No icon

மரியாவின் அழைத்தல் மற்றும் அவரின் பணி

திருவருகைக்காலமும் கன்னிமரியாவும்

இறைமகன் இயேசுகிறித்து மனுவுரு எடுத்தலின் மறைபொருளில் மரியாவின் பங்குஎன்ன? அல்லது திருவருகைக்கால வழிபாட்டில் மரியாவின் இடம் என்ன? திரு அவையின் வழிபாட்டுமுறை மனுவுடல் எடுத்தலில் மரியின் பங்கை எப்படிப் பார்க்கின்றது, நாம் எப்படி கிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயார் செய்கிறோம்?. இன்று நமக்கும் நம் மக்களுக்கும் திரு அவைக்கும் என்ன செய்தியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்று சேர்ந்து இங்கே சிந்திப்போம்.

இறைமகன் மனித உடல் எடுத்தலில் கன்னிமரியாவுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. சில நேரங்களில் மரியியலுக்கும், மரி பக்திக்கும் வேறுபாடுகள் தெரியாமல், சில புரிதலும் இல்லாமல் இருந்து வந்திருக்கின்றோம் என்பது வெட்ட வெளிச்சம்.

திரு அவையின் வரலாற்றில் மரியாவை வானளாவ உயர்த்திப் பேசியும், அன்பு காட்டியும், கொண்டாடியும் வந்தது திரு அவை. அடுத்து ஒரு சில காலக்கட்டத்தில் இவைகளைக் குறைவுபடுத்தி மரியாவுக்கு முக்கியம் கொடுக்காமலும் இருந்துள்ளது போன்ற தோற்றம் இருப்பதாக நாம் எண்ணுகின்றோம். ஆனால், மரியா திரு அவையின் மையஓட்டத்திலும் திரு அவையின் வாழ்விலும், வழிபாட்டிலும், பண்பாட்டிலும், இறையியலிலும், மானுடவியலிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றார் என்பது இறையியலை, மரியியலை, மரி பக்தியை நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும்; தெளிவாகப் புரியும்.

திருவருகைக்காலத்தில் உள்ள திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை உற்று நோக்கினோமென்றால், மரியாவைப் பற்றிய கோட்பாடுகள்: கன்னிமரியா அமல உற்பவி, கன்னித்தாய், கடவுளின் தாய், விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டவர் போன்றவை தெளிவாக வெளிப்படுகின்றன. திருவருகைக் காலம் கிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட நம்மை தயாரிக்கச் சிறப்பிடம் தருகின்றது. அதோடு, அவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்க நம்மை தயாரிக்க வழி செய்கின்றது.

மரியாவின் அழைத்தல் மற்றும் அவரின் பணியானது கிறித்துவின் மறைபொருளில் சரியாகப் பொதிந்துள்ளது. மானிட மீட்புத் திட்டத்தில் மரியாவின் ஒத்துழைப்பு நம்மை ஆன்மீக நோக்கிலும், தியானிப்பிலும் உந்து சக்தியாக இருக்கச் செய்கின்றன.

உற்றுக்கேட்கும் பெண்ணாக மரியா

மரியா உற்றுக்கேட்கும் பெண்ணாக, இறைவனுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறுகின்றவராக, இஸ்ரயேல் மக்களின் பிரதிநிதியாக, தன் வாழ்வில் ஆன்மீகத்தையும், புனிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, உற்றுக்கேட்கின்றவராக இருக்கின்றார். அவரின் இந்த உற்றுக்கேட்டல் முழுமையான ஒன்றாகும். இதனால் அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்பவராகவும், பெற்ற ஒன்றை தியானித்து, அதன் பலனை உலகுக்குக் கொண்டுவருபவராகவும் இருக்கின்றார்.

