No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம்

இந்தியாவில் தோமாவின் பணிகள்

1. தமிழகத்தில் கிறிஸ்தவம் விதைக்கப்படுதல்

1.1. தமிழ் மண்ணில் திருத்தூதர் தோமா

நற்செய்தி நூல்கள்படி புனித தோமா இயேசுவின் பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தோமா என்றால் கிரேக்க மொழியில்திதிம்அதாவது, இரட்டையர் என்பது பொருள். “டோமாஎன்பது அரமாயிக் மொழியில் இதன் வேர் சொல்லாகும். விவிலிய அறிஞர்கள் கூற்றுப்படி, கலிலேயாவின் பன்சதா திருத்தூதர் தோமா பிறந்த ஊராகும். நற்செய்தியாளரான புனித யோவான் மூன்று இடங்களில் திருத்தூதர் தோமா, மீட்பர் இயேசுவோடு உரையாடுவதை பதிவு செய்துள்ளார். தனது நண்பர் இலாசர் இறந்த செய்திக் கேட்டு துடித்துப்போன இயேசு: “யூதேயாவுக்கு நாம் செல்ல வேண்டுமென்றார்”. அதற்கு திருத்தூதர்கள் இந்நேரத்தில் அங்கு செல்வது நமது பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என அஞ்சினர். ஆனால், திருத்தூதர் தோமா மட்டும் மனவுறுதியுடன்நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்என்றார் (யோவா 11 : 16).

இயேசு, தனது இறுதி இராவுணவின்போது, நான் தந்தையிடம் திரும்பிச் செல்கின்றேன், அவ்விடத்திற்கான வழி உங்களுக்குத் தெரியும் என்றார். அதற்கு தோமாஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார் (யோவா 14:5). அவரின் ஆழமான கிறிஸ்தியல் கேள்விக்குவழியும் உண்மையும் வாழ்வும் நானே; என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’’ (யோவா 14 : 6) என்றார் இயேசு. புனித தோமாவைப் பற்றிய புனித யோவான் நற்செய்தியின் மூன்றாவது பதிவு (யோவா 20 : 24-29) புகழ் பெற்றது. கிறிஸ்து சாவை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை நம்பாததால்சந்தேக தோமாவாககிறிஸ்தவர் அனைவரிடமும் பரிச்சயமானார். உயிர்த்த இயேசுவைக் கண்டு, பாவித்து மனப்பூர்வமாக விசுவசித்தபோது, அவரில் எழுந்த ஆழமான அனுபவ அறிக்கை "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவா 20 : 27). கிறிஸ்துவில் புனித தோமா கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை, அவரை இரத்தம் சிந்தி, மறைசாட்சியாக மரிப்பதற்கும் உறுதிப்படுத்தியது. இந்தியாவில் திருத்தூதர் தோமா நற்செய்தி அறிவித்து, மயிலையில் மறைசாட்சியாக மரித்தார் என சிரியாக் மொழியில் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டபுனித தோமாவின் பணிகள்என்ற நூலும், மலபார் பகுதியின் வாய்மொழி மரபு என்ற இருவேறு கிறிஸ்தவ பாரம்பரியங்கள் பறைசாற்றுகின்றன. இருப்பினும், திருத்தூதர் தோமாவின் இந்திய வருகை இன்றும் அதுவொரு விவாதப் பொருளாகவே இருக்கின்றது.

இந்தோ - பர்த்தியாவில் திருத்தூதர் தோமா

தோமாவின் பணிகள்என்ற நூல், திருத்தூதர் தோமா இந்தோ-பர்த்தியா (தட்சசீலம்) நாட்டில் நற்செய்தி அறிவித்ததைப் பற்றி கூறுகின்றது. இந்தோ-பர்த்தியா என்பது இன்றைய கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, எருசலேமில் ஒன்றுக்கூடிய பன்னிரெண்டு திருத்தூதர்கள், தாங்கள் உலகின் எந்தப் பகுதிக்கு நற்செய்தி அறிவிக்க செல்ல வேண்டுமென திருவுளச் சீட்டு எடுக்கின்றனர். அதில் தோமாவிற்கு இந்தியா என்று வருகிறது. ஆனால், அவர் இந்தியாவிற்கு செல்ல மறுக்கின்றார். இயேசு கனவில் தோன்றி, வலியுறுத்திய பிறகும் தயங்குகின்றார். இவ்வேளையில் இந்தோ-பர்த்தியா அரசன் கொந்தபோரஸ், தனது தலைநகரான காந்தராவில் பெரும் அழகிய மாளிகை எழுப்ப தகுந்த தச்சனையும், ஒரு கட்டடக் கலைஞனையும் தேடி, ஓர் அடிமையைக் கொண்டு வரச் சொல்லி, ஹப்பன் என்ற பெரும் வணிகரை அனுப்பி வைத்தான். எருசலேமில் அவ்வணிகன் இருந்தபொழுது, இயேசுவே அவ்வணிகனுக்கு தோன்றி, திருத்தூதர் தோமாவை அடிமையாக விற்கின்றார்.

