மரியா கிறித்து மனுவுடல்
திருவருகைக்காலமும் கன்னிமரியாவும்
நாம் பல சிறப்பான, அழகான தயாரிப்புகள் செய்தாலும், வாழும் கடவுளின் வார்த்தை எதிர்பாராதவிதத்தில் திடீரென்று வெடித்து எழும். அப்படி எழும்போது, நம்மிடமிருந்து ஒரு சிலவற்றை எதிர்பார்க்கின்றது. அறிவுபூர்வமாக சிறந்த நடத்தலில் மட்டுமல்ல; மனித ஆற்றலில் மட்டுமல்ல ‘ஆம்’ என்று நம்பிக்கையோடு இறைவார்த்தைக்கு செவிமடுத்து, கீழ்ப்படியும்போதும் இயேசுவின் கீழ்ப்படிதல் போல் (எபி 10:5) கன்னிமரியா திரு அவையைப் போன்றவராக இருக்கின்றார்.
முதல் பெந்தகோஸ்தேவை லூக்கா 1:35 இல் காண்கின்றோம். அதுபோன்று இயேசுவின் உயிர்ப்புக்குப்பிறகு (திப 1:8,2), மரியா விரைவாகச் செல்கின்றார் என்பதையும் (லூக் 1:39), திருத்தூதர்கள் ஒன்றுகூடியதையும் (யோவா 20:16) இல், (திப 1:13) இல் காண்கின்றோம். தைரியமாக கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்க தாங்கள் கண்டதை கேட்டதை மற்றும் சமாதானத்தைக் கொண்டு செல்கின்றனர். திப 5:20 ஆண்டவரின் உயரிய திப 4:33 இல் காணுகின்றோம். மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் மற்றும் எலிசபெத்தைச் சந்தித்த இந்தநிகழ்வு நற்செய்தி அறிவிப்புக்கு முன்னோடியாகத் திகழ்கின்றது.மரியா கிறித்துவின் நற்செய்தியை ஏழைகளுக்கு எடுத்துரைக்கின்றார். வாழ்வு - சாவு (லூக் 3:2 4:1,19) இல் இதைக் காண்கின்றோம்.
இப்படி மரியா இயேசுவின் மனித உடல் எடுத்தலில் ஒன்றாகக் கலந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. அதோடு கொஞ்சம் கவனமாக முக்கியமான நிகழ்வுகளிலும் திருவழிபாட்டு நேரங்களில் கையாளப்படுகின்ற இறைவார்த்தைகளையும் உற்று நோக்கினால் இவைகள் நன்கு விளங்கும். டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, அமல உற்பவத் திருவிழா, 17-23 நவநாட்களில் வரும் விவிலியக் குறிப்புகள், கிறித்து பிறப்பு, திருக்குடும்பத் திருவிழா, ஆண்டின் முதல் நாள் கடவுளின் தாய், திருக்காட்சி, திருமுழுக்கு-திருப்பெயர்-கோவிலில் காணிக்கையாக்குதல்.
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை, இறுதி காலத்தைப் பற்றிய செய்திகள் இறைவாக்கினர் எசாயா புத்தகத்திலிருந்தும், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், அதிகமானச் செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. மற்றும் 17-லிருந்து 24 வரையுள்ள காலங்களில் அது திரு அவையின் கட்டளை செபமாக இருந்தாலும், விவிலியப் பகுதிகளான வாசகங்களாக இருந்தாலும், கிறித்து பிறப்பு விழாவுக்கு நம்மை தயாரிக்க அழைக்கின்றது. இது, கிறித்துவின் இரண்டாம் வருகைக்கு நம்மை தயார் செய்வதாகும். இந்த தயாரிப்பில் விவிலிய கதாப்பாத்திரங்கள் மூன்று மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
1. இறைவாக்கினர் எசாயா
2. திருமுழுக்கு யோவான்
3. கன்னி மரியா
1. இறைவாக்கினர் எசாயா
எசாயா இறைவாக்கினரின் போதனைகளில் எதிர்நோக்கிற்கான எதிரொலிகள் அதிகம் தெரிகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அடிமை வாழ்வில் அவர்களுக்கு நம்பிக்கை தருகின்றவராக மனிதருக்கு, எல்லா மனிதருக்கும் - எதிர்நோக்கியிருக்கின்றவர்களுக்கும் தீனிப்போடுகின்றவராக இருப்பதை நாம் காணுகின்றோம்.
