No icon

“மலபார் வரலாறு”

தமிழகத்தில் கிறிஸ்தவம்

குமரியில் கிறிஸ்தவம்

குமரியில் கிறிஸ்தவத்தின் நீண்ட வரலாறு

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்என்கிறது தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் என, முக்கடலும் சங்கமிக்கும் தமிழகத்தின் தென்கோடியின் எழில்மிகு கடற்கரை நகர் குமரி. குமரி பழம்பெரும் தமிழ்சொல், பழந்தமிழரின் பெருமைமிகு பண்பாட்டு வாழ்வியலின் வரலாற்றுப் பெட்டகம். எனவேதான், காலந்தோறும் அதன் அழகியல் அமைப்பை தமிழர் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். அரசியல் ரீதியாக நாஞ்சில் நாடு திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக குமரி, கொல்லத்தோடு இணைந்து ஆளப்பட்டு வந்தது.

இந்தியாவில் அதிக கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் இருப்பது இதன் சிறப்பு. கோட்டாறு, குழித்துறை என்ற இரு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டங்கள், சிரோ மலபார், தக்கலை, சிரோ மலங்கர மார்த்தாண்டம் மற்றும் தென்னிந்திய திருச்சபை என மொத்தம் 5 மறை மாவட்டங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. மேலும், பல்வேறு புரோட்டஸ்டாண்ட் மற்றும் பெந்தகோஸ்தே சபைகளும் பெருமளவில் இங்கு செயல்படுகின்றன. இவ்வாறு, கிறிஸ்தவம் தழைத்தோங்கும் செழிப்பான பூமியாக குமரி மண் திகழ்கின்றது.

குமரி மண்ணின் கிறிஸ்தவ வரலாறு, ஈராயிரம் ஆண்டுகள் நீண்ட, நெடிய பாரம்பரியமிக்கது. திருத்தூதர் தோமாவின் புனித பாதங்கள் பதிந்த நிலமாக குமரி திகழ்வது பெருமை. திருத்தூதர் தோமா தமது அருட்கரங்களால் எழுப்பிய ஏழரை ஆலயங்களில் அரைப்பள்ளி என்று அழைக்கப்படும் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பு. சிரியன் திருஅவையின் செயல்பாடுகள் இப்பகுதியில் இருந்ததை வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது.

இந்தியாவின் முதல் மறைமாவட்டமான கொல்லத்தின் முதல் ஆயர் பிரெஞ்ச் தொமினிக்கன் சபையைச் சார்ந்த, ஜோர்டன் கத்தலானி மற்றும் 5 தொமினிக்கன் சபை குருக்கள் கனரா, மைசூர், மலபார் மற்றும் திருவிதாங்கூர் போன்ற தென்னிந்தியாவின் பகுதிகளில் நற்செய்திப்பணி புரிந்தனர். இவர்கள் கொல்லத்திற்கு கீழ் செயல்பட்ட குமரியின் பகுதிகளிலும், மறைப்பணி ஆற்றியிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. இவர்களைத் தொடர்ந்து, 14 ஆம் நூற்றாண்டில், லூட்ரிக் என்ற பிரான்சிஸ்கன் துறவி கொல்லம், மயிலை வழியாக சீனா செல்கின்றார். இவர் தோமாவின் கோவில், நெஸ்தோரியன் கொள்கையை ஆதரிக்கும் 15 குடும்பங்களைப் பற்றி கூறுகின்றார்.

சீனாவில் பல ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய பிரான்சிஸ்கன் துறவி ஜான்தெ மரிங்கோலி என்ற ஆயர், 16 மாதங்கள் (1348-49) கொல்லத்தில் தங்கி, இறைப்பணியாற்றினார். இவர், திருத்தந்தையின் தூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், தமிழகத்தை விட்டு புறப்படும் முன், ஒரு நினைவுத்தூணை எழுப்பி, அதனைஉலகத்தின் கடைக்கோடியில் விண்ணகத்தை நோக்கி எழுப்பப்பட்டதுஎன பறைசாற்றினார். இத்தூணை புனிதப்படுத்தியபோது, பெருங்கூட்டம் இருந்ததாகவும், இந்நிகழ்வு முடிந்தபிறகு, இப்பகுதியின் தலைவர்கள் தன்னை, தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றதாகவும் குறிப்பிடுகின்றார். இத்தூணின் அமைவிடம் கொல்லம் அல்லது தென்கோடி குமரியாக இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

