No icon

வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறவில்லை

வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறவில்லை
திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமுழுக்கு அருளடையாள சடங்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு நிகழ்த்தவில்லை. 

வத்திக்கானில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த திருமுழுக்கு சடங்கு, கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து, சனவரி 10, வருகிற ஞாயிறன்று இடம்பெறவில்லை. 

ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கும் வழக்கத்தை, 1981ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், வத்திக்கானில் அமைந்துள்ள பவுல் சிற்றாலயத்தில், 9 குழந்தைகளுக்கு வழங்கிய திருமுழுக்குடன் துவக்கிவைத்தார்.

அதற்கடுத்த ஆண்டு முதல், திருத்தந்தையரைத் தெரிவு செய்யும் புகழ்மிக்க சிஸ்டைன் சிற்றாலயத்தில், இந்த திருமுழுக்கு சடங்கினை, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், நிறைவேற்றி வந்தார்.
இந்த மரபை, தொடர்ந்து பின்பற்றி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டின் துவக்கத்தில், கோவிட்-19 நெருக்கடி எழுவதற்கு முன், சனவரி 12 ஆம் தேதி, 17 ஆண் குழந்தைகள், 15 பெண் குழந்தைகள் என, 32 பேருக்கு திருமுழுக்கு வழங்கினார்.

டிசம்பர் 24 இரவு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலியுடன் துவங்கும் கிறிஸ்து பிறப்பு காலம், ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
 

Comment