நல்லதோர் மறையுரை செய்வோம் – 2
வார்த்தையின் ஒளியில் வாழ்ந்திட
முன்னுரை
எனக்கு நன்கு அறிமுகமான ஓர் இளம் அருள்பணியாளர். அவர் நல்ல மறையுரையாளர் என மக்களால் பாராட்டப்படுபவர். அவருடைய மறையுரைகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குச் சிலகாலம் கிடைத்தது. ஆனால், நான் அவற்றைக் கேட்க நேரிட்ட போதெல்லாம் என் காதுகளில் விழுந்தவை பெரிதும் அந்தந்த நாளின் விவிலிய வாசகங்களுக்கு அவர் தந்த வரலாற்றுப் பின்னணிதான். அதாவது, அன்றைய பாலஸ்தீனச் சூழலமைவு, எகிப்திய அல்லது பாபிலோனிய அடிமைத்தனம், அன்றைய கொரிந்து, கலாத்தியா போன்ற நகரங்களில் இருந்த திரு அவைகளின் பிரச்சனைகள், அவற்றின் பின்னணியில் வாசகங்களின் பொருள் என்பவற்றை விளக்கி உரைக்கும் பாணியிலேயே அவருடைய மறையுரைகளின் பெரும் பகுதி அமைந்திருந்தது.
அருள்பணியாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் எனும் வகையில், அவரது அத்தகைய விளக்கங்களைக் கேட்டது எனக்கு ஒரு புறம் மிக்க மகிழ்ச்சியே. ஏனெனில், பெரும்பான்மையான இன்றைய இளம் அருள் பணியாளர்களைப் போலன்றி, அவர் தம் விவிலியப் பேராசிரியர்கள் வகுப்பறையில் கற்றுக்கொடுத்தவற்றையெல்லாம் நன்கு குறிப்புகள் எடுத்து அல்லது நினைவில் பதித்து, அவற்றை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இருப்பினும், இன்னொருபுறம் என் உள்ளத்தில் ஒரு கேள்வியும் எழுந்தது. விவிலிய வாசகங்களின் அன்றைய பாலஸ்தீனப் பின்னணியைப் பற்றி இவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும் பேசுகின்ற அவர், அவற்றிற்குச் சரியாகப் புதுப் பொருள் கொள்வதற்கு இன்றியமையாத நமது இன்றைய சமூக மெய்மைகளை எப்போது எடுத்துரைக்கப் போகிறார் என்பது தான் அக்கேள்வி. அதாவது, யோர்தான் ஆறு மற்றும் கலிலேயா ஏரியினுடைய நீள, ஆழ, அகலத்தைப் பற்றிப் பேசிப் பரவசப்படும், மக்களைப் பரவசப்படுத்தும் அவர், பெரும்பாலும் வறண்டே கிடக்கும் நம் உயிர் நதிகளான காவேரியையும், வைகையையும் பாழ்பட்டுக் கிடக்கும் நம் பாலாறையும் காணாமலே போய்விட்ட பல ஆயிரம் நீர் நிலைகளையும் பற்றி நாம் ஏன் பேசுவது இல்லை? தாபோர்மலையின் உயரத்தையும், அதிலிருந்து பார்த்தால் தெரிகின்ற பசுமைச் சிரிப்பையும் சீனாய் மலைமீது நின்றுபார்த்தால், தெரிகின்ற பாலை விரிப்பையும் கேட்போர் மெய் மறக்கும் வகையில் சித்திரித்துக் காட்டும் அவர், நம் ஊர் பழனி அல்லது மேற்குமலைத் தொடர்களின் அழகையும், அருமை பெருமைகளையும் அவை சீர்குலைக்கப்படும் சிக்கலையும் பற்றிப் பேசத்தவறுவது ஏன்?
