No icon

மரியா

அன்றும் இன்றும்

. புதிய ஏற்பாடு காட்டும்வரலாற்றுமரியா யார்?

நாம் இரண்டாம் அலகில் பார்த்ததுபோன்று மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் காணப்படும் குழந்தைப் பருவ நிகழ்வுகள் தவிர்த்து, மரியா பற்றிய நிகழ்வுகள் மொத்தம் ஏழு மட்டுமே உள்ளன. மரியா பற்றிய பகுதிகள் புதிய ஏற்பாட்டில் மிகக்குறைவாக இருப்பினும், மரியா வாழ்ந்த சமூகச் சூழலை மனத்தில் கொண்டு, புதிய ஏற்பாட்டில் காணப்படும் மரியா பற்றிய பகுதிகளின் அடிப்படையில், ஓரளவுக்குவரலாற்றுமரியாவை நாம் கற்பனை செய்து படம்பிடிக்க முடியும். இந்த முயற்சி திரு அவையின் மரபில் ஆண்கள் / அருள்பணியாளர்கள் உருவாக்கிய மரியா பற்றிய பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இத்தகைய பார்வை இன்று வாழும் பெண்களுக்கு விடுதலையின் அடையாளமாய் அமையக்கூடிய ஒன்று. இவற்றை நாம் தற்பொழுது இங்குக் காண்போம்.

1. ஏழைப் பெண் மரியா

இன்று அன்னையின் பல்வேறு திருத்தலங்களுக்கு நாம் செல்லும்போது, அன்னையின் திருவுருவங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அன்னை மரியா பெரும்பாலும் பட்டாடை உடுத்தி, தங்க அணிகலன்களை அணிந்தவராகவே காட்சி தருகின்றார். மேலும், பெரும்பாலான ஆண்கள், வெண்ணிற மேனியைக் கொண்டுள்ள பெண்களையேஅழகானபெண்களாகக் காண்பதால், மரியாவையும் அவ்வாறே காட்சிப்படுத்தியுள்ளனர். மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருவராக, ஆண்கள் விரும்பும் வெண்ணிற மேனியைக் கொண்டுள்ள ஓர்அழகானபெண்ணாகவே ஆண்கள் திரு அவையின் மரபில் மரியாவைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், மரபில் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மரியா பற்றிய பார்வை முற்றிலும் தவறான ஒன்று. இது புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டும் மரியாவில் இருந்து விலகி நிற்கின்றது.

புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டும் மரியாவைக் காணும்போது, அவர் கட்டாயமாக ஓர் ஏழைப் பெண்ணாகத்தான் இருத்திருக்க வேண்டும். இதற்குப் பின்வரும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளைச் சான்றாகக் கூறலாம்.

மரியா தமது பாடலில் தம்மைப்பற்றிக் கூறும்போது, “தாழ்நிலையைக் கண்ணோக்கினார்” (லூக் 1:48) தம்மைக் கடவுள் கனிவுடன் கண்ணோக்கினார் என்கின்றார்.

கணக்கெடுப்புக்காக மரியாவும், யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து, யூதேயாவில் உள்ள பெத்லகேம் சென்றபொழுது, அவர்கள் தங்குவதற்கு வீடுகளிலோ, விடுதிகளிலோ இடம் கிடைக்கவில்லை (லூக் 2:7). பெத்லகேமில் அவர்களின் உறவினர்கள் யாரும் இருந்திருக்கமாட்டார்கள். எனவே, வீடுகளில் யாரும் அவர்களை ஏற்கவில்லை. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த காரணத்தால் அவர்கள் தங்குவதற்கு விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. இது மரியாவின் ஏழ்மை நிலையை விளக்குவதாய் அமைந்துள்ளது. திரு அவை கன்னிப்பிறப்பைப் பற்றி அதிகம் பேசியதேயொழிய இயேசுவைப் பெற்றெடுக்கும்போது, அவர் அனுபவித்த பல்வேறு துன்பங்கள் பற்றி அதிகம் பேசவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.

