No icon

பேரா. S. பிலிப் & பேரா. இம்மாகுலேட்

தனிமையுணர்வு (Loneliness)

பின்பு ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனியாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்என்றார் (தொநூ 2:18).

தொடக்க நூலாகிய விவிலியத்தின் முதல் நூலிலேயே கடவுளது திருவுளம் மனிதன் தனியாக இருப்பது நல்லதன்று என கடவுள் கூறுகிறார். இன்னும் சொல்லப்போனால், தொடக்க நூலின் முதல் அதிகாரத்தில் உலகைப் படைக்கும் இறைவன் அவை யாவும் நல்லது எனக் கண்டார் என விவிலியம் கூறுகிறது (தொநூ 1:10,12,18,21,25). ஏன், மனிதனை உருவாக்கிய பின்பு, கடவுள் அனைத்தும் மிக நன்றாக இருக்கக் காணுகிறார். ஆனால், மனிதன் தனியாக இருப்பது மட்டும் நல்லதன்று எனக் கூறக் காண்கிறோம். மேலும், தனிமையுணர்வை ஆதாமிடமிருந்து அகற்ற, ஓர் ஏவாளை கடவுள் கொடுத்தது உலகம் உண்டாவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது (தோபி 6:18) என, விவிலியம் கூறுகிறது. அதாவது, விவிலியத்தின் படி, உலகம் உண்டான பின்புதான் மனிதன் உண்டாக்கப்பட்டான் (தொநூ 2:7) எனக் கூறப்பட்டாலும், மனிதனது துணை மட்டும் உலகம் தோன்றுமுன்னே முன் குறிக்கப்பட்ட ஒன்று எனவும், இறைவார்த்தை கூறுவதிலிருந்து தனிமையை மாற்ற கடவுள் நோக்கமாயிருக்கிறார் என புலனாகிறது.

இளையோரும் தனிமையும்

புகழ்பெற்ற போதகர் பில்லி கிரஹாம் கருத்துப்படி, இளையோர் அதிலும் கல்லூரி மாணவர்கள் தான் தனிமையுணர்வினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இதைப்போக்கவே பலர் மது, போதைப் பொருள் போன்றவற்றை நாடுகின்றனர் என்கிறார் இவர். 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கில கவிஞர் T.S. எலியட் என்பவர் தனது பிரபல "பாழ்நிலம்" (The Waste Land) என்ற கவிதையில் இப்படி தனிமையுணர்வை, வெறுமையுணர்வை, விரக்தியைச் சமாளிக்க குறி சொல்பவர்களிடம், பெண்களிடம் செல்லும் நவீன கால யதார்த்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். முதல் உலக மகாயுத்தத்திற்குப்பின் (1914 - 18), இத்தகைய கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாகக் கூறி, இத்தகைய தேடுதல் ஒருநாளும் மனநிறைவை, நிம்மதியை தர முடியாது என்கிறார்.

நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன் நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;

கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்என திபா 102 : 6 -7 இல் கூறுவதைப் பார்க்கின்றோம்.

நியூயார்க் நகரில் சுமார் 71ரூ க்கும் மேற்பட்டோர், தனித்துவிடப்பட்டதை, உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தனிமையுணர்வைப் போக்கிய இயேசு

பெத்சதா குளத்தருகில் 38 வருடமாக உடல்நலமற்ற ஒருவன் தனிமையில் கிடந்து தவிக்கிறான் (யோவா 5:1-9). இயேசு அவனைத் தேடிச்சென்று, நலமாக விரும்புகிறாயா? எனக் கேட்கிறார். இதுவரை தனக்கு உதவ யாருமில்லை எனக் கூறியபோது, அவனை குணமாக்கி, உன் தனிமையில் உதவ நானிருக்கிறேன் என எண்பித்துக்காட்டுகிறார். இதனால்தான் திபா 71:5 இல்ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கைஎன திருப்பாடலாசிரியர் கூறுகிறார். இயேசு தனது சீடர்களையும், இருவர் இருவராக அனுப்பியதாக விவிலியம் கூறுகிறது (லூக் 10:1).

