No icon

எண்ணம் போல் வாழ்க்கை

30. மந்தையிலிருந்து விலகு

இன்றைய தேதியில் உலகின் உன்னத உடையாக, இளைய
தலைமுறையை கட்டிப் போட் டிருக்கின்ற உடையாக வலம் வரும் ஓர் உடை உண்டென்று சொன் னால், அது ‘ஜீன்ஸ்’ என்று உடனே சொல்லிவிடலாம். அந்
தளவுக்கு ஜீன்ஸானது பெரும்
பாலானவர்களால் விரும்பி அணியப்படுகின்ற உடையாக இருக்கின்றது. இந்த உடை வந்ததன் பின்னணி என்ன?, இதனை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் யார்? இதிலிருந்து நாம் என்ன செய்தியைக் கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்ட்ராஸ் (டுநஎi ளுவசயரளள). ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பிழைப்பிற்காக அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் நகருக்குச் சென்று, அங்கு
தன் சகோதரர்களுடன் துணி வியாபாரம் செய்து வந்தார். இந்த சமயத்தில்தான் அதாவது,
1848 ஆம் ஆண்டு கலிஃபோர்னி
யாவில் தங்கம் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. எனவே
தங்கத்தை வெட்டி எடுப்பதற் கான வேலைகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. இதில் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கு வந்து  தங்கி வேலை பார்க்கத் தொடங்கினார்கள். 
இதனை அறிந்த லெவி
ஸ்ட்ராஸ் கலிஃபோர்னியாவிற்குச் சென்று, அங்கிருந்த தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் தன்னுடைய துணிக்கடையை விரித்தார். அதுவரைக்கும் யாரும் அங்கு கடையை விரிக்காததினால், லெவி ஸ்ட்ராஸின் துணிக்கடை அமோகமாக ஓடியது; அவருக்கு அதிகமான லாபத்தையும் ஈட்டித்தந்தது. ஆனால் அவர் விற்பனைக்கு வைத்திருந்த எல்லாத் துணிகளும் விற்றுத் தீர்ந்துபோக கான்வாஸ் துணி மட்டும் விற்பனையாகாமல் இருந்தது. 
‘இதற்கு என்ன காரணமாக இருக்கும்?’ என்று அவர் யோசிக்கத்  தொடங்கினார். ‘கான்வாஸ் துணியோ மிகவும் மெல்லிசானது; எளிதில் கிழிந்துவிடக்கூடியது. அப்படியிருக்கும்போது இது கட்டாயம் கடினமான வேலைகளைச் செய்யும் சுரங்கத் தொழிலாளர்களுக்குச் சரிப்பட்டு வராது’ என்று கான்வாஸ் துணியோடு கடினமான, எளிதில் கிழியாத ஒரு துணியையும் இணைத்துத் தைத்தார். பின்னர் சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான சிறுசிறு பொருள்களைப் போட்டுக்கொள்வதற்கு வசதியாக பக்கவாட்டில் பைகளைத் தைத்து, அவை கிழியாத வண்ணம் பித்தளை நட்டுகளை வைத்துத் தைத்து, அந்தத் துணிகளை விற்பனைக்கு வைத்தார்.
தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு வந்திருந்த புதுவகையான துணிகளைப் பார்த்த சுரங்கத் தொழிலாளர்கள் அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கத் தொடங்கினார்கள். லெவி ஸ்ட்ராஸ் அதோடு நின்றுவிடாமல், தான் தயாரித்திருந்த அந்த புதுவகையான உடையை இன்னும் மெருகேற்றும் வண்ணம், இத்தாலியிலிருந்து ஜெனோசஸ் என்ற நீல வண்ணத்திலிருந்த துணியைக் கொண்டு வந்து, முன்பு தான் தயாரித்து வைத்திருந்த உடையோடு இணைத்து இன்னும் புதுவகையான உடையாகக் கொண்டுவந்தார். இதனால் அந்த புதுவகையான உடையை சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு மக்களும் விரும்பி அணியத் தொடங்கினார்கள். இப்படி வந்ததுதான் ‘ஜீன்ஸ்’.