மரியா, இயேசுவைப் பெற்றெடுத்த பின்பு, அவரை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கச் சென்ற நேரத்தில், அவர்கள் காணிக்கையாக திருச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளைக் காணிக்கையாக வழங்க வேண்டியிருந்தது (லேவி 12:8, லூக் 2:24). இது ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் காணிக்கையாகும். எனவே, மரியா கட்டாயம் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.

மேலும், இயேசு வாழ்ந்த காலத்துப் பொருளாதார நிலையைக் கண்ணோக்கும்போது, 93ரூ மக்கள் ஏழைகளாகவும், வெறுமனே 7ரூ மக்கள் மட்டுமே வசதி படைத்த பணக்காரர்களாகவும் இருந்தது தெரிகிறது. இப் பின்னணியில் மரியாவின் குடும்பமும் 93ரூ மக்களை உள்ளடக்கியஉழைத்தால்தான் உணவுஎன்று வாழும் பல குடும்பங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் தவிர, மரியாவின் கணவர் யோசேப்பு எப்பொழுது இறந்தார் என்பது பற்றிய தரவுகள் தெளிவாக இல்லை. நற்செய்தி நூல்களை வாசிக்கும்போது, இயேசுவின் பணி வாழ்வுக்கு முன்பே அவர் இறந்திருக்க வேண்டும் என நாம் உறுதியாக நம்ப முடியும். காரணம், இயேசுவின் பணிவாழ்வின்போது, யோசேப்பின் பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை. இச்சூழலில் மரியா மட்டுமே குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கடினப்பட்டு வயல்வெளியிலும், வீட்டிலும் உழைத்திருக்க வேண்டும். இவ்வாறாக, மரியாவை ஓர் அன்றாடங் காய்ச்சியாக நாம் காணவேண்டும்.

2. மீட்பின் வரலாற்றில் ஒத்துழைத்த பெண் மரியா

மீட்பின் வரலாற்றை வாசிக்கும்போது, கடவுளின் வெளிப்பாடு பெரும்பாலும் ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் வழங்கப்பட்டது (மத் 11:25) என்பது தெரிகிறது. பாவிகள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் பங்கேற்பு மீட்பின் வரலாற்றில் மிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணாகப் பிறப்பது என்பது, யூதச் சமூகத்தில் தாழ்வான ஒன்றாகக் கருதப்பட்டது. எனவேதான், யூதர்கள் தங்களின் வெள்ளிக்கிழமை செபத்தில், “கடவுளே, என்னை ஓர் அடிமையாகவோ, பிறவினத்தாராகவோ, பெண்ணாகவோ படைக்காததற்கு உமக்கு நன்றிஎனக் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் திருமண ஒப்பந்தம் மட்டுமே ஆன நிலையில், கடவுளின் தாயாக மரியா இருக்க வேண்டும் என்று, வானதூதர் வழியாக கடவுள் விடுத்த அழைப்பு என்பது, மரியாவுக்கு ஒருவகையில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இச்சூழலில்தான், சமூகத்தின் குரலுக்கு செவிமடுத்து, ஏனைய பெண்களைப்போல ஒரு சராசரிப் பெண்ணாகத் திருமணம் மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுத்து, ஒரு பாதுகாப்பான குடும்ப வாழ்வு வாழ்வதா அல்லது சமூகத்தின் குரலுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளின் திட்டத்திற்குத் தம்மை ஆட்படுத்தி, கன்னியாக இருந்தே, தூய ஆவியாரின் துணையுடன் உலகின் மீட்பரைப் பெற்றெடுப்பதா என்னும் எண்ணங்கள் தோன்றியிருக்கும். இறுதியில், சமூகத்தின் மரபுகளைத் தாண்டி, கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒத்துழைக்க முடிவெடுக்கின்றார் மரியா. இவ்வாறாக, கடவுளை மட்டுமே நம்பி வாழ்ந்த பெண்ணாக (anawim), சமூகத்தின் நெருக்கடிகளுக்கு அடிபணியாது கடவுளின் திட்டத்திற்கு மட்டுமே தம்மை முற்றிலும் அர்ப்பணித்த நபராக மரியா வாழ்ந்தார். மேலும், இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டபோது, மரியாவை நோக்கி சிமியோன் பின்வருமாறு கூறினார்: “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (லூக் 2:34-35). இக்கூற்று இயேசுவின் தாயாக மரியா இருப்பதால், அவருக்கு ஏற்படவிருக்கும் துன்பங்கள் பற்றி இறைவாக்காக முன்பே அவருக்குக் கூறப்பட்டதாய்க் காணவேண்டும். மகனுக்கு ஏற்படவிருக்கும் துன்பம்பற்றிய முன்னறிவிப்பு, தாய்க்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இருப்பினும், இறைவனின் திட்டம் அதுதான் எனில், அதற்கும் ஒத்துழைக்க முடிவெடுக்கின்றார். மரியாவின் இச்செயலை, பிற்காலத்தில் இயேசு எவ்வாறு தம் தந்தையின் விருப்பத்திற்குத் தம்மை ஆட்படுத்தினார் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இயேசு பாடுகளை ஏற்கும் முன் ஒலிவ மலையில் செபித்தபோது, “தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்ப கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் (லூக் 22:42) என்று கூறினார். சிலுவையில் தொங்கும்போது, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன் (லூக் 23:46) என்று கூறி, உயிர் துறந்தார்.