இத்தகைய கேள்விகளின் பின்னணியில் நல்ல மறையுரை எத்தகையதாக இருக்க வேண்டும் என நாம் சற்று ஆழமாக சிந்திப்பது அவசியம் என நினைக்கிறேன். சென்ற மாதம் விவிலிய விருந்தில் வெளியான இக்கட்டுரையின் முதல் பகுதியில் மறையுரை எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது பற்றிக் கூறினோம். இந்த இரண்டாவது பகுதியில் அதன் உள்ளீடு எத்தகையதாக இருக்கவேண்டும் எனக் காண்போம். இவ்விரு பகுதிகளும் பெரிதும் திருத்தந்தை பிரான்சிஸ் 24 நவ. 2013 இல் வெளியிட்ட நற்செய்தியின் மகிழ்ச்சி (நம) என்ற மடலில் மறையுரை பற்றி அவர் முன்வைக்கும் (135-159) நல்ல பல சிந்தனைகளைப் பெரிதும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
நகைச்சுவை உரைகளோ பொழுதுபோக்குக் கதையாடலோ அல்ல
அருள்பணியாளர்கள் சிலர் மறையுரை என்பது, மக்களைக் கொஞ்சம் சிரிக்கவைக்க ஒரு வாய்ப்பு என்றே எண்ணுவதாகத் தெரிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு துறவியர் இல்லத்தினர் குறிப்பிட்ட ஓர் அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்ற வரும் வாரத்திற்கு ‘நகைச்சுவை வாரம்’ என்று பெயரே இட்டிருந்தார்கள். ஏனெனில், அவருடைய மறையுரைகள் பெரிதும் சிரிப்புத் துணுக்குகளின் கோர்வையாகவே இருக்கும். நகைப்பூட்டும் நிகழ்வுகளையும், தகவல்களையும் சொல்லி, நற்செய்திக் கருத்துகள் பற்றி மக்களை ஆழமாகச் சிந்திக்கவைப்பது அரியதும் அருமையானதுமான ஒரு திறமையே. ஆனால், சிந்திக்கவைப்பதற்குப் பதிலாக மக்களைச் சிரிக்கவைத்து விட்டால் போதும் எனும் வகையில் அமைவன மறையுரைகள் அல்ல; அத்தகைய நகைச்சுவை உரைகளின் இடம் வழிபாடும் அல்ல; வேறு பலருடைய மறையுரைகள் வெறும் சிறுகதைத் தொகுப்புகளாகவே அமைகின்றன. மனித வாழ்க்கை, அனுபவங்களை எதிரொலிக்கும் கருத்துள்ள கதைகளுக்கு உள்ளத்தை ஆழமாகத் தொட்டு சிந்தனையைக் கிளறிவிடும் ஆற்றல் உண்டு. நமது அன்றாட வாழ்வில் நாம் காணத் தவறுகின்ற அல்லது கண்டாலும் கருத்தில் கொள்ளாத முகாமையான பல மெய்மைகளை நல்ல கதைகள் நம் உள்ளங்களில் ஆழப் பதிகின்றன. இதனால்தான், இயேசுவும் இறையாட்சியின் பல்வேறு அர்த்தங்களையும், அறைகூவல்களையும் மக்களுக்கு உணர்த்த, அருமையான பல்வேறு உவமைக் கதைகளைப் பரவலாகப் பயன்படுத்தினார். அவற்றை எந்த அளவுக்கு அதிகமாக அவர் பயன்படுத்தினார் என்றால் “உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை” (மாற் 4:34) என்கிறார் மாற்கு நற்செய்தியாளர். உணவையும் மறந்து பெரும் திரளான மக்கள் அவருடைய அருளுரைகளை மூன்று நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததும், ‘அவரைப்போல் எவரும், என்றுமே பேசியதில்லை’ (யோவா 7:46) என அவரைக் கைது செய்ய அனுப்பப்பட்ட காவல் வீரர்களே அவரைக் கைது செய்யாமல் சென்றதற்குக் காரணம் என்று கூறுவதும், கேட்போரின் உள்ளங்களையும், வாழ்வுகளையும் ஆழமாகத் தொட்ட அவரது உவமைக்கதைகளின் ஆற்றலுக்குச் சான்றுகள்.
