No icon

தலையங்கம்

ஒரு குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

கோட்சேவின் வாரிசுகளும் கோல்வால்கரின் கோஷ்டிகளும் புல்புல் சாவர்க்கரின் சகாக்களும் சுதந்திர இந்தியாவில் எப்பாடு பட்டாவது வேரூன்றிவிட வேண்டும் என்று முக்கால் நூற்றாண்டு காலமாக மூக்கால் தண்ணீரை முக்கி முக்கி குடித்து, பசுவளைய மாநிலங்களில் சனாதனம் பரப்பி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, வட கிழக்கு இந்தியாவில் தலையை வைத்து, தென் இந்தியாவில் கால்களை நீட்டத் தொடங்கி, மெல்ல மெல்ல இந்தியாவை கபளீகரம் செய்து வருகின்றனர்.

காந்தியில்லா பாரதம்அவர்களின் கனவு என்பதால்காங்கிரசில்லா பாரதம்என்று நீட்டி முழக்கி, ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே மதம் என்று ஓர்மையை நோக்கி இந்தியாவை நகர்த்துகின்றனர். ஆர்எஸ்எஸ் நாக்பூர் தலைமையின் கீழ் பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்தும் மறைந்தும் இந்துத்துவத்தின் சனாதனத்தின் கொள்கைகளைப் பரப்பி வருகின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்குப் போட்டியாக இந்துத்துவ தீவிரவாதத்தை வளர்க்கின்றனர். சௌக்கிதார்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர். குடுமிகளின் பிடியில் சிக்குண்டு சிதைந்து இடைநிலை சாதிகள், இந்துத்துவத்தின் எடுபிடிகளாக வட இந்திய மாநிலங்களில் சேவகம் செய்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் தன் இந்துத்துவ நாசிச, பாசிச வேலைகளை படுஜோராக நிறைவேற்றி வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் நரைப்பருவம் எய்திய கிழவர்கள் வரை எல்லாரையும் வெறியூட்டி ஆசைக்காட்டி மதத் தீவிரவாதம் வளர்க்கின்றனர்.

தாங்கள் தங்கள் வீட்டில் குண்டு வைத்து விட்டு, தங்களைத் தாங்களே வெட்டிக்கொண்டு, முஸ்லீம்கள்தான் தாக்கினார்கள் என்று நாடகம் நடிப்பதில் கில்லாடிகள். தங்களுக்கு உயர் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடித்து, மாட்டிக்கொண்ட இந்துத்துவ தலைவர்கள் ஏராளம்.

அப்படி ஆர்எஸ்எஸ் பாசறையில் சேர்ந்து, 1999 முதல் கோவாவில் முழு நேர விஎச்பி ஊழியராக இந்துத்துவ வெறிகொண்டு வளர்ந்தவர்தான் யஷ்வந்த் சிண்டே. தற்போது வயது 49. விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளுடன் கோவாவில் அன்றாடம் தொடர்பில் இருந்தவர். ஓர் ஆர்எஸ்எஸ் வெறியர்.

ஏப்ரல் 04, 2006 ஆம் ஆண்டு நள்ளிரவு மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சிலருடைய வீடுகளில் வெடிகுண்டு வெடித்தது. 2003 இல் பர்பானி பகுதியில் உள்ள மசூதி, 2004 இல் பூர்ணா பகுதியில் உள்ள மசூதி ஆகியவற்றின்மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மராத்வாடா பகுதியில் மூன்று குண்டுவெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்துவிட்டது. நான்டேட் குண்டுவெடிப்பு வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்தது. பின்னர் இது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் ஊழியரான லஷ்மன் ராஜ்கோந்த்வார் வீட்டில் மகன் நரேஷ் மற்றும் விஎச்பி ஊழியர் ஹிமான்சு பான்சே ஆகியோர் வெடிகுண்டை சேகரிக்கும் போது வெடித்து இறந்தனர். இது தற்செயலாக நடைபெற்ற குண்டுவெடிப்பு என்று சிபிஐ சான்று அளித்தது.

யஷ்வந்த் சிண்டேவுக்கு ஹிமான்சு பான்சேவை நன்றாகத் தெரியும். பான்சேவும் அவர்தம் ஏழு நண்பர்களும் ஜம்முவில் ஆயுதப் பயிற்சிப் பெற ஒப்புக்கொண்டனர்; இதனால் இவர்களுக்கு இந்தப் பயிற்சியை இந்திய இராணுவத்தினரே அளித்தனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.

இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக இல்லாத யஷ்வந்த் சிண்டே தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டியது.

