No icon

மரியா

சீர்திருத்தவாதிகளும் மரியாவும்

3. மரியா, அமல உற்பவி

லூத்தரைப் பொறுத்தமட்டில் மரியா பாவமற்றவர் என ஏற்றுக்கொண்டாலும், கத்தோலிக்கத் திருஅவை மரியாவின் அமல உற்பவத்தை மறைக்கோட்பாடாக வரையறுத்து அறிவித்தது போன்று அவர் அதை ஏற்கவில்லை. மத்திய காலத்தில் காணப்பட்ட சிந்தனையின்படி, ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவில் ஆன்மா எப்பொழுது கடவுளால் வழங்கப்படுகின்றதோ அப்பொழுதுதான் அது மனிதக் கருவாக உருப் பெறுகின்றது என்று கருதினர். ஆணாக இருப்பின் 40 ஆம் நாளிலும் பெண்ணாக இருப்பின் 80 ஆம் நாளிலும் ஆன்மா கடவுளால் வழங்கப்படுகின்றது என்றனர் (இச்சிந்தனையில் காணப்படும் ஆண்-பெண் வேறுபாடு இங்குக் கவனிக்கப்பட வேண்டும்). இச்சிந்தனையின் பின்னணியில் லூத்தர் பின்வருமாறு கூறுகின்றார்:

* மனிதர்கள் அனைவரும் உடலிலும், ஆன்மாவிலும் தொடக்கப் பாவத்துடன் கருவாக உருவாகின்றார்கள்.

* இயேசு உடலிலும், ஆன்மாவிலும் தொடக்கப் பாவம் ஏதுமின்றி கருவானார்.

* மரியா உடல் அளவில் கருவான தருணத்தில் தொடக்கப் பாவநிலையில் இருந்தார். ஆனால், ஆன்மா எப்பொழுது அவருடைய கருவுடன் இணைந்ததோ அக்கணமே அவர் பாவத்திலிருந்து கடவுளால் காக்கப்பெற்றார்.

இவ்வாறு, இயேசுவின் பிறப்பிலிருந்தும், ஏனைய மானிடப் பிறப்பிலிருந்தும் மரியாவின் பிறப்பை லூத்தர் வேறுபடுத்திக் காட்டினார்.

ஆனால், காலப்போக்கில் மரியா எப்பொழுது தூய ஆவியாரின் துணையுடன் இயேசுவைத் தம் உதரத்தில் கருத்தாங்கினாரோ, அப்பொழுதுதான் அவர் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்று கூறியதாகத் தெரிகின்றது. இருப்பினும், அவரின் இறப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரியா தொடக்கப் பாவத்தில் இருந்து காக்கப்பெற்றார் என்று கூறினார்.

இவ்வாறு, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கோட்பாடு கூறுவதுபோன்று மரியாவின் அமல உற்பவத்தை ஏற்காவிடினும், மரியா அமல உற்பவி என்ற உண்மையை லூத்தர் ஒருநாளும் மறுக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அவ்வாறே, சுவிங்கிலி என்பவரும் மரியா சிறிதளவு கூடப் பாவ மாசு ஏதுமின்றி இருந்தார் என்று கூறினார். அவர் மரியாவைத் தூயவர், புனிதமானவர், பாவக்கறை அற்றவர் எனக் கூறினார்.

4. மரியாவின் விண்ணேற்பு

லூத்தரைப் பொறுத்தமட்டில், மரியா விண்ணகத்தில் உள்ளார் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது எப்படி நடந்தது என்பது பற்றித் தூய ஆவியார் நமக்கு எதுவும் வெளிப்படுத்தவில்லை. எனவே, அவர் மரியாவின் விண்ணேற்பை ஒரு மறைக்கோட்பாடாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். சுவிங்கிலி என்பவர் மரியாவின் விண்ணேற்பு பற்றிக் கூறாவிட்டாலும், அவரின் வழித்தோன்றலாகிய ஹென்றி புல்லிங்கர் (Heinrich Bullinger) என்பவர் மரியா ஏற்கெனவே கிறிஸ்துவுடன் விண்ணகத்தில் உள்ளார் என்றார். ஹென்றி புல்லிங்கர் என்பவரின் நண்பர் பிரோஸ்சுர் (Froschauer) என்பவர், ஏனோக் (தொநூ 5:24), எலியா (2 அர 2:11) ஆகிய இருவரும் விண்ணகத்துக்குக் கடந்து சென்றது மரியா விண்ணகத்துக்கு ஏற்கப்பட்டதற்கான முன்னுதாரணமாய் உள்ளது என்றார்.