இறைவனின் வார்த்தையை நம்பிக்கையோடு கேட்கின்றவராகவும், திறந்த மனதுடனும் எப்போதும் தயார்நிலையில் இருப்பவராகவும், கடவுள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டவராகவும் இருக்கின்றார். இன்னும் சிறப்பாக, கன்னிமரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதை தன் வாழ்வில் செயல்படுத்துபவராக இருக்கின்றார். இதைத்தான் நற்செய்தியாளர் லூக்கா ‘இறைவனின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கின்றவர்கள் பேறுபெற்றவர்கள் என்று (11:27)’ குறித்துக் காட்டுகின்றார்.

கடவுளின் வார்த்தை மேலிருந்து வளர்ந்த ஒரு மனிதனாக இந்த மண்ணுக்கு வரவில்லை. கடவுள், படைப்பின் தொடக்கத்தில் ஆதாமை உருவாக்கித் தன் ஆவியை அவனுள் ஊதியது போன்றதும் அல்ல; மாறாக, காலம் நிறைவுற்றபோது, தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக இருக்க அனுப்புகின்றார் (கலா 4:4). நற்செய்தியாளர் மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலில் மரியாவுக்கு இறுதியான இடம் கொடுக்கின்றார். இங்கே, மனிதனின் முழுமை நிறைவுபடுவது கடவுள் விண்ணுக்கு எழுந்தருளியதை நாம் நினைவில் கொள்ளும் போது என்று காட்டுகின்றது.

மரியாவின் தாய்மை

மரியா கடவுளின் வார்த்தையை வானவர் கபிரியேலிடம் கேட்டு, அதை உள்வாங்கி, அதை இந்த உலகுக்காக மனுவாக பெற்றுக் கொடுக்கின்றார். இதனால் இறைமகன் இயேசுவின் மறைபொருளில் அழகாக பொருந்தி நிற்கின்றார் மரியா. ‘இதோ உம் ஊழியை உமது சொற்படி எனக்கு நிகழட்டும்’ (லூக் 1:38) என்று மரியா கூறுவது அல்லது பதில் அளிப்பது மரியாளுடைய நம்பிக்கையின் உச்சக்கட்டம். இந்த உச்சக்கட்டத்தை இறையியலாளர் ஒருவர் ஏன் மரியா ‘இதோ உமது ஊழியை உமது சொற்படியே நிகழட்டும்’ என்று அடிபணிந்தார்? என்று கேட்டு அவரே பதில் அளிக்கின்றார். மரியா அடிபணிந்ததற்கு காரணம், இறைவன் தன்னை அன்பு செய்தார் என்று நம்பினார்; அவர் தம்மை அருளால் நிரப்பினார் என்றும்; அத்தோடு தன்னை தேர்ந்தெடுத்தார் என்றும்; தனக்கு அழைப்பைக் கொடுத்து, அந்த அழைப்பில் தன்னோடு உலக மீட்புக்காக ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றார் என்றும், அத்தோடு நின்று விடாமல் இறைவன் வாக்குத் தவறாதவர் என்று மரியா உறுதியுடன் நம்பிக்கைக் கொண்டதனால் ‘உமது சொற்படி எனக்கு நிகழட்டும்’ என்று பதில் அளிக்கின்றார். இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் இதுதான் நம்பிக்கையின் உச்சம். இதுதான் நம் நம்பிக்கையின் முழுமை. இந்த நம்பிக்கையில் தான் கடவுள் மரியின் கருவில் உருவாகின்றார். இதை 17 ஆம் நூற்றாண்டில் மறைபரப்பு செய்ய வந்த இயேசு சபைத் துறவி வீரமாமுனிவர்:

உருவில்லா னுருவாகி யுலகிலொரு மகனுதிப்பக்

கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தா யாயினையே (திருக்காவலூர் கலம்பகம் 1) என்று திருக்காவலூர் கலம்பகத்தில் எழுதுவார்.

இங்கே மரியா அருளின் நிலையோடு ஒரு சுதந்திர நிலையை வரலாற்றில் காட்டுகின்றார். மரியா அருளில் நிரப்பப்படுகின்றார். இருந்தாலும், அவர் மனித நிலையில் தனது தனி மனித சுதந்திரத்தை இழக்காமல் இருக்கின்றார். இதனால் மரியா அனைத்தையும் முழுமைக்குக் கொண்டு வருகின்றார்.

