No icon

மரியா

அன்றும் இன்றும்

6. உடல் வலிமை மிக்க பெண் மரியா

பெருவாரியான ஆண்கள், ஒரு பெண் என்பவர் ஒல்லியான உடல் கட்டமைப்பைக் கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணேஅழகானபெண் என்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள். எனவேதான், பருமனான உடல் கட்டமைப்பைக் கொண்ட பெண்களை, ஆண்கள் கேலி செய்வது நீண்டகால மரபாகப் பின்பற்றப்படுகின்றது. இப்பின்னணியில் ஆண்களின் இந்தச் சிந்தனையை உள்வாங்கிய பெண்களும், தங்களின் உடல் கட்டமைப்பை முடிந்த அளவுக்கு மெல்லிய ஒன்றாக வைத்திருக்க முயற்சி எடுக்கின்றார்கள். இதற்காக, இளம் வயதில் உள்ள பெண்கள், உணவைப் பெருவாரியாகக் குறைத்து உண்ணும் பழக்கமும் காணப்படுகின்றது. இதனால், இளம் வயதிலேயே பலரும் சத்துக்குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால், அன்னை மரியாவைப் பொறுத்தமட்டில், அவர் மேற்கூறியதுபோல, மன உறுதி கொண்டவராக மட்டுமின்றி, உடல் வலிமை மிக்க ஒரு பெண்ணாகவும் வாழ்ந்திருக்க வேண்டும். புதிய ஏற்பாட்டுப் பகுதிகளின் அடிப்படையில் காணும்போது, இது நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றது.

* மரியா தன்னந்தனியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணம் செய்து, தம் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றதாக நற்செய்தி கூறுகின்றது (லூக் 1:39). கன்னிப்பெண்ணாக, தூய ஆவியாரின் துணையுடன் கருத்தாங்கிய நிலையில், இப்பயணத்தை மேற்கொண்டார் என்பது, அவர் எந்தளவுக்கு மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர் என்பதற்குச் சான்றாக உள்ளது.

* கணக்கெடுப்புக்காக மரியா கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் இருந்து, யூதேயாவில் உள்ள பெத்லகேம் சென்றதாக விவிலியம் நமக்குக் காட்டுகின்றது (லூக் 2:5). நாசரேத்தில் இருந்து பெத்லகேம் செல்ல அவர் 90 மைல்கல் தொலைவு பயணித்திருக்க வேண்டும். நிறைமாதக் கர்ப்பிணியாக அவர் இவ்வளவு தூரம் பயணித்தார் எனில், அவர் எந்தளவுக்கு உடல் வலிமை மிக்கவராக இருந்திருக்க வேண்டும் என்பது நமக்குத் தெளிவு. இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாம் மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கும் நிலை காணப்படுகின்றது. எந்தவித வேலையையும் அவர்கள் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. காரணம், அவர்கள் ஏதாவது வேலை செய்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரு தவறான சிந்தனையை உருவாக்கியுள்ளார்கள். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சத்துக் குறைபாடு உள்ளவர்களாய் இருப்பதாலும், இந்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

* பிறந்த குழந்தையை ஏரோது கொல்லத் தேடுகின்றான் என்று கனவில் ஆண்டவருடைய தூதரால் எச்சரிக்கப்பட்டு, யோசேப்பு மரியாவையும், குழந்தையையும் கூட்டிக்கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்கின்றார் (மத் 2:13-14). மீண்டுமாய், ஏரோதின் இறப்புக்குப்பின், ஆண்டவரின் தூதர் அறிவுறுத்தியபடி, மரியாவையும். குழந்தையையும் நாசரேத்துக்கு அழைத்துச் செல்கின்றார் (மத் 2:19-23). இந்த இரண்டு நீண்ட பயணங்களும் மரியா குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் நடைபெற்றவை. இது மரியா எவ்வாறு பிள்ளைப்பேற்றுக்குப் பின்புகூட, நெடும் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய உடல் வலிமை மிக்க பெண்ணாக இருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வாறாக, மரியா உடல் வலிமையும், உறுதியும் கொண்ட ஒரு பெண்ணாகத்தான் வாழ்ந்திருக்க வேண்டும். மரபில் ஆண்கள் சித்தரித்தது போன்று ஒல்லியான, மெலிந்த உடல்வாகு  கொண்ட ஒரு பெண்ணாக மரியா இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும்.