இருப்பினும், நற்செய்தி விழுமியங்களை தெளிவாகவும், அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லவும் நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் இறை அருளுக்கும், அழைப்புக்கும் நம் விழிகளைத் திறந்துவிடவும் ஆற்றல் இல்லாத வெறும் பொழுதுபோக்கிற்கானக் கதைகளின் இடம் மறையுரை அல்ல; ‘ஊடகங்கள் தருபவை போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளின் ஒருவகையாக மறையுரை இருந்து விடக்கூடாது” (நம 138) எனத் திருத்தந்தை பிரான்சிசும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவிலிய வகுப்புகளோ கோட்பாட்டு விளக்கவுரைகளோ அல்ல
சில அருள்பணியாளர்கள் வாசகங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றையே தங்கள் மறையுரைகளில் விரிவாக மீண்டும் எடுத்துரைப்பதுண்டு. இது தேவை அற்றது என்பது தெளிவு. வேறு சிலர் ஒரு வாசகத்தில் அல்லது மூன்று வாசகங்களிலும் சொல்லப்பட்டுள்ள பல்வேறு செய்திகளையும், அவற்றின் அன்றைய சமூகப் பின்னணிகளுடன் விளக்கி உரைக்கின்றனர். பல வார, மாத இதழ்களில் தரப்படும் மறையுரைக் குறிப்புகளும் இதே வகையில் மூன்று வாசகங்களுக்கும் அவை ஒவ்வொன்றின் பின்னணியுடன் விளக்கங்கள் தருவனவாகவே உள்ளன. இந்நோக்கில் சிலர் விவிலியம் எழுதப்பட்ட மூல மொழிகளாகிய எபிரேய, கிரேக்க மொழிச் சொற்களைக் கூறி, அந்த மொழிகளில் உள்ள அவற்றின் பொருள் நுணுக்கங்களையும் விரித்துரைப்பர். இதுவும் பொதுவாகத் தேவை அற்றதே.
இத்தகைய விளக்கங்கள் பெரிதும் மறையுரைகளை விவிலிய வகுப்புகள் ஆக்கிவிடுகின்றன. விவிலிய வகுப்புகள் பெரும்பாலும் விவிலியப் பகுதிகளை எழுதிய அவற்றின் ஆசிரியர்கள் என்ன பொருளை உணர்த்த முனைந்தனர், அன்றையக் காலச் சூழமைவில் அவற்றின் வாசகர்கள் அவற்றிற்கு என்ன பொருள் கொண்டனர் என விளக்கி உரைக்கின்றன. ஆனால், மறையுரையின் நோக்கம் இது அல்ல; மாறாக, அதன் நோக்கம் இன்றைய நமது வாழ்க்கைச் சூழமைவுக்கு அப்பகுதிகள் என்ன பொருள் தருகின்றன என எடுத்துரைப்பதே.
சில வேளைகளில் அருள்பணியாளர்கள் தங்களது மறையுரையில் நமது நம்பிக்கைக் கோட்பாடுகளை அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு விளக்கியுரைப்பர். எடுத்துக்காட்டாக, நற்கருணையில் இயேசுவின் உண்மையான உடனிருப்பு இருக்கிறது என்பதை எடுத்துரைக்க யார் யார் எந்தெந்த நூற்றாண்டுகளில் அவ்வுண்மையை மறுத்தார்கள், அவர்களுக்கு எதிராக எந்தப் பொதுச்சங்கம் அதனை நம்பிக்கைக் கோட்பாடாக வரையறுத்துக் கூறியது, அக்கோட்பாட்டு வாய்பாட்டின் சொற்பொருள் என்ன என விளக்கமாக அவர்கள் எடுத்துக் கூறுவர்.