மேலும் இவர், மயிலை புனித தோமாவின் கல்லறை மற்றும் இந்தியாவின் பல்வேறு கிறிஸ்தவ தளங்களுக்குச் சென்று, பார்வையிட்டார் என அறிய முடிகின்றது. இவரே போர்த்துக்கீசியரின் வருகைக்குமுன் தமிழகம் வந்த கடைசி துறவியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சின்ன முட்டத்தில் கிறிஸ்தவத்தின் தடயம்

கிபி 1500 இல், தமிழகம் வந்தது ராத் பர்போசா என்ற வெளிநாட்டுப் பயணி. 16 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். 1517 ஆம் ஆண்டு எழுதிய தனது குறிப்பில் அர்மேனியர்களால் எழுப்பப்பட்ட பழமையான ஆலயம் ஒன்று குமரியில் அமைந்திருப்பதைப் பற்றிப் பேசுகின்றார். இவ்வாலயத்தின் திருப்பீடங்களில் சிலுவைகள் வைக்கப்பட்டிருப்பதையும், திருப்பலிகள் நிறைவேற்றப்படுவதைப் பற்றியும் அக்குறிப்பு கூறுகின்றது. அவ்வாலயம் அர்மேனியன்களால் எழுப்பப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக, சிரியன் மற்றும் அரமாயிக் மொழிகளை தங்கள் வழிபாட்டில் பயன்படுத்திய திருத்தூதர் தோமா வழி சிரியன் திருஅவை எழுப்பிய ஆலயம் என்பது, வரலாற்று அறிஞர்களின் கருத்து.

மேலும், சின்ன முட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கிபி. 1494 ஆம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசனின் கல்வெட்டு ஒன்று இப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் அமைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. “குமரி முட்டம் (சின்ன முட்டம்) கோவைக்குளம் (கோவளம்) வழியாக நெல் மற்றும் இதர பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் பாதுகாப்பாக சென்று வர, இக்கிராமத்தின் கிறிஸ்தவ ஆலயத்தில் எப்போதும் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்கட்டும்என, அவ்வரசாணையில் கூறப்பட்டுள்ளது. குமரி முட்டம் பகுதியில் வாழக்கூடிய பரதவக் கிறிஸ்தவர்கள் 1535 மற்றும் 1537 ஆம் ஆண்டுகளில் முத்துக்குளித்துறையில் திருமுழுக்குப் பெற்றவர்கள் என்ற தகவலை, தந்தை ஹென்றிகஸ் 1558 ஆம் ஆண்டில், பதிவு செய்துள்ளார். குமரி முட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதை, சகோதரர் பல்தசார் நுன்ஸ் அவர்களும், பதிவுசெய்துள்ளார். இவ்வாறு, போர்த்துக்கீசியர் மற்றும் புனித சவேரியார் வருகைக்கு முன்பே கிறிஸ்தவத்தின் சுவடுகள் குமரி மண்ணில் காணக்கிடைக்கிறது.

கோட்டாரில் கிறிஸ்தவம்

கோட்டாறு இன்று நாகர்கோவில் மாநகராட்சியின் ஓர் அங்கமாக இருக்கிறது. ஆனால், கோட்டாறு நாகர்கோவிலை விட பழமையான ஊர். மேலும், நாகர்கோவிலை விட பெரிய ஊராகவும், வணிகம் சிறந்த ஊராகவும் திகழ்ந்தது. கி.பி.1600 இல், தி ஜியோ கொன்சால்வ்ஸ் எழுதியமலபார் வரலாறுஎன்ற நூலில், கோட்டாரில் வணிகத்தின் பொருட்டு, புனித தோமா கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாகப் பதிவு செய்துள்ளார். இவர்கள் மத்தியில்தான், இயேசு சபை அருட்சகோதரர் பல்தசார் நுன்ஸ் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. கிபி 1552 இல், நுன்ஸ் தரும் குறிப்பின்படி, குமரியின் உட்புறங்களில் திருத்தூதர் தோமா காலந்தொடங்கி, வாழும் சில கிறிஸ்தவர்களை விட, வேறு கிறிஸ்தவர்கள் இல்லை என்கின்றார்.

