No icon

குருத்து ஞாயிறு (05.04.2020)

இயேசுவோடு பயணிப்போம்!

கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்தவர்களே!

மனித வாழ்வு ஒரு நெடும்பயணம். நிலைவாழ்வு என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் விண்ணகப் பயணிகள் நாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த, அடிமைத்தளைகளைத் தகர்த்தெறியும் இறைமகன் இயேசுவின் இலட்சியப் பயணத்தை நாம் இன்று நினைவு கூர்கிறோம்கலிலேயாவில் தொடங்கிய அவரின் புரட்சிப் பயணம் எருசலேமில் நிறைவுபெறுகிறது. ஒலிவக்  கிளைகளை ஏந்தியவாறு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில், சீடர்கள் புடை சூழ  இயேசு கழுதையின் மீது அமர்ந்தவராக எருசலேமை அடைகிறார். இப்பயணம் அவரின் வாழ்வுப் பயணத்தின் இறுதிநிலை மட்டுமல்ல, தம் பாடுகள், மரணம் வழியாக மனிதருக்கு நிலைவாழ்வைப் பெற்றுத்தரும் மீட்புப் பயணத்தின் இறுதிநிலையும்கூட.

கல்வாரிதான் முடிவு என்று கழுதைமீது அமர்ந்திருந்தவருக்கு தெரியும். ஓசன்னா பாடும் நாவுகள், ‘ஒழிகஎன்று தீர்ப்பிடும் என்பதும் அவருக்குத் தெரியும். ‘மெசியாஎன்று வாயாரப் புகழ்ந்த சீடர் கூட்டம், சிதறி ஓடும் என்பதும் அவர் மனம் அறியும். எனினும் எதனைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார் இளைஞர் இயேசு. நாமும் நாம் எதிர்கொள்ளும் இழப்புகள், தோல்விகள், புறக்கணிப்புகள், நெருக்கடிகள் போன்றவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாமல், முழுமனித வாழ்வை இலக்காகக் கொண்டு எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை பெறும் உறுதிப்பாட்டுடன் இந்த புனித வாரம் முழுவதும் இயேசுவோடு பயணிப்போம்.

முதல் வாசக முன்னுரை - எசாயா 50 : 4-7

இன்றைய முதல் வாசகம் இறைவன் தேர்ந்தெடுத்த துன்புறும் ஊழியனைப் பற்றி நமக்கு எடுத்துக் கூறுகிறது. இறைவார்த்தையை எற்று இறைவனுக்காகத் துன்புறுவது, இறைவனின் மக்களுக்காகத் துன்புறுவது ஆகும். துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இறைவன் நம்மைக் கைவிடுவதில்லை. நம்மோடு உடனிருக்கின்றார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

பதிலுரை பாடல்: திபா 22 : 7-8, 16-17 18-19, 22-23

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

இரண்டாம் வாசக முன்னுரை - பிலிப்பியர் 2: 6-11

மாட்சிமிகு மெசியாவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இறைமகன் இயேசுதுன்புறும் ஊழியனாக எல்லாராலும் புறக்கணிக்கப்படுகின்றார். தந்தைக்கு இணையான மாட்சியில் இருந்தவர், மானுடர் நமக்கு வாழ்வு வழங்க அடிமைக் கோலத்தில் கல்வாரியில் தன்னையே கையளிக்கின்றார். எனவே துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை, தாழ்ச்சி இல்லாமல் உயர்வு இல்லை என்னும் உண்மையை உணர்ந்தவர் களாக வாசகத்திற்கு செவிமடுப்போம்.

நற்செய்தி வாசகம்: மத் 26:14 - 27;66

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்

1. நிறைவாழ்வு வழங்கி ஆசியளிக்கும் இறைவா!                                                                                           

திருஅவையை வழிநடத்தும் உம் திருத் தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருட்பணியாளர் கள், துறவியர் திருநிலையினர் ஆகியோர் தங்கள் அர்ப்பணத்தால் முழுமனித வாழ்வை நோக்கி இறைமக்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2.துன்பங்களின் வழியாக மீட்பளிக்கும் இறைவா!

அன்றாட வாழ்வில் சந்திக்கும் துன்பங் களைக் கண்டு நாங்கள் துவண்டுவிடாமல் எங்கள் துன்பவேளைகளில் உம் உடனிருப்பை உணரவும் துன்பங்களின் வழியாக வெளிப்படும் உம் திருவுளத்தை அறியவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகின்றோம்

3. இரக்கம் நிறைந்த தந்தையே இறைவா!

கொரோனா உயிர்கொல்லி தொற்றுநோயால் உலகெங்கும் நிலைகுலைந்துள்ள உம் பிள்ளை

கள் அனைவரையும் கண்ணோக்கும். நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உம் ஆறுதலையும் அமைதியையும் பொழிந்தருளும். அரசு எல்லாவித தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து மக்களைக் காக்கவும் நோயால் பாதிக்கப்

பட்டவர்கள் விரைவில் நலம்பெறவும் வேண்டு மென்றும் உம்மை மன்றாடுகிறோம்

4. முழுமனித வாழ்வை வழங்கும் இறைவா!

சரியானவற்றைத் தேர்வு செய்யும் முழு சுதந்திரத்துடன் படைக்கப்பட்ட நாங்கள், எங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு வகையான தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். இந்தப் புனித வாரத்தில் உம் மகனும் எம் மீட்பருமாகிய இயேசுவோடு பயணித்து எல்லாவித தளைகளிலிருந்தும் விடுதலை பெறும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Comment