தோல்விகளில் எசாயா காட்டும்:
- விடாமுயற்சி
- பயப்படாதே என்ற நிலை
- வேற்று நாட்டவரோடு உடன்படிக்கையை எதிர்ப்பது
- மக்களைக் கடிந்து கொள்ளுதல் - மக்களைஒழுங்குக்கு கொண்டு வருதல்
- அரசியல் - உடன்படிக்கை எதிர்த்தல்
வடக்குத் தெற்கு என்ற பிரிந்த நிலை. 10 இனமாக மற்றும் 2 இனமாகப் பிரிந்துள்ள நிலை.
2. திருமுழுக்கு யோவான்
இவர் இறைவாக்கினரில் இறுதியானவர். ஒட்டுமொத்த இறைவாக்கினர்களின் செய்தியும் இவரில் காணகிடக்கின்றன. இவர் மீட்பின் வரலாற்றை முழுமையாகக் காட்டுகின்றவராக இருக்கின்றார். மீட்பின் வரலாற்றில் இருக்கின்ற நம்பிக்கையை - எதிர்நோக்கை கொண்டு வருகின்றார். இறைவன் தன் மக்களுக்கு செய்ய விருக்கும் அடையாளங்களைக் காட்டுகின்றார். மெசியாவின் முன்னோடியாக இருந்து, மக்களைத் தயார்படுத்துகின்றார். இதைத்தான் பாலைவனத்தில் குரல் ஒன்று ஒலிக்கின்றது (எசா 40 : 3) இல் நாம் காணுகின்றோம். மீட்பின் முன் அறிவிப்பைத் தருகின்றார் (லூக் 1:77-78) எல்லாவற்றுக்கும் மேலாக கிறித்து நம்மோடு இருக்கின்றார் என்று சுட்டிக் காட்டுக்கின்றார் (யோவா 1:29-44).
3. மரியின் ஒத்துழைப்பு
இயேசு கிறித்து மனுவுடல் எடுக்கும் மறைபொருளில் மரியா மனமகிழ்வோடு இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்குகின்றார், திருவருகைக்கால வழிபாட்டு சிறப்புகளைக் காணும்போது, அதன் கொண்டாட்டங்களை சற்று உற்று கவனிக்கும் போதும், இது ‘மரியின் மாதமோ?’ என்று நினைக்கத்தோன்றும். இதில் மரியா கிறித்து மனுவுடல் எடுத்தலில் மிகவும் அழகாகப் பொதிந்துள்ளார். அவரின் சிறப்பான ஒத்துழைப்பையும், நாம் பார்க்கின்றோம்.
அமல உற்பவத் திருவிழா
அமல உற்பவத் திருவிழா மரியா மீட்படைந்தவராக மனுகுலத்தின் ஒரு முன்னோடியாக காட்டுகின்ற விழாவாகும். அத்தோடு கிறித்து மனுவுடல் எடுத்தலின் கனியாக திருப்பலியின் இரண்டாம் நற்கருணை மன்றாட்டு செபத்தில் மரியா ஒரு புதிய திரு அவையாக உருவாகின்றார். அத்தோடு, திரு அவை கிறித்துவின் மணவாட்டியாக மாசு மருவற்றதாக காட்டுதல் அவரின் அழகை மிளிரச்செய்கின்றது.
திரு அவை அருட்சாதனமாக, வரலாறாக முழுமையாக உருப்பெறுகின்றது. திருவருகைக்கால கடவுள்; வரலாற்றுக் கடவுள் ஆவார். நாசரேத்தூர் இயேசு மனிதரை முழுமையாக நிறைவாக மீட்க வந்தார். இவர் தந்தையின் திருமுகத்தை பிரதிபலிப்பவராக இருக்கின்றார் (யோவா 14:9). இயேசுவின் பிறப்பு மனிதருக்கு ஒரு முழுமையான மீட்பைத் தருகின்றது. இயேசு கிறித்துவின் பிறப்பின் அறிவிப்பு மனிதத்தை வளர்த்தெடுப்பதாகும். அத்தோடு இறுதிக்காலத்தை வளர்த்தெடுப்பதாகும். கடவுளின் வருகையை காட்ட ஒவ்வொரு மனிதனும் இறை வார்த்தையை அறிவிக்க வேண்டும்.
