No icon

நொறுங்கும் போலிப் பிம்பங்கள்!

போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்!’ - தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வரும் விளம்பர வசனம் இது. போலிகள் ஏமாற்றக்கூடியவை என்பதுதான் இக்கூற்று தரும் செய்தி. போலிகள் நேர்த்தியானது போலத் தோன்றும்; ஆனால், உண்மையில் அதுவல்ல அதன் தரம். அவை கவர்ந்திழுக்கக்கூடியவை; காட்சிப்படுத்தும்போது உண்மைக்கு இணையாகத் தோன்றும் பொய்மை அது. நிஜம் வேறு; நிழல் வேறு. பல வேளைகளில் காகிதப்பூக்கள் இயற்கையான பூக்களைவிட நேர்த்தியாகத் தோன்றும், ஆயினும், போலிகள் உண்மையானவை அல்ல; நிரந்தரமானவைகளும் அல்ல! அவை வான வீதியில் சற்றே வர்ணம் காட்டி, வலம் வந்து மறையும் வானவில் போன்றவை. இவைகளின்இருத்தல்சில மணித்துளிகளே!

போலிகளை உண்மையென அடையாளப்படுத்துவதற்கும், அறிமுகப்படுத்துவதற்கும் விளம்பரங்கள் கைகொடுக்கும். உண்மை மறைக்கப்பட்டுப் பொய்மை பரப்பப்படும். பொய்மையேஉண்மைஎனக் கட்டமைக்கப்படும். திரும்பும் இடமெல்லாம் திரண்டிருக்கும் கூட்டமாக, வார்த்தைக்கு வார்த்தை விண் அதிரும் கரவொலியாக, பார்க்குமிடமெல்லாம் பளபளவென சுவரொட்டிகளாக, செல்லும் திசையெங்கும்வாழ்க! வாழ்க!’ எனும் புகழ் கீதங்களாக, தொலைக்காட்சிகளில் அன்றாட தரிசனமாக, வார இதழ்களில் வண்ணப் படங்களாக, நாளிதழ்களில் நாள்தோறும் செய்திகளாக (வர்)வைகளுக்கு விளம்பரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் இதில் விதிவிலக்கல்ல.

விளம்பர வெளிச்சத்தில் ஈரைந்து ஆண்டுகளாகத் தனி மனித ஆளுமையின்கீழ் கட்டமைக்கப்பட்ட பா...வின் விளம்பர வெளிச்சம் தற்போது மங்கிப்போனது என்பதே கள நிலவரம். எனவே, இத்தேர்தலுக்காக ‘2047-இல் வல்லரசாகும் இந்தியாஎனப் பா...வால் புதிய மாயைக் கட்டமைக்கப்படுகிறது. ஆகவே, சனநாயகத்தை, இந்திய அரசியலமைப்பின் தனித்துவத்தை மீட்டெடுக்க வேண்டுமெனப் போராடும்இந்தியாகூட்டணிக்கும், மூன்றாம் முறையும் மத்தியில் மதவாத ஆட்சி அமைக்கத் துடிக்கும் பா...விற்குமிடையே நடக்கும் தேர்தல் யுத்தம் இது! யுத்தத்தில் வெற்றிபெற கொள்கைகள் சத்தமின்றிச் சமரசமாகிப் போயின. ‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லைஎன்பதற்குப் பல நிகழ்வுகள் அண்மையில் நடந்தேறியிருக்கின்றன. அரசியல் இலாபத்திற்காக இவர்களால் மட்டும் எப்படி மீண்டும் சேர்ந்து சிரிக்க முடிகிறது? என்பது புரியாத புதிர். மாறி மாறி வசைபாடியவர்கள் இப்போது ஒருவரையொருவர் ஆரத்தழுவி அணைத்துக் கொள்வது விளங்க முடியாத வியப்பு.

