No icon

புதிய மரியியல் தொடர் 09

மரியா - அன்றும் இன்றும்

. திருமுறைப் புறநூல்களில் மரியா

இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட திருமுறைப் புறநூல்களில் மரியா பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. திருமுறைப் புறநூல்கள் எழுதப்பட்டதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன:

(1) நற்செய்தி நூல்கள் மரியா பற்றி மிகக் குறைவாகவே கூறியுள்ளன; எனவே நற்செய்தி நூல்கள் கூறாதவற்றைக் கூறும் நோக்கில் அவை எழுதப்பட்டன.

(2) நற்செய்தி நூல்களில் இடம்பெறும் ஏனைய நபர்களின் வாழ்க்கை வரலாற்றை நிறைவுசெய்ய அவை எழுதப்பட்டன. இவ்வாறாக, திருமுறை சாராத, நூல்களில் மரியா பிறந்த ஊர், அவரின் பெற்றோர்கள், அவரின் இளமைப் பருவம், இறப்புப் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், மரியா கடவுளின் தாயாகத் தேர்வு செய்யப்படக் காரணமாக, மரியாவிடம் காணப்பட்ட தனிப்பண்புகள், மரியாவின் எடுத்துக்காட்டான வாழ்வு போன்றவையும் அங்கு இடம்பெற்றுள்ளன.

பல திருமுறைச் சாரா நூல்கள் மரியா பற்றிக் கூறினாலும், 2 ஆம் நூற்றாண்டில் உருவான யாக்கோபு எழுதிய முதல் நற்செய்தி (Protoevangelium of James) எனும் நூல்தான் இயேசுவின் பிறப்புக்கு முந்திய மரியாவின் வாழ்வை விரிவாக எடுத்துரைக்கின்றது. இந்நூல் திருத்தந்தை கெலாசியுஸ் (492-496) என்பவரால் திருமுறை சாரா நூலாக அறிவிக்கப்பட்டது. இந்நூல்தான் மரியாவின் பெற்றோர், மரியாவின் பிறப்பு, ஆலயத்தில் மரியாவின் குழந்தைப் பருவம், வயது முதிர்ந்த யோசேப்புடன் மண ஒப்பந்தம், மரியாவின் புனிதம், இயேசுவின் பிறப்பு அறிவிப்பு, யோசேப்பின் சந்தேகம், தலைமைக் குரு முன்பாக மரியா தம் நியாயத்தைக் கூறி வெற்றிபெறல், முப்பொழுதும் கன்னி போன்றவற்றை எடுத்துரைக்கின்றது. இவை தவிர, இயேசுவின் பிறப்பின்போதும் இயேசுவின் பிறப்பிற்குப் பின்பும் மரியாவின் வாழ்வில் நடந்தவற்றை இந்நூல் விவரிக்கின்றது: பெத்லகேமுக்கு வெளியே ஒரு குகையில் இயேசுவின் பிறப்பு, குழந்தை இயேசுவைக் காணவந்த கீழை நாட்டு ஞானியர் அவரை வணங்குதல், ஏரோது குழந்தைகளைக் கொல்லல் போன்றவை.

இந்நூல் தவிர்த்து மரியாவைப் பற்றிய தரவுகளைக் கொண்டுள்ள பல திருமுறை சாரா நூல்கள் உள்ளன: எசாயாவின் விண்ணேற்றம் (Ascension of Isaiah) எனும் நூல்தான் இயேசுவின் பிறப்பின்போதும் மரியா கன்னியாக இருந்தார் எனக் கூறும் முதல் நூல்; சாலமோனின் பாடல் (Odes of solomon) எனும் நூல் மரியாவின் குழந்தைப் பருவம் பற்றிக் கூறுகின்றது; திருத்தூதர்களின் கடிதம் (Apostles’ Epistle) எனும் நூல் இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றிப் பேசுகின்றது; நசரேயர்களின் நற்செய்தி (The Gospel of the Nazarenes) எனும் நூலில் திருமுழுக்கு யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற தயக்கம் காட்டும் பகுதி உள்ளது; தவிர, இயேசுவின் திருக்காட்சியின்போது அவரைப் பெரிய மக்கள் கூட்டம் சந்தித்ததாகவும் உள்ளது; தோமாவின் குழந்தைப் பருவ நற்செய்தி (The Infancy Gospel of Thomas) என்பது மரியாவைப் பரிந்துரையாளராகக் காட்டுகின்றது. மறைமெய்யறிவுக் கொள்கையாளரின் நூல்களாகிய பிலிப்புவின் நற்செய்தி (Gospel of Philip), எபிரேயர்களின் நற்செய்தி (Gospel of the Hebrews) ஆகியவை தூய ஆவியாரைக் கிறிஸ்துவின் தாயாகக் காட்டுகின்றன.

