No icon

மரியா

சீர்திருத்தவாதிகளும் மரியாவும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியா பற்றிய புதிய பார்வை

. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முந்தைய சூழல்

முதல் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் திருஅவையின் மரபில் இரண்டு பெரிய ஆன்மீக இயக்கங்கள் உருவாகின: 1. 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் காணப்பட்ட மரியாவின் காட்சிகளைத் தொடர்ந்து உருவான மரியா இயக்கம் (Marian Movement). 2. திருவழிபாட்டு இயக்கம். காலப்போக்கில், திருவழிபாட்டு இயக்கத்துடன் கிறித்தவ ஒன்றிப்பு இயக்கமும், விவிலிய இயக்கமும் இணைந்தன.

1. மரியா இயக்கம்: மரியாவின் காட்சிகள், மத்திய காலம் தொடங்கி, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முந்தைய காலம் வரை, திருஅவையின் மரபில் வளர்ச்சி பெற்ற மரியா பற்றிய பார்வைகள், மரியா வணக்கம், மரியாவுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள், மரியா பற்றிய மறைக்கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு மரியா இயக்கம் முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், ‘மரியா வழியாக இயேசுவிடம் (Per Mariam and Jesus = Through Mary to Jesus) கேட்க வேண்டும் என்பதற்கு இவ்வியக்கம் அழுத்தம் கொடுத்தது.

2. திருவழிபாட்டு இயக்கம்: மரியா வணக்கம் என்பது, திருவிவிலியத்தை அல்லது குறைந்தபட்சம் திருஅவையின் தொடக்க காலப் படிப்பினைகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் எனத் திருவழிபாட்டு இயக்கம் வலியுறுத்தியது. மேலும், கிறித்தவச் செபங்கள் அனைத்தும் கடவுளை மையப்படுத்தி இருக்க வேண்டும் என்றது. எனவே, ‘கிறிஸ்து வழியாகத் தந்தையிடம்நாம் செபிக்க வேண்டும் என இவ்வியக்கம் வலியுறுத்தியது.

. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் நடைபெற்ற மரியா பற்றிய விவாதம்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கான முன்தயாரிப்புப் பணி, 1959 ஆம் ஆண்டு, மே மாதம் 17 ஆம் தேதியன்று தொடங்கியது. சங்கத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் பற்றிய தங்களின் கருத்துகளை அனுப்புமாறு ஏறத்தாழ 2,000 ஆயர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், ஏறத்தாழ 600 ஆயர்கள், மரியா பற்றி சங்கம் விவாதிக்க வேண்டும் என விரும்பினர். இந்த 600 ஆயர்களுள், 400 ஆயர்களுக்கும் மேலானவர்கள் மரியா பற்றிப் புதிய வரையறைகளைச் சங்கம் வழங்க வேண்டும் என்றனர். ஏறத்தாழ 100க்கும் மேலானவர்கள், மரியா பற்றிப் புதிய படிப்பினைகள் ஏதும் சங்கம் வழங்கக்கூடாது என்றனர். ஏனைய 1400 ஆயர்கள், மரியா பற்றித் தங்கள் கருத்துக்கள் எதுவும் கூறவில்லை.

மரியா இயக்கம், திருவழிபாட்டு இயக்கம் ஆகியவற்றிற்கு இடையேயான கருத்து வேறுபாடு, மரியா பற்றிய சங்கத்தின் விவாதத்திலும் பிரதிபலித்தது. மணிலா நகரப் பேராயராகிய கர்தினால் சாண்டோஸ் ரூஃபினி (Cardinal Santos Rufini) என்பவர், மரியா இயக்கத்தைச் சார்ந்தவர். இவர், மரியா பற்றி ஒரு தனி ஏடு எழுதப்பட வேண்டும் என்றார். வியன்னா நகரப் பேராயராகிய கர்தினால் பிரான்சிசி கோனிக் (Cardinal Francisci Konig) என்பவர், திருவழிபாட்டு இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரியா பற்றிய படிப்பினைகள் அனைத்தும் திருஅவைபற்றிய கோட்பாட்டு விளக்கம் (Lumen Gentium) என்னும் ஏட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றார்.