ஆனால், இயேசு தனிமையான இடங்களில் தங்கி வந்தார் (மாற் 1:45), தனிமையான இடத்திற்குச் சென்று செபித்தார் (மாற் 1:35) பாலை நிலத்தில், தனியாகவே அவர் 40 நாள்கள் நோன்பிருந்தார் (லூக் 4: 1-2) என்றாலும், தனிமையிலே அவர் தந்தையின் உடனிருப்பை உணர்ந்ததால், சீடரெல்லாம் அவர் கைதுசெய்யப்பட்டபோது, அவரை தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்ட போதும், “நான் தனியாய் இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16:32) என்றார். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது, தனிமை என்பது நமது சிந்தனையைச் சார்ந்தது. இதனால் தான் தனிமையை சாதக எண்ணத்தோடு பலர் பார்க்கின்றனர். அவர்களுள் உள்முகச் சிந்தனையாளர்கள் முதன்மையானவர்கள்.

உள்முகச் சிந்தனையாளர்களும் (Introvert) தனிமையும்

உளவியல்  கருத்துப்படி உள்முக சிந்தனையாளர்களின் முக்கிய பண்பு  தனிமையில் இனிமை காண்பதாகும். ஏனென்றால், இவர்கள் தனிமையை விரும்புபவர்கள். இதனால் மக்கள் கூட்டத்தில் இவர்கள் இருந்தால், சிறிது நேரத்தில் களைப்படைந்துவிடுவார்கள். இவர்கள் பொதுவாக சமூக வெட்கம் கொண்டவர்களாய், மற்றவர்களிடம் சகஜமாக பழகாமல் ஒதுங்கி இருப்பார்கள். இதனால், இவர்களுக்கு நண்பர்கள் மிகக்குறைவு. அமைதியான சூழ்நிலை இருந்தால்தான் இவர்களால் சிந்தனையை ஒருங்கிணைக்க முடியும். எதையும் குழுவாய் செய்வதை தவிர்ப்பார்கள். பேசுவதை விட, எழுதுவதையே அதிகம் விரும்புவார்கள்.

இவ்வாறெல்லாம் இவர்களைப் பற்றிக் கூறினாலும், புறம் பொருள்கள் குறித்து இவர்கள் ஆழ்ந்து, சிந்திப்பவர்கள். ஆகவே, உலகில் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், ஆன்மீகவாதிகள், தத்துவ ஞானிகள், சிற்பிகள் தனிமையை நேசித்தவர்களாகவே பார்க்கிறோம். இதற்கு சரித்திரத்திலிருந்து  பல  எடுத்துக்காட்டுகளை கூறலாம். சித்தார்த்தராக இருந்தவர் இன்று உலகம் போற்றும் புத்த பெருமானாக ஆனது; அவர் மாளிகை, மனைவியை துறந்து, போதி மரத்தடியில் தனியாக அமர்ந்து, உள்ளொளி பெற்றதால்தான். வத்திக்கான் சென்றவர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தின்சிஸ்டைன் சிற்றாலய” (Sistine Chapel) சுவரோவியங்களை (frescocs) சுதை ஓவியங்கள் மறக்க முடியாது. அந்த ஓவியங்களை மைக்கேல் ஆஞ்சலோ இரவு, பகல் பாராமல் தனித்து நின்று, அர்ப்பணத்துடன் வரைந்தார் என்பதை, வழிகாட்டிகள் நமக்குச் சொல்வார்கள்.

நினைவில் நிறுத்த

1. மனிதன் தனியாக இருப்பது இறைச்சித்தமன்று.

2. இன்று இளையோரில் பலர் தனிமையில் வாடுகின்றனர். அதைப்போக்க பல நிவாரணிகளைத் தேடி ஏமாறுகிறார்கள்.

3. உன் தனிமையை அகற்ற 38 வருட நோயாளியிடம் சென்றதுபோல், இயேசு உன்னிடம் வருகிறார்.

4. அவர் இம்மானுவேல், உலகம் முடியும்வரை நம்மோடு இருப்பவர். அவரை வரவேற்றால் அவர் நம்மோடு அமர்ந்து விருந்துண்பார் (திவெ 3:20).

5. தனிமையை உணர்வதும், உணராமலிருப்பதும் நமது சிந்தனையைச் சார்ந்தது. பெரும் கூட்டத்திலும் தனிமையை உணர முடியும்.

6. உள்முகச் சிந்தனையாளர் போல் தனிமையில் இனிமை காண முடியும். தனிமையை சாதகமாக்கி சாதனையாளராக முடியும்.

தொடரும்

Comment