இவ்வாறு, மேற்கூறிய திருமுறை சாரா நூல்கள் அனைத்தும் மரியாவை இயேசுவுக்கு இணையாகக் காட்ட முயன்றன. தவிர, திரு அவையின் மரபு இந்நூல்களில் காணக்கிடக்கும் அனைத்தையும் ஏற்காவிட்டாலும், காலப்போக்கில் அவை அனைத்தையுமே வரலாற்று உண்மைகளாக நம்பத் தொடங்கினர். இதுவே, திரு அவையின் மரபில் மரியா வணக்கம் எழுச்சி பெற ஒரு தொடக்கமாக அமைந்தது என்றால் அது முற்றிலும் உண்மை.

. கிறித்தவ மரபிற்கு முந்தைய காலத்துப் பெண்தெய்வ வழிபாடும் மரியா வணக்கமும்

கிறித்தவச் சமயம் பல்வேறு சமய வழிபாட்டு முறைகளைக் கொண்ட பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் பிறந்த ஒன்று. அன்று பல்வேறு சமயங்களிலும் பெண் தெய்வ வழிபாட்டு முறை என்பது பரவலாகக் காணப்பட்ட ஒன்று. எடுத்துக்காட்டாக, கிரேக்கச் சமயத்தில் டெமெற்றர் (Demerter), உரோமையில் சிபில் (Cybele), எபேசில் டயானா (Diana), எகிப்தில் ஐசிஸ் (Isis) போன்ற பெண் தெய்வங்கள் சிறப்புப் பெற்றவையாகக் காணப்பட்டன. இவ்வாறு, பல்வேறு சமயங்களிலும் பெண் தெய்வ வழிபாட்டு முறை காணப்பட்ட சூழலில், திரு அவையிலும் ஒருபெண் தெய்வத்திற்கு இடம் தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம், கிரேக்க-உரோமை மதத்தில் இருந்து கிறித்தவ மதத்தைத் தழுவியவர்கள் பெண் தெய்வங்களின் தேவை பற்றிய தங்கள் பார்வையைப் பெரிதும் மாற்றவில்லை. எனவே, அன்றைய மறைபரப்புப் பணியாளர்கள், தங்களின் கிறித்தவ மதத்திலும் மீட்பின் வரலாற்றைப் பொறுத்தவரை, முக்கியப் பங்காற்றிய ஒரு பெண் இருக்கின்றார் என்றார்கள். இப்பெண் இயேசுவின் தாயாகிய மரியாவே என்றனர். இவ்வாறு, அங்கிருந்த கோவில்களில் காணப்பட்ட பல்வேறு பெண் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு, அவ்விடங்களில் மரியாவின் திருவுருவங்களை வைத்தார்கள். எனவே, பெண் தெய்வங்களின் கோவில்கள் பலவும் மரியாவின் கோவில்களாக மாற்றம் பெற்றன. அதுமட்டுமல்ல, பல்வேறு பெண் தெய்வங்களுக்கு ஏற்றிக் கூறப்பட்டிருந்த பல்வேறு பண்புகளையும் (வளமை, அன்பு, ஞானம்) பணிகளையும் மரியாவுக்கு ஏற்றிக் கூறினார்கள். இவ்வாறு, ஒவ்வொரு தேவைக்காகவும் ஒவ்வொரு பெண் தெய்வத்திடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; மாறாக, மரியாவே எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுபவர் என்றும், அவரிடம் சென்றால் அவர் நமக்காகத் தம் மகனிடம் பரிந்துபேசி அனைத்தையும் பெற்றுத்தருவார் என்றும் கூறினார்கள். இவ்வாறாக, மறைபரப்புப் பணியாளர்கள் அன்று இயேசுவைப் பற்றி போதிக்கச் சென்றாலும், கிறித்தவத்தை அவர்களுக்கு ஏற்புடைய சமயமாக மாற்றும் முயற்சியில் மரியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள் என்றே கூறலாம்.