இவ்வாறாக, சீர்திருத்தவாதிகள் யாரும் கத்தோலிக்கத் திருஅவையின் மரியா பற்றிய நான்கு மறைகோட்பாடு உண்மைகளை மறுக்கவில்லை என்பது தெளிவு.

. மரியாவிடம் செபிப்பது பற்றி சீர்திருத்த வாதிகளின் சிந்தனை

மரியா பற்றிய கோட்பாடுகளில் பொதிந்துள்ள உண்மைகளை சீர்திருத்தவாதிகள் ஏற்றுக்கொண்டாலும், மரியாவும், புனிதர்களும் நமக்காகப் பரிந்துபேசி, இறைவனின் அருளைப் பெற்றுத்தர முடியும் எனும் கத்தோலிக்கத் திரு அவையின் போதனையை அவர்கள் ஏற்கவில்லை. காரணம், நமக்காகப் பரிந்து பேச மரியாவையும், புனிதர்களையும் நாம் அழைக்கும் செயல் என்பது, கிறிஸ்து மட்டுமே நம் ஒரே இடைநிலையாளர் என்னும் கருத்துக்கு முரணாக உள்ளது என்றார்கள்: “கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்” (1திமோ 2:5). எனவேதான் லூத்தர் அவர்கள், மீட்பு என்பது கடவுள் மட்டுமே நமக்கு வழங்கும் கொடை என்பதை உறுதியாக நம்புகின்றவர்கள் மட்டுமேஅருள் நிறைந்த மரியேஎனும் செபத்தைச் சொல்லலாம்; இந்த நம்பிக்கையில் தளர்ச்சியுடையோர் இச்செபத்தைச் சொல்லக் கூடாது என்றார். இருப்பினும், மரியாவின் பாடலுக்கு விளக்கவுரை எழுதிய அவர், தமது நூலைப் பின்வரும் வாக்கியத்துடன் நிறைவுசெய்திருப்பது நோக்கத்தக்கது. “இயேசுவின் அன்புத் தாய் மரியா என்பதால் அவரின் பரிந்துரையால் கிறிஸ்து நமக்கு எல்லாவற்றையும் வழங்குவாராக ஆமென்!”

கால்வினைப் பொறுத்தமட்டில், நம்பிக்கையாளர்கள் அனைவரின் மீட்பு என்பது கிறிஸ்துவின் இறையாட்சியின் நிறைவில் உள்ளது; இந்த இறையாட்சியின் நிறைவு வர வேண்டி, மரியாவும், புனிதர்களும் தொடர்ந்து செபித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அத்தகைய செபத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை என்றார். ஆனால், பாமர மக்கள் பலரும் மரத்தால் செய்யப்பட்ட திருவுருவங்களைக் கடவுளாகக் கண்டு வழிபடும் நிலை உள்ளது. மேலும், விண்ணகத்தில் இருக்கும் தந்தைக்குச் சொல்லப்படும் அதே செபங்களைப் புனிதர்களுக்கும் (மரியா உட்பட) சொல்லப்படும் நிலை உள்ளது. தவிர மழை, நல்ல பருவ நிலை, நோயிலிருந்து குணம் போன்ற பல்வேறு வரங்களைப் பெறுவதற்காகப் புனிதர்களிடமும், மரியாவிடமும் மன்றாடும் வழக்கம் அன்று காணப்பட்டது. கால்வினைப் பொறுத்தமட்டில், இத்தகைய செயல்கள் அனைத்தும் ஒப்பற்ற கடவுளின் பராமரிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாய் உள்ளது தவிர, மரியாவுக்கு நாம் சொல்லும் அனைத்துச் செபங்களும் விவிலியத்தில் காணப்படாதவை என்றார் அவர். எனவே, மரியா நமக்காகப் பரிந்து பேசுகின்றார் என்பதை ஏற்க முடியாது என்றார். மேலும், கால்வினைப் பொறுத்தவரை, கடவுள் தம் அருளை எல்லாருக்கும் எக்காலத்துக்கும் முன்குறித்து வைத்துள்ளார். எனவே, மரியா வணக்கம், புனிதர்கள் வணக்கம், புனிதர்களின் விழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்றார். இருப்பினும், மரியா, புனிதர்கள் ஆகியோரின் எடுத்துக்காட்டான வாழ்வை நாம் பின்பற்றி, நாமும் புனித வாழ்வு வாழலாம் என்றார். கால்வினைப் போன்றே, சுவிங்கிலியும் மக்கள் மரியாவிடம் மன்றாடுவதையும் மரியாவின் பரிந்துரையையும் எதிர்த்தார்.