ஆனால், மறையுரைகள் வெறும் விவிலிய அல்லது கோட்பாட்டு விளக்கங்கள் அல்ல; வாசகங்களின் அல்லது கோட்பாடுகளின் வரலாற்றுப் பின்னணியை விரிவாக விளக்குவது என்பது விவிலிய அல்லது இறையியல் வகுப்புகளில் நடைபெற வேண்டியதே அன்றி; மறையுரையில் அல்ல. இதனால் தான், மறையுரை ‘பேருரை அல்லது கருத்துரையாகத் தோன்றுவது தவிர்க்கப்பட வேண்டும்’ (நம 138) எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்துகிறார்.
மாறாக, மறையுரையின் நோக்கம் இன்றைய வாழ்வுக்கான இறைச்செய்தியை எடுத்துரைப்பது ஆகும். அதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட விவிலியப் பகுதிகளின் அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையறுத்து அறிவிக்கப்பட்ட நம்பிக்கைக் கோட்பாடுகளின் பொருள் என்ன என அன்றைய சமூகப் பின்னணியில் அவற்றிற்குப் பொருள் விளக்கம் தந்தால் போதாது. ஏனெனில், அது மக்களுடைய அறிவுப் பெருக்கத்திற்கு உதவுமே அன்றி, வாழ்வு மாற்றத்திற்கு அதிகமாக வழியமைப்பது இல்லை. மேலும், அன்று அது தந்த பொருள் அப்படியே இன்றும் நமக்குப் பொருந்துவதாக இருக்கும் என நாம் உறுதிபடக் கூறமுடியாது. எனவே, பழைய ஏற்பாட்டுப் பகுதிகளுக்கு நாம் புதிய ஏற்பாட்டின் ஒளியில் புதுப் பொருள் கொள்வதுபோல், புதிய ஏற்பாட்டுப் பகுதிகளுக்கும் நாம் இன்றைய நம் சமூகச் சூழமைவின் ஒளியில் புதுப் பொருள் காணவேண்டும். இது நலமான மறையுரைக்கு உதவுவதே என்றாலும், இது அல்ல மறையுரையின் முதன்மையான நோக்கம்.
இறைவார்த்தையின் ஒளியில் இன்றைய அனுபவங்கள்
மறையுரையின் முதன்மையானதும் மிக முகாமையானதுமான நோக்கம், இன்றைய நம் வாழ்க்கை அனுபவங்கள் வழியாக, அதிலும் குறிப்பாகக் காலத்தின் அறிகுறிகள் வழியாக, கடவுள் நமக்குத் தரும் அருளும் அழைப்பும் என்ன என நற்செய்தியின் ஒளியில் சிந்தித்துணர்வதும், அதை வாழ்வாக்குவதற்கான தெளிவும் வலுவும் பெறுவதுமே. ஏனெனில், விவிலியம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரயேல் மக்களது வரலாற்றிலும், அதன் உச்சமாக இயேசு வழியாகவும் கடவுள் வெளிப்படுத்திய மீட்பின் செய்தியைச் சுமந்துவரும் புனித நூல். அதில் எல்லாகாலத்து மக்களது வாழ்வுகளுக்கும் அவசியமான பல செய்திகள் உள்ளன என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், எல்லா மக்களது வாழ்வுகளையும், நெறிப்படுத்த கடவுள் வெளிப்படுத்த விரும்பிய அனைத்துச் செய்திகளும் அதில் அடங்கியுள்ளன என நாம் கருத இயலாது.
