No icon

புனித பிரான்சிஸ் சவேரியார்

தமிழகத்தில் கிறிஸ்தவம்

புனித சவேரியாரின்

நற்செய்திப் பயணம்

இளமைப் பருவம்

இந்தியாவின் திருத்தூதர், மறைப்பணி நாடுகளின் பாதுகாவலர் எனப் போற்றப்பெறும் புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டின் நவார் மாநிலத்திலுள்ள ஜாவியர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் பிரபுக்களின் குடும்பத்தினராகிய யுவான் தெயாசு, டோனாமரியா ஆகியோரின் 5 ஆவது அன்புக் குழந்தையாக கிபி.1506 ஏப்ரல் 7 ஆம் நாள், புனித வெள்ளியன்று பிறந்தார். புனித வெள்ளியன்று ஓர் ஆண்குழந்தை பிறந்ததால் ஆண்டவரின் பாடுகளை எப்போதும் தியானித்து, அவரின் திருக்காயங்களை தன் உடலில் சுமந்து, திரு அவையால் மறுகிறிஸ்துவாகப் போற்றப்பெறும் அசிசி நகர், புனித பிரான்சிஸ்குவின் பெயரையே தனது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தனர். புனித அசிசி பிரான்சிசுக்கு இணையாக பிற்காலத்தில் இவரும் புகழ்பெற்ற புனிதராக திகழ்ந்ததால் எளிதாக அடையாளப்படுத்த பிரான்சிஸ் சவேரியார் என அழைத்தனர். சவேரியார் என்பது அவரின் குடும்பத்தைக் காக்க அரணாக அமைக்கப்பெற்ற சவேரியோ என்ற கோட்டையை குறிப்பதாகும்.

இவ்வாறு, சவேரியார் வரலாற்றில் அறிமுகமானார். சவேரியாரின் தந்தை யுவான் தெயாசு சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஓர் அறிஞர். நவார் நாட்டின் அரசன் 3 ஆம் ஜான் அரசரின் நிதியமைச்சராக பணியாற்றினார். மேலும், இக்குடும்பத்தார் அனைவரும் சிறந்த கல்வியாளர்களாக திகழ்ந்தனர். சவேரியார் 9 ஆவது வயதில் தன் தந்தையை இழந்தார். எனவே, அவரது அன்புத்தாய் டோனா மரியா சவேரியாரை தனது அரவணைப்பில் வைத்து, பாதுகாத்து, அறிவு, ஆன்மீகம், ஒழுக்கநெறி ஆகிய பண்புகளில் வளர்த்தெடுத்தார். பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற பாரிஸின் புனித பார்பே பல்கலைக்கழகத்தில் 1525 ஆம் ஆண்டு சேர்ந்து, மெய்யியல் பயின்று 1530 இல், மெய்யியல் உயர்நிலைப் பட்டம் பெற்றார். தனது விருப்பத்தின்படி 1530 முதல் 1534 வரை அப்பல்கலைக்கழகத்திலே சிறந்த மெய்யியல் பேராசிரியராகப் பணியாற்றினார். மீண்டும் அங்கேயே 1534 முதல் 1536 வரை இறையியல் பயின்று பட்டம் பெற்றார்.

இயேசு சபைத் துறவி

அறிவு, ஆய்வு, படிப்பு, பட்டம், செல்வ செழிப்புமிக்க வாழ்வு, புகழ்வாய்ந்தக் குடும்பத்தின் மகன் என்ற உலகப்பெருமையில் திளைத்திருந்தபோது தான், 23 வயது சவேரியார், 39 வயது லொயோலா இஞ்ஞாசியாரை 1529 ஆம் ஆண்டு, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றார். இறைவன் இயேசு, உலகம் நிலையற்றது, ஆன்மாவே மேலானது, இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென இருவருக்கும் ஒரேவிதமான நிலைப்பாடு. எனவே, விரைவிலே இருவரும் நண்பர்களாகி சவேரியாரின் அறையிலேயே இஞ்ஞாசியாரும் தங்கிப்படித்தார். “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர்தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?’’ (மத் 16:26) என்ற இயேசுவின் சொல்லாடலை லொயோலா இஞ்ஞாசியார் அடிக்கடி பிரான்சிஸ் சவேரியாரிடம் கூறுவார். காரணம் சவேரியார் தனது அறிவு, ஆற்றல், ஆளுமையைப் பற்றி பெருமையடைந்தார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவரை நற்செய்தியை ஆழமாக வாசிக்கச்செய்து, தியானிக்கச் செய்தது, அவரில் புதிய மாற்றத்தை ஆண்டவரை நோக்கி அழைத்துச் சென்றது. உலகப் பெருமைகளை உடைத்தெறிந்து, லொயோலா இஞ்ஞாசியார் வழி நடத்திய புனிதப்பாதையில் துணிவுடன் பயணித்தார்.

லொயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார், பியர்பேபர், திஜியோலைனே, சிமாயோரொடிரிக்ஸ், அலோன்சோசல்மேரோன் மற்றும் நிக்கோலஸ் போ பாதில்லா என்ற இளைஞர்களை இணைத்து, 1534 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று, இயேசு  சபையை தனது தலைமையில் நிறுவினார். கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை என்ற வார்த்தைப்பாடுகளோடு, இசுலாமியர்களை மனந்திருப்புவதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். 1540 ஆம் ஆண்டு, செப்டம்பரில் திருத்தந்தை மூன்றாம் பவுல், இயேசு சபையின் ஒழுங்குகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். 16 ஆம் நூற்றாண்டில் திருஅவையைப் புரட்டிப்போட்ட புரோட்டஸ்டான்ட் கொள்கைகளை, இயேசு சபையினர் தங்களது அறிவுப்பூர்வமான விவாதங்களால் தகர்த்தெறிந்து, திருஅவையின் மாண்பை உயர்த்தினர். மறைப்பணியில் ஆர்வம் கொண்ட இயேசு சபையினர், லொயோலா இஞ்ஞாசியார் காலத்திலே இந்தியா, பிரேசில், ஆப்பிரிக்காவின் காங்கோ மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு மறைப்பணியாற்றச் சென்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த புனித இஞ்ஞாசியார் உரோமையில் ஒரு கல்லூரியையும் (பின்னாட்களில் புனித கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம்), ஜெர்மன் குருக்களுக்கான கல்வி நிலையத்தையும் தோற்றுவித்தார்.

ஐரோப்பா மற்றும் மறைபரப்பு நாடுகளில் இயேசு சபையினர் ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து, உலக மக்கள் அனைவருக்கும் அறிவொளி ஏற்றினர். புனித லொயோலா இஞ்ஞாசியார் மறைந்த 1556 ஆம் ஆண்டில் மிகக் குறுகிய காலத்திற்குள் 1000 க்கும் மேற்பட்டோர் இயேசு சபையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிஸ் சவேரியார் 1537 ஜுன் 24 அன்று, குருவாக திருநிலைப் படுத்தப்பட்டு, மறைப்போதகப் பணிக்காக தன்னை செபத்திலும், தவத்திலும் தயாரித்துக் கொண்டார்.

கோவா மற்றும் கேரளாவில் மறைப்பணி

புனித பிரான்சிஸ் சவேரியார் 1542 ஆம் ஆண்டு, மே 6 ஆம் நாள் கோவாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட மார்ட்டின் அல்போன்சா டிசூசா என்பவருடன் கோவா வந்தடைந்தார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் இயேசு சபைத்துறவி ஆவார். திருத்தந்தையின் தூதுவர் என்றப் பட்டத்துடன் சவேரியார் இந்தியா வந்தார். ஆனால், இப்பதவிக்கான எவ்விதமான ஆடம்பர சலுகைகளை ஏற்றுக்கொள்ளாமல், சொகுசு இல்லங்களைத் தவிர்த்து கோவாவின் மருத்துவமனைகளில் தங்கி, தனது முதல் நற்செய்திப் பணிகளை நோயாளிகளுக்கும், கோவா மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டார். காலை வேளையில் மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்திப்பது, செபிப்பது, மேலும் அங்கு வந்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒப்புரவு வழங்குவது என செயலாற்றினார். ஞாயிறுதோறும் தொழுநோயாளர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, அவர்களை சிறப்பாகப் பராமரித்தார்.