இன்றைக்கு எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் மட்டுமல்லாது, எல்லாத் தரப்பு மக்களும் விரும்பி அணிகின்ற ஓர் உடையாக ஜீன்ஸ் மாறி நிற்கின்றது. இதற்கு முழுமுதல் காரணம் லெவி ஸ்ட்ராஸ் மேற்கொண்ட வித்தியாசமான வழிமுறையே என்று சொன்னால் அது மிகையாகாது. 
லெவி ஸ்ட்ராஸ் தன்னிடத்தில் துணிக்கடை இருக்கின்றது, எனவே மக்கள் தன்னிடத்தில் வரட்டும் என்று இருந்துவிடவில்லை. மாறாக, மக்களை - சுரங்கத் தொழிலாளர்களைத் - தேடிச் சென்றார். அது மட்டுமல்லாமல், அவர் மக்கள், தான் தயாரித்து வைத்திருக்கின்ற துணிகளைத்தான் வாங்கவேண்டும் என்று இருக்
காமல், மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து,
அதற்கேற்றார்போல் துணிகளைத் தயாரித்தார். இப்படிப்பட்ட மந்தையிலிருந்து விலகி நின்று செயல்பட்ட அணுகுமுறையால் அல்லது வித்தியாச மான அணுகுமுறையால்தான் இன்றைக்கு அவர் தயாரித்த ஜீன்ஸ் உடை எல்லாரையும் கட்டி ஆண்டுகொண்டிருக்கின்றது. 
ஜீன்ஸ் உடையை உலகிற்கு அறிமுகப் படுத்திய லெவி ஸ்ட்ராஸ் நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் எல்லாரையும் போன்று செயல்பட்டுக் கொண்டிராமல், கூட்டம் அல்லது மந்தையிலிருந்து விலகி, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதாகும். 
இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் எல்லாரையும்போல உண்டு, எல்லாரையும் போல
உடை உடுத்தி, எல்லாரையும் போல வேலை பார்த்து கடைசியில் எல்லாரையும்போல மடிந்து
போகிற ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருசிலர் விதி
விலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் எல்லாரையும் போல சிந்தித்துச் செயல்
படுகின்ற வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி எல்லாரையும்போல வாழ்கின்றபோது என்ன நடக்கிறதென்றால் நம்முடைய சிந்தனையானது மட்டுப்படுகின்றது; வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகின்ற நிலை தான் உருவாகின்றது. ஆனால், நாம் எல்லாரையும் போன்று இருக்க அல்ல, தனித்தன்மையோடு இருக்கவே படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆகவே,
நாம் எல்லாரையும் போன்று இல்லாமல், தனித்
தன்மையோடு சிந்திக்கவேண்டும்; தனித்தன்மை யோடு செயல்படவேண்டும். அதுதான் நம் ஒவ்வொருவருக்கும் அழகு.
‘சரி, மந்தையிலிருந்து விலகி நாம் மட்டும்
வித்தியாசமாக சிந்தித்தாலோ அல்லது செயல் பட்டாலோ இந்த உலகம் நம்மை வித்தியாசமாக பார்க்குமே, பேசுமே’ என்று நினைக்கும்.  நிச்சயமாக நம்மை வித்தியாசமாகப் பார்க்கும், பேசும், நினைக்கும். அதற்காகவெல்லாம் நாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கவேண்டிய அவசியம்
இல்லை. உலகம் தட்டை வடிவிலில்லை, உருண்டை
யாக இருக்கின்றது என்று கலிலியோ சொன்ன
போது, இந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டதா என்ன? அவரை வித்தியாச மாகத்தானே பார்த்தது! அதற்காக அவர் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கவும் இல்லை, தனது கோட்பாட்டினை மாற்றிக்கொள்ளவும் இல்லை. ஆனால், இன்றைக்கு அவரை உலகம் தலையில்
வைத்துக் கொண்டாடுகின்றது. நாமும்கூட இந்த மந்தையிலிருந்து விலகி சிந்திக்கின்றபோது, செயல்படுகின்றபோது உலகம் வித்தியாசமாகத் தான் பார்க்கும். சில சமயங்களில் நம்மை நகைப்புக்குக்
கூட உள்ளாக்கும். அதற்காக நாம் வருந்திக் கொண்டிருக்காமல், தனித்தன்மையோடு செயல் படுவது சிறந்தது. 