1. சங்கத்தில் கர்தினால் சாண்டோஸ் ரூபினியின் வாதம்

1963 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று, கர்தினால் சாண்டோஸ் ரூபினி என்பவர், மரியா பற்றிய படிப்பினைகளை எடுத்துரைக்க, ஒரு தனி ஏடு எழுதப்பட வேண்டும் என்றார். காரணம், மரியாவை திருஅவையியலோடு நாம் சுருக்கிவிட முடியாது. மாறாக, மரியியல் என்பது, கிறிஸ்தியலோடும், மீட்பியலோடும் (soteriology) தொடர்புடையதாகும் என்றார். மேலும் அவர், “மீட்புத்திட்டத்தில் திருஅவையாம் மறைபொருள் என்ற பகுதிக்கு அடுத்ததாக மரியா பற்றிய பகுதி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு செய்தால்தான், மூவொரு கடவுளின் மீட்புத் திட்டத்தோடு, மரியாவின் மீட்புப் பணியை நாம் இணைத்துப் பார்க்க முடியும் என்றார். மேலும், மரியா பற்றிய படிப்பினையைத் திருஅவை எனும் ஏட்டின் ஒரு பகுதியாக இணைத்தால், மரியா பற்றிய படிப்பினையை நாம் முழுமையாக விளக்க முடியாது என்றார். மேலும் அவர், திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கம் எனும் ஏடு, ‘திருஅவையின் ஆட்சியமைப்பும், சிறப்பாக ஆயர் நிலையும், ‘பொதுநிலையினர், ‘திருஅவையில் தூய்மை நிலை அடைய அனைவருக்கும் அழைப்பு, ‘துறவிகள் ஆகிய தலைப்புகளைத்தான் கொண்டுள்ளது. இப்பகுதிகளை மரியா பற்றிய படிப்பினைகளுக்கு இணையான பகுதிகளாகக் காண முடியாது என்றார். காரணம், மரியாவின் தூய்மை நிலைக்கான அழைப்பும், இறைமக்கள் சமூகத்தில் அவரின் இடமும், பொதுநிலையினரில் இருந்தும், துறவிகளில் இருந்தும், இயல்பிலேயே வேறுபட்டவை என்றார். எனவே, மரியா பற்றிய படிப்பினையைத் திருஅவை எனும் ஏட்டின் ஒரு பகுதியாக இணைக்கும் செயல் என்பது, மரியாவின் பணியைக் குறைத்து மதிப்பிடும் ஒன்றாகிவிடும் என்றார். மேலும், இது கிறிஸ்துவின் பணி, வாழ்வு ஆகியவற்றின் மாதிரிக்குப் (Christo - typical) பதிலாக, திருஅவையின் பணி, வாழ்வு ஆகியவற்றின் மாதிரியைக் (Ecclesio - typical) கொண்ட மரியியலுக்கு வித்திடும் இத்தகைய அணுகுமுறை திருஅவையின் பிளவுக்குகூட வித்திடலாம் என்றார்.

தவிர, சங்கமானது மரியாவைஇடைநிலையாளர்என வரையறுக்க வேண்டும் என்றும், மரியாஇணைமீட்பர்என்ற மறைக்கோட்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இவ்வாறாக, மரியாவுக்குத் தனி ஏடு வேண்டும் என்றும், மரியா பற்றிய புதிய மறைக்கோட்பாடும், வரையறையும் வேண்டும் என்றும் வலியுறுத்தி, இத்தாலி, ஸ்பெயின், இலத்தீன்-அமெரிக்க நாட்டு ஆயர்களைக் கர்தினால் ஒட்டாவியானியும், கர்தினால் சாண்டோஸ் ரூபினியும், ஒருங்கிணைத்தனர். மரியாவுக்கெனத் தனி ஏடு வேண்டாம். திருஅவை எனும் ஏட்டின் ஒரு பகுதியாக மரியா பற்றிய படிப்பினைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, வாக்களிப்பவர்கள் மரியாவுக்கு எதிராகவே வாக்களிக்கின்றார்கள் என்றார்கள் இவர்கள்.