மரியா தன் எளிமையான, தீர்க்கமான முடிவால் தன் முடிவையும் உலகின் முடிவையும் ஓர் இலக்கு நோக்கி கொண்டு வருகின்றார். தன் முன்பாக இருக்கும் சூழலில் இந்த இரண்டையும் மரியா தேர்ந்தெடுக்கின்றார்.

கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்வதில் மரியா, நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமை ஒத்துள்ளார். ஆபிரகாம் நம்பிக்கையுடையோரின் தந்தையாக இருக்கின்றார். ‘கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை (லூக் 1:37)’ தொநூ 18:13 இல் அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!’ என்றார் பவுல் அடிகளார். ஏனெனில், ‘எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்’ என்று, மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச்செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கைக்கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம்தந்தையானார் (உரோ 4:17), தமக்கு ஏறத்தாழ நூறு வயதாகிவிட்டதால் தமது உடலும் சாராவின் கருப்பையும் செத்தவைபோல் ஆற்றல் அற்று போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோது கூட அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை.(உரோ 4: 19) தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்யவல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார் (உரோ 4: 21). ஆபிரகாம் வயது முதிர்ந்தவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்த போதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால் தான். ஏனெனில் வார்த்தை நம்பிக்கைக்குரியது என அவர் கருதினார் (எபி 11:11), உன் வழி மரபினரை பூவுலகின் மணலைப்போலப் பெருகச்செய்வோம். ஆகவே, பூவுலகின் மணலை ஒருவர் எண்ண முடியுமானால் உன் வழிமரபினரையும் எண்ணலாம் (தொநூ 13:16) இங்கே, மரியா திரு அவைக்கு ஒப்புமைக் காட்டப்படுகின்றார். மரியா நம்பிக்கையுடையவராக, உண்மையுறுதியுள்ளவராக, கீழ்ப்படிகின்றவராக இருந்து, புதிய இஸ்ரயேல் மக்களுக்குத் தாயாகின்றார். அதோடு, திரு அவைக்கும் உலகளாவியத் திரு அவைக்கும் தாயாகின்றார்.

சாரா, அன்னா, எலிசபெத்து இவர்களுக்கு ஒன்றுமில்லாமையிலிருந்து அவர்களுக்குப் பெற்றெடுக்கும் ஆற்றல் கொடுக்கப்படுகின்றது. இவர்களை விட மரியாவின் நம்பிக்கை மிகவும் பெரியது. காரணம், மனித உறவு இல்லாமல் (லூக் 1:35) ஒரு புதுமையான வழியில், தனித்துவமான வழியில் குறிப்பிடத்தக்கவழியில் மனித உடல் எடுப்பு நடக்கின்றது. அத்தோடு, கிறித்துவின் ‘fiat’- ‘ஆம்’ ஒலிவத்தோட்டத்தில் அவர் கொடுப்பது (லூக் 22:42) கன்னி மரியாவின் ‘ஆம்’ என்பதோடு ஒத்துள்ளது.

எலிசபெத்தின் கணவர் செக்கரியாவும், மரியாவின் நம்பிக்கையும் இங்கு எடுத்துக்காட்டப் படுகின்றன. ஒருவர் சந்தேகித்து அடையாளம் கேட்கின்றார். மற்றவர் தன்நிலை இப்படி இருக்கின்றது இது எப்படி நிகழும் என்றத் தெளிவு கேட்கின்றார் (லூக் 1:45). வாழ்வில் நம்பிக்கை கொள்வது கடவுளோடு உள்ள உறவுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. அந்த உறவு நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றது. ஆபிரகாம் முன் பின் தெரியாத ஓர் இடத்திற்கு அழைக்கப்படுகின்றார், இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணமும் அப்படித்தான்.