திருத்தூதர் தோமாவைச் சந்தித்த அரசன் கொந்தபோரஸ் பெரும் நிதியைக் கொடுத்து, தனக்கான அரச மாளிகையை எழுப்ப கட்டளைப் பிறப்பித்தான். தோமா அந்நிதியைக் கொண்டு, மாளிகை கட்டாமல் அதை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து உதவி, கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசன், என் மாளிகை எங்கே? என்றான். அதற்கு திருத்தூதர் தோமா, அதை விண்ணகத்தில் கட்டியெழுப்பியுள்ளேன் என்றார். கடுஞ்சினங்கொண்ட அரசன், தோமாவை சிறையில் அடைத்தான். அந்நேரத்தில் இறந்த நிலையிலிருந்து மீண்டெழுந்த அரசனின் தம்பி காத், விண்ணகத்தில் தோமா தனது அண்ணனாகிய அரசன் கொந்தபோரசிற்கு அழகிய மாளிகை கட்டியெழுப்பியுள்ளார் என்று கூறுகின்றான். இந்நிகழ்விற்குப் பிறகு, தோமா நற்செய்தி அறிவிக்க விடுவிக்கப்பட, அரசனும், அவரது தம்பியும் இயேசுவை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

இவ்வரிய நிகழ்வை கேள்விப்பட்ட மசாதா (மயிலையின் திரிபு உச்சரிப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது) அரசனின் தளபதி தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட தனது மனைவி மற்றும் மகளை விடுவிக்க திருத்தூதர் தோமாவை மசாதா நாட்டிற்கு அழைத்து வருகிறார். திருத்தூதர் தோமாவின் இறை வேண்டலால் நலம் பெற்ற அந்நாட்டின் அரசியும், திருமுழுக்குப் பெற்று, திருமண வாழ்விலிருந்து வெளியேறி, தூய துறவு வாழ்வு மேற்கொள்கின்றனர். இதனால் தன்னை மறந்த மனைவியின் பொருட்டு, பெரும் கோபம் கொண்ட அரசன், திருத்தூதர் தோமாவை ஒரு மலையில் வைத்துக் கொலை செய்தான் என தோமாவின் பணிகள் என்ற அந்நூல் பேசுகின்றது. இந்நூலுக்கான வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்காததால், இச்செய்திகள் ஆய்வுக்குட்பட்டவையாகவே அறியப்படுகின்றன.

மலபாரில் திருத்தூதர் தோமா

பண்டைய தமிழகம் என்பது, இன்றைய தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களை உள்ளடக்கியது. திருத்தூதர் தோமா பழந்தமிழ்நாட்டின் அன்றைய சேரநாட்டிற்கு உட்பட்ட மலபார் பகுதியில் நற்செய்தியை அறிவித்து, இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கு அடித்தளமிட்டார். நாங்கள் புனித தோமாவின் கிறிஸ்தவர்கள் என கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர். மலபார் கிறிஸ்தவர்கள் மரபின்படி திருத்தூதர் தோமா கி.பி. 52 இல், மலபாரின் கொடுங்கலூர் துறைமுகத்தை வந்தடைந்தார். இவ்வூர் முசிறி, கிராங்கனூர், மகோதயபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. கிராங்கனூரில் வாழும் யூதர்களிடையே முதலில் நற்செய்தி அறிவித்து, நம்பூதிரி, நாயர் குடும்பங்களை கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்தார். திருத்தூதர் தோமாவின் முதல் மறைத்தளமாக கிராங்கனூர் நம்பப்படுகிறது. எனவே, இங்குதான் கொடுங்கலூரில் முதல் ஆலயத்தை எழுப்பினார். தோமா கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நற்செய்திப் பணியாற்றி, ஏழரை ஆலயங்களை எழுப்பியதாக பாரம்பரியம் கூறுகின்றது.