2. சங்கத்தில் கர்தினால் பிரான்சிசி கோனிகின் வாதம்

கர்தினால் பிரான்சிசி கோனிக் என்பவர், மரியா பற்றிய படிப்பினைகள் அனைத்தும் திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கம் எனும் ஏட்டின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்றார். தமது கருத்தை விளக்கும் முயற்சியில் நான்கு காரணங்களை அவர் முன்வைத்தார்:

i) இறையியல் காரணம்: இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மைய நோக்கம் என்பது, திருஅவையின் இயல்பு, பணி ஆகியவற்றை ஆராய்ந்து, செயல்படுத்தும் ஒன்றாகும். இப்பின்னணியில், மீட்பின் கருவியாம் திருஅவையுடன் மரியாவை இணைத்துப் பார்ப்பதே பொருத்தமானது என்றார் அவர். தவிர, இத்தகைய அணுகுமுறை கடந்த காலத்தில் உருவானமிகைப்படுத்தப்பட்டமரியா பற்றிய பார்வையைத் தவிர்க்கவும், மரியா பற்றிய புதிய கோட்பாடுகளைச் சங்கம் வரையறுக்காமல் இருக்கவும் உதவும் என்றார். மேலும் அவர், மரியா பற்றிய படிப்பினைகளைத் திருஅவை எனும் ஏட்டுடன் இணைக்கும் இச்செயலை, மரியா வணக்கத்தைக் குறைக்கும் முயற்சியாகவோ, மரியா பற்றிய படிப்பினைகளை மறைக்கும் செயலாகவோ கருதக்கூடாது என்றார். மாறாக, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அடிப்படைப் போதனைகளுடன் அவை ஒத்துச் செல்லக்கூடிய ஒன்றாகக் காணவேண்டும் என்றார்.

மேலும், பயணிக்கும் திருஅவை, விண்ணகத் திருஅவையுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாய் இருப்பதால், திருஅவையியலை (Ecclesiology), நிறைவியலுடன் (Eschatology) தொடர்புடையதாகக் காணவேண்டும் என்றார். இவ்வாறாக, மரியாவைப் பற்றிய போதனையைத் திருஅவை எனும் ஏட்டோடு இணைப்பதன்மூலம், விண்ணகத் திருஅவையில் இறைமக்கள்

சமூகத்தின் முதன்மை உறுப்பினராக மரியாவைக் காணமுடியும் என்றார். இவ்வாறாக, மரியியலைத் திருஅவையியலுடன் இணைக்கும் செயல் என்பது, இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே மீட்பர் என்பதை வலியுறுத்தி, மீட்புப்பணியில் மரியாவின் பணி என்பது, எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் பணியில் இருந்து மாறுபட்டது என்பதை விளக்க உதவும் என்றார்.

தவிர, மரியா, திருஅவையின் உறுப்பினர் எனும் வகையில், இயேசுவின் மீட்புச் செயல் எவ்வாறு அவருக்கும் தேவைப்பட்டது என்பதையும் இதன்மூலம் விளக்க முடியும் என்றார்.

ii) வரலாற்றுக் காரணம்: திருஅவையின் மூலம்தான் மரியாவுக்கு எல்லாப் பெயர்களும், பட்டங்களும், மறைப்படிப்பினைகளும், மறைக்கோட்பாடுகளும் வழங்கப்பட்டன என்றார் பிரான்சிசி கோனிக்.

iii) மேய்ப்புப்பணிக் காரணம்: மரியாவுக்கு உகந்த வணக்கத்தை மட்டும் வழங்கி, ஏனைய பக்திமுயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார் பிரான்சிசி கோனிக்.

iv) கிறித்தவ ஒன்றிப்பு நோக்கிலான காரணம்: திருஅவையின் பணி, வாழ்வு ஆகியவற்றின் மாதிரியைக் கொண்ட மரியியலை (Ecclesio-typical Mariology) முன்னிலைப்படுத்தினால், அது கீழைத்திருஅவைகள் மற்றும் சீர்திருத்தத் திருஅவைகள் ஆகியவற்றுடன் கத்தோலிக்கத் திருஅவை இணைந்து பயணிக்க வழிவகுக்கும் என்றார் பிரான்சிசி கோனிக்.

இவரின் கருத்தை ஆதரித்து, ஜெர்மன் நாட்டு ஆயர்களை ஒருங்கிணைத்தவர் கர்தினால் ஃப்ரிங்ஸ் (Cardinal Frings). அவர், மரியா பற்றி தனி ஏடு எழுதுவதற்குப் பதிலாக, திருஅவை என்ற ஏட்டின் ஒரு பகுதியாக மரியா பற்றிய படிப்பினையைச் சேர்க்கலாம் என்றார்.

