No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் – 16

உணர்வுகளோடு இறைவேண்டல்

இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையில், மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துக் கூறுகளும் இறைவேண்டலில் இணையும்போதுதான், அது முழுமையானதாக மாறுகிறது. காரணம், இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், நாம் உணர்வுகளோடும் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

கடவுள் மனிதரைப் படைத்தபோதே, நம்மை உணர்வுகள் நிறைந்தவராகவே படைத்திருக்கிறார். உணர்வுகளற்ற ஒரு மனிதர் ‘சொரணையற்ற ஜடம்’ என்று அழைக்கப்படுகிறார். உணர்வுகளே நம் வாழ்வை நிறைவுள்ளதாக மாற்றுகின்றன. உறவு, பணி, நிர்வாகம் போன்ற மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உணர்வுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இத்தளங்களின் இலக்குகள் முழுமையாக நிறைவடையும்.

அதுபோலவே, இறைவேண்டலிலும் உணர்வுகள் இணைக்கப்பட வேண்டும். உணர்வுகள் கடவுள் தந்த கொடை என்னும் புரிதலோடு, நாம் நம் உணர்வுகளுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். உணர்வுகளோடு இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைப்பற்றில்லாத மனிதரைப் பற்றிப் பேசும் பவுலடியார், “அவர்கள் கடவுளை அறிந்திருந்தும், கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று” (உரோ 1:21) என்று ஆதங்கப்படுகிறார். எனவே, உணர்வுகளோடு இறைவனை அணுகுவோமாக!

உணர்வுகளை நாம் நேர்மறை உணர்வுகள், எதிர்மறை உணர்வுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம். மகிழ்ச்சி, ஆர்வம், ஆர்ப்பரிப்பு, உற்சாகம், ஊக்கம் போன்றவை நேர்மறை உணர்வுகள். இந்த உணர்வுகளைக் கொண்டு ஆண்டவரைப் போற்ற திருவிவிலியம் நம்மை அழைக்கிறது.

அதேவேளையில், அச்சம், கவலை, துயரம், கோபம், அவமானம், ஏக்கம் போன்றவை எதிர்மறை உணர்வுகள். இவை நம் மகிழ்ச்சியைக் குலைக்கின்றன. “என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின” (திபா 73:21) என்று வருத்தப்படுகிறார் திருப்பாடலாசிரியர். நேர்மறை உணர்வுகள் இணையும்போது நமது இறைவேண்டல் செழுமையடைகிறது. எதிர்மறை உணர்வுகளோ நமது இறைவேண்டலுக்குத் தடையாக இருக்கின்றன. எனவே, எதிர்மறை உணர்வுகளை மேலாண்மை செய்ய நமக்கு வழிகாட்டுகிறது இறைவார்த்தை (எதிர்மறை உணர்வுகளோடு இறைவேண்டல் செய்வது எப்படி? என்பதைப் பின்னர் பார்க்கலாம்).

நேர்மறை உணர்வுகளோடு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதற்கான பல சான்றுகளைத் திருவிவிலியத்தில் காண்கிறோம். எஸ்ரா நூலில் ஆண்டவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டபோது, “எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து, மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்” (எஸ் 3:11) என்பது ஒரு சான்று. மக்கபேயர் நூலில் போரில் வெற்றி பெற்ற இஸ்ரயேலர் “உரத்தக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்து வல்லவரான இறைவனைத் தங்கள் தாய்மொழியில் போற்றினார்கள்” (2மக் 15:29) என்பது மற்றோர் ஆதாரம்.

மேற்கண்டவை போன்ற சிறப்பான நிகழ்வுகளின்போது மட்டுமல்ல, எப்போது இறைவேண்டல் செய்தாலும் ஆர்வத்துடன், மகிழ்வுடன் செபிக்க வேண்டும். “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்” (திபா 122:1) என்று கூறி நம்மை வியக்க வைக்கிறார் இறையடியார். ஆம், சலிப்பு, சோர்வு, ஆர்வமின்மையோடு இறைவேண்டல் செய்யாமல், அகமகிழ்வோடு இறைவேண்டல் செய்ய வேண்டும்.

நன்றியுணர்வு என்பது இறைவேண்டலுக்கு எப்போதும் தேவையான ஒன்று. “தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்” (கொலோ 4:2) என்பது பவுலடியாரின் அறிவுரை.

மனம் (மூளை), உணர்வு (இதயம்) என்னும் இரண்டும் இணையும்போது நம் இறைவேண்டல் நிறைவானதாக இருக்கும். சிலரது செபங்களை ஊன்றிக் கவனிக்கும்போது, அது சிந்தனை, மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அதில் உணர்வுகள் மிகவும் குறைவாக இருக்கும். இத்தகையவர்கள் உணர்வுகளையும் கலந்து செபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். செபங்களை விரைந்து சொல்லாமல், நிதானமாக, பொருளுணர்ந்து செபிப்பது, நீண்ட வாக்கியங்களாகச் சொல்லாமல், சின்னஞ்சிறு வாக்கியங்களாக வேண்டுவது, தன்னுணர்வோடு மன்றாடுவது போன்றவை உதவியாக இருக்கும்.

இன்னும் சிலர் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுச் செபிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருப்பர். உணர்ச்சிவசப்படாவிட்டால் அது செபமில்லை என்ற தவறான எண்ணம் இவர்களிடையே இருக்கிறது. உணர்வுகளோடு செபிப்பது வேறு, உணர்ச்சிவசப்பட்டுச் செபிப்பது வேறு என்பதை இவர்கள் அறிய வேண்டும்.

இறைவேண்டல் செய்வது பற்றிப் பேசும் பவுலடியார், “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்” (1கொரி 14:15) என்று சொல்வதை நாம் சிந்திக்க வேண்டும்.

‘தூய ஆவியார் தரும் நல்லுணர்வுகள் (இதயம்), தூய ஆவியார் தரும் அறிவாற்றல் (மூளை) இரண்டோடும் நான் இறைவேண்டல் செய்வேன், திருப்பாடல் பாடுவேன்’ என்று பவுலடியார் கூறுவது நம் அனைவருக்கும் பாடமாக அமையட்டும்.

“திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும், ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்” (கொலோ 3:16) என்னும் அவரது அறிவுரையே உணர்வுகளோடு இறைவேண்டல் செய்வதற்கு முத்தாய்ப்பான பரிந்துரை.

Comment