கடவுள் எல்லா மக்களுக்கும் தந்தை. அனைவரும் நிறைவாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம். எனவே, இன்றைய நமது வாழ்வுகளிலும், வரலாற்றிலும் அவர் உடன் பயணித்து மாறிவரும் காலச் சூழமைவுகளுக்கு ஏற்ப தம் திட்டத்தையும், திருவுளத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஏனெனில், அவர் பழமைக்குப் பழையவர், புதுமைக்குப் புதியவர். மேலும், ‘இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்’ (மத் 28:20) என, உயிர்த்த இயேசுவும் உறுதியளித்துள்ளார். ‘நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன... தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்’ (யோவா 16: 12-13) என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய நம் அனுபவங்கள் என்பன நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் எழுச்சிகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சிகள், மனக் காயங்கள், உறவுச் சிக்கல்கள், சமூகப் பிரச்சனைகள், புதிய வளர்ச்சி வாய்ப்புகள், பேரிடர்கள் எதுவாகவும் இருக்கலாம். இதனையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்: ‘விவிலிய வாசகத்தின் செய்தியை மறையுரையாளர் ஒரு மனிதச் சூழமைவுடன் அதாவது, இறைவார்த்தையின் ஒளியைத் தேடும் ஒரு அனுபவத்துடன் தொடர்புபடுத்த முடிந்தவராக இருக்க வேண்டும். இவ்வாறு, மறையுரைக்கான தயாரிப்பு என்பது நற்செய்தி சார்ந்த ஒரு தெளிதேர்வாக ஆகிறது. அதன் வழியாக, வரலாற்றுச் சூழமைவிலேயே எதிரொலிக்கும் கடவுள் விடுக்கும் அழைப்பை ஆவியாரின் துணையுடன் நாம் இனம் கண்டறிய முயல்கிறோம். இம்முயற்சியில் நாம் அன்றாட மனித அனுபவம் எதையாவது எடுத்துக்கொள்ளலாம். அது ஒரு மகிழ்வான சந்திப்பு, ஏமாற்றம் அடைந்த தருணம், தனிமைப்படுத்தப்படுவது பற்றிய அச்சம், துன்புறும் பிறர் மீதான பரிவு, வருங்காலம் பற்றிய உறுதியின்மை, அன்பர் ஒருவர் மீதான அக்கறை போன்ற எதுவாகவும் இருக்கலாம்” (நம 154-5).
இத்தகைய தனிமனித அனுபவங்களில் மட்டும் அல்ல; சமூக-பொருளாதார-அரசியல்-பண்பாட்டு-சமயச் சிக்கல்கள், மாற்றங்கள், இயக்கங்கள், போராட்டங்கள், வெற்றிகள், பின்னடைவுகள், பேரிடர்கள், புதிய சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் என்பவற்றின் வழியாகவும் இன்றைய நமது வாழ்வுக்கு ஏற்ற செய்திகளை கடவுள் நமக்குச் சொல்லலாம். இதனால்தான் ‘ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நற்செய்தியின் ஒளியில் காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறியும் கடமை திரு அவைக்கு உண்டு’ (இன்றைய உலகில் திரு அவை. 4) என, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு, இன்றைய நமது தனி மனித, சமூக அனுபவங்கள் வழியாகக் கடவுள் நமக்குத் தரும் அருளையும், அழைப்பையும் இனம்கண்டு எடுத்துரைப்பதே மறையுரையின் தலையாய பணி.
இறுதியாக
இன்றைய நமது அன்றாட அனுபவங்கள் வழியாகவும், காலத்தின் அறிகுறிகள் வழியாகவும் கடவுள் நமக்குத் தொடர்ந்து உண்மையான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய அருளையும், அழைப்பையும் தந்து கொண்டிருக்கிறார். “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளிஉலகிற்கு வந்து கொண்டிருந்தது” (யோவா 1:9) என, நற்செய்தி சுட்டிக் காட்டும் இறைவார்த்தையானவரின் வரவு இன்று நமது வாழ்வுகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனைச் சரியாக இனம்கண்டுப் பொருள் புரிந்துகொள்ள நமக்கு உதவிடத் தரப்பட்டுள்ளதே விவிலியமும், அதன் உச்சமாகிய இயேசுவின் நற்செய்தியும். அதனை ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துள்ள மக்களின் மரபுகள், ஆசிரியப் படிப்பினைகள், இறையியல் விளக்கங்கள் என்பவையும் நாம் அதனைச் சரியாகப் பொருள் புரிந்து கொள்ள உதவலாம். இவ்வாறு, இன்றைய நம் அனுபவங்களை நற்செய்தி மரபில் நன்குப் பொருள் புரிந்து அதனை நமது சூழமைவில் வாழ்வாக்க உதவும் வகையில் எடுத்துரைப்பதே மறையுரை.
Comment