தமிழகத்தில் கிறிஸ்தவம்
நாகை மறைத்தளமும், வேளாங்கண்ணி திருத்தலமும்
நாகப்பட்டினம் பன்னாட்டு துறைமுகம்
போர்த்துக்கீசியர்கள் 1507 இல் இலங்கை தீவுக்கான கடல்வழியைக் கண்டுபிடித்து அங்கு 1518 இல், தங்களது முதல் வணிகத் தளத்தை கொழும்பு நகரில் நிறுவினர். வலிஞ்னோ மற்றும் பவுலோ தெ ரினாதே ஆகியோரின் கூற்றின்படி, இலங்கைக்கான போதிய அரிசியை கொண்டுச் செல்லவே செழிப்பான பூமியான நாகப்பட்டினத்தில் போர்த்துக்கீசியர்கள் தங்கள் வணிகத்தளத்தை ஏறக்குறைய 1518 இல் நிறுவினர். தஞ்சையின் செவப்ப நாயக்கர் காலத்தில் உரிய அனுமதிப் பெற்று, இங்கு தங்களது பண்டக சாலையை அமைத்துக் கொண்டனர். 1525 இல், தஞ்சை நாயக்கர் அனுமதியுடன் 26 கோட்டை அரிசி, வெண்ணெய், உப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை போர்த்துக்கீசியர்கள் மேலாக்காவிற்கு (மலாக்கா) நாகப்பட்டினத்திலிருந்து ஏற்றுமதி செய்தனர்.
தமிழகத்திலிருந்து தெற்காசிய நாடுகளுக்கு சென்று வர, நாகப்பட்டினம் துறைமுகம் ஓர் இணைப்புத்தளமாக திகழ்ந்தது. எனவே, பல போர்த்துக்கீசிய குடும்பங்கள் நாகையில் குடியேறி, நல்ல வசதியான வீடுகளை அமைத்துக் கொண்டனர். இத்தகைய பெரிய வீடுகளை கட்டிக் கொள்ள தஞ்சை நாயக்கர் 1594 இல் அனுமதியளித்திருந்தார் என, பொக்காரோ என்ற மறைப்பணியாளர் கூறுகின்றார். நாகூர் கடல்தளமும், தமிழ் முகமதியர்களான மரைக்காயர்கள் வணிகத்தால் சிறந்து விளங்கியது. சுமத்ரா தீவிலிருந்து உயர் பட்டு வகைகள், சீனக் கப்பல்களில் நாகூர் வந்தன. மரைக்காயர்கள் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து, பட்டுத்துணி வகைகளை இறக்குமதி செய்து கொண்டனர். தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளோடு மரைக்காயர் மற்றும் சைவ செட்டிகள் வணிகத்தில் சிறந்து, தங்கம், சில்வர், சாம்பிராணி, அரக்கு, பஞ்சு, யானைகள் போன்றவற்றை இறக்குமதி செய்தனர். இவ்வாறு, நாகப்பட்டினம் மற்றும் நாகூர் கடற்தளங்கள் பன்னாட்டு விற்பனை தளங்களாக திகழ்ந்தன.