ஒருவர் தன் திட்டத்தை விடுத்து இறைவனின் திட்டத்திற்கு வருவதாகும்; தனக்கு திருப்தி தருவதிலிருந்து விடுபடுவதாகும். இங்கே இறைவனின் வார்த்தையால் வழிநடத்தப்படுதலாகும். இது எளிதான ஒன்று அல்ல; திருமுழுக்கு யோவான் அவர்களின் அழைத்தல் மனமாற்றத்திற்கான அழைத்தல். ஒரு முழுமையை அடையும் நோக்கில் காலம் நிறைவுற்ற போது (கலா 4:4) வார்த்தைக்கிணங்க இங்கே மரியா ஒரு காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மற்றொரு காலத்தை திறந்து விடுகின்றார். கடவுளின் இரக்கமிகு ஆற்றலை அவரின் உண்மையுறுதியை மரியாவின் வாழ்வில் முதலில் வெளிப்படுகின்றது.

பிள்ளைப்பேறு இல்லாத, பெறமுடியாதவர்களுக்கு தனி வரம் நிறைந்த பிள்ளைகள் அற்புதமாகக் கொடுக்கப்படுகின்றனர். மக்களை மீட்க அவர்களுக்கு அழைப்புக் கொடுக்கப்படுகின்றன.

ஈசாக்கு சாராவிடமிருந்து பிறக்கின்றார்.

சாம்சன் மனேவாகின் மனைவியிடமிருந்து பிறக்கின்றார்.

சாமுவேல் அன்னாவிடமிருந்து பிறக்கின்றார்.

திருமுழுக்கு யோவான் எலிசபெத் திடமிருந்து பிறக்கின்றார்.

லூக்கா தனது நற்செய்தியில் மரியாவின் முன்னோடிகளான செக்கரியா மற்றும் எலிசபெத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றார் (லூக் 1: 7) கடவுள் மரியா தனித்துவ நிலையில், ஒப்புமையில்லா வகையில் தேர்ந்தெடுத்து, அழைக்கின்றதை நற்செய்தியாளர் லூக்கா காட்டுகின்றார். மரியா பல மீட்பர்களில் ஒருவருக்குத் தாய் அல்ல; மாறாக, ஒரே மீட்பருக்குத் தாயாகின்றார் (லூக் 1:32-33). இங்கே மரியாவின் தெய்வீகத் தாய்மையை கடவுள் தன் அன்பில் வெளிப்படுத்துகின்றார்.

கடவுள் நமக்காக, நமது மீட்புக்காக தன் ஒரே பேறான மகனைக் கொடுத்தார். அந்த ஒரே மகன் நமது தோழமைக்கும், சொந்தத்திற்கும் ஆதாமின் வழியில் மரியின் வழியாக நம்மோடு சொந்தம் கொண்டாட வருகின்றார். இதனால்தான், திரு அவை 431 இல் எபேசு நகரில் கன்னிமரியா கடவுளின் தாய் என்று அறிக்கையிட்டு, வார்த்தை மனுவுடல் எடுத்ததையும், மனிதத்தையும் ஒவ்வொரு மனிதனையும் மிக அருகில் நெருங்கித் தொடுகின்றவராக அவர் இறங்கி வருகின்றார். நம்மை நமது வாழ்வின் இதயத்தின் ஆழத்தில் தொட்டு நம்மை அவர் காயப்படுத்துகின்றார்.

இப்படி அவர் வரவேண்டும் என்றால், இறைவனுக்கு தம் கன்னிமைத் தன்மையை மரியா வெளிப்படுத்த வேண்டும். மரியாவின் கன்னிமை இறைவனுக்காகவே இருக்கின்றது. கன்னிமை - கற்பு உள்ளோருக்கும் கற்போடு வாழ முனைவோருக்கும் மரியாவின் கன்னிமையும் முன்னோடியாக இருக்கின்றது. அவரின் கன்னிமை நிறைவுள்ளதாகக் அதை மரியா முழுமைக்கும் கொண்டு வருகின்றார்.

