் மாட்சியுடன் வீற்றிருப்பவர், அவ்வப்போது இந்த மண்ணுலகில் வந்திறங்கித் தீயோரைத் தண்டித்து நல்லாரைக் காக்கின்றவர் என ஒரு பெரும் சர்வாதிகாரியாகவே பெரிதும் கற்பனை செய்து வைத்திருந்தனர். இத்தகையப் பார்வையையே பழைய ஏற்பாட்டிலும் பெரிதும் காணக்கிடக்கிறது.

ஆனால், பழைய ஏற்பாட்டின் அடித்தளம் விடுதலைப் பயண அனுபவமே. இதனால், அவர் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் பயணித்து, அவர்களுக்காகச் செயல்படும் விடுதலைக் கடவுள் என்பதுவே பழைய ஏற்பாட்டின் புரிதலுக்கு மையம். அதுபோலவே, அவரை இசுரயேல் மக்களின் தந்தை, அவர்கள்மீது மாறாத அன்பு கொண்டுள்ள காதலன் எனச் சித்திரிக்கும் சிறு மரபுகளும் அதில் உண்டு. ஆனால் அரசர்கள் காலம் தொடங்கி அம்மக்களிடையே மேலோங்கி நின்றது அவர் விண்ணக மண்ணகப் பேரரசர் எனும் புரிதலே.

யூத மக்களை அரசர்கள் ஆளத் துவங்கியபோது முதலில் தாவீது தமக்கென ஒரு ஆடம்பர அரண்மனையைக் கட்டிக்கொண்டார். அவர் கடவுளுக்கு ஒரு கோயில் கட்டும் தம் திட்டத்தை அறிவித்தபோது, இறைவாக்கினர் நாத்தான் வாயிலாகக் கடவுள் அவருக்குக் கூறிய செய்தி கடவுள் நாடோடிகளாக அலைந்த இசுரயேல் மக்களோடு தாமும் நாடோடியாகப் பயணித்து ஓர் எளிய கூடாரத்தில் அவர்களுடன் குடியிருந்த எளிமையான கடவுள் என்பதை உணர்த்துகிறது. மேலும், ஆடம்பர மாளிகைக் கோயில்கள் பெரிதும் பாமர மக்களைச் சுரண்டிக் கட்டப்படுபவை, ஆட்சியாளர்கள் அல்லது குருகுலத்தினுடைய மேல்நிலையைக் தக்கவைக்கவும் ஆதிக்கங்களை நியாயப்படுத்தவும் பயன்படுபவை என்பதால் கடவுள் அவற்றை விரும்புவதில்லை என்பதையும் தெரிவிக்கிறது: ‘ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்கும் இடமாக இருந்தது... அவர்களுள் எவரிடமாவது எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோயில் கட்டாததேன் ஏன ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? (என்கிறார் ஆண்டவர்)” (2 சாமு 7:6-7). அச்செய்தியைக் கண்டுகொள்ளாது சாலமோன் தொடங்கி பல்வேறு அரசர்கள் தங்கள் ஆட்சியின் அநீதிகளையும் ஆதிக்கங்களையும் நியாயப்படுத்தும் வகையில் கடவுளை விண்ணகப் பேரரசராகக் காட்டிக்கொண்டு அவருக்கு மாடமாளிகைக் கோயில் கட்டினர் அல்லது ஆயிரமாயிரமாக விலங்குகளைப் பலியிட்டு அதில் அவருக்கு ஆடம்பர விழாக்கள் கொண்டாடினர். அத்தகையக் கோயில் கொண்டாட்டங்களையும் பலிகளையும் இறைவாக்கினர் வாயிலாக கடவுள் கண்டிக்கத் தவறவில்லை (எச 1:11-17; ஆமோ 5: 21-24).

கடவுளைப் பேரரசர் எனக் கருதுவது அவரது இயல்பான எளிமைக்கு எதிரானது மட்டும் அல்ல; அரசியல் ஆட்சியாளர்களுடைய அநீதிகளுக்கும் சமயக் குருகுலத்தினருடைய ஆதிக்கங்களுக்கும் துணைபோகக்கூடியதும் ஆகும் என்பதை இயேசு உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் கடவுளை அரசர் என அழைக்கும் பரவலான அன்றைய யூத முறையினின்று பெரிதும் மாறுபட்டு அவரது எளிமையான அன்பைப் புலப்படுத்தும் வகையில் அவரை அப்பா என இயேசு அழைக்கிறார். தம் சீடர்களுக்கும் அவ்வாறே கற்றுத்தருகிறார். அப்பா என்பது பிள்ளளைகள் தங்கள் தந்தையை எளிதாக அணுகி உறவோடும், உரிமையோடும் அழைக்கின்ற சொல். அது கடவுளின் கனிவான, மென்மையான அன்பையும் இயல்பாகப் பிள்ளைகள் அவருடன் உரையாடி உறவாடும் அவரது எளிமையையும் உணர்த்துகிறது. இயேசு ஏழை எளிய மக்களின் வாழ்வு நிகழ்வுகளிலிருந்து எடுத்தாண்ட பல உவமைகளும் கடவுளுடையவும் அவரது ஆட்சியினுடையவும் அதிகார, ஆதிக்கத்தன்மை அற்ற எளிமைப்பண்பை வெளிப்படுத்துகின்றன (தொலைந்த ஆட்டையும் நாணயத்தையும் தேடிக் கண்டுபிடித்த ஆயர், ஏழைப் பெண்: லூக் 15: 1-10. ஊதாரி மகனை வரவேற்ற தந்தை: 15-32). ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25:40) எனப் பசியிலும் தாகத்திலும் ஆடையின்றியும் சிறையிலும் நோயிலும் அன்னியராகவும் இருக்கும் ஏழை எளியோருடன் இறைமகன் இயேசு தம்மையே ஒன்றுபடுத்திக் கொள்வதும் அவரில் வெளிப்பட்ட கடவுளின் எளிமையை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