7. தோழமையும், தொடு உணர்வும் கொண்ட பெண் மரியா

மானிட வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு கருத்தியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைதான் உலகை வழிநடத்தியுள்ளன. பாலின அடிப்படையிலும், பல்வேறு கருத்தியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, “பெண்தான் பெண்ணுக்கு எதிரிஎன்பது. ஆனால், இந்தக் கருத்தியலை மரியா தமது வாழ்வின் மூலம் உடைத்தெறிந்துள்ளார். இரண்டு பெண்கள் சந்தித்தால் அங்கு என்ன நிகழும், என்ன நிகழ வேண்டும் என்பவற்றை மரியா, எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. தூய ஆவியாரின் துணையுடன் கருத்தாங்கிய மரியா, தம் உறவினரும் ஆறு மாதக் கர்ப்பிணியுமாகிய எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கின்றார். அவருடன் ஏறத்தாழ மூன்று மாதம் தங்கி, அவருக்கு உதவுகின்றார். இந்நிகழ்வில் மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோது அவரை வாழ்த்தினார் எனக் காண்கின்றோம். அவ்வாறு, மரியா வாழ்த்தும்போது, எலிசபெத்தின்வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக் 1:41) எனக் காண்கின்றோம். அதேவேளையில், எலிசபெத்தும் மரியாவைப் பார்த்து, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே” (லூக் 1:42) எனக் கூறுகின்றார். இவ்வாறாக, இந்த இரு பெண்களும் சந்தித்தபோது, அங்கு ஒருவர் மற்றவரை வாழ்த்தினார். ஒருவர் மற்றவரால் மகிழ்ச்சியடைந்தார் எனக் காண்கின்றோம். இவ்வாறாக, ‘பெண்தான் பெண்ணுக்கு எதிரிஎன்று ஆண்கள் உருவாக்கிய தவறான கற்பித்தலை உடைத்து, ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் மகிழ்வை, ஆறுதலை, உதவியை வழங்க முடியும் என்று, இந்த இரு பெண்களுக்கிடையேயான சந்திப்பு நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

மேலும், ஒரு பெண்ணின் தேவையை இன்னொரு பெண்தான் உள்ளத்தால் அறிவார். பெண்கள்தான் ஆண்களைவிட தொடு உணர்வு (sensitivity) அதிகம் கொண்டவர்கள். மரியாவின் வாழ்வைக் காணும்போது, இது நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றது.

* மரியா, தாம் கருத்தாங்கிய நிலையிலும், தம் உறவினர் எலிசபெத்து ஆறு மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பதைக் கேள்விப்பட்டு, தாமே வலியச்சென்று அவருக்கு உதவுவதற்கு முன்வருகின்றார்.

* கானாவூர் திருமண நிகழ்வில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்ட நிலையில், யாரும் உதவிகேட்டு மரியாவை அணுகவில்லை. மாறாக, மரியாவே திருமண வீட்டினருக்கு ஏற்படவிருந்த அவமானத்தை உள்ளத்தில் உணர்ந்து, தாமே வலியச்சென்று இயேசுவிடம், “திராட்சை இரசம் தீர்ந்து விட்டது” (யோவா 2:3) என்று கூறி, அவரை ஏதாவது செய்வதற்குப் பணிக்கின்றார். இன்று தனது நலன், தன் குடும்பத்தின் நலன் எனக் குறுகிய எண்ணத்தில் மனிதர் வாழும்

சமூகத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், மரியா பிறரின் தேவையைக் குறிப்பறிந்து செய்யக்கூடிய நபராகத் திகழ்ந்தார் என்பது நோக்கத்தக்கது.

8. முழக்கமிட்டு அறிவித்துச் சலனங்களை ஏற்படுத்திய பெண் மரியா

யூதச் சமூகத்தில் ஒரு பெண் பொதுவெளியில் பேசுவது என்பது காணப்படாத ஒன்று. அதிலும், உரக்கப் பேசுவதோ, முழக்கமிட்டு அறிக்கையிடுவதோ நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், தூய ஆவியின் துணையுடன் கருத்தாங்கிய மரியாவோ, தம் வழியாக இறைவன் ஆற்றிய பல்வேறு செயல்களை முழக்கமிட்டு, அறிவித்து, இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார் (லூக் 1:47-49). இது மரியாவின் பாடலில் நமக்குப் புலப்படுகின்றது. மரியாவின் இப்பாடல் பழைய ஏற்பாட்டில்அன்னாவின் வேண்டுதல்பகுதியில் காணப்படும் பகுதியுடன் இணைந்து செல்கின்றது (1சாமு 2:1-10). பலரும் மரியாவின் இப்பாடலை இயேசுவின் பாடலுக்கு (லூக் 4:18-19) ஒரு முன்னுரையாகக்கூடக் கூறுவர். எனவே, மரியாவின் இப்பாடல் கூட, மரியா எவ்வாறு சமூக அக்கறையுடன் தம் மகனை வளர்த்தார், கடவுளின் மீட்புச் செயலுக்கு அவரை எவ்வாறு அர்ப்பணித்தார் எனச் சுட்டிக்காட்டுகின்றது எனக் கூறுவர்.

