தெய்வீகத் தடங்கள் – 14
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, நோயிலிருந்து மீடேறி தேறிவந்த காலத்தில் கோயம்புத்தூர் கனகா மருத்துவமனைக்கும், புனித மேரி மருத்துவமனைக்கும் பலர் என்னைப் பார்க்க வந்தார்கள். எனது உறவினர்கள் பலர் மைசூரிலிருந்த என் அண்ணன் வீட்டுக்கும், எனது சொந்த ஊருக்கும் என் உடல் நிலைபற்றி விசாரிக்க வந்தார்கள். பலர் என்மேல் மிகுந்த அக்கறை காட்டினார்கள். சிலர் மாற்று மருத்துவ முறைகள் பற்றிப் பரிந்துரைத்தார்கள். சித்தா, ஓமியோபதி, வீட்டு வைத்தியம், அக்குப்பஞ்சர், ஆயுர் வேதம் முதலிய மாற்று மருத்துவமுறைகளை முயன்று பார்க்கச் சொன்னார்கள்.
பலர் என்னைப் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். அவர்களை நான் தேற்ற வேண்டியதிருக்கும். எனது நிலையைப் பார்த்து பலர் துன்பப்படுதலின் எதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். எனக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து எரிச்சல்படுவார்கள். நானோ எல்லாருக்கும் இனிமையான சொற்களை வைத்திருப்பேன். உண்மையில் நான் உற்சாகமாகவே இருந்தேன். எப்படியிருப்பினும் வலி என்னுடையது, என்னுடையது மட்டுமே.
இயேசு சபைக் குடும்பத்தில் எனக்கு மூத்த இயேசு சபையினரிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்தது. சிலர் எனக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் செபம் செய்தார்கள். சாப்பாட்டு மேசையில் வாழ்த்துச் சொல்லிக் கொண்டபோதும், தாழ்வாரங்களிலும் அறைகளிலும் என்னைக் காண்பது அவர்களுடைய வலிகளையும், நோய்களையும் மறக்கச் செய்தது. என்னுடைய வலிகளோடும், உடல் துன்பங்களோடும் ஒப்பிடும்போது அவர்களுடைய வலிகள் எல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள்.
வாழ்க்கைப் பாடங்கள் எனக்கு என்ன கற்றுத் தந்திருக்கின்றன? வாழ்க்கையில் நேர்கின்ற முக்கிய இறை அனுபவங்களை வளர்த்துப் பேணுவது இன்றியமையாதது என்று என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் எனது இக்கட்டான நாள்களில் எனக்கு ஆறுதலளித்து என்னை வலுப்படுத்தியிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வுகள் ஆண்டவரின் பிரசன்னத்திற்கு என்னை இயல்பாக ஆக்கிக்கொள்ள உதவின. என்னுடைய கண்ணோட்டங்களை, முன்னோக்குகளை, பார்வைகளைப் புதுப்பித்தன. இந்தப் புதிய விழிப்புணர்வு எனது வாழ்வின் வெவ்வேறு பக்கங்களை என்னுள் சேர்க்க முடிந்தது. வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை உள்வாங்கி, என்னுள் இருக்கும் இறைவனின் நன்மைத்தனத்தைச் சுவைத்திருக்கிறேன். இவ்வாறு இந்தக் கணத்தில் எனது பரிமாணங்களின் சிறந்த வடிவமாக ஆவது கடவுளை மகிமைப்படுத்தும் ஒரே வழி.
உடைந்து போன நான் முழுமனிதனாக ஆவதன் மூலம், ஒவ்வொரு நாளும் தரப்படும் வாழ்க்கையை ஏற்க என்னை மாற்றிக்கொள்வதும், நன்றிமிக்க வாழ்வை வாழ்வதும், எனக்குக் கடவுளின் பிரசன்னத்தைப் பறைசாற்றும் சிறந்த வழிகளாக ஆயின.
