நவம்பர் 08
தமிழ்த் தொண்டர் கொண்டாடப்பட வேண்டிய வீரமாமுனிவர்
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை
தஞ்சாவூரில் (1684-1712) இரண்டாவது மராட்டிய ஆட்சியாளர் ஷாஹாஜி முதலாவது போன்ஸ்லே என்னும் ஷாஹாஜி ஆவான். அவன் போன்ஸ்லே வம்சத்தவர். அவர் கிறித்தவர்களுக்கு எதிரி, அவனது ஆட்சியின் கீழ் வாழ்ந்த கிறித்தவர்களைத் துன்புறுத்தி, வேதனையில் ஆழ்த்தினான். ஜோசப் கர்வாலோஅடிகளாரைச் சிறையிலிட்டான். தூக்கிலிட்டுச் சாகடித்தான். கிறித்தவ மதம் தழுவியவர்கள் தஞ்சை அரசாட்சியை வரவேற்றனர். ஏலாக்குறிச்சி ஜமீன்தார்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்கு வரிசெலுத்தி வந்தனர். அது அரியலூர் சிற்றரசின் கீழ் இருந்தது. ஏலாக்குறிச்சிப் பகுதியை மழவராயர் மன்னர் ஆண்டுவந்தார்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்க்கும், சோழ அரசர்களுக்கும் மோதல் நிகழ்ந்தது. அவர்கள் மராட்டிய மன்னர்களது அரசாட்சியின் கீழ் இருந்தனர். திருச்சிராப்பள்ளியையும், மதுரையையும் ராணி மங்கம்மாளின் மகன் அரசாட்சி செய்து வந்தான். ஆனால், அவர்களும் மராட்டிய அரசாளுகைக்கீழ் இருந்துவந்தனர்.
கிழவன் சேதுபதியால் ஜான் தெ பிரிட்டோ அடிகளார் தலைவெட்டப்பட்டு, தண்டனை பெற்றார். கிழவன் சேதுபதி இறந்த பிறகு, அவனுடைய தங்கை உடைச்சி அரசாட்சி செய்தாள். தஞ்சையை மராட்டிய மன்னன் ஷாஹாஜி அரசாண்டான். வேலூரை நவாபுபகர் அலிகான் அரசாண்டான். ஜமீன்தார்கள் சிலர் வேறுசில பகுதிகளில் வன்முறையுடனும், ஆணவத்துடனும் ஆட்சிபுரிந்தனர். இந்த இடங்களைத் தங்கள் வசப்படுத்தத் தக்க தருணத்தை ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எதிர்பார்த்திருந்தனர். இதுதான் 1710 ஆம் ஆண்டுக்காலத்து தமிழ்நாட்டு அரசியல் சூழல். பெஸ்கி அடிகளார் தமிழ்நாட்டிலிருந்த மதுரைமறைத்தூதுப் பணித்தளத்துக்கு வந்து சேர்ந்தார்.
தனக்கான நேரங்களைக் குருக்கள்பட்டியிலும் காம நாயக்கன்பட்டியிலும், கயத்தாரிலும் அவர் செலவிட்டார். 1710 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அய்யம்பட்டிக்குச் செல்லுமாறு அழைப்புப் பெற்றார். அய்யம்பட்டிக் கிறித்தவர்கள் நடுவே ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குமுதல் பங்கு குருவாகப் பெஸ்கி அடிகளார் நியமிக்கப்பட்டார். இத்துடன் கடலைக் கருப்பூர் என்னும் பங்குடன் இணைந்த பகுதியையும் கவனித்து வந்தார்.
காமநாயக்கன்பட்டியில் மறைத்தூதுப்பணி ஆற்றி வந்த நோயல் பொளரெசெஸ்க்கு மாற்றாகப் பெஸ்கி அடிகளார் நியமிக்கப்பட்டார். காமநாயக்கன்பட்டியில் சில ஆண்டுகள் அவர் பணியாற்றிய பிறகு, 1716 ஆம் ஆண்டு ஏலாக்குறிச்சியை வந்தடைந்தார். அங்கிருந்தவாறு வடக்கு ஐயலூர் முதல் தெற்கு மணப்பாறை வரையிலும் கிறித்தவர்கள் இருந்த வேறு பகுதிகளிலும் அவர் பணியாற்றினார். ஆவூர், வடுகர்பேட்டை, புரத்தாகுடி ஆகிய ஊர்கள் 1716 முதல் 1742 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்திருந்தன.