அடுத்ததாக நாம் ‘மந்தை’ மனநிலையோடு செயல்படுகின்றபோது கூட்டத்தில் காணாமல் போவதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ‘இவர் எல்லாரையும் போலத் தானே செய்கிறார், இதில் என்ன வித்தியாசம் இருக்கின்றது’ என்று இந்த உலகம் நம்மை சட்டை செய்யாமலே போய்விடும். மாறாக, மந்தையிலிருந்து விலகி, தனித்து, தனித்துவமாகச் செயல்படுகின்றபோது இந்த உலகமே ‘யார் இவர்’ என்று திரும்பிப் பார்க்கும். ஆகவே, நாம் கூட்டத்தில் தொலைந்துபோகப் போகிறோமா? அல்லது கூட்டத்திலே தனித்துவமாகத் தெரியப்போகிறோமா? என்பதை நாம்தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். 
இந்தியாவில் பிரஷர் குக்கர் அறிமுகப் படுத்தப்பட்டபோது விளம்பரங்கள் யாவும்  இல்லத்தரசிகளைக் குறிவைத்துச் செய்யப்பட்டன. ‘பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால் பெண்களின் சமையலறைப் பிரச்சினைகள் தீரும், வேலையும் எளிதாகும்’ என்பது மாதிரியான விளம்பரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. இதனால் எந்த
மாற்றமும் நிகழவில்லை. ‘குக்கரைப் பயன்படுத்தி னால் சோறு சுவையில்லாமல் போகுமோ... வேறு ஏதாவது விளைவுகள் ஏற்படுமோ’ என்று பெண்கள் அதனை வாங்காமல் இருந்தார்கள். 
இந்த சமயத்தில்தான் ஒருவர் குக்கரை பெண்களுடைய தேவையாக மட்டும் பார்க்காமல், அதைக் கணவன்மார்கள் இல்லத்தரசிகளுக்கு வாங்கித் தரவேண்டிய பரிசாகப் பார்த்தார். அதனுடைய வெளிப்பாடாக அவர், ‘மனைவியை நேசிப்பவர்கள், பிரஷர் குக்கர் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்’ என்ற அறிவிப்போடு விளம்பரத்தை வெளியிட்டார். இதனால் பிரஷர் குக்கர் வியாபாரம் பட்டையைக் கிளப்பி, விற்பனையாகத் தொடங்கியது. எல்லாரும் ஒருமாதிரி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அந்த மனிதரோ வித்தியாசமாகச் சிந்தித்தார். அதனால் மிகப்பெரிய மாற்றத்திற்குக் காரணமானார்.
நாமும்கூட எல்லாரையும் போல சிந்தித்து, செயல்பட்டுக் கொண்டிருந்தால் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல், கூட்டத்தில் கரைந்து போய்விடுவோம். மாறாக, தனித்துவமாகச் செயல் படுகின்றபோது இந்த உலகத்தின் பார்வையையே நம் பக்கம் கொண்டுவர முடியும். ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் நாம், மந்தையிலிருந்து விலகி தனித்துவமாக சிந்தித்துச் செயல்படுவோம். அதன்வழியாக குன்றின்மீது ஏற்றிவைக்கப்பட்ட விளக்காவோம்.

Comment