தமிழகத்தில் கிறிஸ்தவம்
தமிழகத்தில் பிரான்சிஸ்கன் சபையினர் மறைப்பணி
புனித தோமாவின் கல்லறையில் பிரான்சிஸ்கன் துறவிகள்
புனித அசிசி பிரான்சிஸ் மரித்த 60 ஆண்டுகளுக்குள், 13 ஆம் நூற்றாண்டிலே ஜான் மோந்தே கொர்வினோ (1247-1328) என்ற இத்தாலிய பிரான்சிஸ்கன் துறவி, மயிலாப்பூருக்கு வந்து, திருத்தூதர் தோமாவின் கல்லறையில் தங்கி, இறைப்பணி ஆற்றியதாக மார்க்கோப் போலோ என்ற வரலாற்றுப் பயணி பதிவு செய்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்ட இத்தாலிய பிரான்சிஸ்கன் துறவி ஜான் மோந்தே கொர்வினோ, கி.பி. 1291 ஆம் ஆண்டு, ஈரானின் தப்ரிசு நகரிலிருந்து தொமினிக்கன் குரு நிக்கோலஸ் தெ பிஸ்துவாவுடன் இணைந்து, சீனாவை நோக்கி பயணமானார். இருவரும் சீனாவை நோக்கிய பயணத்தில் மயிலை வந்தடைந்து, புனித தோமாவின் கல்லறையில் 13 மாதங்கள் தங்கி, இறைப்பணியாற்றி, இப்பகுதியில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு திருமுழுக்களித்தனர்.
மயிலையில் தங்கியிருந்தபோது, தொமினிக்கன் துறவி நிக்கோலஸ் இறந்துவிட, புனித தோமாவின் கல்லறை ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட ஜான் மோந்தே கொர்வினோ சீனா சென்று, பெய்ஜிங் பேராயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக மறைப்பணி ஆற்றினார். இந்தியாவிற்கு வந்த முதல் பிரான்சிஸ்கன் துறவி என்ற பெருமை பேராயர் ஜான் மோந்தே கொர்வினாவையேச் சாரும். இவரது அழைப்பின் பேரில் சீனாவை நோக்கிய பயணத்தில், இந்தியாவில் சிறிதுக் காலம் மறைப்பணியாற்றிய நான்கு இத்தாலியன் பிரான்சிஸ்கன் துறவிகளில் மூன்று பேர் மராத்தாவின் தானாவில் 1321 ஆம் ஆண்டு, ஏப்ரல் 09 அன்று, முகமதியர்களால் மறைசாட்சியாக மரணத்தைத் தழுவினர். ஜான் தெ மரிங்னோலி என்ற பிரான்சிஸ்கன் துறவியும், சீனாவை நோக்கிய தனது பயணத்தில் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், புனித தோமாவின் கல்லறையில் தங்கினார். மும்பையை பூர்வீகமாகக் கொண்ட பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரர் புனிதர் கொன்சாலோ கார்சியா அவர்களும், 1556 இல் கிறிஸ்துவுக்காக ஜப்பானின் நாகசாகியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இவரே இந்தியாவின் முதல் புனிதர் ஆவார்.