3. ஓட்டெடுப்பு

சாண்ட்டோஸ் ரூபினி, பிரான்சிசி கோனிக் ஆகியோரின் விவாதத்திற்குப் பிறகு, 1963 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று, வாக்கெடுப்பு நடைபெற்றது. 2193 சங்கத்தந்தையர்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். அதில் 5 பேர் ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. சங்கத் தந்தையர்களில் 1074 பேர், மரியா பற்றித் தனி ஏடு எழுதப்பட வேண்டும் என்றனர். 1114 பேர், மரியாவுக்கென தனி ஏடு வேண்டாம் என்றும், மரியா பற்றிய படிப்பினைகளைத் திருஅவை எனும் ஏட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் கூறினர். இவ்வாறு, திருவழிபாட்டு இயக்கம், திருவிவிலிய இயக்கம், கிறித்தவ ஒன்றிப்பு இயக்கம் ஆகியவற்றைச் சார்ந்த திருஅவைத்தந்தையர்கள் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றனர்.

இந்த ஓட்டெடுப்பின் அடிப்படையில், 1963 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நான்கு ஆயர்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டு, ஏட்டைத் தயாரிக்கும் பணி அவர்களிடம் வழங்கப்பட்டது. சங்கத்தின் இரண்டாம் அமர்வுக்கு முன்பாக, மரியா பற்றிய அவ்வேட்டைத் தயாரித்து, சங்கத்தின் ஒப்புதலுக்கு வழங்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், அவர்களால் அது தயாரித்து வழங்கப்படவில்லை. எனவே, இரண்டாம், மூன்றாம் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இப்பணியானது, பேரருள்திரு. பிலிப்ஸ் (Mgr. Philips), அருள்பணி. பாலிக் (Balic) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இரண்டு இயக்கங்களைச் சார்ந்த சங்கத் தந்தையர்களின் கருத்துகளை மனத்தில் கொண்டு, மாற்றங்களைச் செய்தார்கள். 1964 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7 ஆம் தேதிவரை, இவர்கள் 5 முறை பல்வேறு திருத்தங்களை இவ்வேட்டில் செய்தார்கள். பின்பு, அது இறையியல் பொறுப்பான்மைக் குழுவிடம் (Theological Commission) வழங்கப்பட்டது. அக்குழுவும் சில மாற்றங்களைச் செய்தது.

பின்பு, 1964 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16 மற்றும 17 ஆம் தேதிகளில், சங்கத்தின் மூன்றாவது அமர்வில் இவ்வேடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின்போது, 33 முறை குறுக்கீடுகள் செய்யப்பட்டன. நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில், மீண்டும் இறையியல் பொறுப்பான்மைக் குழு சில மாற்றங்களைக் கொணர்ந்தது. இவ்வாறு, சங்கத்தின் ஒப்புதலுக்காக 1964 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, மீண்டும் இவ்வேடு வழங்கப்பட்டது. 1559 பேர் இவ்வேட்டிற்கு ஒப்புதல் கொடுத்தார்கள். 521 பேர் ஒருசில மாற்றங்களைப் பரிந்துரைத்து, ஒப்புதல் (Qualified approval) வழங்கினர். 10 பேர் இவ்வேட்டை ஏற்க முடியாது என்றனர். இதன்பின்பு, மாற்றங்களைப் பரிந்துரை செய்து, ஒப்புதல் வழங்கியவர்களின் கருத்துகளை மனத்தில் கொண்டு, மீண்டும் சில மாற்றங்கள் ஏட்டில் செய்யப்பட்டன. இறுதியாக, தற்பொழுது திருஅவை எனும் ஏட்டின் எட்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள கிறிஸ்துவினுடையவும், திருஅவையினுடையவும் மறைபொருளில் இறை அன்னை புனித கன்னி மரியா (பத்திகள் 52-69) எனும் பகுதி, 1964 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று, சங்கத் தந்தையர்களால் ஏற்கப்பட்டது. ஏட்டிற்கு ஆதரவாக 2096 பேரும், எதிராக 23 பேரும் வாக்களித்தனர். சங்கம் ஒப்புதல் வழங்கிய இவ்வேட்டை, 1964 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று, (புனித கன்னி மரியா காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நினைவு நாள்) திருத்தந்தை ஆறாம் பவுல் திருஅவைக்கு வழங்கினார். அவ்வேளையில், திருத்தந்தை ஆறாம் பவுல் மரியாவைத் திருஅவையின் தாய் என, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்பட்டம் குறித்துச் சங்கம் எதுவும் விவாதிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. திருத்தந்தையின் இச்செயலை, மரியா இயக்கத்தைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட ஒன்றாகச் சிலர் காண்பர்.

(தொடரும்)

Comment