திருத்தூதர் தோமா
தமிழகத்தில் கிறிஸ்தவம்
முன்னுரை
தமிழகத் திரு அவை ஈராயிரம் ஆண்டுகள் பழம்பெருமைமிக்கது. ஆண்டவர் இயேசுவால் தெரிந்தெடுக்கப்பட்ட திருத்தூதர் தோமாவால் கிறிஸ்தவம் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டது, அடித்தளமிடப்பட்டது. ஐரோப்பாவின் பல நாடுகள் நற்செய்தி முழக்கத்தை கேட்பதற்கு முன்னே தமிழ்கூறும் நல்லுலகம் ஆண்டவரின் வாழ்வுதரும் வார்த்தைகளை கேட்கும் ஆசீரைப்பெற்றது. புனித தோமா தன் செந்நீர் சிந்தி, தன்னை இழந்து, தமிழ் மண்ணில் நற்செய்தி விழுமியங்களை விதையுறச்செய்தார். பல மறைபணியாளர்கள் மற்றும் இறை மக்களின் தன்னலமற்ற அர்ப்பணத்தால் அது இன்று ஓங்கி உயர்ந்து, நின்று பூத்துக் குலுங்கும் பெரும் சோலையாக திகழ்கின்றது. காலந்தோறும் கிறிஸ்தவம் கலங்கரை விளக்காக ஒளிர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.
தமிழக வரலாற்றின் எழுச்சியில், வளர்ச்சியில் கிறிஸ்தவத்தின் பங்களிப்பு மிகப்பெரியது. கிறிஸ்தவம் என்றும் மக்கள் சார்ந்தே பயணிக்கின்றது; கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்ற மக்கள் எழுச்சித் தளங்களை உருவாக்கி மாபெரும் சமூக புரட்சிக்கு, ஏற்றத்திற்கு வழிவகுத்தது. மறைப்பணியோடு, அறப்பணிகளையும் அன்பொழுக ஆற்றுவதால், மக்களின் மனங்களில் கிறிஸ்தவம் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. கிறிஸ்தவத்தை மக்கள் எப்போதும் நம்பிக்கையூட்டும் தளமாக கருதுவது, நற்செய்தி பயணத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி, உற்சாகம். ஆகவேதான், ஈராயிரம் ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தகர்த்து, இறையாட்சிப் பணியில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது.
நமது இறைநம்பிக்கை வரலாறு
தமிழகத்தில் கிறிஸ்தவம் என்ற இந்நூல் வரலாற்றுப் பின்னணிகளை முறையாக உள்ளடக்கிய ஓர் ஆய்வு நூல். தமிழக கிறிஸ்தவ வரலாற்று நூல்கள் சில இருந்தாலும், காலந்தோறும் நமது இறை நம்பிக்கை வரலாற்றை மீள்பதிவு செய்ய வேண்டியது நமது கடமை. நாம் பெற்றுக்கொண்ட விசுவாச வரலாற்றை மீண்டும், மீண்டும் மறுவாசிப்பு செய்வது, நற்செய்தியின் பாதையில் தொடர்ந்து உயிரோட்டமாக பயணிக்க, அடுத்த தலைமுறைக்கு நமது விசுவாசத்தை எடுத்து செல்ல உதவி செய்கிறது. இந்நூல் திருத்தூதர் தோமா துவங்கி இன்றைய முதன்மையான நிகழ்வுகள் வரையிலான தமிழக கிறிஸ்தவ வரலாற்றை பதிவு செய்கிறது. கத்தோலிக்கர், புராட்டஸ்டாண்ட், பெந்தெகோஸ்தே சபைகள் என கிறிஸ்தவத்தின் அனைத்துப் பிரிவுகளின் நற்செய்திப் பணிகளையும், பங்களிப்பையும் எட்டுப் பாடங்கள் வழியாக இந்நூல் பேசுகிறது.