3. கேள்விகேட்டு சுயமுடிவெடுத்த மரியா

சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவை ஆண்களுக்குரிய ஒன்றாகவே பெரும்பாலும் மரபில் பார்க்கப்பட்டன. பெண்களைப் பெரும்பாலும் உணர்ச்சிவயப்படுபவர்களாகவும், சிந்தித்துச் செயல்படத் தெரியாதவர்களாகவுமே ஆண்கள் மரபில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். மேலும், பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலற்றவர்கள். அவர்கள் ஆண்களைச் சார்ந்துதான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்ற கற்பிதத்தை ஆண்கள் கட்டமைத்துள்ளார்கள். ஆனால், ஒரு பெண் எவ்வாறு தெளிந்த சிந்தனையுடன் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதற்கு அடையாளமாக மரியா திகழ்கின்றார். எனவேதான், இயேசுவின் தாயாக மரியா திகழவேண்டும் என வானதூதர் மரியாவிடம் கூறியபோது, மரியா வானதூதரிடம் எதிர்க் கேள்வி கேட்கின்றார்: “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! என்றார்” (லூக் 1:34). வானதூதர் இயேசுவின் பிறப்புப் பற்றி மரியாவிடம் கேட்டவுடன் மரியா உடனடியாக இசைவு தரவில்லை. மரியாவின் இச்செயலால், இறைவனின் அழைப்பை அவர் சந்தேகப்பட்டார் எனக் காணக்கூடாது. மாறாக, அவர் தமது இறை அழைப்பை இன்னும் ஆழமாக, தெளிந்த சிந்தனையுடன் ஏற்கும் ஒன்றாகத்தான் இச்செயலைக் காணவேண்டும். மேலும், தெளிவான இந்த முடிவை எடுக்கும்போது, அவர் யாரையும் கலந்து ஆலோசிக்கவில்லை. ஒரு பெண்ணாக, தெளிந்த சிந்தனையுடன், சுயமாக முடிவெடுத்தார் எனக் காண்கின்றோம்.

