No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டிய எளிய மனதுடையோர்

எளிய மனதுடையோர் என்போர், அனைத்தையும் இறைவனின் கொடைகளாக வரவேற்று, உலகப் பொருட்களை அனுபவித்து தூக்கியெறியும் நுகர்வுக் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டியவர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.

சனவரி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், கடவுளின் அரசு அவர்களுக்கு உரியது என்ற முதல் பேற்றை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

எளிய மனதுடையோர், இறைவன் முன் யாசகம் பெறுபவர்களாக, இரந்துண்பவர்களாக உணர்கின்றனர், ஏனெனில், இறைவனிடம் இருந்து வருபனவற்றை எல்லாம் கொடையாக, அருளாக அவர்கள் நோக்குகின்றனர் என்றார்.

இறைவனின் கொடையாக வருபவை எதனையும் நாம் வீணடிக்கக்கூடாது என்பதை உணர்ந்தவர்களாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கி வாழ்வதிலிருந்து விலகி வாழ்பவர்களே எளிய மனதுடையோர் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களையும் பொருட்களையும் சரியான முறையில் மதிப்பிடத் தெரியாத இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் இறைவனின் கொடைகள் வீணடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த திருத்தந்தை பிரான்சிஸ் மூன்று வழிகளை முன்வைத்தார்.

மனிதன் எனும் கொடையை மதித்தல், நம்மிடம் இருக்கும் பொருட்களை மதித்தல், மக்களை வீணடிக்காதிருத்தல் என்ற விதிகளை முன்வைத்த திருத்தந்தை, மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் மாண்புடன் மதித்து ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அவர்கள் எக்காலத்திலும் நுகர்வுப் பொருட்களாகவோ, அனுபவித்து தூக்கியெறியப்படும் பொருளாகவோ நடத்தப்படவேக் கூடாது என அழைப்புவிடுத்தார்.

Comment