லஸ் ஆலயம் நிறுவப்படுதல்
கி.பி. 1500 இல், லிஸ்பனிலிருந்து மலபார் நோக்கி பயணமான கப்பல்களில் ஆறு பிரான்சிஸ்கன் துறவிகளும், ஆறு மறைமாவட்டக் குருக்களும், பிரான்சிஸ்கன் குரு ஹென்றிக் சொரேஸ் தெ கோய்ம்ரா தலைமையில் பயணித்தனர். இவ்வாறு, இந்தியாவிற்கு மறைபரப்பு செய்ய வந்த முதல் துறவற சபை என்ற பேற்றை பிரான்சிஸ்கன் துறவியர் பெற்றனர். இவர்கள் முதலில் கோவா, கேரளாவின் கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் தங்கள் துறவற இல்லங்களையும், மறைப்பணித்தளங்களையும் அமைத்தனர். முதலில் வந்த துறவிகளில் ஒருவரான லூயிஸ் தெ சல்வதோர் விஜய நகர பேரரசில் கிறிஸ்தவ மறைத்தளம் நிறுவ முயற்சித்தபோது, பிராமணர்களால் கொல்லப்பட்டார். கி.பி. 1501, 1505 & 1510 ஆகிய ஆண்டுகளிலும், சில பிரான்சிஸ்கன் துறவிகள், இந்திய மறைப்பணிக்காக போர்த்துக்கலிலிருந்து வந்தனர். அவர்கள் கோவா, மும்பை, மங்களூர் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் மறைத்தளங்களை நிறுவி, கிறிஸ்து அறிவிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
கி.பி. 1516 இல், கிழக்கு நோக்கி பயணித்த பிரான்சிஸ்கன் குருக்கள், வங்காள விரிகுடாவின் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டனர். இறையன்னையின் அருளால் மயிலாப்பூர் கரையை ஓர் இரவில் வந்தடைந்தனர். கரையிலிருந்து ஓர் ஒளி அவர்களை அழைத்துச் சென்று, மயிலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்தது. அவ்விடத்தில் பிரான்சிஸ்கன் துறவிகள் “லஸ்” அதாவது, “வெளிச்சம்” என்ற பெயரில் பிரகாச அன்னைக்கு ஆலயம் எழுப்பினர். அவ்வாலயத்தின் நுழை வாயிலில் “புனித லஸ்” அன்னை ஆலயம், பிரான்சிஸ்கன் குரு பெத்ரு தெ அத்துயுசியா அவர்களால், கி.பி. 1516 இல் எழுப்பப்பட்டது’’ என பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் ஐரோப்பியர்களின் மிகப்பழமையான கல்வெட்டு ஆகும். லஸ் ஆலயம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது என, வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறுவதும் உண்டு. இவ்வாலய பீடத்தின் உட்புற மேற்கூரையில் பிரான்சிஸ்கன் இலச்சினை (முத்திரை) பொறிக்கப்பட்டுள்ளது. அது இன்றும் (2023) 500 ஆண்டுகளைக் கடந்து, பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவது சிறப்பு. முன்னூறு ஆண்டுகள் அதாவது, 1820 ஆம் ஆண்டு வரை இவ்வாலயம் பிரான்சிஸ்கன் குருக்கள் கண்காணிப்பில் இருந்து வந்தது. மேலும், புனித அந்தோனியார் பெயரால் 1558 இல் மயிலை நகரில் ஒரு துறவற இல்லத்தையும் பிரான்சிஸ்கன் துறவிகள் அமைத்தனர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், திருத்தூதர் தோமா மற்றும் இறையன்னை என இரு மறைமாநிலங்களில் 600 துறவிகள் தென்னிந்தியா முழுவதும் பணியாற்றினர்.
