No icon

குடந்தை ஞானி

கர்தினால் லோசானோ பாராகானின் ஆன்மா நிறையமைதியடைய செபம்

திருப்பீட நலவாழ்வு அவையின் முன்னாள் தலைவரும், மெக்சிகோ நாட்டு சாகேட்கேஸின் முன்னாள் பேராயருமான கர்தினால் லோசானோ பாராகான் அவர்கள், ஏப்ரல் 20 ஆம் தேதி, புதன் காலையில், உரோம் நகரில், தனது 89வது வயதில் விண்ணகப் பிறப்பை அடைந்தார்.

கர்தினால் லோசானோ பாராகான் அவர்களின் இறப்போடு, தற்போது திரு அவையிலுள்ள 210 கர்தினால்களுள் 117 பேர், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதிபெற்ற 80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 93 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

1933 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் பிறந்த கர்தினால் லோசானோ பாராகான் அவர்கள், 1955 ஆம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1979 ஆம் ஆண்டில் மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், 1984 ஆம் ஆண்டில் சாகேட்கேஸ் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டில் திருப்பீட நலவாழ்வு அவையின் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவையிலும் இவர் பங்குபெற்றார்.

கருக்கலைப்பு, கருணைக்கொலை, ஓரினச்சேர்க்கை போன்றவற்றுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிய கர்தினால் லோசானோ பாராகான் அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் முயற்சிகளை முதலில் ஊக்கப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். மேலும், கர்தினால் லோசானோ பாராகான் அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறையமைதி அடைய, தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Comment