கிபி 1604 இல், ஜிவான்னி மரிய கேம்போசி என்ற இயேசு சபைக்குரு தரும் குறிப்பின்படி, திருவிதாங்கூர் அரண்மனையில் கிறிஸ்தவர்கள் அரச வங்கியின் மேலாளர்களாக பணியாற்றினர். ஆனால், இவர்கள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் குருக்களோடு எவ்வித தொடர்பும் கொள்ளாமல், தனித்து வாழ்ந்தனர். இவ்வாறு, புனித தோமா கிறிஸ்தவர்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் அதிகாரத்தோடும், மதிப்போடும் வலம் வந்தனர். போர்த்துக்கீசியர் தங்கள் வருகைக்குப் பிறகு, சிரியன் கிறிஸ்தவர்கள் இலத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வலியுறுத்தினர். இதனால் தோமா கிறிஸ்தவர்கள், போர்த்துக்கீசிய குருக்களை வெறுத்தனர். எனவே, தந்தை அல்வாரோ பெந்தாதோ குமரி கடற்பகுதிக்கு வர, அங்கு வாழ்ந்த மீனவ முக்குவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, முதலில் 1517 இல், திருமுழுக்குப்பெற்றனர்.

1544 இல், புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிதாங்கோடு மன்னர் மார்த்தாண்ட வர்மன் அனுமதியுடன் கோட்டாரில், புனித விண்ணேற்பு அன்னைக்கு சிற்றாலயம் எழுப்பி, திருப்பலி நிறைவேற்றி வந்தார். அவ்வாலயம் இன்றும் அழியாமல் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் ஓர் அங்கமாக உள்ளது. முத்துக்குளித்துறையின் பரதவர்களைத் தொடர்ந்து, குமரி - கொல்லம் கடற்கரை வாழ் முக்குவர்களும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் முயற்சியால், ஆயிரக்கணக்கானவர்கள் ரோமன் கத்தோலிக்க திருஅவையில் இணைந்தனர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் அடிமட்டத்திலிருந்து, பத்ரகாளி மற்றும் நாக வழிபாடுகளைக் கொண்ட முக்குவர்கள், போர்த்துக்கீசியர் வழங்கும் அரசியல் பாதுகாப்பை ஏற்று, புனித பிரான்சிஸ் சவேரியாரின் கரங்களில் திருமுழுக்குப் பெற்றனர். முத்துக்குளித்துறை மற்றும் குமரி கிறிஸ்தவர்களின் பொறுப்பாளராக கொச்சின் மறைவட்ட தலைவர் மைக்கேல் வாஸ் நியமிக்கப்பட்டார். இவர், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு பொதுநிலையினர். இவரே, 12 ஆண்டுகள் (1533-47) கொச்சின் மறைவட்டத்தின் தலைவராக சீர்மிகு திறனுடன் பணியாற்றினார்.

புனித சவேரியார் வாழ்ந்த கோட்டாரில் குமரி முதல் தேங்காய்பட்டினம் வரை உள்ள கடலோர கிராமங்கள் நிதி வழங்கி, கோட்டாறு ஆலயத்தை எழுப்பின. இன்று உலகளவில் புனித பிரான்சிஸ் சவேரியார் புகழ்பாடும் திருத்தலமாக கோட்டாறு பேராலயம் திகழ்கின்றது. “கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார்என, இத்தலத்தின் தலைவராக புனித சவேரியார் மதங்களைக்கடந்து, மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்றார். 500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இப்பேராலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் நாள், உள்ளூர் விடுமுறையுடன், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  (தொடரும்)

Comment