இப்பின்னணியில்தான், 16 ஆம் நூற்றாண்டில் கிறித்தவம் இந்தியாவில் / தமிழகத்தில் பரவியபோது, மரியா வணக்கம் எவ்வாறு மிக முக்கிய இடம் பெற்றது என்பதைக் காணவேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் அகில உலகத் திரு அவையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் மரியா மிக முக்கிய இடம் பெற்றிருந்தார். இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஆண் தெய்வ வழிபாட்டு முறை காணப்பட்டாலும், அதற்கு இணையாகப் பெண் தெய்வங்கள் வழிபாட்டுமுறையும், “இந்துமரபில் நிறையவே காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, காளி தெய்வம் தீமையை அழிப்பவராக, இலட்சுமி தெய்வம் செல்வம் வழங்குபவராக, சரஸ்வதி தெய்வம் ஞானத்தை அருள்பவராக, மாரியம்மா நோய்களை நீக்கிக் குணம் தருபவராக வணங்கப்பெற்றனர். எனவே, பெண் தெய்வ வழிபாட்டுமுறை ஏற்கனவே வழக்கில் இருந்த சூழலில், இயேசுவாகிய நற்செய்தியைப் போதிக்க வந்த மறைப்பரப்புப் பணியாளர்கள் மரியா வணக்கத்தையும் முன்னிலைப்படுத்தினார்கள். அதன் மூலம் கிறித்தவச் சமயத்தை ஏற்புடைய சமயமாக இந்தியாவில் / தமிழகத்தில் மாற்றினார்கள். மேலும், ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தெய்வத்திடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கொண்டு, அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுபவராக அன்னை மரியாவை வழங்கினார்கள். எனவேதான், இன்றளவுகூட வேளாங்கண்ணி போன்ற மரியாவின் திருத்தலங்களுக்குப் பல்வேறு தேவைகளுக்காக - பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைவரம் வேண்டியும், படிக்கும் பிள்ளைகள் தேர்வுக்காலத்தில் ஞானம் வேண்டியும், நோயாளிகள் நோயிலிருந்து குணம்பெற வேண்டியும், பணக்காரர்கள் இன்னும் பணம் படைத்தவர்களாக மாறவேண்டியும் - செல்லக்கூடியதைக் காண்கின்றோம்.

இவ்வாறாக, பெண் தெய்வ வழிபாட்டுமுறை காணப்பட்ட சூழலில், இயேசுவை மட்டும் போதித்தால் அது போதாது, அது சரியான ஒரு பார்வையாக இருக்காது எனக் கருதி, மரியா வணக்கத்தை மறைபரப்புப் பணியாளர்கள் முன்னிலைப்படுத்தினர் என்பது பலரின் கருத்து. இருப்பினும், சிலர் இக்கருத்தை அப்படியே ஏற்பது இல்லை. இவர்களைப் பொறுத்தமட்டில், பிற சமயங்களில் காணப்பட்ட பெண்தெய்வ வழிபாட்டின் ஒருசில கூறுகளைக் கிறித்தவ சமயம் உள்வாங்கியிருந்தாலும், அவற்றை அப்படியே முழுமையாக ஏற்க முடியாது என்பார்கள்.

. மரியாபற்றிய திரு அவைத் தந்தையர்களின் படிப்பினைகள்

(தொடரும்)

Comment