நாகப்பட்டினத்தில் பிரான்சிஸ்கன் துறவிகள்
புனித அசிசி பிரான்சிஸ் ஆன்மீகத்தின்படி, இந்தியாவில் பணியாற்றிய பிரான்சிஸ்கன் துறவிகள் தங்களை ஏழ்மை வாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களின் ஏழு தலையாய ஆன்மீகப்பணிகள் : பாவிகளை மனந்திருப்புவது, அறிவொளி ஏற்றுவது, சோர்ந்து போனவர்களுக்கு உளவியல் உதவியளிப்பது, துன்பத்தில் இருப்பவர்களை அரவணைப்பது, சோதனைகளை பொறுமையோடு எதிர்கொள்வது, தவறு செய்தவர்களை மன்னிப்பது, திருத்துவது, நோயுற்றோர் மற்றும் மரித்தவர்களுக்காக மன்றாடுவது. ஏழு அறப்பணிகள் : ஏழைகளின் பசியை ஆற்றுவது, அவர்களின் தாகத்தை தணிப்பது, ஏழைகளை உடுத்துவது, அவர்களுக்கு வாழிடங்களை அமைத்து தருவது, நோயுற்றோரை பராமரிப்பது, கைதிகளை காணச் செல்வது மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வது. இப்பணிகளை நாகப்பட்டினத்தில் மேற்கொண்டு, மக்களை கிறிஸ்தவ மறையில் சேர்த்தனர். “மிரிகோர்தியா’ என்ற இரக்கத்தின் இல்லப் பொறுப்பை ஏற்று பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டனர். வணிகர்களும், கொச்சி ஆயரும் பெரும் நிதியை இரக்கத்தின் இல்லத்திற்கு வழங்கினர்.
1505 ஆம் ஆண்டே, பிரான்சிஸ்கன் துறவிகள் நாகப்பட்டினம் மற்றும் கண்ணனூர் (கேரளா) ஆகிய நகரங்களில் தங்கள் துறவு இல்லங்களை அமைத்துக்கொள்ள போர்த்துக்கல் அரசர் அனுமதி வழங்கினார் என்பது முயல்பவுரின் கூற்று. வாடிஸ் என்பவர் 1507 இல், நாகப்பட்டினத்தில் பிரான்சிஸ்கன் துறவு மடம் அமைக்கப்பெற்றது என்கிறார். இவ்வாறாக, 1545 ஆம் ஆண்டுக்கு முன்பே நாகப்பட்டினத்தில் முதல் கிறிஸ்தவ மறைத்தளத்தை பிரான்சிஸ்கன் துறவிகள் நிறுவினர். 1540 இல் அந்தோனியோ பத்ராதோ என்ற மறைப்பணியாளர் இப்பகுதியில் நற்செய்தி அறிவிப்புப்பணி செய்து, பலரை கிறிஸ்தவத்திற்கு கொண்டு வந்தார். அருள்தந்தை பிரான்செஸ்கோ தெ ஒரியாந்த் நாகப்பட்டினம் தளத்தின் முக்கிய மறைப்பணியாளராக போற்றப்படுகிறார். இவர், 1577 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் சிறப்புடன் மறைப்பணியை மேற்கொண்டார். பரதவ மீனவ கிறிஸ்தவர்களும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, கடலூர் ஆகிய இடங்களில் குடியேறினர். 1597 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 60 ஆண்டுகள் நாகப்பட்டினத்தில் பிரான்சிஸ்கன் துறவியர் மட்டுமே நற்செய்திப் பணியாற்றினர்.
தஞ்சையின் அச்சுயுதா நாயக்கர் கிறிஸ்தவ மறைப்பணிக்கு எதிரான மனநிலைக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் போர்த்துக்கீசியரின் வணிக வளர்ச்சியின்மீது காழ்புணர்ச்சிக்கொண்டு, 1577 இல் தனது படையுடன் நாகப்பட்டினத்தை தாக்க வந்தார். அப்போது தப்பிக்க முயற்சித்த 60 போர்த்துக்கீசியரும், 200 இந்தோ போர்த்துக்கீசியரும், 3000 தமிழ் கிறிஸ்தவர்களும் பிடிபட்டனர். இந்நிகழ்வின் மூலம் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாகப்பட்டினம் ஒரு கிறிஸ்தவ நகரமாக விளங்கியது எனப் புலனாகிறது. அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட நாகப்பட்டினம் பிரான்சிஸ்கன் இல்லத்தின் முதல் தலைவராக அருள்தந்தை. அல்போன்சோ தெ நசிமெந்தோ 1635 ஆம் ஆண்டு, ஜனவரி 7 அன்று பொறுப்பேற்றார். புனித பிரான்சிஸ் பெயராலும், இறையன்னையின் பெயராலும் ஆலயங்களை எழுப்பி, இந்நகரில் மறைப்பணியாற்றினர். இறையன்னை ஆலயம் பின்நாட்களில் அமல அன்னை ஆலயம் என அழைக்கப்பட்டது. இலங்கையின் முதல் மறைப்பணியாளர்களே போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் ஆவர். யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருமுழுக்களித்து பல மறைத்தளங்களை நிறுவினர்.