எனது தன்னல எல்லைகளைத் தாண்டி பகுத்தறிவிற்குட்பட்ட ஆபத்துகளையும், அறைகூவல்களையும் எவ்வளவு அதிகமாக எதிர்கொள்கிறேனோ அந்த அளவு கடவுள் தந்த திறன்களையும், ஆற்றல்களையும், திறமைகளையும் நான் சிறப்பாகப் பயன்படுத்துகிறேன் என்றும் கற்றுக்கொண்டேன். மேலும், அச்சம் ஒரு பெரிய தடைக்கல் என்று புரிந்துகொண்டேன். ஏனென்றால், அது என் மேலேயே எனக்கு ஐயத்தைக் கொடுத்து, என் தன்னம்பிக்கைக்குக் குழி தோண்டுகிறது. எனவே, அச்சம் என்ற மனநிலைக்கு ஆளாகி விடக்கூடாது என்று உறுதியெடுத்தேன்.
கார் ஓட்டுதல், வயல்களில் நடத்தல், தரையைக் கூட்டிப் பெருக்குதல், துணி துவைத்தல் என்று நான் வேலையில் மூழ்கிவிட்ட அடுத்த நிமிடம் என்னில் தன்னம்பிக்கையும், மன உறுதியும், தீர்மானமும் பெருகுவதைக் கண்டேன்.
தெய்வீகத் திருவுளத்திற்கு இயல்பாகி, வலியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய ஆற்றலுள்ள அவரிடம் நம்பிக்கை கொள்ளவும் அழைக்கப்படுகிறேன்; ஒவ்வொரு நாளும் தரப்படுகிற வழியில் வாழ்க்கையை ஏற்கவும் அழைக்கப்படுகிறேன் என்பது நான் கற்ற மற்றொரு பாடம். எனக்கு வேண்டுவதெல்லாம் உடனே எப்போதும் கிடைக்காது என்று எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.
கால மேலாண்மையில் நான் எவ்வளவு திறமையுள்ளவனாக இருந்தாலும், வருங்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பதில் எவ்வளவு வல்லமை பெற்றிருந்தாலும் காலம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்று எனக்குக் கற்றுத் தந்தது. எனவே, நான் உள் அமைதி கொள்ளவும், இப்போதில் ஒரு நாள் வாழ்வை ஒரு நேரத்தில் வாழவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
நோய், வலி, துன்பம் ஆகியவை எல்லாம் கடவுளின் சாபம் என்ற உலகக் கண்ணோட்டமுள்ளோர் மத்தியில் விசுவாசிகள் எப்படி நடந்துகொள்வது? எசாயா இறைவாக்கினரோடு சேர்ந்து நாமும் “படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது; அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர், செயல்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்” (28:29) என்று உறுதி கூறலாமா?
கடவுள் நமது வாழ்க்கையின் முழுமையான ஒரு பகுதியாக இருக்கிறார் என்று நம்ப நமது விசுவாசம் நம்மை அழைக்கிறது; நமக்கு அறைகூவல் விடுக்கிறது. அப்படியானால், அதில் வலியும், துன்பமும், துயரமும் அடங்கும். இந்த நிகழ்வின் மூலம் எனக்குக் கடவுள் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்று நம்பத் தொடங்கினேன். இந்த நம்பிக்கை எனது பதற்றம், எரிச்சல், மன அழுத்த மனநிலைகளைக் குறைத்து, எனது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றியது.
இவ்வாறு இந்த அனுபவங்கள் ஒவ்வொரு நாளும் என்னை வலுப்படுத்தின. “அனைத்திலும் நல்லதே நடக்கும், எல்லாம் நல்லதாகவே இருக்கும், எல்லாச் செயலும் நல்லதாகவே இருக்கும்” (நார் விச்சின் அன்னை ஜூலியனின் நம்பிக்கை) என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
“நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள்
அதனிலும் குறைவாக நினைப்பது
ஓர் ஆறு தனக்குப் பல வளைவுகள்
இருக்கின்றன என்பதால்தான்
மிக மெதுவாக ஓடுகிறது என்றும்
தன் அருவிகள் மிக வேகம் என்றும்
எண்ணுவது போலப் பொருளற்றது.
தொடக்கமும் நடுவும் முடிவுமற்ற பயணத்தில்
நீங்கள் இருக்கிறீர்கள்.
தவறான திருப்பங்கள் இல்லை
நீங்கள்தான் இருக்கிறீர்கள்;
உங்கள் வேலை நீங்கள் நீங்களாக இருப்பதுதான்.” - ஜென் சின்செரு.
Comment