1. கொடுங்கலூர் (கிராங்கனூர்), 2. கொல்லம் - இங்கு திருத்தூதர் தோமா ஓராண்டு தங்கி 1400 பேருக்கு திருமுழுக்களித்தார். 3. நிரணம், 4. நிலாக்கல் (காயல்), 5.கோத்தமங்கலம் - இங்கே ஓராண்டு தங்கி 1600 பேரை திருமறையில் சேர்த்தார். 6. கோட்டக்காவு - (பரூர்). 7. பாளையூர், 8. திருவிதாங்கோடு - (கன்னியாகுமரி) இதை சிறிய ஆலயமாக அமைத்ததால் மக்கள்அரைப்பள்ளி’’ என அழைத்தனர். மலபாரில் ஓய்வின்றி இறைப்பணியாற்றிய திருத்தூதர் தோமா மக்களை வழிநடத்த அருட்பணியாளர்களையும், மலபார் திரு அவையை நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்காக இரு பிரிவுகளாகப் பிரித்து, வடக்கு பகுதிக்குகேபாஎன்ற கொல்லம் ஆயரையும், தெற்கு பகுதிக்குபவுல் பெருமாள்என்ற ஆயரையும் தோமா நியமித்ததாக பாரம்பரியம் குறிப்பிடுகின்றது.

மயிலையில் தோமாவின் மறைப்பணி

சேர நாட்டின் மலபாரில் கி.பி. 52 முதல் கி.பி. 59 வரை கிறிஸ்துவை அறிவித்த தோமா கன்னியாகுமரி, தொண்டி கடற்கரை வழியாக சோழநாட்டின் கருமணல் கடற்கரையில் நற்செய்திப்பணி ஆற்றினார். அவருடன் சில மலபார் கிறிஸ்தவர்களும் பயணித்ததாக நம்பப்படுகிறது. மதுரை, கரூர், உறையூர், பூம்புகார், செஞ்சி, காஞ்சி வழியாக மயிலாப்பூர் சென்றிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர், மரக்காணத்தில் மருத நிலத்து விவசாயிகளை கிறிஸ்தவத்திற்கு கொண்டு வந்தார் என ஆய்வாளர் மா. சோ. விக்டர் குறிப்பிடுகின்றார்.

மயிலாப்பூரில் மூன்று இடங்கள் தோமா வாழ்வோடு ஒன்றித்துக் காணப்படுகின்றன. சின்னமலை, பரங்கி மலை மற்றும் சாந்தோம் தேவாலயம். சின்ன மலையிலுள்ள குகையை தனது வீடாகப் பயன்படுத்தி, கடும் தவ வாழ்வை மேற்கொண்டார். சின்ன மலை மற்றும் அக்குகையின் உட்பகுதியில் முழந்தாள்படியிட்டு, மணிக்கணக்காக செபித்தார். தன்னைத் தேடி வந்த மக்கள் கூட்டத்திற்கு அம்மலையிலிருந்து நற்செய்தி அறிவித்தார். அக்குகையில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவை தாங்குகின்ற புனித மரியன்னையின் படம், நற்செய்தியாளர் லூக்கா அவர்களால் தீட்டப்பட்டு, தோமா தன் கைப்பட இந்தியாவிற்கு எடுத்து வந்த புனித ஓவியமாக மக்களால் நம்பப்படுகிறது. தனது செப, தவ, நற்செய்தி வாழ்வால் பல புதுமைகளையும் திருத்தூதர் ஆற்றினார்.

மயிலை சின்னமலையில் தங்கி, தோமா கிறிஸ்து அறிவிப்புப் பணியில் ஈடுபட்டபோது, நற்செய்தியை ஏற்காதவர்கள் அவரை ஈட்டியால் முதுகில் குத்தினர். அக்குகையில் திருத்தூதர் இறைவேண்டல் செய்யும்போது, இந்நிகழ்வு நடைபெற்றது. அக்குகையிலுள்ள குறுகிய சந்து வழியாக, திருத்தூதர் தோமா பரங்கிமலைக்கு தப்பிச் சென்றார். அங்கு இரத்தக் காயங்களுடன் சில நாட்கள் துன்பத்தை அனுபவித்தப் பிறகு, கி.பி. 72 இல், மறைசாட்சி மரணத்தைத் தழுவினார். இறந்த அவரது உடலை, அவரின் சீடர்கள் இன்றைய புனித தோமையார் தேசிய திருத்தலப் பேராலயம், சாந்தோமில் நல்லடக்கம் செய்ததாக பாரம்பரியம் கூறுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில், திருத்தூதரின் கல்லறையை போர்த்துக்கீசியர்கள் அடையாளம் கண்டு, அக்கல்லறை மீது சாந்தோம் பேராலயத்தைக் கட்டியெழுப்பினர். அக்கல்லறையைச் சுற்றி சாந்தோம் என்ற புதிய கிறிஸ்துவ நகரையும் உருவாக்கி, ஏராளமான போர்த்துக்கீசிய குடும்பங்கள் குடியேறின. தோமாவின் கல்லறை மக்கள் அடிக்கடி தரிசிக்கும் திருத்தலமாக திகழ்ந்ததாக அவ்வப்போது வந்துச் சென்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் வருகைக்குப்பின், திருத்தூதர் தோமா கல்லறை நீடிய புகழ் பெற்றது.