1658 இல், டச்சுப்படைகள் நாகப்பட்டினத்தை தாக்கி, போர்த்துக்கீசியரின் வாணிபக்கழகத்தைக் கைப்பற்றி, அவர்களை விரட்டியடித்து, அதை டச்சுத்தளமாக மாற்றின. பிரிவினை சபையை பின்பற்றும் டச்சுக்காரர்கள் கத்தோலிக்கர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டனர். இந்நகரில் ஆன்மீகப்பணி ஆற்றிய பிரான்சிஸ்கன், இயேசுசபை, தொமினிக்கன், அகுஸ்தினியன் மற்றும் மயிலை பதுரவாதோ மறைமாவட்டக் குருக்களை வெளியேற்றினர். தஞ்சை நாயக்கர் நாகப்பட்டினம் மற்றும் 10 கடலோர கிராமங்களை டச்சுக்காரரின் ஆளுகைக்கு வழங்கினார். ஆனால், வேளாங்கண்ணியிலிருந்து பிரான்சிஸ்கன் குருக்கள் வெளியேற்றப்படவில்லை. நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, டச்சு அரசு 1713 இல் பிரான்சிஸ்கன் துறவிகளை மட்டும் கத்தோலிக்கரின் நலனுக்காக நாகப்பட்டினத்தில் தங்கி, மறைப்பணியாற்ற அனுமதித்தது. இந்நாட்களில் 8000 கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறு, 1664 ஆம் ஆண்டு முதல் 1835 ஆம் ஆண்டு வரை நாகப்பட்டினத்தில் பிரான்சிஸ்கன் துறவு சபையினர் மட்டுமே பணியாற்றினர்.
இயேசு சபையினரின் மறைப்பணி
புனித பிரான்சிஸ் சவேரியார் மறைபரப்புப் பயணத்தின்போது, நாகப்பட்டினம் மறைப்பணிப் பொறுப்பாளர் அவர்களுடன் கடம்படி என்ற ஊரில் சில நாட்கள் தங்கினார். இயேசு சபையினர் 1597 இல், நாகப்பட்டினத்தில் சொந்தமாக நிலம் வாங்கி, தங்கள் துறவு இல்லத்தை அமைத்து, ஒரு பள்ளிக்கூடத்தையும் துவங்கினர். 1602 இல், நிக்கோலஸ் பிமெந்தர் என்ற மறைப்பணியாளர் தனது மடலில் தரங்கம்பாடியிலும் இயேசு சபைத்தளம் அமைக்கப்பட்டதை குறிப்பிடுகின்றார். 1604 இல், தொமினிக்கன் மற்றும் 1625 இல், அகஸ்தினியன் குருக்களும் தங்கள் மறைப்பணித்தளங்களை நாகப்பட்டினத்தில் நிறுவினர். இயேசு சபையினருக்கும் தஞ்சை நாயக்கருக்குமிடையே நட்புறவு இருந்தது. எனவே, 6000 ரூபாய்க்கு பெறுமான ஒரு கிராமத்தை இயேசு சபையாருக்கு குத்தகைக்கு வழங்கினார். அக்கிராமத்திற்கான வரியை இயேசு சபையினர் ஆண்டுதோறும் செலுத்தி வந்தனர். 1640 இல், நாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, இறைப்பணியாற்றினர். இயேசு சபையினர் போர்த்துக்கீசியர் மற்றும் தமிழ் கிறிஸ்தவர்களைக் கொண்டு, தங்களுக்கான ஒரு தோழமைக் குழுவை அமைத்திருந்தனர். அவர்கள் பக்தியிலும், ஒழுக்கத்திலும் துறவிகளைப் போல வாழ்ந்தனர். 1664 இல், டச்சு படையெடுப்புக்குப்பிறகு, நாகப்பட்டினத்தை விட்டு வெளியேறிய இயேசு சபையினர், தங்களது சபை மீள் உருவாக்கம் செய்யப்பட்டு மதுரை புதிய மறைத்தளம் நிறுவப்பட்டப்பிறகு 1844 இல் நாகப்பட்டினத்தில் புனித வளனார் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரி 1883 இல், திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. 