No icon

பாளை. காமநாயக்கன்பட்டியில் 1 கோடி மதிப்பீட்டில் உருவாகும்

வீரமாமுனிவருக்கான மணிமண்டபம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம் காமநாயக்கன்பட்டியில் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி மக்களவை உறுப்பினர் மாண்புமிகு கனிமொழி அவர்களின் தலைமையில்பங்குத்தந்தை அருள்பணி. அந்தோனி டி. குருஸ் மற்றும் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ.கீதா ஜீவன் அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தொண்டர் வீரமாமுனிவர் அவர்களின் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறக்குறைய அரை ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 1 கோடி செலவில் மிக பிரமாண்டமாக இந்த மணிமண்டபத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் திரளான எண்ணிக்கையில் அருள்பணியாளர்களும் இறைமக்களும் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய மாண்புமிகு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள், ‘தமிழால் ஒன்றிணைக்கப்பட்டவர்களை யாராலும் பிரிக்க இயலாது; நாம் மதத்தால் நம்பிக்கைகளால் வேறுபட்டவர்களாக இருக்கலாம். வேறு நாடுகளில் வாழக்கூடியவர்களாக கூட இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் தமிழர். வீரமாமுனிவருக்கும் நமக்கும் தமிழ்மீது இருக்கக்கூடிய அன்பு, அவர் தமிழுக்காக ஆற்றியிருக்கக்கூடிய பணிகள், இவைதான் நம்மை ஒன்றாக ஓர் இனமாக கட்டிப்போட்டு இருக்கிறது. இதனை மதிக்கக்கூடிய வகையில் இந்த மணிமண்டபம் அமைகிறது என்று எழுச்சியுரை ஆற்றினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பங்குத்தந்தை அந்தோனி டி. குருஸ் அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து சிறந்த தமிழ்த்தொண்டாற்றிய சேசு சபை பணியாளரும் இலக்கியவாதியுமான வீரமாமுனிவருக்கு அவர் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருத்தலத்தில் ஒரு மணிமண்டபம் எழுப்பி கௌரவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும் ஆளும் திமுக அரசு, மிகுந்த அக்கறையுடன் இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி விரைவுப்படுத்தியுள்ளது. இதற்கு துணைநிற்கும் தமிழக அரசுக்குப் பாராட்டும் நன்றியும்.

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருத்தலம் தமிழகத்தில் ஒன்பதாவது பசிலிக்காவாக தகுதி உயர்த்த முயற்சி எடுக்கும் இவ்வேளையில் வீரமாமுனிவருக்கான இந்த மணிமண்டபம் தமிழகத் திரு அவைக்குப் பெருமையே.

Comment