தமிழ் மண்ணில் முதல் நற்செய்திப்பணி
திருத்தூதர் தோமா கி.பி 52 முதல் 72 வரை பழந்தமிழகத்தின் இன்றைய பகுதிகளான கேரளா மற்றும் தமிழ் நாட்டில் கிறிஸ்து அறிவிப்புப்பணியை மேற்கொண்டார். 20 ஆண்டுக்கால தனது நற்செய்திப் பயணத்தில் திருத்தூதர் தோமா இந்தியாவில் முதல் கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கி, ஏழு ஆலயங்களை எழுப்பி, மயிலை பரங்கிமலையில் மறைசாட்சியாக மரித்தார் என பாரம்பரியம் கூறுகின்றது.
புனித தோமா கிறிஸ்தவர்கள் என்ற பெயரில், கேரளாவில் சிரியன் வழிபாட்டுமுறை கிறிஸ்தவம் தொடர்ந்து தழைத்தோங்கியது. சிரியாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, தோமா கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை காத்துக்கொண்டார்கள். ஆனால், தமிழ் நாட்டில் கிறிஸ்தவத்தின் சுவடுகள் திருத்தூதர் தோமாவிற்கு பிறகு காணக்கிடைக்கவில்லை. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரின் வருகைக்குப் பின் அவர்களின் ஆழமான கத்தோலிக்க விசுவாசம், பிரான்சிஸ்க்கன் துறவிகள் மற்றும் சாந்தோம் பதுரவாதோ மறைமாவட்ட நற்செய்திப் பணிகளால் கிறிஸ்தவம் மீண்டும் எழுச்சிப்பெற்றன.
இயேசுசபை மதுரை மறைப்பணித்தளம்
புனித பிரான்சிஸ் சவேரியார் கி.பி. 1542 இல், கோவா வந்தடைந்தார். மறைப்பணித்தாகம் கொண்ட சவேரியார் 1543 ஆம் ஆண்டு முதல் 1545 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருவிதாங்கூர் கடலோரங்கள் மற்றும் உட்புறப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்களித்தார். 1545 இல் சவேரியார் மலாக்கா, ஜப்பான் நோக்கி தனது மறைப்பணி பயணத்தை தொடர, அவரது பணியை புதிய இயேசு சபை மறைபணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 50 ஆண்டுகள் முத்துக்குளித்துறை மறைதளத்தில் பணியாற்றிய தந்தை என்றிக்கே என்றீக்கசு அவர்களின் பணி சீர்மிகுந்தது.
இத்தாலிய இயேசு சபைக்குரு இராபர்ட் தெ நொபிலி 1606 இல் மதுரை பழைய மறைப்பணித்தளத்தை நிறுவி, பிராமண மற்றும் உயர்குடிகளை கிறிஸ்தவத்திற்கு ஈர்த்தார். பிராமணர் அல்லாத மக்களுக்கு நற்செய்தி அறிவித்த மறைப்பணியாளர்கள் பண்டார சுவாமிகள் என அழைக்கப்பட்டனர். பல்தசார் தெ கோஸ்தா, புனித அருளானந்தர், ஜான் வெனான்சியுஸ் புசே, வீரமா முனிவர் ஆகியோர் இம்மறைப்பணி தளத்தில் திறம்பட பணியாற்றியவர்கள். 1773 இல் இயேசுசபை உலகளவில் தடைசெய்யப்பட மதுரை பணித்தளம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மறைபணியாளர்கள் இன்றி தடுமாறிய மதுரை பணித்தளத்தை, கோவா மற்றும் கத்தனார் குருக்கள் ஆக்கிரமித்தனர். பதுரவாதோ மற்றும் நற்செய்திப் பேராயம் இடையே அதிகாரப் போட்டிகளும், நிர்வாக சிக்கல்களும் தொடர் கதையாகி கிடந்தன. தடை நீக்கப்பட பிரெஞ்சு இயேசுசபையினர் 1837 இல், மீண்டும் தமிழகம் திரும்பி, திருச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மதுரை மறைத்தளத்தை உருவாக்கினர். நற்செய்தி, கல்வி மற்றும் சமூக விடுதலைக்கு மதுரை புதிய மறைத்தளம் மகத்தான பணியாற்றியது. ஆயர் காணோஸ், தந்தை கார்னியர் மற்றும் இறைஊழியர் அதிரியான் கௌசானல் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டனர்.