இவரது வழக்கறிஞர் சங்கமேஷ்வர் டெல்மேட், சிண்டேவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள காரணத்தினாலும் அமைதியாக இருக்க அவரது மனசாட்சி அனுமதிக்காத காரணத்தினாலும் இந்த வாக்குமூலம் அளிப்பதாக கூறினார். தம் 18 ஆம் வயதில் ஆர்எஸ்எஸ் சேர்ந்த இவர், 1995 ஆம் ஆண்டு ஜம்முவில் உள்ள ரஜோரிக்குச் சென்று முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தாக்கி, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் இவரை விடுவித்தது. இச்சம்பவத்திற்கு பிறகு அவர் பிரசாரக்-ஆக நியமிக்கப்பட்டு பயிற்சிப் பெற்றார். 1999-ல் மும்பை பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்படி தன் வரலாற்றை வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்ட ஷிண்டே மாலேகான் குண்டுவெடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டு, அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் உட்பட மூன்றுபேர் புனே அருகில் உள்ள சிங்ககாட்டில் ஆயுதப் பயிற்சி மற்றும் வெடிகுண்டு தயாரிப்புப் பயிற்சி பெற்றனர் என்றும் வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டுகிறார். 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள்தான் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளாகும். இதனைத் தொடர்ந்து பர்பானி குண்டுவெடிப்பிலும் ஜல்னா மசூதி குண்டுவெடிப்பிலும் நான்டேட் சம்பவத்தின் அதே செயல்முறையை பின்பற்றியதாக கூறுகிறார்.

இந்தக் குற்றவாளியின் சுய விருப்ப வாக்கு மூலத்தின் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பாசிச சங்க் பரிவார அமைப்புகளின் பயங்கரவாத சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. இதனை ஊடகங்கள் விவாதித்து மக்களிடம் கொண்டு செல்லாமல் மௌனிக்க செய்துவிட்டன.

தங்களின் தீவிரவாதத்தின் மூலமும் வெடிகுண்டு கலாச்சாரத்தின் மூலமும் மதக் கலவரத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி, பழியை மதச் சிறுபான்மையினர்மீது சுமத்தி, தங்களின் அரசியல் வாக்கு வங்கியை பலப்படுத்தி, இந்துத்துவத்தின் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை நிர்மாணித்து, இந்தியாவை ஒழித்து பாரதத்தைக் கட்டமைக்க சதி செய்வது ஊர்ஜிதமாகியுள்ளது.

ஒரு குற்றவாளியே தன் சதித்திட்டத்தையும் சதிகாரர்களின் பங்கேற்பையும் ஒப்புக்கொள்வது இந்திய நீதித்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தாடி வைத்தவரையும் குல்லா அணிந்தவரையும் குரோத மனப்பான்மையுடன் பார்க்கும் காலம் ஓய்ந்து, அவர்களைப் போல வேஷம் போடும் சங்க் பரிவாரக் கூட்டத்தை அடையாளம் கண்டு களைய வேண்டிய கலிகாலம் நெருங்கிவிட்டது.

நீர்த்துப் போய்க்கொண்டிருக்கும் இந்திய ஜனநாயக நெருப்பு, குற்றவாளி யஷ்வந்த் ஷிண்டேயின் தன் விருப்ப வாக்குமூலத்திற்கு பிறகும் இந்துத்துவ தீவிரவாதத்தைச் சுட்டுப் பொசுக்காவிட்டால் இந்தியக் காடு வெந்து தணியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஆர்எஸ்எஸ்- நான்காவது முறையாக தடைசெய்து காவி பயங்கரவாதத்தை கலையாவிட்டால் இந்தியா கலைந்துபோகும் நாள் வெகுதொலைவில் இல்லை. காந்தி கொல்லப்பட்டபோதும், அவசர நிலை அமலின்போதும், 1992 பாபர் மசூதி இடிப்பின்போதும் இவ்வியக்கம் தடைசெய்யப்பட்டது.

 நாடு முழுவதும் எழுபதாயிரம் கிளைகள், தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் கிளைகள் உள்ள ஆர்எஸ்எஸ், சமுதாயப் பணி என்ற போர்வையில் சமூகச் சீர்கேடாக மாறியுள்ளது. அரசுத்துறைகளில் அனைத்து நிலைகளிலும் வேரூன்றியுள்ள இவ்வமைப்பின் உறுப்பினர்கள் மனுதர்மத்தின்படி, சனாதனத்தின் படி நாட்டை வழிநடத்த தயாராகவே உள்ளனர். இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அப்புறப்படுத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் இவர்கள், மதப் பெரும்பான்மை வாதத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். நாசிச பாசிச கொள்கைகளில் வேரூன்றி நாட்டைத் துண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

குற்றவாளிகளின் கூடாரமாக, ஊழல்வாதிகளின் புகலிடமாக, பாஜக அமைகிறது. தமிழக பாஜகவில் சேர்ந்தவர்களின் பட்டியலைப் பார்த்தாலே உண்மை புரியும். ஜம்மு காஷ்மீரில் ஜூலை 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட, தேடப்படும் பயங்கரவாதி மற்றும் லஷ்கர் தொய்பா கமாண்டர் - பாஜகவின் பொறுப்பாளர் தலிப் ஹூசைன் ஓர் உதாரணம் மட்டுமே. ஜிகாதி போக்கு எவ்வளவு மோசமானதோ அவ்வளவு மோசமானது இந்துத்துவ போக்கு. இந்து தீவிரவாதத்தின் இந்தக் குற்றவாளியின் சுய விருப்ப ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்திய நீதித்துறை ஆய்ந்து அறிந்து உரிய நீதி வழங்கி சனாதன பாசிச இந்துத்துவத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்பதே நம் அவா. எங்கள் தேசப்பிதா மகாத்மா காந்தி சிந்திய இரத்தம் இன்னும் எங்கள் இதயங்களில் காயவில்லை. அது காலத்திற்கும் ஆபேலின் இரத்தத்தைப்போல நீதி கேட்கும். மறவாதீர்.

Comment