அனைத்திற்கும் மேலாகவும், ஆணித்தரமாகவும் கடவுளின் எளிமையை எடுத்துரைப்பவை இறைவனின் வாக்கு தம்மையே வெறுமையாக்கி மனிதக் குழந்தையாக ஊருக்கு வெளியே மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் அந்தத் தன்வெறுமையாக்கலின் உச்சமாக நகருக்கு வெளியே அவர் சிலுவையின் சிறுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாகி ஆடையின்றி அவமானத்தில் இறந்ததும்தான். இந்நிகழ்வுகளில் மண்ணக மாட்சிக்கு உரிய அதிகாரமோ ஆதிக்கமோ ஆடம்பரமோ அலங்காரங்களோ இல்லை என்பது தெளிவு. இத்தகைய எளிமையில்தான் கடவுளின் மீட்பளிக்கும் ஞானமும் வல்லமையும் மாட்சியும் வெளிப்படுகின்றன (1கொரி 1:23-25).

பெருகும் ஆடம்பரங்களும் அருகும் அருள்வாழ்வும்

இத்தகைய எளிமையானக் கடவுளின் மாட்சிக்காகத்தான் இன்று சமயவாதிகள் பத்து, இருபது, முப்பது கோடி ரூபாய்கள் செலவில் என பல இடங்களில் கோபுர அல்லது மாளிகைக் கோயில்கள் கட்டுகின்றனர். இலட்சம் இலட்சமாகச் செலவிட்டு மிகை ஆடம்பரக் கொண்டாட்டங்கள் நடத்துகின்றனர். கிறிஸ்து பிறப்புக் குடில்கள் இலட்சங்கள் செலவிட்டுக் கட்டப்படக்கூடிய இடங்கள் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. பல கோயில்களில் போடப்படும் மின்விளக்குத் தோரணங்களைப் பார்த்தால் இங்கு வருகின்றவர்கள் பார்வை குன்றியவர்களா எனவும் திருப்பீட முற்ற அலங்காரங்களைப் பார்த்தால் இது பூக்கடையா என்றும் கேட்கத் தோன்றுகின்றது. இவையெல்லாம் கடவுளின் மாட்சிக்காகவே செய்யப்படுகின்றன என்பது சமயவாதிகளின் தன் ஏமாற்றும் பிறர் ஏமாற்றுமே அன்றி உண்மை அல்ல; ஏனெனில், இவற்றால் ஆயர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும், பொதுநிலைப் பொறுப்பாளர்களுக்கும் பெருமை கிடைக்கலாம். நிச்சயமாக அது கடவுளுக்கு அல்ல. அவருக்குப் பெருமை தம் மக்களின் நல் வாழ்வும், சிறப்பாக ஏழை மக்களின் வளமும், தாழ்த்தப்பட்டோரின் உயர்வும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலையுமே.

 இவற்றிற்கான ஈடுபாட்டை மறக்கவும் அதற்கு மாற்றாகவும் சமயச் செயல்பாடுகள் ஆகிவிடும் வாய்ப்பு உண்டு. மிகையான ஆடம்பரங்களும் மின்னும் அலங்காரங்களும் பொதுவாக இத்தகையனவே. அவை பெருகுவது அருள்வாழ்வு அருகுகிறது என்பதன் அறிகுறியே. இந்நிலை இன்று நம் கிறித்தவ

சமூகங்களில் பரவலாகிக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. எனவே, அரச அரண்மனை போன்ற மாட அல்லது மாளிகைக் கோயில்களும் கோபுரங்களும் வெண்கலக் கொடிமரங்களும் அல்ல; எளிய இறைவேண்டல் இல்லங்களே அவசியம். விழாக்கள் தேவைதான். ஆனால், அவை இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை நினைவுறுத்தி வாழவைக்கவில்லை என்றால் அவை பொய்களும் போலிகளுமே. அலங்காரங்கள் தேவைதான். ஆனால் அவை வெறும் ஆடம்பரங்கள் ஆகிவிடக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, ஏழைகளை நினைவுறுத்தாத, அவர்களுடன் பகிர்வைத் தூண்டாத, சகோதர நல் உறவுகளை வளர்க்காத, சாதி சமத்துவத்தை உருவாக்காத, நீதி நிலைப்பாடுகளுக்கான ஆற்றல் தராத சமயச் செயல்பாடுகளும் கொண்டாட்டங்களும் வெளிவேடங்களே அன்றி வேறெதுவும அல்ல; எனவே, வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா ஏழைக் கிறிஸ்துவின் மறுவுருவங்களான ஏழைகளை நாம் முன்னிலைப்படுத்த உதவும் எளிய கொண்டாட்டமாக அமையட்டும். கிறிஸ்து பிறப்பு விழா நல் வாழ்த்துக்கள்.

Comment