* கன்னிமை - கற்பு என்பது ஒழுக்கம் கலந்த, அறநெறி சார்ந்த தூய்மை மட்டுமல்ல;

* கன்னிமை - கற்பு  என்பது இந்த உலகையும் அதை சார்ந்ததையும் விட்டு ஓடுவது அல்லது துறப்பது மட்டுமல்ல;

* கன்னிமை - கற்பு என்பது விழிப்புணர்வோடு செய்யும் தவ முயற்சி மட்டுமல்ல;

* எதிர்வரும் உலக முடிவுக்கான தீர்க்கதரிசனமான ஓர் பதற்றத்தை உரைப்பதாகும்.

மரியா முழுமையான, நிறைவான, சுதந்திரத்தை அனுபவித்தார். இந்த உலகைத் துறக்கின்றவர்கள் மறு உலகில் வாழும்போது, உலகில் 100 மடங்கு கைமாறு பெறுவார்கள். இதைத்தான் நற்செய்தியாளர் மத்தேயு (19:29) கூறுவார்: அந்தக் கொடைகள் மெசியாவின் கொடைகள். அதுதான் இறைவனின் மகன். இம்மானுவேல் - கடவுள் நம்மோடு என்று யாவே கடவுள் இஸ்ரயேல் மக்கள் செய்த பெட்டகத்தில் இருந்தார். இங்கே, மரியாவுக்கு கொடுக்கப்பட்ட பிறப்பு செய்தியில் மனுவுடல் எடுத்தல், மரியாவின் வாழ்வை நிர்ணயம் செய்தது. அதற்காக மரியாவின் கன்னிமையை, கற்பை அது விலையாகக் கேட்டது.

அந்தக் கன்னிமை உடல் அளவில் உண்மையையும், நேர்மையையும் கேட்டது. கடவுளின் தாயின் கன்னிமை புதுமையானதாகும் - நிறைவானதாகும். இதுதான் கன்னிமரியா கடவுளுக்குத் தரும் கொடை. இந்த முழுமையான கொடுத்தல் எப்போதும் தயார்நிலையில் வைப்பதாகும். அப்படி செய்வதனால் ஒருவரின் உடல், இதயம், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட வேண்டும். அப்படி செய்யும்போதுதான் மரியா புதிய உடன்படிக்கையின் கோவிலாக (ஆலயம்), தூய்மையின் ஆற்றலையும், புதிய ஒளியையும் இந்த வரலாற்றில் பெற்று, இந்த மண்ணில் விதைக்கின்றார்.

மரியாவுக்கு நிகழ்ந்தது நமக்கும் நிகழவேண்டும். நாம் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட வேண்டும். தூய ஆவியினால் புனிதப்படுத்தப்பட வேண்டும். மரியா பேறுகளால் நிரப்பப்படுகின்றார். திரு அவைக்கும், கிறித்தவர்களுக்கும் இதை அறிவிக்கின்றார். மரியாவின் கன்னிமை கிறித்துவை பிரதிபலிக்கின்றது. மரியா ஒரு கண்ணாடியாக இருக்கின்றார். கிறித்தவர்கள் மரியாவைப் பார்த்து தங்களை தூய ஆவியின் உந்துதலுக்கும் - ஆட்கொள்வதற்கும் கையளிக்கின்றனர்.

(தொடரும்)

மிகுந்த சிரத்தையெடுத்து நல்ல கற்பனைவளத்துடன் புனித யோசேப்பு- அன்னை மரியா ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுக்க மாடடைக்குடிலில் திரைச்சீலைகளைக் கொண்டு மறைவு ஏற்படுத்துவதை விளக்கும் அருமையான கருத்தோவியத்தை வரைந்தவர் நமது ‘நம் வாழ்வு’ ஓவியர் திரு. நிர்மல் அவர்கள்.

Comment