1639 இல், ஆங்கிலேயரால் நிறுவப்பட்ட சென்னை மாநகரில் புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பிரெஞ்சு கப்புச்சின் குரு எப்ரேம் தெ நெவேர் 1642 இல் நிறுவிய சென்னையின் முதல் கிறிஸ்தவ மறைத்தளம். முதல் ஆலயம் என்ற அவரின் சீர்மிகு மறைப்பணி போன்ற குறிப்புகளை மனுவேல் தெ புனித ஜோசப் என்ற பிரான்சிஸ்கன் குருக்களின் சோழமண்டல தலைவரின் ஆண்டறிக்கையில் காணமுடிகிறது. 1662 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் கோல்கொண்டா படைகள் சாந்தோம் நகரை ஆக்கிரமித்தபோது, லஸ் ஆலயம் உட்பட சாந்தோம் நகருக்குள் இருந்த அனைத்து போர்த்துக்கீசிய ஆலயங்களும்
மூடப்பட்டன. 1704 இல், முகமதியர்கள் சாந்தோம் நகரை கைப்பற்றியபோது, கிறிஸ்தவர்கள் வெளியேறினர். ஆனால், துறவிகள் மட்டும் வெளியேறாமல் ஆலயத்தின் புனிதத்தை காத்தனர். 1722 ஆம் ஆண்டு, மியான்மரிலிருந்து வந்த பர்னபைட் குருக்கள் லஸ் ஆலயத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற முயற்சித்தனர். அது முறியடிக்கப்பட்டு, பிரான்சிஸ்கன் துறவிகள் மட்டுமே நிர்வகிப்பர் என மயிலை ஆயர் அறிவித்தார். பிரெஞ்ச் படைகளும் 1748-49 ஆகிய ஆண்டுகளில் மயிலையைக் கைப்பற்ற முயற்சித்தன. முகமதியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்ற மும்முனைப் போட்டியில் மறைப்பணிகள் பெரிதும் தடைப்பட்டன. இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக புனித சாந்தோம் பேராலயத்தில் திவ்ய நற்கருணை வைக்கப்படவில்லை என்ற தகவலை 1761 இல், புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் தோம் பார்னார்தோ தெ கைத்தானோ மிகுந்த வேதனையோடு தனது மடலில் குறிப்பிடுகின்றார். 1847 இல், தந்தை பிரான்செஸ்கோ தெ தோரே இறப்புக்குப்பின், லஸ் ஆலயத்தில் பிரான்சிஸ்கன் அப்சர்வெண்ட்ஸ் துறவிகளின் மறைப்பணி நிறைவுற்றது. லஸ் ஆலயத்தில் பணியாற்றிய குருக்கள் மரித்தபோது, ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டனர். மேலும், இன்றும் இங்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட மரித்த குருக்களும் நல்லடக்கம் செய்யப்படுகின்றனர். லஸ் ஆலய வளாகத்தில்தான் நம் வாழ்வு, மாதா தொலைக்காட்சி போன்ற தமிழக ஆயர் பேரவையின் ஊடக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
முத்துக்குளித்துறையில் பிரான்சிஸ்கன் மறைப்பணி
1532 இல், தூத்துக்குடியில் பரதவ மீனவ மக்களுக்கும், முகமதிய மக்களுக்கும் இடையே பெரும் பிணக்கம் ஏற்பட்டது. எனவே, பரதவர்கள் தங்கள் பாதுகாப்புக்குக் கொச்சியிலிருந்த போர்த்துக்கீசியரின் உதவியை நாடினர். மேலும், கிறிஸ்தவ மறையை தழுவுவதற்கும் முன்வந்தனர். எனவே, கொச்சியில் பணியாற்றிய பிரான்சிஸ்கன் மற்றும் மறைமாவட்ட குருக்கள் நால்வர் முத்துக்குளித்துறைக்கு வந்தனர். இவர்கள் தூத்துக்குடியிலிருந்து புன்னைக்காயல் வரை வாழ்ந்த பரதவ மக்களில் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு திருமுழுக்களித்தனர். மேலும், ஞாயிறு திருப்பலி, திருவருட்சாதனங்கள் வழங்கியும் மற்றும் நற்செய்தி வாழ்வைப் பற்றி அறிவித்தும், புதிய கிறிஸ்தவர்களை