400 ஆண்டுகளாக போற்றப்படும் மாதரசி மாதா ஆலயம் நாகப்பட்டினம் கிறிஸ்தவத்தின் நீண்டப் பாரம்பரியத்தை இன்றும் பறைசாற்றுகின்றது. 1781 இல், நாகப்பட்டினத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டச்சுக்காரர்களைப்போல இடையூறு தராமல், சமய சுதந்திரம் வழங்கியதால் கத்தோலிக்க கிறிஸ்தவம் நாகப்பட்டினம் மறைத்தளத்தில் செழித்தது.
1630 இல், பேரோ பராத்தோ வரைந்த நாகப்பட்டினம் வரைப்படத்தில் 5 கிறிஸ்தவ ஆலயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. போர்த்துக்கீசியரின் வடகிழக்குப் பகுதியில் இறை அன்னை ஆலயம் (பிரான்சிஸ்கன் துறவிகள்), தெற்குப் பகுதியில் புனித ஜெரோம் ஆலயம், தென்மேற்கு பகுதியில் இயேசு சபையினர் ஆலயம், வடக்கே தொமினிக்கன் துறவு சபையினர் ஆலயம் மற்றும் மேற்கே புனித நாசரேத்து அன்னை ஆலயம். இந்நாட்களில் நாகப்பட்டினம் பங்கு ஆலயம் மயிலை மறைமாவட்ட குருக்களால் நிர்வகிக்கப்பட்டது. 1642 இல் கோவா ஆளுநருக்கு எழுதப்பட்ட மடலில் நாகப்பட்டினத்தில் 7000 கிறிஸ்தவர்களும், 4 பங்குத்தளங்களும், 4 துறவு சபைகளின் கீழ் இயங்குவதாக கூறப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் சில மீனவ குடும்பங்களும், ஒரு சிற்றாலயமும், பிரான்சிஸ்கன் குருக்களின் கண்காணிப்பில் உள்ளதாக அக்குறிப்பு தருகின்றது.
1664 இல், டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காக்க சென்னை, மயிலை, மன்னார், கொச்சின் போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர். இதே ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து பல்தேயுஸ் என்ற புரோட்டஸ்டாண்ட் போதகர் நாகப்பட்டினத்தில் மறைப்பணியில் ஈடுபட்டு, பல குழந்தைகளை தனது நெறியில் சேர்த்தார். 1779 இல், 8000 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அந்தோனியோ தெ ரோசாரியோ என்ற பிரான்சிஸ்கன் குரு பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். 1712 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் டச்சுக்காரர்களிடமிருந்து நாகப்பட்டினத்தை கைப்பற்றும்வரை பங்குத்தந்தையர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் புனித பிரான்சிஸ் துறவு சபையினர் ஆவர். 1823 இல், பங்கின் விசுவாசிகளின் எண்ணிக்கை 4000 ஆக குறைந்தது. 1825 இல், இந்திய போர்த்துக்கீசிய காலனிகளில் பிரான்சிஸ்கன் சபை தடைசெய்யப்பட, மயிலை மறைமாவட்டக் குருக்கள் நாகப்பட்டினம் பங்கின் பொறுப்பை ஏற்றனர்.
(தொடரும்)
Comment