அன்னை மரியா மீது முனிவர் கொண்ட அன்பு
வடக்குப் பகுதியில் சோழ அரசாட்சியின்கீழ் இருந்த தஞ்சாவூர் பகுதியில் கிறித்தவம் வேரூன்றியிருந்தது. அங்கிருந்த கிறித்தவர்கள் ஏலாக்குறிச்சிக்கு வருமாறு அழைப்புப் பெற்றனர். ஏலாக்குறிச்சி ஆலயத்திலிருந்த அடைக்கல நாயகி அனைத்து மக்களுக்கும் அடைக்கலம் அருளுபவள் ஆனாள். ஏலாக்குறிச்சி பின்னர் திருக்காவலூர் (திரு - புனித, காவலூர் - அடைக்கலம் அருளும் தலம்) என்று காரணப் பெயராக மாற்றம் பெற்றது. தஞ்சாவூர்க் கிறித்தவர்களும், தரங்கம்பாடிச் சீர்த்திருத்தக் கிறித்தவ சபையில் சேர்ந்திருந்தவர்களும் திரும்பிவந்துசேர்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் அடைக்கல அன்னை பாதுகாப்பு அருளினாள். தஞ்சாவூர் மன்னன் கிறித்தவர்கள் அனைவரையுமே துன்புறுத்தி வதைத்தான். இவ்வாறு, இன்னலுக்கு இலக்கான மக்களுக்கு நம் அடைக்கல அன்னை அடைக்கலம் அருளினாள்.
நம்பிக்கையில் மக்களை உறுதியுடன் வாழ வழி செய்தார்
திருக்காவலூரில் 1716-1720க்கு இடையில் முதல் ஆலயம் கட்டப்பட்டது. நம் அடைக்கல நாயகியின் பாதுகாப்பை அனுபவிக்கக் கத்தோலிக்க மக்கள் நாடித் தேடி வந்தனர். 50 மைல் தூரத்திலிருந்தும், திருக்காவலூர்த் தாயைத் தரிசிக்கப் பக்தர்கள் வந்தனர். அந்த மக்கள் அனைவருக்கும் தந்தையாக, தாயாக, தோழனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார் பெஸ்கி அடிகளார். ஆண்டவர் தனக்கு எத்தனை மக்களைத் தந்தார் என்பதை அடிகளார் அறியார். ஏற்கனவே திருமுழுக்குப் பெற்ற கிறித்தவர்களை அவர் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். அவரிடம் திருமுழுக்குப் பெற்றவர்கள் எவர் என்றாலும், அவர்கள் மீது சிறப்பு ஈடுபாடு செலுத்தினார். கிறித்தவ நம்பிக்கையில் வேரூன்றுமாறு அவர்களை வலுப்படுத்தினார்.
மக்கள் மனமாற உதவி செய்தார்
கத்தோலிக்கர்களாக இருந்தவர்கள் விட்டுவிலகிச் சென்று இருந்தாலும், பகைமை பாராட்டாமல், அரவணைத்துப் பேணினார். அவர்களை மீண்டும் கொண்டுவந்து சேர்க்க ஏதுவாக திருத்தந்தையிடம் நம் அடைக்கல நாயகி விழாவை நிறுவி, 1733 இல் கொண்டாட இசைவும் பெற்றார். கத்தோலிக்கச் சமயத்தை விட்டு நீங்கியவர்கள் திரும்பிவந்து, விழாவில் பங்கேற்று ஒன்று சேர்ந்தனர். அந்நிகழ்வு அவருக்கே ஆச்சரியத்தை அளித்தது. கிறித்தவர்களது சாட்சியங்களைக் கண்டபோது, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இவ்வாறாக, அவருக்கு அதிக வேலைகள் அதிகரித்தன. மக்கள் திருயாத்திரிகர்களாக வரத் தொடங்கினர். அவரது பணி கடுமையாகவே தொடர்ந்தது. ஆனால், நம் அடைக்கல நாயகியின் பாதுகாப்பை அவர் எப்போதும் நாடினார்.