. கடவுள் மட்டும் போதும் எனும் சீர்திருத்தவாதிகள் சிந்தனை

கடவுளின் அருள் மட்டுமே போதும் என்று கூறிய லூத்தர் அவர்கள், திருஅவையின் மரபில் மரியாவுக்கு வழங்கப்பட்ட பட்டங்களாகியஇரக்கத்தின் தாய்’, ‘விண்ணக அரசிஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். காரணம், இத்தகைய பட்டங்கள் மரியாவை இரக்கமுள்ள நபராகக் காட்டி, கிறிஸ்துவை நீதியுள்ள நடுவராகவும் கண்டிக்கக் கூடியவராகவும் காட்டுகின்றது என்றார். எனவேதான் லூத்தர் அவர்கள், திருப்பாடல் 85க்கு எழுதிய விளக்கவுரையில், கடவுளில்பேரன்பும் உண்மையும்எந்த அளவுக்கு இணைந்துள்ளன என்பதை விவரித்தார். மேலும், மரியாவை விண்ணக அரசி என்று அழைப்பதை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தமட்டில், விண்ணகப் பேரின்பம் என்பது, கடவுள் மட்டுமே நமக்கு வழங்கக்கூடிய ஒன்று; மரியா அதில் எவ்விதப் பங்கும் கொண்டிருக்கவில்லை என்றார் அவர். எனவே, “கிறிஸ்து மட்டுமே நமக்குப் போதும்என்ற படிப்பினையின் பின்னணியில்தான் மரியாவுக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களைத் தவறு என்று லூத்தர் கூறினார் எனக் காணவேண்டும்.

இவ்வாறாக, மரியா பற்றிய சீர்திருத்தவாதிகளின் சிந்தனையை, சீர்திருத்தவாதிகளின் மூன்று மையப் போதனைகளை மனதில் இருத்திக் காணவேண்டும். ‘விவிலியம் மட்டுமே (Sola Scriptura), ‘நம்பிக்கை மட்டுமே (Sola fide), ‘கிறிஸ்து மட்டுமே (Solus Christus). எனவேதான், விவிலியத்தில் வேரூன்றிய மரியா பற்றிய படிப்பினைகளைச் சீர்திருத்தவாதிகள் தயக்கமின்றி ஏற்றனர். கிறிஸ்துமீது உள்ள நம்பிக்கை மட்டுமே போதும் என்பதால்தான், மரியாவைப் பரிந்து பேசுபவராக ஏற்க மறுக்கின்றனர்; கிறிஸ்து மட்டுமே போதும் என்ற படிப்பினையின் பின்னணியில்தான், மரியாவுக்கு வழங்கப்படும் பட்டங்கள், வணக்கங்கள் ஆகியவற்றை எதிர்க்கின்றனர். எனவே, சீர்திருத்தவாதிகளை மரியாவின் எதிரிகள் என்று சித்தரிப்பது ஒரு தவறான கண்ணோட்டம் ஆகும்.

(தொடரும்)

Comment