No icon

தூய ஆவியாரின் செயல்பாடு

திருவழிபாட்டில் இறைவார்த்தை

கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ம. அலெக்சாண்டர் அவர்கள், வத்திக்கானில் உள்ள  மேதகு கர்தினால் ஆர்த்ர் ரோச் அவர்களின் தலைமையில் செயல்படும் திருவழிபாடு மற்றும் அருள்சாதன ஒழுங்கு முறைக்கான திருப்பேராயத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, கடந்த இரு

மாதங்களாகப் பணியாற்றி வருகிறார். திருவழிபாட்டில் உலகளாவிய அளவில் பணியாற்ற சென்றுள்ள தந்தை அவர்களை நம் வாழ்வு பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறது. செபிக்கிறது.

முன்னுரை

“இறைவார்த்தை வாசகங்கள் திருவழிபாட்டின் கூறுகளில் மிக இன்றியமையாத இடம் வகிக்கின்றன” (உரோமைத் திருப்பலி நூலின் பொதுப்படிப்பினைகள், எண். 29 - இனி உ.தி.நூ.பொ). திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களான திருப்பலி, அருளடையாளங்கள், திருப்புகழ்மாலை ஆகியவற்றில் இறைவார்த்தை மறைபொருள்களை வெளிப்படுத்துகிறது; உணர்த்துகிறது; கொண்டாடத் தயார் செய்கிறது. “ஒரே இறைவாக்கிலுள்ள பற்பல கருவூலங்கள் பல்வேறு கொண்டாட்டங்களிலும், அக்கொண்டாட்டங்களில் பங்கேற்கும் இறைமக்களின் பல்வேறு கூட்டங்களிலும் வியத்தகு வகையில் வெளிப்படுகின்றன. இது ஆண்டின் போக்கில் கிறிஸ்துவின் மறைபொருள் தொடர்ச்சியாக மலர்வதை நினைவுகூரும்போது, அல்லது திரு அவையின் அருளடையாளங்களும் அருள்கருவிகளும் கொண்டாடப்படும்போது, அல்லது தூய ஆவியாரின் உள்ளரங்கச் செயலுக்குத் தனித்தனியாக இறைமக்கள் பதிலளிக்கும்போது நிகழ்கிறது” (உரோமைத் திருப்பலி வாசக நூல் பொது முன்னுரை, எண். 3 - இனி உ.தி.வா.பொ). இவ்வாறு இறைவார்த்தை அறிவிக்கப்படும்போது வார்த்தையான கிறிஸ்து பிரசன்னமாகி, அதிர்வலைகளாய், ஒலிவடிவாய், எண்ண அலைகளாய், உணர்வுகளாய்..., என பலவகைகளில் பரிணமித்து அனைவரையும் தொடுகிறார். “கிறிஸ்து தமது வார்த்தையில் உடனிருந்து நற்செய்தியை அறிவிக்கின்றார்” (உ.தி.நூ.பொ.எண். 29). இறைவார்த்தையில் உடனிருக்கும் கிறிஸ்துவை திருவழிபாட்டில் தகுந்த முறையில் வரவேற்க, அவருக்கு செவிசாய்க்க, அவர் வழியாக இறைத்தந்தையோடு பேச ஒவ்வொரு நம்பிக்கையாளரும் தயாராய் இருக்கவேண்டும்.