4. பிரச்சனைகளை நேர்நிலையில் சந்தித்த மரியா

வானதூதர் வழியாகக் கடவுளின் அழைப்பைத் தெளிந்து தேர்ந்த மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறிய பின்பு, தாம் எடுத்த அந்த சுதந்திரமான முடிவு பல்வேறு பின்விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

* தன்னுடன் மண ஒப்பந்தமான யோசேப்புக்கு இது மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்று எண்ணியிருப்பார்.

* மண ஒப்பந்தமான யோசேப்பு அவரைவிலக்கிவிடலாம் (மத் 1:19) இதனால், பிறக்கக்கூடிய மகனுடன் தாம் இறுதிவரை தனியாகவே வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம் எனச் சிந்தித்திருக்கலாம்.

* திருமண ஒப்பந்தத்திற்கு முன்பே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் சமூகம் தம்மை எவ்வாறு பேசும், ஊரார் தம்மை ஊரிலிருந்துகூட ஒதுக்கிவைக்க நேரிடும் என்பதையும் உணர்ந்திருந்தார். இவ்வாறு, அவப்பெயருடன் சமூகத்தால் தாம் தள்ளிவைக்கப்படலாம் என்பதையும் அறிந்திருந்தார்.

* திருமண ஒப்பந்தம் மட்டுமே ஆகி, யோசேப்பு மரியாவுடன் கூடி வாழும் முன், அவர் கருவுற்றிருந்த காரணத்தால் (மத் 1:18) திருச்சட்டப்படி தாம் கல்லால் எறிந்து கொல்லப்படலாம் (இச 22:21) என்பதையும் அறிந்திருந்தார்.

இவ்வாறாக, இறைவனின் மீட்புத்திட்டத்தில் ஒத்துழைக்க அவர் எப்பொழுதுஆம்என்று கூறினாரோ, அந்நேரம் முதல் தமக்கு ஏற்படவிருக்கும் எந்தப் பிரச்சனையையும், துணிவோடு நேர்நிலையில் சந்திக்கக்கூடிய பெண்ணாக மரியா காட்சி தருகின்றார். இவ்வாறு, பாதுகாப்பற்ற நிலையைச் சந்திக்கும் துணிவு, துன்பங்களை மன உறுதியுடன் ஏற்கும் மனப்பாங்கு, சமூகத்தின் எதிர்ப்புகளை நேர்நிலையில் சந்திக்கும் உளப்பாங்கு ஆகிய அனைத்தும் மரியாவிடம் காணப்பட்டன.

5. விடுதலை பெற்ற, விடுதலை வழங்கும் பெண் மரியா

இழப்பதற்கு என்று எதுவும் இல்லா நிலையில் உள்மனச் சுதந்திரத்துடன் வாழும் ஒரு நபரையே விடுதலை பெற்ற நபராகக் காண்கின்றோம். மரியாவைப் பொறுத்தமட்டில், பொருளாதாரத்தில், அவர் ஏழ்மை நிலையில் இருந்தது மட்டுமன்றி, அவர் அன்றைய சமூக மரபுகள், பார்வைகள் அனைத்தையும் கடந்தவராகவே காணப்படுகின்றார். கடவுளின் அழைப்புக்கும், மனச்சான்றின் குரலுக்கும் மட்டுமே செவிமடுத்தவராக அவரது வாழ்வு அமைந்திருந்தது. எனவே தான், மரியாவை விடுதலை பெற்ற ஒரு பெண்ணாகக் காண்கின்றோம். மேலும், விடுதலை பெற்ற ஒரு நபர்தான் பிறருக்கு விடுதலையை வழங்க முடியும். விடுதலையின் அடையாளமாகத் திகழ முடியும். அவ்வகையில் விடுதலை பெற்ற பெண்ணாகத் திகழ்ந்த மரியா, விடுதலை பெற்ற நபராக இயேசுவை உருவாக்கினார். இன்று நாமும் விடுதலை பெற்ற நபர்களாக வாழ, மரியா ஓர் அடையாளமாக உள்ளார்.

(தொடரும்)

Comment