சனவரி மாதம் நடைபெற்ற இராமர் கோவில் திறப்பு விழா பா...விற்கு 2024-தேர்தல் வெற்றிக்குப் பெரிதும் கை கொடுக்கும் என்று பலரும் கணித்திருந்ததால், பா... பெரும் வெற்றிக் கனவில் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் தந்த அடுத்தடுத்த தீர்ப்புகள், உத்தரவுகள், விவசாயப் போராட் டம், வேலைவாய்ப்பின்மை, சரிந்து வரும் பொருளாதார நிலை... இவற்றால் எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் ஆகியவை பா...வைக் கதிகலங்க வைத்திருக்கின்றன. இவையனைத்துமே பா...விற்குப் பெரும் பயத்தை உண்டாக்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் உத்தரகாண்டில் யூ.சி.சி., நாடு முழுவதும் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட சி..., காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் கைது செய்யப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகள். “எதிர்க்கட்சிகளின்இந்தியாகூட்டணியைக் கண்டு ஆளும் பா... பதறுகிறது. பயந்து நடுங்கும் அக்கட்சியின் சர்வாதிகாரி, சனநாயகத்தைக் கொல்லப் பார்க்கிறார்என்கிறார் இராகுல் காந்தி.

தோல்வி பயத்தாலும், தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானதைத் திசைதிருப்பவுமே தெலுங்கானா கவிதா, கெஜ்ரிவால் என்று அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளைப் பா... தொடர்வதாக நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், “பா...-விற்கு எந்தப் பயமுமில்லை... 400 இடங்களில் நாங்கள் வெல்லப்போவது உறுதிஎன்று டெல்லியில் முழங்கியது, தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது.

ஆளும் ஒன்றிய பா... அரசின்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், எதுவுமே நடக்காதது போன்று, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒன்றிய முதன்மை அமைச்சர்ரோடு ஷோநடத்துகிறார். தென்னிந்திய மாநிலங்களில்இந்தியாகூட்டணி வலுவாக உள்ளது; வெற்றிபெறும் வாய்ப்பு பெரும் சாத்தியமாக இருக்கிறது என உளவுப் பிரிவு அறிக்கை அளித்திருப்பதால் பதறிப்போன பா... தென் பகுதிமீது தனது கவனத்தைச் செலுத்துகிறது. ‘கூட்டப்பட்ட கூட்டங்களைக்கண்டு மகிழும் பிரதமரோ, பா...விற்குத் தென்னிந்தியாவில் வரவேற்பு அதிகரித்திருப்பதாக மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார். பாவம், தானும் ஏமாந்து, நம்மையும் ஏமாற்றத் துடிக்கிறார் அல்லது நடிக்கிறார்.

தமிழ்நாடு (39), கர்நாடகா (28), ஆந்திரா (25), கேரளா (20), தெலுங்கானா (17), புதுச்சேரி, அந்தமான், இலட்சத்தீவு தலா ஒரு தொகுதி என, தென்னிந்திய மாநிலங்களில்இந்தியாகூட்டணியின் வெற்றிக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பா...வின், அதன் கூட்டணிக் கட்சிகளின் கொள்கை முரண்பாடுகளையும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் அரசியலையும், குதிரைபேர அரசியலையும், ஆட்சியமைக்கக்  கட்சிகளை உடைக்கும் நரித்தந்திர அரசியலையும், தோல்விக்குப் பயந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தாமாக விலகிக்கொள்ளும் வேடிக்கை அரசியலையும் மக்கள் உற்று நோக்கிக் கொண்டேதான் இருக்கின்றனர். நிறைவேற்றப்படாத திட்டங்கள், கறுப்புப் பண ஒழிப்பு, இளையோருக்கு வேலைவாய்ப்பு என்பன போன்ற காற்றில் பறந்த வாக்குறுதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள், அவர்களை ஒடுக்கும் திட்டங்கள் என யாவற்றையும் மக்கள் தெளிவாகவே அறிந்திருக்கின்றனர்.