இறைவார்த்தை ஒரு நிகழ்வு

நம்முடைய சாதாரண வார்த்தைகளைப் போல இறைவார்த்தையை மதிப்பிடக்கூடாது. இறைவார்த்தை ஒரு நிகழ்வாக இருக்கிறது: படைத்தல் நிகழ்வாக, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இறைவன் செய்தவற்றின், பேசியவற்றின் நிகழ்வாக, இறுதியாக இயேசுவில் இறைவன் செய்கின்றவற்றின், பேசுகின்றவற்றின் நிகழ்வாக இருக்கிறது. தூய ஆவியாரால் வடிவமைக்கப்பட்ட இவ்வார்த்தைகள் மனித வார்த்தைகளைவிட ஒப்பிட முடியாத அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவை; பொருள் பொதிந்தவை. எனவே இறைவார்த்தைகளை அறிவிக்கும்போது அவை விளக்கும் நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடந்தேறுகிறது: ஆம், மீண்டும் ஒருமுறை அதே அரும்செயல் செய்தல், உவமைகளைப் போதித்தல், அவை விளக்கும் மற்ற நிகழ்வுகள் நிகழ்காலப்படுத்தப்படுகின்றன. புத்தகத்தில் உள்ள இறைவார்த்தையின் வரிவடிவங்கள் (எழுத்து வடிவங்கள்) சங்கீதத்திற்கான இசைக்குறியீடுகளை ஒத்தவையே. இசைக்குறியீடுகள் இசையாகாது. ஆனால், அவற்றை கருவியில் இசைக்கும்போது சங்கீதமாக வெளிப்படுகிறது. அதேபோல, திருவிவிலியப் புத்தகங்களில் உள்ள வார்த்தைகள் நம்பிக்கையாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும்போது இறைவனின் நிகழ்வுகள் அங்கு ரீங்காரமிடுகின்றன. “மீட்பின் வரலாற்றில் இறைவன் முற்காலத்தில் புரிந்த அரும்செயல்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் அடையாளங்களில் மறைவாக, ஆனால், மெய்யாகவே மீண்டும் பிரசன்னமாகின்றன” (உ.தி.வா.பொ.எண்.7). எனவேதான் திருத்தந்தை பிரான்சிஸ் தனது “மிகமிக ஆவலாய் இருந்தேன்” என்னும் திருத்தூது மடலில் திருவழிபாட்டு மீட்பு வரலாற்றில் ‘இன்று’ எனக் குறிப்பிடுகிறார். திருவழிபாட்டின்போது அறிவிக்கப்படும் இறைவார்த்தை மீட்பின் வரலாற்றை அங்கு, அப்போது நிகழ்வாக்குகிறது.

இறைவார்த்தையும் தூய ஆவியாரின் செயலும்

“தூய ஆவியாரின் செயல்பாடு திருவழிபாட்டுக் கொண்டாட்டம் முழுவதற்கும் முன் செல்கிறது; துணை நிற்கிறது; அதை நிறைவடையச் செய்கிறது” (உ.தி.வா.பொ.எண்.9). குறிப்பாக இறைவார்த்தையை மனித ஆசிரியர்களைக் கொண்டு எழுதியவரே தூய ஆவியார் தான். அவரது தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவார்த்தை அவரது செயல்பாட்டால் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பயன் அளிக்கிறது. தூய ஆவியார் வார்த்தை மனிதரானதில் மனித உடலைத் தந்தார்; இறந்த கிறிஸ்து உயிர்த்தபோது உயிர்ப்பின் உடலைத் தந்தார்; அவரே ஒவ்வொரு திருப்பலியிலும் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாக, இரத்தமாக மாறச் செய்கின்றார். “ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக” (நற்கருணை மன்றாட்டு 2) என அருள்பணியாளர் மன்றாடுகிறார். மனிதரான உடலை, உயிர்த்த உடலை, நற்கருணை உடலைத் தருகிற அதே தூய ஆவியாரே இறைவார்த்தை நம்மில் உருப்பெற, நம் உள்ளங்களில் பயன் அளிக்க, நம் வாழ்வாக வடிவெடுக்க துணைபுரிவது பொருத்தமானதாகும். “நம் செவிகளில் ஒலிக்கும் இறைவாக்கு மெய்யாகவே உள்ளத்தில் பயன் அளிக்க தூய ஆவியாரின் செயல் தேவைப்படுகிறது. அவருடைய தூண்டுதலாலும் துணையாலும் தான் இறைவாக்கு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் அடித்தளமாகவும் நம் வாழ்விற்கு அளவு கோலாகவும் உறுதுணையாகவும் அமைகின்றது” (உ.தி.வா.பொ. எண். 9). எனவே, இறைவார்த்தையை தகுந்த விதத்தில் அணுக தூய ஆவியாருடன் நம்பிக்கையாளர் ஒத்துழைப்பது அவசியம்.

