No icon

COVID—19 நெருக்கடியைக் குறித்து கர்தினால் டர்க்சன்

பாதுகாப்பு நுட்பங்கள் என்று இவ்வுலகம் கருதி வந்தவற்றின் குறைபாடுகளை நமக்கு உணர்த்தும்வண்ணம் உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா தொற்றுக்கிருமி, நமக்குள் ஆழ்ந்த கவலைகளை உருவாகியுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

COVID—19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்றுக்கிருமியின் ஆதிக்கம் உலகெங்கும் பரவியுள்ள நிலையைக் குறித்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள்  மார்ச் 18 ஆம் தேதி புதனன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நோயுற்றோரின், அச்சம், தனிமை, கவலை ஆகியவற்றுடன் திருஅவை தன்னையே இணைத்துக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி வேளையில், தங்கள் நலனை முன்னிறுத்தாமல், துணிவுடன், அயர்வின்றி உழைத்து வரும் நலப்பணியாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் திருப்பீடம் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறியுள்ளார். மேலும், உலகில் எந்த ஒரு நெருக்கடியும் நிகழும்வேளையில், சமுதாய, பொருளாதார அமைப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஊடீஏஐனு-19 நெருக் கடியிலும் காணப்படுகின்றன என்பதை, தன் செய்தியில் வருத்தத்துடன் கர்தினால் டர்க்சன் குறிப்பிடுள்ளார்.

ஒரு நாட்டில் துவங்கி, இன்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ள இந்நோயின் நெருக்கடி, நாம் அனைவருமே, ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டவர், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறது என்பதை தன்  செய்தியில் சுட்டிக் காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நம் நம்பிக்கை உணர்வையும், உடன்பிறந்த உணர்வையும் வளர்க்க இது தகுந்ததொரு தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2020ம் ஆண்டுக்குரிய தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறிஸ்துவின் துன்பங்களோடு நம்மையே இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளதை மனதில் கொண்டு, COVID—19 தொற்றுக்கிருமியால் நலமிழந்தோருடன் நம்மையே மனதளவில் இணைத்துக்கொள்வோமாக என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

சமுதாய நீதியைப் புறந்தள்ளி வகுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களுக்கு ஒரு சவாலாக, இத் தொற்றுக்கிருமி நெருக்கடி, உலகெங்கும் பெரும் பொருளாதாரச் சரிவை உருவாகியுள்ளது என்று, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நலப்பணிகளுக்கும், நலப்பணியாளர்களுக்கும், நலப்பணி சார்ந்த ஆய்வுகளுக்கும் அரசுகள் தங்கள் திட்டங்களில் முதன்மை இடங்களை வழங்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

Comment