சென்னை - புதுச்சேரியில் கிறிஸ்தவம்
போர்த்துக்கீசிய கத்தோலிக்கரின் வருகையால் மறுவாழ்வுப்பெற்ற தமிழக கிறிஸ்தவம், மயிலை பதுரவாதோ மறைமாவட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் பல்வேறு பணித்தளங்களை நிறுவி, நற்செய்திப் பணியாற்றியது. 1639 இல் ஆங்கிலேயரால் நிறுவப்பட்ட சென்னை மாநகரில் பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள், ஐரிஷ் குருக்கள் மற்றும் சலேசியர்கள் நற்செய்திப் பணியாற்றி, புதிய கிறிஸ்தவ தளங்களை உருவாக்கினர். தந்தை எப்ரேம் தெ நெவேர், பேராயர் லூயிஸ் மத்தியாஸ் ஆகியோர் சென்னை மறைத்தளத்தில் அரும்பணியாற்றினர். இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் இயேசுசபையினர், சலேசிய குருக்கள் மற்றும் பெண் துறவற சபையினர் கல்வி மற்றும் மருத்துவ துறைகளில் முத்திரைப்பதித்து, நவீன சென்னையின் வளர்ச்சிக்கு வித்திட்டனர்.
1674 இல், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய புதுச்சேரியின் முதல் மறைபணியாளர்கள் பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள். வட ஆற்காடு, தென்னாற்காடு, கொங்கு மற்றும் மைசூரு பகுதிகளை உள்ளடக்கிய கர்னாடிக் மிஷன் 1700 இல் உருவாக்கப்பட, அங்கு பிரெஞ்சு இயேசு சபையினர் மறைபணியாற்றினார். 1776 இல் கர்னாடிக் மிஷன் பொறுப்பை ஏற்ற பாரிஸ் அந்நிய வேத போதக குருக்கள் தங்களது அயராது உழைப்பால் இம்மறைப்பணித்தளத்தை பல்வேறு வளர்ச்சிக்கு இட்டுச்சென்றனர். ஆயர் பொன்னாந்து, தந்தை தாராஸ் போன்றோர் இம்மறைப்பணித்தளத்தின் புகழ்பெற்ற மறைப்பணியாளர்கள்.
கிறிஸ்தவ தமிழ் தொண்டர்கள்
கிறிஸ்தவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் அளப்பெரிது. அதிலும் அந்நிய கிறிஸ்தவர்கள் மறைத்தொண்டோடு தமிழ்த்தொண்டும் புரிந்தது போற்றுதலுக்குரியது. கத்தோலிக்க அருட்பணியாளர்கள் இராபர்ட் தெ நொபிலி மற்றும் வீரமாமுனிவர் தமிழ் இலக்கியப் பயணத்தில் புதிய எழுச்சியை தந்தனர். மேலும், தந்தை என்றிக்கே என்றீக்கசு மற்றும் இறைஊழியர் சவீனியன் துப்புய் தமிழ் அச்சுத்துறையில் பெரும் பங்காற்றினார். புராட்டஸ்டாண்ட் மறைபணியாளர்கள் சீகன் பால்க், கால்டுவெல் மற்றும் ஜி.யு. போப் போன்றோரின் தமிழ்ப்பணிகள் வரலாற்று சிறப்பு மிகுந்தவை. மாயூரம் வேதநாயகம், கிருட்டிணப்பிள்ளை, தந்தை தனிநாயகம் அடிகள் போன்ற எண்ணற்ற தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழுக்கு தொண்டாற்றி வருவதை இத்தொடர் பேசுகிறது.