பாஸ்கா மறைபொருள்

“இரு மேசைகளிலிருந்து ஆன்ம ஊட்டம் பெறும் திரு அவை ஒன்றிலிருந்து மேன்மேலும் போதனை பெறுகிறது;  மற்றதிலிருந்து  மிக  நிறைவாக புனிதப்படுத்தப்படுகிறது” (உ.தி.வா.பொ.எண்.10). இறைவார்த்தை மேசையான வாசக மேடையும், நற்கருணை மேசையான பீடமும் ஆன்ம ஊட்டமளித்து நம்பிக்கையாளர்களை திடப்படுத்துகின்றன. இறைவார்த்தை கிறிஸ்துவின் பாடுகள் - இறப்பு - உயிர்ப்பின் வழியாக ஏற்படுத்தப்பட்ட புதிய, நிலையான உடன்படிக்கையை அறிவிக்கிறது; நற்கருணையில் அந்த புதிய, நிலையான உடன்படிக்கை புதுப்பிக்கப்படுகிறது. “நற்செய்தி அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானதல்ல; அதேபோல கொண்டாட்டத்தில் உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்பும் உண்மையானதல்ல” (மிகமிக ஆவலாய் இருந்தேன், எண். 37) என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆம், பீடத்தில் பிரசன்னமாகும் உயிர்த்த இயேசு, வாசக மேடையிலும் பிரசன்னமாகிறார். இறைவார்த்தையின் மையம் இயேசுவின் பாடுகள் - இறப்பு - உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைபொருளே. திருவழிபாட்டில் அறிவிக்கப்படும் எல்லா இறைவார்த்தையும் எப்பொழுதும் இந்த பாஸ்கா மறைபொருளை ஆழ்ந்து அறிய நம்பிக்கையாளருக்கு துணைநிற்கின்றன. உயிர்த்த ஆண்டவரைச் சந்திக்க, உரையாட, உறவாட வழிவகுக்கின்றன. “வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படுகின்றன” (உ.தி.தூ.பொ. எண். 57). இவற்றின் ஒளி பெற்று பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும், மீட்பின் வரலாற்றையும் அதன் சிகரமான கிறிஸ்துவின் பாடுகள் - இறப்பு - உயிர்ப்பையும் பல கோணங்களில் அணுக நம்பிக்கையாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இறை - மனித உரையாடல்

இறைவார்த்தை வழியாக நம்பிக்கையாளருடன் பேசும் கடவுளுக்கு ஆர்வமுடன் செவிமடுப்பதும், அவ்வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி சிந்திப்பதும், சரியான பதில்மொழி தருவதும் இன்றியமையாதது. திருப்பலியின் வார்த்தை வழிபாடு இறைவார்த்தையை மையப்படுத்தியே அமைகிறது. திருவிவிலியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்கள், பதிலுரைப்பாடல் வழியாக ஒரு இறை-மனித உரையாடல் நடக்கிறது. மறையுரை, நம்பிக்கை அறிக்கை, நம்பிக்கையாளர் மன்றாட்டு ஆகியவை வார்த்தை வழிபாட்டை வளர்த்து நிறைவுக்குக் கொண்டு வருகின்றன. “முதல் வாசகத்துக்குப் பின் தொடர்கிற பதிலுரைத் திருப்பாடல் இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும். இது இறைவார்த்தையைத் தியானிக்க உதவுவதால் திருவழிபாட்டிலும் அருள்பணியிலும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. பதிலுரைத் திருப்பாடல் ஒவ்வொரு வாசகத்துக்கும் பொருத்தமாக அமைகிறது” (உ.தி.நூ.பொ. எண். 61). எனவே, பதிலுரைத் திருப்பாடலையே எப்போதும் பாடவேண்டும். அதற்கு பதிலாக வேறு பாடலைப் பாடுவது முறையற்றது. ஏனெனில் முதல் வாசகத்தில் பேசிய கடவுளுக்கு இறைவார்த்தையினாலேயே பதிலுரைத் திருப்பாடல் வழியாக பதில் கூறுவது சரியானது. மக்கள் தங்கள் பதிலை உகந்த முறையில் கூற பதிலுரைத் திருப்பாடல்கள், ஆர்ப்பரிப்புகள், நம்பிக்கை அறிக்கை, நம்பிக்கையாளர் மன்றாட்டுகள் ஆகியவை முறையாக அமைக்கப்பட்டுள்ளன.

வார்த்தை வழிபாட்டின் சிகரம் : நற்செய்தி

“நற்செய்தியைப் பறைசாற்றுவதே வார்த்தை வழிபாட்டின் உச்சக்கட்டம் ஆகும்... ஏனைய வாசகங்களைவிட நற்செய்தியைப் பறைசாற்றுதல் தனி மதிப்பு உடையது என்பதால், அதற்கு மிகச் சிறப்பான வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று திருவழிபாடு கற்பிக்கின்றது” (உ.தி.நூ.பொ.எண். 60). அதனால் தான், ஆயரோ, அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ மட்டுமே திருப்பலியில் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றனர். அதிலும் குறிப்பாக தங்களைத் தயாரித்துக்கொண்ட பின்னரே நற்செய்தியை அணுகுகின்றனர். “தமது நற்செய்தியைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை, மகன் + தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்” என்ற ஆசியுரையால் திருத்தொண்டரோ அருள்பணியாளரோ, ஆயர் அல்லது அருள்பணியாளரால் தயாரிக்கப்படுகிறார். ஆயரோ, திருத்தொண்டரோ இல்லையெனில், அருள்பணியாளர் பீடத்தின் முன் வணங்கி, “எல்லாம் வல்ல இறைவா உமது நற்செய்தியை தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும்” என்று தம்மையே தயாரிக்கிறார்.