உறுதிப்படுத்தினர். மறைப்பணியாளர்கள் குறைவு, மொழிப் பிரச்சனை ஆகிய காரணங்களை மேற்கோள்காட்டி, லொரன்சோ தெ கோய்ஸ் என்ற பிரான்சிஸ்கன் துறவி, புதிய மறைப்பணியாளர்களை முத்துக்குளித்துறைக்கென்றே அனுப்பி வைக்குமாறு போர்த்துக்கல் அரசருக்கு கடிதம் எழுதினார். இலங்கையின் திருத்தூதர் எனப் போற்றப்பெறும் பிரான்சிஸ்கன் குரு ஜோவது வில்லா தெ கோஞ்சே போர்த்துக்கல்லுக்குச் சென்று, கவனிப்பாரின்றி இருக்கும் முத்துக்குளித்துறைக் கிறிஸ்தவர்களுக்கு தேவையான மறைப்பணியாளர்களை அனுப்புமாறு அரசரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, அந்நாட்களில் புதிதாக உருவாக்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினராகிய பிரான்சிஸ் சவேரியார் இப்பணிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கை தீவில் மறைப்பணியாற்றிய பிரான்சிஸ்கன் துறவிகள் காயல்பட்டினம், புன்னைக்காயல், தூத்துக்குடி போன்ற கடல் வழியாக கொச்சின், நாகப்பட்டினம், மயிலாப்பூருக்கு அடிக்கடி மறைப்பணி பயணத்தை மேற்கொண்டனர். அவ்வாறு வந்த மார்திங்கே தெ கார்தியோ என்ற பிரான்சிஸ்கன் குரு 1552 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 அன்று முகமதியர்களால் கொல்லப்பட்டார். இந்நிகழ்வுக்குப்பிறகு, கொச்சின் மறைமாவட்டக்குரு மற்றும் தூத்துக்குடி மக்களின் பொருளுதவியால் பிரான்சிஸ்கன் குருக்கள் இலங்கையில் உள்ள தங்கள் மடங்களுக்கு செல்ல ஏதுவாக, தங்கள் துறவு இல்லத்தை தூத்துக்குடியில் 1595 இல் நிறுவினர். தந்தை மனுவேல் தெ எல்வாஸ் இவ்வில்லத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1658 இல், டச்சு தூத்துக்குடியைக் கைப்பற்றி போர்த்துக்கீசியர்களை விரட்டியடித்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தங்களது புரோட்டஸ்டாண்ட் பிரிவுக்கு கட்டாயப்படுத்தினர். ஆனால், மக்களோ தங்கள் விசுவாசத்தைக் காக்க தூத்துக்குடியை விட்டு வெளியேறினர். கத்தோலிக்க ஆலயங்களை இராணுவத்தளங்களாகவும், புரோட்டஸ்டாண்ட் ஆலயங்களாகவும் மாற்றினர். இயேசு சபையாரோடு மறைப்பணியின் பொருட்டு ஏற்பட்ட பிணக்கம், டச்சுப் படைகளின் அட்டூழியம் ஆகிய காரணங்களால் பிரான்சிஸ்கன் துறவிகள் மீண்டும் தூத்துக்குடி திரும்பவில்லை.
இயேசு சபையினரின் மறைத்தளங்களில் பிரான்சிஸ்கன் துறவிகள்
1773 இல், இயேசு சபை உலகளாவிய தடைக்குப்பிறகு கைவிடப்பட்ட நிலையிலிருந்த அவர்களின் கர்னாடிக், திருச்சி, தஞ்சை, மதுரை, முத்துக்குளித்துறை மற்றும் திருவிதாங்கூர் பகுதிகளின் பல மறைத்தளங்களை பிரான்சிஸ்கன் சபையினர் பராமரிக்க, மயிலை ஆயர் கேட்டுக் கொண்டார். ஆகவே, இறையன்னை மற்றும் புனித தோமா என்ற இரு மறைமாநிலங்களைச் சேர்ந்த சில பிரான்சிஸ்கன் துறவிகள் இப்பெரும் பொறுப்பை ஏற்று, ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1790-1830) மறைப்பணியாற்றினர். இயேசு சபையினரின் முன்னாள் மறைத்தளங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பாரிஸ் அந்நிய வேத போதக சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அந்நேரத்தில் அச்சபைக்கு