No icon

கஜகஸ்தான்  நாட்டிற்கு

திருத்தந்தை மேற்கொண்ட 38வது திருத்தூதுப்பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் கஜகஸ்தான் நாட்டிற்கு 38 வது திருத்தூதுப்பயணத்தை  செப்டம்பர் 13 செவ்வாயன்று சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காலை 6.25 க்கு தொடங்கினார்;   14, 15 ஆகிய இரு நாள்களில், கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெற்ற ஏழாவது உலகப் பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில்  கலந்துகொண்டு அதை நல்லமுறையில் நிறைவு செய்தார். ஒவ்வொரு திருப்பயணத்திற்கு முன்னரும் பின்னரும் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் செய்யும் வழக்கத்தின்படியே, இத்திங்கள் செப்டம்பர் 12ம் தேதி மாலை, அக்கோவிலுக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் Maria Salus Populi என்ற அன்னை மரியாவின் திரு உருவம் முன் செபித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உலக பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு

உலக மற்றும் பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு  2003 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் முதன் முதலில் கஜகஸ்தானின் அஸ்தானா மாவட்டத்தில் உள்ள நூர் சுல்தான் என்னும் இடத்தில் அந்நாட்டின்  முதல் குடியரசுத்தலைவர் அபிஷெவிக் நாசர்பயாவ் என்பவரால் தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டமானது 2003, 2006, 2009, 2012, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் முறையாக நடைபெற்று வந்தது 2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கூட்டம் கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இவ்வாண்டு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இஸ்லாமியம், கிறிஸ்தவம், யூதம், புத்தம், ஷிண்டோ, தாவோயிசம் மற்றும் ஏனைய பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் திருத்தந்தையும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். இக்கூட்டங்கள் முடிந்த உடன் இது தொடர்பான பதிவுகளை கோரிக்கைகளை தீர்மானங்களை உலக நாடுகளின் அரசிற்கும், நாட்டு மக்களுக்கும் வெளியிடுவதை தங்களின் வழக்கமாக இம்மாநாடு கொண்டுள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றாக கூடி  நிரந்தர பன்னாட்டு அமைப்புக்களை உருவாக்குதல், பல்சமய உரையாடல், ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்தல் போன்றவற்றைப் பற்றிக் கலந்துரையாட இம்மாநாடு உதவுகின்றது. தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு இவ்வாண்டு உலக மக்களின் சமூக மற்றும் ஆன்மீக வளர்சியில் அனைத்து மதத்தலைவர்களின் பங்கு என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறுகின்றது பல்சமயக் கலந்துரையாடல்களில் முன்னிலை வகிப்பது  உலக அமைதி, மற்றும் வளர்ச்சி, பன்னாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உலக மதத்தலைவர்களின் பங்கு போன்றவை பற்றி இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கஜகஸ்தான் ஆசியாவின் மையத்தில் கடல் நீரே இல்லாத அதிக அளவு நிலப்பரப்பால் சூழ்ந்த பகுதி, இதன் வடக்கு மற்றும் மேற்கு பகுதி இரஷ்ய எல்லைகளாகவும், கிழக்கில் சைனாவும் தெற்குப் பகுதியில்  உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற பகுதிகளும் உள்ளன. பெரும்பாலான மேற்குப் பகுதிகள் அனைத்தும் ஐரோப்பிய கண்டத்திற்குள் அடங்குகின்றது. கிழக்கிலிருந்து மேற்காக 3000 கிலோ மீட்டரும், வடக்கு தெற்காக 1700 கிலோ மீட்டரும் நிலப்பரப்பு கொண்டது. 2.97 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக திகழும் இந்நாடு குதிரை வளர்ப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றது. மிகப்பெரிய அளவு சமவெளிகளைக் கொண்டிருப்பதால் இப்பகுதி மக்கள் குதிரைகளை வீட்டு விலங்காகவும் குதிரை சவாரி செய்வதை தங்களின் பழக்கவழக்கமாகவும் கொண்டவர்கள்.

கஜகஸ்தானில் கிறிஸ்தவம்

கஜகஸ்தான் கிறிஸ்தவர்களின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. 1253 ஆம் ஆண்டு பிரான்சு  நாட்டின் அரசராக இருந்த புனித லூயிஸ், மங்கோலியா பகுதியை அடைவதற்காக கிறிஸ்தவ மறைப்போதகர்களை அனுப்பினார். அதன்பின் 25 வருடங்களுக்குப் பின் 1278 ல் திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ் மத்திய ஆசியப் பகுதிகளில் கிறிஸ்தவத்தை அதிகப்படுத்த விரும்பி பிரான்சிஸ்கன் சபையினரிடம் அதனை ஒப்படைத்தார். 14 நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்துறவறத்தார், அல்மாலிக் என்னும் நகரில் தங்களுக்கான இல்லத்தையும் பேராலயத்தையும் கட்டினர். அக்காலத்தில் சிகட்டய் மன்னர் ஆட்சியின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அம்மன்னர் காட்டும் அன்பையும் கனிவையும் குறித்து திருத்தந்தை 12ஆம் பவுல் அம்மன்னருக்கு கடிதம் ஒன்று அனுப்பி தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். அதன்பின் ஆட்சி மாறி 1340 ஆம் ஆண்டு முதல்  கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படலாயினர்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அதாவது இரஷ்யப்பேரரசின் கீழ் இருந்தது வரை அங்குள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குழுக்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை.  20 நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இரஷ்யப் படையின் இராணுவ வீரர்களாக, சிறைக்கைதிகளாக, அகதிகளாக உலகத்திற்கு அறிமுகமாயினர். முதல் உலகப் போரின் போது கஜகஸ்தானின்  பியத்ரோபவுலோ பங்கு 5000 கிறிஸ்தவர்களைக் கொண்டதாகவும், குஸ்தானை 6000 கிறிஸ்தவர்களைக் கொண்டதாகவும் இருந்தது. 1991 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் பெற்ற நாடாக கஜகஸ்தான் செயல்பட தொடங்கியது. அதன் முதல்படியாக 1992 முதல் திருப்பீடத்துடன் ஒப்பந்தமாகி 1998 வரை செயல்பட்டுவந்தது. அன்றுமுதல் கல்வி,சமூகம்,உடல்நலம் போன்றவற்றில் கவனம் செலுத்தி மக்களை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி பணிபுணிய மறைப்போதகர்களும் துறவிகளும் அழைக்கப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை ஆன்மீக பணிகள் பல செய்து கிறிஸ்தவத்தை நிலைநாட்டி வருகின்றது. மிகக்குறைவான அளவே கிறிஸ்தவர்கள் இருந்தாலும்  அன்பிலும் அருட்பணிகளிலும் சிறந்து விளங்கும் இம்மக்களை திருத்தந்தை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியே.

(திருத்தந்தையின் 38வது திருத்தூதுப் பயணம் குறித்த கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும்)

Comment