மரியா தமது பாடலில் மூன்று வகையான விடுதலையைப் பற்றிப் பேசுகின்றார்.

* பண்பாட்டுத் தளம்: “உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைக் கடவுள் சிதறடித்து வருகின்றார்.”

* அரசியல் தளம்: “தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார்.”

* பொருளாதாரத் தளம்: “பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்” (லூக் 1:50-53).

மரியாவின் இம் முழக்கம், அவர் எவ்வாறு ஏழைகள் சார்பாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. மரியாவை நலிவுற்ற மக்களை நலன்களால் நிரப்புபவராகவும் (Comforter of the Disturbed), அதேவேளையில் எல்லா வசதியும்படைத்த மக்கள் மத்தியில் சலனங்களை ஏற்படுத்துபவராகவும் (Disturber of the Comfortableகாண்கின்றோம். எனவேதான், மரியாவைஏழைகளின் இறைவாக்கினர் எனக்கூட அழைப்பர். மரியாவின் வழியைப் பின்பற்றித்தான், இயேசுவைக்கூட அவருடைய செயல்களைக் கண்டு, அவரைஇறைவாக்கினர்களுக்கெல்லாம் பெரிய இறைவாக்கினர் எனக் கண்டனர். இவ்வாறு, மரியாவின் இப்புரட்சிப் பாடல் இன்றைய சமூக அநீதிகளுக்கு எதிராக நாம் எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக உள்ளது.

9. புறம்பாக்கப்பட்ட, அகதியாய், தீண்டத்தகாத பெண்ணாய் வாழ்ந்த மரியா

யூதச் சமூகத்தில் ஒரு பெண் நடத்தப்பட்ட முறையில், காணப்பட்ட ஏறத்தாழ அத்தனை அனுபவங்களையும், ஒரு பெண் என்ற முறையில், மரியாவும் அனுபவித்தார் என்றால் அது மிகையாகாது.

புறம்பாக்கப்பட்ட மரியா: தம் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவருக்கு விடுதியில் கூட இடம் கிடைக்கவில்லை. எனவே தான், அவர் தமது பிள்ளையைப்  பெற்று, அதைத் தீவனத் தொட்டியில் கிடத்தினார் (லூக் 2:7) எனக் காண்கிறோம். மரியா ஓர் ஏழைப் பெண்ணாக இருந்த காரணத்தால் தான், அவர் புறம்பாக்கப்பட்டார் எனக் கூற முடியும்.

அகதியாக்கப்பட்ட மரியா: சொந்த மண்ணில் வாழ முடியாமல், அகதியாய் வாழ்வது என்பது, மரியாவின் வாழ்விலும் காணப்பட்டது. மரியா, தம் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, ஏரோது அக்குழந்தையைக் கொல்லத் தேடினான். எனவே, தம் குழந்தையைக் காப்பாற்ற அவர் சொந்த மண்ணிலிருந்து எகிப்துக்குத் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது (மத் 2:13-15). ஏரோது அரசன் இறக்கும்வரை அவர் எகிப்திலேயே ஓர்அரசியல்அகதியாய் வாழ்ந்தார் என்பது நோக்கத்தக்கது. இவ்வாறு, மரியா தம் இளம் வயதிலேயே அன்றைய ஆட்சியாளர்களின் வெறுப்பு, பொறாமை, கோபம், துன்புறுத்தல்கள் ஆகியவற்றைச் சந்தித்த பெண்ணாக வாழ்ந்திருக்கின்றார்.

தீண்டத்தகாதவராகப்பட்ட மரியா: இயேசுவின் பணி வாழ்வின்போது, அவரைப்பெயல்செபூல் பிடித்திருக்கிறது” (மாற் 3:22) என்று மறைநூல் அறிஞர்கள் கூறி, அவரைப் பிடித்துச்செல்ல முயல்கின்றார்கள். அதைக் கேள்விப்படும் மரியா, தம் மகனைப் பார்க்க வருகின்றார். ஆனாலும், பெண் என்ற காரணத்தால் அவர் தம் மகனை நேரடியாகச் சந்திக்க இயலவில்லை. எனவேதான், “உம் தாயும்... வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” (மாற் 3:32) என்ற செய்தி இயேசுவுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறாக, ஒரு பெண் எவ்வாறு அன்று பல்வேறு அனுபவங்களைச் சந்தித்தாரோ, அவை அனைத்தையும் மரியாவும் அனுபவித்தார் என்றால் அது மிகையாகாது.

(தொடரும்)

Comment