மதிய வேளையில் சிறைக் கைதிகளை சந்தித்து, ஆறுதல்படுத்தி, நற்செய்தியின் பாதையில் நெறிப்படுத்தினார். பேராசிரியராகத் திகழ்ந்த சவேரியார், மறைக்கல்வி பயிற்றுவிப்பதை பெரும் விருப்பப்பணியாக கொண்டிருந்தார். கதை, பாடல்கள், கேள்விப் பதில் என புதிய யுத்திகளைப் பயன்படுத்தி, திருமறையின் போதனைகளை எல்லோர் மனதிலும் எளிதாகப் பதிய வைத்தார். புனித சவேரியாரின் படைப்பாற்றல்மிக்க யுத்திகளை மற்ற மறைப்பணியாளர்களும் கற்றுக்கொண்டு, செயல்படுங்கள் என கோவா ஆயர் கேட்டுக் கொண்டார்.

1541 ஆம் ஆண்டில், பிரான்சிஸ்கன் துறவிகளால் நிறுவப்பட்டSanta Fe (தூய நம்பிக்கை) இந்தியாவின் முதல் கல்விக்கூடம் ஆகும். இதன் பொறுப்பாளராக சவேரியார் நியமிக்கப்பட்டார். முத்துக்குளித்துறையிலுள்ள 20,000 பரதவ கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீகப் பணிப்புரிய ஒருவர்கூட இல்லை என்பதை கேள்விப்பட்டு, கோவா குருத்துவக் கல்லூரியில் பயிற்சிப்பெற்ற மூன்று பரதவ இளைஞர்கள் மூலம் அறிந்து, வேதனையடைந்தார். கோவாவில் போதிய குருக்கள் இருந்ததால் அப்பயிற்சி மாணவர்களின் துணையுடன் ஆறு மாதங்களுக்குப் பிறகு, கோவாவிலிருந்து முத்துக்குளித்துறைக்கு சவேரியார் பயணமானார். தன் உதவியாளர்கள் துணையுடன் தமிழில் நம்பிக்கை அறிக்கை, விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே மற்றும் அருள் நிறைந்த மரியே வாழ்க போன்ற செபங்களை மனப்பாடம் செய்துக் கொண்டார். சவேரியார் மும்பை, மங்களூர், கொச்சின், ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக முத்துக்குளித்துறைக்கு நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். மும்பை மற்றும் மங்களூர் பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து, புதிய கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்தார்.

கேரளாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் மீனவக்குடிகளுக்கு பெருமளவில் திருமுழுக்களித்தார்.

இவ்வாறு, உயர் குடிகள் மட்டுமே கிறிஸ்தவராக முடியும் என்ற தப்பறையை உடைத்தெறிந்து, ஒடுக்கப்பட்ட மக்களும் மற்றவருக்கு நிகரான கடவுளின் பிள்ளைகள் என்பதை செயற்படுத்தினார். சிரியன் கிறிஸ்தவர்கள் அகில உலக உரோமை திருஅவையோடு இணக்கமான உறவைக் கொண்டிருக்க வேண்டுமென்ற பிரான்சிஸ்கன் துறவிகளின் கருத்தை சவேரியாரும் வலியுறுத்தினார். ஆனால், சிரியன் கிறிஸ்தவர்கள் பெர்சியன் ஆயர்களின் கிழக்கு திருஅவையின் கீழ் செயல்படுவதையே விரும்பினர். அவர்கள் தங்களை உயர்வாக எண்ணி, இலத்தீன் ரீதி கிறிஸ்தவர்களான வேளாளர், செட்டிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பரதவர்களை ஒதுக்கினர். ஆனால், சவேரியாரோ சிரியன், இலத்தீன் என்ற வேறுபாடுகளை தவிர்த்து அனைவரையும் அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.

முத்துக்குளித்துறையில் சவேரியார் மறைப்பணி

(தொடரும்)

Comment