No icon

இளையோர் சந்திக்கும் பிரச்சினைகள்

இளையோர் சந்திக்கும் பிரச்சினைகள்
"இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்" (சபை உரையாளர் 11:9).

குதூகலித்துக் கொண்டாடவேண்டிய பருவம்தான் இளமைப் பருவம். களித்து இன்புற வேண்டிய இந்தப் பருவத்தில் பல்வேறுபிரச்சினைகளுக்கு இளையோர் ஆளாகிறார்கள். உள்ளும் புறமும் போராட்டங்களைச் சந்திக் கிறார்கள். குறிப்பாக அவர்களுக்குள் இளமைப் பருவத்தில் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் மாறி வரும் சூழ்நிலையில் சில வருடங்களுக்கு முன்பிருந்த மதிப்பீடுகள் யாவும் தலைகீழாக மாறியுள்ளதைப் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக இளையோர் சந்திக்கும் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுள் ஒன்றாகிய காதல் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். ஓர் இருபது வருடங்களுக்கு முன்னால் இருபாலர் பயிலும் கல்லூரி ஒன்றில் காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் சிறந்ததா? என்ற வினாத் தொகுப்பு (Questionaire) கொடுக்கப்பட்ட போது அதில் 10 சதவிகிதம் பேர் தான் காதல் திருமணத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தனர். பத்து வருடங்களுக்கு முன்புஇருபாலரும் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவிகள் "காதலிப்பது தவறா? எனகேள்வி கேட்டனர். அதா வது காதல் பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்தனர். சமீபத்தில் இருபாலர் பயிலும்கல்லூரி ஒன்றில் காதலிப்பது பற்றி கேள்வி கேட்டபோது அனைவரும் ஏகோபித்த குரலில் அதை ஆதரித்துக் குரல் எழுப்பினர். இவை அனைத்தும் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் கருத்து.

சிறகு விரி, பிறகு சிரி:
ஒரு மரத்தின் கிளையில் ஒரு பறவை கூடுகட்டி குஞ்சுகளுக்கு இரையூட்டி வந்தது. சிறு குஞ்சுகளிடம் தாய்ப்பறவை, சத்தம் போடாமலிருக்குமாறு அறிவுரை கூறியிருந்தது. ஆனால் ஒருநாள் தாய்ப்பறவை குஞ்சுகளுக்கு நல்ல இரையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்ற நிலையில் குஞ்சுகள் இரை கிடைத்த மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன. அதை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து பொந்து ஒன்றிலிருந்த பாம்பு ஒன்று கேட்டு மெதுவாக மரத்தில் ஏறி வந்தது. குஞ்சுகளை ஒன்றுவிடாமல் கொன்று விழுங்கிவிட்டுச் சென்றது. இதற்குக் காரணம் குஞ்சுகளுக்கு இறகு முளைக்காத நிலையில், பாம்பைக் கண்டதும் பறந்து செல்ல முடியாதிருந்ததுதான் காரணம் என நாம் அறிவோம். "அது போல படிக்கும் காலத்தில் காதல் காதல் காதல்; காதல் இல்லையேல் சாதல்" என்பது இளசு களுக்கு நல்லது போன்று தோன்றலாம். ஆனால் படிப்பை முடித்து தன் சொந்தக் காலில் நிற்கும்நிலையை அடையாத சூழலில் அந்தக் குஞ்சுகளுக்கு நடந்தது போல காதல் விளையாட்டு விபரீதத் தில் போய் முடிய லாம். எனவே இத்தகைய இளையோ ருக்கு "உட்கார்ந்து விட்டு காலை நீட்டு; நின்று கொண்டு காலை நீட்டினால் விழுந்து அடிபட நேரிடும்" அதாவது படித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்த பிறகு காதலைப்பற்றி சிந்திக்கலாம் எனக் கூறுவோம்.

காதலிப்பது சரிதான் என எல்லாரும் கூறியபோது, வெளிநாடுகளில், சொல்வதனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஏறக் குறைய அனைத்து திருமணங்களும் காதல் திருமணங்களாக இருந்தாலும் அங்கு 50 விழுக்காடுக்கு மேல் விவாகரத்து இருப்பதை சுட்டிக் காட்டினோம் (நுஎநசல டிவாநச யீநசளடிn ளை ய னiஎடிசஉநந). திருமணம் என்பது "ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்" என ஓய்ந்துபோகும் உணர்ச்சியைச் சார்ந்த ஒன்றல்ல எனக் கூறினோம்.

இப்படி உணர்ச்சி பிரச்சினைகளில் சிக்கிதவிக்கும் இளையோர் தங்கள் வாழ்வில் சந்திக்கும்சில முக்கிய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் போது, இளையோர் சந்திக்கும் ஐந்து வகையான பிரச்சினைகளை அடையாளம் காண்போம்.
1. உடல் சார்ந்த பிரச்சினைகள் (Physical Problems)
2. உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் (Emotional Problems)
3. உள்ளம் சார்ந்த பிரச்சினைகள் (Pshychological Problems)
4. சூழ்நிலை சார்ந்த பிரச்சினைகள் (Environmental Problems)
5. ஆன்மிகம் சார்ந்த பிரச்சினைகள் (Spiritual Problems)

இந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாளுவது, அவற்றிற்கு தீர்வுதான் என்ன என்றும் இனிவரும் சில வாரங்கள் பார்க்க இருக்கிறோம். உண்மையில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. பிரச்சினைகளை வெல்லும் சக்தி, வலிமை வாலிபர்களிடம் இருக்கிறது. இதைத்தான் விவிலியம், "இளையோரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள். கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள்" (1 யோவா 2:14) என்றும், "இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ" என்றும் (திபா 119:9) கூறுகிறது.
(இன்னும் கதிர் வீசும்)

Comment