பிரிவினை சபையினரின் மறைப்பணி
கி.பி. 1678 இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் எழுந்த ஆங்கிலிக்கன் புனித மேரி ஆலயமே, இந்தியாவில் எழுப்பப்பட்ட முதல் புராட்டஸ்டாண்ட் ஆலயம். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை வேப்பேரி மற்றும் தரங்கம்பாடியில் லூத்தரன் மறைத்தளங்கள் நிறுவப்பட்டன. சீகன் பால்க் தமிழில் முதலில் புதிய ஏற்பாட்டை 1715 இல் வெளியிட்டார். புராட்டஸ்டாண்ட் சபையினராகிய ஆங்கிலேயரின் ஆதரவுடன் தென்னிந்திய திரு அவை தமிழகமெங்கும் ஆழமாக வேரூன்றியது. கல்வி மற்றும் மருத்துவப்பணிகளை தங்கள் தளங்களில் நிறுவி மக்களுக்கு சேவை புரிகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் பெந்தெகோஸ்தே சபைகள் வழிபாட்டில் ஆவி எழுப்புதல் செபம் போன்ற புதிய முறைகளை கையாண்டு தன்னாட்சி செப இல்லங்களை உருவாக்கி கட்டமைக்கப்பட்ட திரு அவைகளுக்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன.
இன்றைய திரு அவை
இந்திய விடுதலை இயக்கம், திராவிட அரசியல் போன்ற இந்திய தேசிய நீரோட்டத்தில் தமிழ் கிறிஸ்தவர்களின் பங்கேற்பு, பங்களிப்பு ஆகியவற்றை இத்தொடரில் காணலாம். 1886 இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இந்தியாவில் புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். சுதேசி குருக்கள், மறைமாவட்ட குருக்களின் அர்ப்பணம், நிர்வாகம் ஆகியவற்றால் 20 ஆம் நூற்றாண்டு தமிழக திரு அவை பன்முக வளர்ச்சி அடைந்துள்ளது. திரு அவையில் இரண்டாம் வத்திக்கான் தாக்கத்தின் காரணமாக பொதுநிலையினரின் பங்கேற்பு, அன்பியங்கள், பங்குப்பேரவை, மறைமாவட்ட பணிக்குழுக்கள், ஒருங்கிணைந்த திரு அவை போன்ற முன்னெடுப்புகள், புதிய திருத்தலங்கள், பக்தி முயற்சிகள் கிறிஸ்தவ வாழ்வுக்கு புதியபொலிவை தந்துள்ளன. ஆனால், தமிழகத் திரு அவையில் அனைத்து மட்டத்திலும் புரையோடி கிடக்கும் சாதீய பாகுப்பாடுகள், சாதீய மோதல்கள், சாதீய அடையாளங்கள், அதிகாரப்போக்கு, பாராமுகம், கிறிஸ்தவ நெறி தவறல் ஆகியவை நற்செய்திப்பணிக்கு மிகப்பெரிய சறுக்கல்கள். மேலும், இந்நாட்களில் இந்துத்துவ பெயரால் கட்டவிழ்க்கப்படும் மத மோதல்கள், தீவிரவாதம் போன்றவை சிறுபான்மையான சமயங்களுக்கு பெரும் சவால்களே. இவற்றின் மத்தியில் இயேசுவின் நற்செய்திப்பணி தொடர்கிறது. இவ்வாறு, ஈராயிரம் ஆண்டு தமிழக கிறிஸ்தவ வரலாற்றை, உரிய தரகுகளின் அடிப்படையில் சுவைபட இத்தொடர் அமையவுள்ளது. வாசிப்போம்! நற்செய்தி அறிவிப்போம்!(தொடரும்...)
Comment