சந்தா சாகிபு என்னும் நவாபுடன் பெஸ்கி அடிகளார் நெருக்கமான நல்லுறவு கொண்டிருந்ததாகக் கதை ஒன்று உண்டு. அந்த நவாபு பெஸ்கி அடிகளாருக்குப் பொருளுதவி வழங்கினார். கத்தோலிக்கர்களுக்கு அவர் பாதுகாப்புத் தந்தார். ஆலயங்களைப் பத்திரமாகக் காத்து உதவினார்.
முனிவரின் செபத்தால் புதுமை
திருக்காவலூர் ஒரு சிற்றூர். அங்கே ஒரு சிற்றாலயமும், தங்கும் இல்லமும் 1735 வரை முனிவருக்கு இருந்தன. அந்த வேளையில், அரியலூர் அரசர் விஜயலிங்கப்பா என்கிற மாமன்னர் மழவராயர் நயினார், முதுகில் தோன்றிய பிளவை நோயால் 10 ஆண்டுகள் துன்புற்று, உறக்கமின்றி உடல் நலிந்து வந்தார். அரச மருத்துவர்களால் அவரைக் குணமாக்க முடியவில்லை. அவர் ஏழை எளியோருக்குத் தமது தெய்வீக ஆற்றலால் குணமாக்கும் உதவிசெய்து வந்ததைக் கேள்வியுற்றார். அரசர் அடிகளாரைக் காணவந்தார். நம் அடைக்கல நாயகி மூலம் இயேசுவின் அருள்வேண்டிப் பெஸ்கி அடிகளார் அரசரது நோயைக் குணமாக்கினார். மருத்துவம் பற்றிய சிற்றறிவு பெற்றிருந்தாலும், பெஸ்கி அடிகளாருக்கு அரசரது நாள்பட்ட நோயைக் குணமாக்குவது எப்படியென்று தெரியவில்லை. அடைக்கல நாயகி அன்னை மரியா முன்பு முழங்காலில் நின்று, கண்ணீருடன் செபித்து, மன்னர் மழவராயரது பிணி தீர்த்தார் முனிவர். மேலும், ஆலயம் அருகிலிருந்த குளக்கரைக்குச் சென்றார். சிறிது மண்ணை எடுத்து வந்தார். மன்னரது முதுகுப்பிளவைப் புண்மீது தூவினார். அடைக்கல நாயகியின் பரிந்துரையினாலும், அருளாலும் அரசர் குணமடைந்தார். அவரது முதுகுப் பிளவைக் கொப்புளங்கள் உடைந்து சீழ் அனைத்தும் வெளிப்பட்டன. அந்த இரவு அரசர் அமைதியாக ஆழ்நிலை உறக்கம் கொண்டார்.
முனிவர் அன்னை மரியாமீது கொண்ட அன்பால் அன்னை மரியாவின் பரிந்துரை
காலையில் எழுந்ததும் தான் குணமடைந்ததை உணர்ந்தார். அரசருடைய அலுவல் ஆள்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அரசாளுகை ஆட்சிப்பரப்பு முழுவதிலும் அரசர் குணமடைந்த செய்தி காட்டுத்தீப்போல் பரவியது. அரசர் பெஸ்கி அடிகளாருக்குப் பாராட்டுப் பகர்ந்தார். அரசர் அளித்த எத்தகைய நன்றிக் காணிக்கைப் பொருள்களையும் முனிவர் ஏற்கவில்லை. நம் அடைக்கல நாயகியின் குறுக்கீட்டால்தான் அவருக்குக் குணம் வாய்த்தது, குணமாக்கியவள் அடைக்கலத் தாய்தான் என்று உணர்த்தினார். நம் அடைக்கல நாயகிக்குத் தனது நன்றியறிதலாக, மழவராயர் 175 ஏக்கர் நிலத்தை திருக்காவலூர் அன்னை ஆலயத்துக்குக் கொடையாகக் கொடுத்தார். நாடு முழுவதிலும் உள்ள மக்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்றனர். இதனையறிந்த பல ஊர் மக்களும் நம் அடைக்கல நாயகியின் ஆலயத்தைத் தேடிவந்தனர்.