“நம்பிக்கையாளரோ, தங்கள் ஆர்ப்பரிப்புகளால் கிறிஸ்து தங்களோடு உடனிருப்பதையும் பேசுவதையும் ஏற்று அறிக்கை இடுவார்கள்; நற்செய்தியை அவர்கள் நின்று கொண்டு கேட்பார்கள்” (உ.தி.நூ.பொ. எண். 60). நற்செய்தி வாசக நூலுக்கு உரிய வணக்கம் செலுத்தப்படுகிறது. முடிவில், திருப்பணியாளர் நூலை முத்தமிட்டு “இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக” என்று அமைந்த குரலில் மன்றாடுகிறார். இவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டு நற்செய்தி பறைசாற்றப்படுகிறது. ஆயர்களுக்குரிய உரோமை - ஜெர்மானியத் திருச்சடங்கு நூலில், “கிறிஸ்து தோன்றும்போது, அதாவது, திருப்பலியில் நற்செய்தியை வாசிக்கும்போது நம் செங்கோல்களை ஒதுக்கிவிடுகிறோம். ஏனெனில், நமக்கு மனித துணை தேவையில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. “பலமுறை, பலவகைகளில் நம் மூதாதையரிடம் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக... பேசிய கடவுள்” (எபி 1:1) நற்செய்தியில் நேரடியாகப் பேசுகிறார். கிறிஸ்து தோன்றுகிறார்; நற்கருணையில் அப்ப இரச வடிவில் தோன்றுகிற கிறிஸ்து, நற்செய்தியில் வார்த்தை வடிவில் தோன்றுகிறார். எனவே, அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்கிறார்கள். நற்செய்தி வாசகம் வாசகமேடையிலிருந்தே பறைசாற்றப்பட வேண்டும் (காண். உ.தி.நூ.பொ. 134-135). நற்செய்தி வாசகத்திற்குப் பின் நற்செய்திகளின் வாசக நூல் (Book of Gospels) பயன்படுத்தப்பட்டால், அதனைக் கொண்டு ஆயர் மக்களுக்கு ஆசி வழங்குவார். பொதுவான வாசக நூலைக் கொண்டு ஆசி வழங்கக்கூடாது. அதே வேளையில் இவ்வாறு ஆசி வழங்குவது ஆயர் மட்டுமே செய்யலாம். மறையுரையில் பிட்டுப் பகிர்ந்தளிக்கப்படுகிற இறைவார்த்தையைக் கேட்டு, தியானித்து, அமைதியாலும், ஆர்ப்பரிப்பாலும், மன்றாட்டாலும், பின்னர் வாழ்வாக்குவதாலும் நம்பிக்கையாளர்கள் உரிய பதில்மொழி தருகின்றனர்.

வார்த்தையை வாழ்வாக்க...

இறைவார்த்தையைப் பிட்டு வழங்க வார்த்தை வழிபாட்டில் மறையுரை மிக முக்கியமானது. இறைவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கை உண்மைகளுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கும் விளக்கம் அளிக்கும் மறையுரை வார்த்தை வழிபாட்டின் ஒரு பகுதியாகும் (காண். திருவழிபாடு, எண். 52). “கிறிஸ்துவோ தம் திரு அவையின் மறையுரையில் எப்போதும் பிரசன்னமாயிருந்து செயலாற்றுகிறார்” (உ.தி.வா.பொ. எண். 24). இறைவார்த்தை வழிபாடு வாசக மேடையில் தான் நடைபெறுகிறது. எல்லா வாசகங்களும் மறையுரையும் வாசக மேடையிலிருந்தே நடைபெற வேண்டும். பீடத்தில் நின்று மறையுரை ஆற்றுவது பொருத்தமற்றது. வாசகங்களில் வெளிப்பட்ட கிறிஸ்து அதே வாசக மேடையில் மறையுரையில் பிட்டு வழங்கப்படுகிறார். “எதை உண்கிறாயோ அதாகவே நீ மாறவேண்டும்” என்று புனித அகுஸ்தின் நற்கருணை உட்கொள்தலைக் குறித்துக் கூறுகிறார். அதே வார்த்தைகளை வார்த்தை வழிபாட்டிலும் பொருத்திப் பார்க்கலாம். திருவழிபாட்டின் வார்த்தை வழிபாட்டில் இறைவன் என்ன பேசுகிறாரோ அதனை வாழ்வாக்க வேண்டியது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமை. “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்” (யாக் 1:22).

Comment