திருவருகைக்கால ஆன்மீகம்
விழிப்புடன், மற்றும் மகிழ்வுடன் காத்திருத்தலாகும். மனமாற்றத்திற்கு நம்மை உட்படுத்துதலாகும்.
வாரும் வாரும் ஆண்டவரே விரைவாக வாரும் (மாரநாதா) (திவெ 22: 17-20).
நம் கடவுள் எதிர்நோக்கின் கடவுள் (உரோ 15:13, 8: 24-25).
திருமுழுக்கு யோவானின் போதனை நமக்கு தொடர் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.
கடவுளின் ஏழையாக (Anawim) இருக்க நமக்குக் கற்றுக்கொடுக்கின்றது.
எளிமையும், கருணையும் மற்றும் மென்மையும் கொண்டு வாழ நம்மை அழைக்கின்றது (மத் 5: 3).
* இது இறைவன் தரும் கொடை. ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். தாவீதின் அரசை நிலை நாட்டுவார்.... (எசா 9:6) கடவுளின் அன்பு தன் ஒரே பேறான மகனை அனுப்பியதில் தெரிகின்றது (யோவா 3:16).
* மனித உரு எடுத்ததால் மனிதர்களோடு தோழமைக் கொண்டார்.
* நமது மீட்புக்காக செல்வராக இருந்தும் ஏழையானார் (2கொரி 8:9).
* கிறித்துவின் பிறப்பு மனித வாழ்வின் புனிதத்தைக் காட்டுகின்றது. இந்த உலகின் ஒவ்வொரு பிறப்பும் இதை வெளிப்படுத்துகின்றது. அவர் நம்மோடு வாழ்ந்தார். அவர் நம் கண்களுக்குப் புலப்பட்டார் இது மரியாவின் ஒத்துழைப்பால் சாத்தியமானது (1யோவா 1:2).
* மெசியாவின் கொடைகள்: மகிழ்வு, அமைதி காரணம் அவர் அமைதியின் அரசர் (எசா 9:6).
* நல்மனத்தவருக்கு பூவுலகில் அமைதியாகுக (லூக் 2:14).
* எளிமை, ஏழ்மை மற்றும் நம்பிக்கை போன்ற இறைவனின் கொடைகளினால் நம்மை அணி செய்து இறைவன் நம்மோடு என்ற நிலையில் நமது வாழ்வை நீதியிலும், நேர்மையிலும், தூய்மையிலும், புனிதத்திலும் வளர்த்து நம்மிடையே குடிகொள்ளவந்த இறைவன். நம்மில் இரண்டறக் கலந்து நமக்கும் நம்மோடு வாழும் அனைவருக்கும் வானவர் அறிவித்த மகிழ்வையும், அமைதியையும், தந்து நம்மை சிறப்புடன் வாழச் செய்வாராக என்று வாழ்த்தி,
பேயும் போயின அமரர் பிந்தினர்
தீயும் போயின அறங்கள் தேறின
நோயும் போயின நூற்கள் தோந்தன
தோயும் ஓகையில் துலங்கும் வையமே (100)
- தேம்பாவணி, மகவு அருள் படலம், இறை அவதாரத்தால் உலகு அடைந்த நன்மை)
இறைமகன் கிறித்து மனுவுரு எடுத்ததால், பேய்கள் எல்லாம் போய் ஒழிந்தன, விண்ணவர்களோ, சிறப்பில் மண்ணவர்களுக்குப் பிந்தினர், தீமைகள் எல்லாம் ஒழிந்து போயின, தருமங்கள் தழைத்தன, நோய்கள் அழிந்தன, மறைநூலைப் பற்றி அறிவு தெளிந்தனர் இதனால் இவ்வையகத்தில் இருக்கும் மக்கள் இன்புற்று மகிழ்ந்தனர்.
திருவருகைக் காலத்தில் நம்மையே நன் முறையில் தயாரித்து, கிறித்துவின் உடனிருப்பை உணர்ந்து நல்ல மனிதர்களாக, கிறித்துவர்களாக, நமது நிலைக்கேற்றவாறு சமூக மேம்பாட்டுக்கு உழைத்து, இறை அரசின் மதிப்பீடுகளை நமதாக்குவோம்.
Comment