தோமாவைப் பற்றிய இந்தியக் குறிப்புகள்

இந்தியாவில் தோமாவைப் பற்றிய செய்திகள் மலபார், மயிலாப்பூர் () சோழ மண்டலக் கடற்கரை மற்றும் கிழக்கு சிரியன் திரு அவை மரபுகளை உள்ளடக்கியது. இவைகள் பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், தெருக்கூத்து, நாடகம், நடனம் போன்ற வாய்வழிச் செய்திகளாகும். ரம்பன் பாட்டு, வீரடியான் பாட்டு, மார்கம் களிப்பாட்டு போன்றவை வழிவழியாக இன்றும் தோமாவின் இந்திய வருகை மற்றும் நற்செய்திப் பணிகளை எடுத்துக் கூறும் ஆவணங்களாகும். இப்பாடல்கள் தோமாவின் சீடர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. விழாக்கள், திருமணம் மற்றும் ஏனைய முக்கிய நிகழ்வுகளில் இன்றும் இப்பாடல்கள் ஒலிக்கின்றன. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள், தோமாவைப் பற்றிய மலபார் மரபுகளைக் கைப்பற்றி, உதயம் பேரூர் சங்கத்திற்குப் பிறகு அழித்தனர் என்கின்றனர் சிரியன் கிறிஸ்தவர்கள்.

ரம்பன் பாட்டு திருத்தூதர் தோமா கி.பி.50 தனு மாதத்தில் (டிசம்பர்-ஜனவரி) மலபாரிலிருந்து மயிலாப்புரம் (மயிலாப்பூர்) சென்றார், அங்கிருந்து சீனா சென்று, மீண்டும் மயிலாப்பூர் வந்து மலையாட்டூர் வழியாக மலபாருக்கு மீண்டும் வந்து, கிறிஸ்தவர்களை வழிநடத்தினார் என்கின்றது. மேலும், கி.பி.69 இல் தமிழ் பகுதிகளுக்கு பயணித்து, எண்ணற்ற மக்களுக்கு நற்சுகம் அளித்தார். சைவக் குருக்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கி.பி.72 இல், சின்ன மலைக்குச் செல்லும் வழியில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் என, அப்பாடல் தோமாவின் திருப்பணிகளைப் பற்றிப் பாடுகின்றது. மனுவேல் கோமஸ், மைக்கோல்வாஸ், புனித பிரான்சிஸ் சவேரியார், தெ பாரோஸ், அந்த்ராதா, ஆந்த்ரே தெ சாந்த மரியா போன்றோர் மயிலையில் திருத்தூதர் தோமாவின் கல்லறைப் பற்றிய ஆய்வினை போர்த்துக்கீசிய அரசுக்கு சமர்ப்பித்தனர். இது மயிலை மரபு என அழைக்கப்படுகிறது.

திதாஸ்காலியா அப்போஸ்தோலோரும்” (திருத்தூதர்களின் படிப்பினைகள்) என்ற நான்காம் நூற்றாண்டு நூல் திரு அவை தந்தையர்கள் புனித எப்ரேம் (373), புனித கிரகோரி நாசியான்சஸ் (390), புனித அம்புரோஸ் (397) மற்றும் புனித ஜெரோம் (420) ஆகியோர் திருத்தூதர் தோமாவின் இந்தியப் பணிகளைப் பற்றி பேசுவதை குறிப்பிடுகின்றது. மற்றொரு திருத்தூதர் பார்த்தலமேயு வட இந்தியாவில் குறிப்பாக, கல்யான் பகுதியில் மறைப்பணி ஆற்றியதாகவும், அங்கு எபிரேய மொழியில் எழுதப்பட்ட புனித மத்தேயுவின் நற்செய்தி நூலை விட்டுச் சென்றதாக அதை நான் இந்தியாவில் கண்டேன் என, 2 ஆம் நூற்றாண்டு பான்தேனியுஸ் என்ற அலெக்சாந்திரியா மறைக்கல்வி ஆசிரியர் கூறுவதாக திரு அவை வரலாற்று ஆசிரியர் செசாரியா எவுசேபியுஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவில் தோமாவின் பணிகள், கல்லறைப் பற்றிய மரபு வழிச் செய்திகள் மயிலையில் அதிகம் இருந்தாலும், அதற்கான வரலாற்று தகவல்கள் மற்றும் தடயங்கள் பெரும் ஆய்வுக்குரியவையே. கிழக்கு சிரியன் மரபின்படி, 3 ஆம் நூற்றாண்டில், புனித தோமாவின் கல்லறைத் திறக்கப்பட்டு, அவரது உடல் சிரியாவின் எடசா நகரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து 13 ஆம் நூற்றாண்டில், இத்தாலியின் ஓர்தோனா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

(தொடரும்)

Comment