தமிழ் அறிஞர் பெஸ்கி அடிகளார்
பெஸ்கி அடிகளாரது திருமுழுக்குப் பெயர் கான்ஸ்டன்டைன் ஜுசப்பே பெஸ்கி என்பதே. தமிழ்நாட்டில் தைரியநாதர், ஆரியன் செந்தமிழ்த் தேசிகன் மற்றும் இஸ்மாத்தி சந்நியாசி என அழைக்கப்பெற்றார். அது முகமதிய ஆட்சியாளர் சந்தா சாகிபு வழங்கிய பெயராகும்.
அவரது தமிழ்ப் புலமை வித்தகம் பற்றி வேறுபட்ட கருத்துகள் கூறப்பெறுகின்றன. குருக்கள்பட்டியில் பெஸ்கிஅடிகளார் கைதுசெய்யப்பட்டபின்னர், அங்கிருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால் அவருக்குப் போதிய ஓய்வு கிடைத்தது. அவ்வேளையில் தமது மனம் முழுவதையும் தமிழைக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றுப் புலமையுற்று மேம்படுவதில் கவனம் செலுத்தினார். சீர்த்திருத்தக் கிறித்தவச் சமயத்தாரது ஆக்கிரமிப்புக்கு எதிராக அவரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களையும், செவ்வியல் கவிஞர்களையும் பற்றி அவர் கற்கத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு, அழகான தமிழ்ச் செய்யுள்களைச் சொந்தப் படைப்பாக இயற்றினார். இவ்வாறுதான், அவரது எதிர்காலத் திருத்தூது சார்ந்த படைப்பிலக்கிய எழுத்தாக்கங்கள் தயாராயின.
தமிழ் மொழியைக் கற்றல்
சுப்பிரதீபக் கவிராயரிடம் அவர் தமிழ் கற்றமைப்பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. பேராசிரியர் சூ. இன்னாசி, அது குறித்த வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை என்றார். வேறுபல ஆதாரங்களைத் தமது படைப்புகளில் குறிப்பிட்ட முனிவர் அதுபற்றி எழுதவில்லை. தமது ஆய்வு முடிவாகச் சுப்பிரதீபக் கவிராயர் வாழ்ந்த காலம் வேறு என்கிறார். இது குறித்து தமது முனைவர்பட்ட ஆய்வு நூலான சதுரகராதி ஆராய்ச்சியில் அடிகளும் சுப்பிரதீபக் கவிராயரும் என்னும் தலைப்பில் விரிவாக ஆராய்ந்து, தெளிவான முடிவு எழுதியுள்ளார்.
சுப்பிரமணிய தேசிகர் என்னும் மற்றொரு புலவர் மூலம் பெஸ்கி அடிகளார் தமிழ் கற்றதாகச் சிலர் கூறினர். இக்கூற்றை நிறுவ எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அந்தோணிக்குட்டி அண்ணாவியார் என்னும் கவிஞர் ஒருவர் வீரமாமுனிவரது தேம்பாவணிக் கிறித்தவக் காப்பியத்தைப் படித்துவிட்டுப் பாராட்டியுள்ளார் என்பர். இதற்கும் எவ்விதச் சான்றும் இல்லை.
தன் சகோதர அருள்பணியாளர்களிடமே தமிழ் கற்றார் எனவும் மேலும், முனிவர் கி.பி. 18 இல் வாழ்ந்த அரசவைப்புலவர் சுப்பிரமணிய தீட்சிதரிடம் தமிழ் கற்றார் என முனைவர் பா. வளன் அரசு நிறுவியுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்புகொண்டு தமிழ் கற்றார், மக்களிடமிருந்தும் கற்று மொழியறிவு பெற்றார் என்று பேராசிரியர் சூ. இன்னாசி குறிப்பிட்டுள்ளார். பின்னர், சொந்த அயரா முயற்சியால் தமிழ் மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று நிறுவ முயன்றுள்ளார்.
(தொடரும்)
Comment