2004-இல்இந்தியா ஒளிர்கிறதுஎன்று பொய்ப் பிரச்சாரம் அன்றைய வாஜ்பாய் அரசால் கட்டமைக்கப்பட்டு நாடு முழுக்க அரங்கேற்றப்பட்டது. ஆனால், மக்கள் அதைப் புறந்தள்ளினர். அப்பிரச்சாரத்தின் நீட்சியாக 2014-இல் இந்த நாட்டை மீட்க வந்த மீட்பராக மோடி நம்மிடம் கட்டமைக்கப்பட்டார். கெடுவாய்ப்பாக, மக்கள் அதை நம்பினர். 2019-இல் மோடி ஏழைத்தாயின் மகனாக  ‘சௌக்கீதாரராக’ (காப்பவர்) அடையாளப்படுத்தப்பட்டார். இரண்டாவது முறையும் மக்கள் அதை ஏற்றனர். அந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு பிம்பம் சங்கப் பரிவாரங்களால் நம்மீது இந்த 2024 தேர்தலிலும் கட்டமைக்கப்படுகிறது. ‘இந்தியா - 2047 வல்லரசு கனவுஎன்ற கற்பனையை உண்மைபோல் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், “இந்த முறை மதவாத சக்திகளுக்கு இடம் அளித்துவிடக்கூடாது; மத்தியில் மீண்டும் பா... ஆட்சிக்கு வந்து விடக்கூடாதுஎன்ற ஒற்றைப்புள்ளியில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து விட்டன.

விரைவில் இந்தியா வல்லரசாகப் போகிறது’, ‘நாடு வளர்ச்சி கண்டிருக்கிறது’, ‘எல்லாருக்குமான அரசு இது’, ‘மக்கள் மனத்தில் அரியணை போட்டு அமர்ந்திருக்கும் பிரதமர் இவர்போன்ற மாயைகளை ஊடகங்களில் இவர்களே கட்டியெழுப்பி, அதன் உச்சமாக ‘400 தொகுதிகளில் வெற்றி உறுதிஎன்று முடிவுரையும் எழுதி வருகின்றனர். அதை நாம் நம்பச் சொல்கின்றனர். ஆனால், கள நிலவரமோ வேறு.

வடக்கிலிருந்து வரும் செய்திகள்பரிவாரங்களைப்புறமுதுகிட்டோடச் செய்யும் மனநிலையில் வட மாநில மக்கள் உள்ளார்கள் என்பதை உரக்கச் சொல்கின்றன. ‘மந்திர்மாயையிலிருந்து மக்கள் விடுபட்டு விட்டனர்.

கடந்த காலத் தேர்தல்களிலிருந்து இத்தேர்தல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. மக்கள் இன்று தெளிந்த சிந்தனை கொண்டிருக்கின்றனர். கட்சி சின்னத்தைப் பார்த்து வாக்களித்த தலைமுறை காலாவதியாகி விட்டது. கற்றறிந்த இளைய சமூகமும், புதுமுக வாக்காளர்களும் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர். மதம், மொழி, இனம் தாண்டி சிந்திக்கின்றனர். இச்சூழலில், இளையோரின் பங்கு பெரிது. நம்மைக் காரிருளில் தள்ளும் நாசகாரச் சக்திகளுக்கு எதிராக அவர்கள் திரண்டெழ வேண்டும்; பொய்மைகளையும், போலிகளையும் உடைத் தெறிந்து, புதிய இந்தியாவை - நவீன இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும். பல்வேறு துறைகளில் தடம் பதித்தாலும் அத்துணை துறைகளையும் இயக்கும்அரசமைப்புஎனும் இயந்திரத்தை இயக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற ஆளுமைகளாக இளையோர் உருவாக வேண்டும். ஆகவேதான் இளையோர் விழிப்படைந்து அரசியல் பணிக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இங்கு நான் மீண்டும் மீண்டுமாக வலியுறுத்துகிறேன்.

இளைஞர்களே, கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டில் என்ன நடக்கிறது என்றே அறியாமல், மயக்கத்தில் நீங்கள் உறங்கிக் கிடந்தது போதும்; வீறுகொண்டு எழ வேண்டிய நேரமிது. இம்முறை, இத்தேர்தல் நேரத்திலேனும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், இந்த நாடு ஒருபோதும் நமக்கில்லை என்றாகி விடும்! எனவே, உங்கள் ஆக்க சக்தியானது, கட்டமைக்கப்பட்டுள்ள போலிகளைத் தகர்த்தெறியட்டும். இன்றே, இப்போதே துணிவுடன் புறப்படுங்கள்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment