No icon

(தமிழாக்கம் : குடந்தை ஞானி)

திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு பேராயர் லியோ போல்தோ வழங்கிய வாழ்த்துரை

மறைமாவட்ட ஆயர் பெருமக்களே, மறைமாவட்ட நிர்வாகிகளே, அருள்தந்தையர்களே, அருள்சகோதரிகளே! துறவியரே! இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தியாவிற்கான பிரதிநிதியாக உள்ள என் கரங்களிலிருந்து பாலியம் எனப்படும் தோள்துகிலைப் பெறவுள்ள மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் இந்த ஆடம்பர விழாவில் உங்களை நான் பேருவுவகையுடன் வாழ்த்துகிறேன்.

பாலியம் என்பது பேராயர் மற்றும் திருத்தூதர் பேதுருவின் வழித் தோன்றலுடனான ஒன்றிப்பை அடையாளப்படுத்துகிறது. திருத்தந்தையால் ஒப்படைக்கப்பட்ட இம்மந்தையை பேணி பாதுகாக்க வேண்டியது அவர்தம் பொறுப்பாகும்.

அது செம்மறியாடுகளின் உரோமத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியும் நமக்காகப் பலியான செம்மறியுமான இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. தம் மந்தையைப் பேணி பாதுகாத்து, முன்னின்று வழிநடத்தி, தூண்டுதல் தரும் நல்லாயனைக் குறிக்கிறது. காணாமல் போன ஆட்டை மிகுந்த பேரன்புடன் தேடி கண்டுபிடித்து தன் தோள்களில் சுமந்து இல்லம் வரும் நல்லாயனான கிறிஸ்துவையே நமக்கு நினைவூட்டுகிறது. 

பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களே! இத்தலத் திரு அவையில் கிறிஸ்துவின் பிரதிநிதியான நீங்கள், கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு நல்லாயனாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள். திருத்தூதர் பேதுரு முன்னிலைப்படுத்திய ஒன்றிப்பினால் மட்டுமே, நாமும் மக்களை உண்மையாகவே கிறிஸ்துவிடம் வழிநடத்திட இயலும். ஒன்றிப்பின் அடையாளமாக உள்ள இந்தப் பாலியம் , திருத்தந்தையுடனும், அகில உலகத் திரு அவையுடனும், ஆயர்களின் மாமன்றத்துடனும், உமது உயர்மறைமாநிலத்தின் மறைமாவட்டங்களுடனும் உள்ள ஒன்றிப்பை அடையாளப்படுத்துகிறது. மேலும் ஒன்றிப்பின் பேரார்வமிக்க பணியாளராகவும் திரு அவையின் ஒற்றுமைக்கான மறைத்தூதுப் பணியாளராகவும் உம்மை வலியுறுத்துகிறது.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் வழங்கிய திருத்தூது உரையான பாஸ்டோரஸ் கிரேக்கிஸ் (அக்டோபர் 16, 2003) எண் 69 மிகவும் அழகாக, ‘ஒவ்வொரு ஏழையரிலும் நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவின் சிறப்பு உருவத்தைக் காண்கின்றனர்; திரு அவை மற்றும் குடிமைச் சமூகங்களில் அவர்கள்தம் பிரசன்னம், நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் உண்மை நிலையை எண்பிக்கும் ஒரு வேள்விக்களமாக உள்ளது. ஆயர்கள் ஒவ்வொரு நபருக்கும் தலைசிறந்த, காணத்தக்க வகையில் ஆசிரியரும் குருவும் மேய்ப்பருமான இயேசு கிறிஸ்துவின் வாழும் அடையாளமாக மாற வேண்டும்.

இவ்வகையில், அன்பார்ந்த மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களே, நீங்கள் உங்கள் மேய்ப்புப்பணியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் மந்தையை, அதாவது குருக்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் என அனைவரையும் அன்பின் வழியாக சென்றடைவதற்கு எப்போதும் முயற்சிப்பீர்கள் என்பது என் நம்பிக்கை. முதலாவதாக, அனைத்து ஆயர்களுடனும் ஒன்றிப்பு, உமது பாண்டி - கடலூர் உயர்மறைமாநிலத்திற்குட்பட்ட ஆயர்களுடன் ஒன்றிப்பு.

பேராயர் அவர்களே, உமது திரு அவை வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் உங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்து, என் செபங்களையும் ஆதரவையும் உறுதியளிக்கிறேன். பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டம் உமது வழிகாட்டுதலில், ஒவ்வொருவருக்கும் குறிப்பாக, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் அனைவருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையின் முன்மாதிரியாக விளங்குவதாக.

பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலியான புனித ஜென்மராக்கினி மாதா, மக்களுக்கு நீர் செய்யும் தொண்டில் உதவி செய்து, இந்த மேய்ப்புப் பணியில் உடன் பயணிப்பாராக. உங்கள் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசிரை இதயப்பூர்வமாக வழங்கி, என் செபங்களையும் நல் வாழ்த்துகளையும் உறுதியளிக்கிறேன்.

Comment