மறைப்பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால் இப்பணித்தளங்களில் பிரான்சிஸ்கன் குருக்கள் மட்டுமல்லாமல் கோவா, மயிலை, கிராங்கனூர், கொச்சின், பதுரவாதோ மறைமாவட்டக் குருக்களும் மற்றும் சிரோ மலபார் கத்தனார் குருக்களும் ஆங்காங்கே பணியாற்றினர். பிரான்சிஸ்கன் குருக்கள் திருச்சி பகுதியில் திருச்சி பழைய கோவில், ஆவூர், மலையடிப்பட்டி, அய்யம்பட்டி, திண்டுக்கல்லில் சில பகுதிகள், தஞ்சை பகுதியில் தஞ்சை பூக்காரத் தெரு (வியாகுல அன்னை ஆலயம்), வடக்குவாசல், வீரக்குறிச்சி (பட்டுக்கோட்டை), பில்லாவடந்தை, கும்பகோணம், கண்டமங்கலம் (திருக்காட்டுப்பள்ளி - மைக்கேல்பட்டி), புறத்தாக்குடி மற்றும் கோனான்குப்பம் ஆகிய மறைத்தளங்களில் நேரடியாகவோ, அல்லது மயிலை மற்றும் கோவா மறைமாவட்டக் குருக்களுக்கு உதவியாகவும் பணியாற்றினர். மதுரை மறைப்பணித் தளத்தின் தலைவராக இருந்த ஜோசே தெ புனித ஜோக்கின், இப்பகுதியில் பணியாற்றிய புகழ்பெற்ற பிரான்சிஸ்கன் குரு ஆவார். இவர், திருச்சி பழைய கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மறவ நாட்டில் சருகணி, சூராணம், புலியால், இராமநாதபுரம், கல்லடித்திடல் மேலும் சில பங்குகளின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றினர். மனுவேல் தெ ஜோஸ் என்பவர் இப்பகுதியில் பணியாற்றிய பிரான்சிஸ்கன் குருக்களில் முக்கியமானவர் ஆவார். முத்துக்குளித்துறை மற்றும் திருவிதாங்கூர் பகுதியில் மறைப்பணியாற்ற ஒலிக்கார் என்ற இடத்தில் மறைப்பணியாளர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்பகுதியில் பிரான்சிஸ்கன் குருக்கள் பணியாற்றிய மறைத்தளங்கள் : குறும்பனை, வாணியக்குடி, புத்தன்துறை, பள்ளம், இறைமன்துறை, மணக்குடி, கோவளம், கன்னியாகுமரி, கூடுதாழை, கூட்டப்புளி, புனித அந்திரேயா உவரி, புனித திருமுழுக்கு யோவான், புனித ஸ்டீபன் பெரியதாழை மற்றும் திருவனந்தபுரம் பகுதியிலும், பல மறைத்தளங்களின் பொறுப்பை ஏற்று, 1810 வரை பணியாற்றினர். 1832 இல் போர்த்துக்கல் அரசு தனது நாட்டிலும், காலனி நாடுகளிலும் துறவு சபைகளை முடக்கியது. இதனால் பிரான்சிஸ்கன் சபைக்கு புதிய மறைப்பணியாளர்கள் வருகை அற்றுப்போனது, இந்தியாவில் பணியாற்றிய பிரான்சிஸ்கன் அப்சர்வெண்ட்ஸ் துறவிகள் அனைவரும் போர்த்துக்கல் நாட்டை சார்ந்தவர்களாவர். எனவே, அவர்களின் அனைத்து மறைத்தளங்களையும் மயிலை மறைமாவட்ட குருக்களும், பிற நாட்டின் துறவற சபையினரும் ஏற்றனர். முன்னூறு ஆண்டுகளுக்கு (1500-1832) மேலாக அவர்களது இந்திய மறைப்பணி போர்த்துக்கீசிய அரசியல் காரணங்களால் முடிவுக்கு வந்தது வேதனை நிறைந்தது. பிரான்சிஸ்கன் துறவு சபையின் மற்றொரு பிரிவான கப்புச்சின் சபையினரும், பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலியன் போரினால் அவர்களது சென்னை, புதுச்சேரி, சூரத் மறைப்பணித்தளங்களும் பாதிக்கப்பட்டு 1834 இல், மாற்று சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிரான்சிஸ்கன் துறவிகள் எங்கும் இருக்கவில்லை. ஆனால், வட இந்தியாவில் பெருமளவில் இத்தாலிய கப்புச்சின் குருக்கள் பணியாற்றியதால் அங்கு அவர்களின் பணி இடையூறின்றி தொடர்ந்தது.
(தொடரும்)
Comment