No icon

மரியியல் தொடர் 16

மரியா இல்லாத பத்து ஆண்டுகள்

) மரியா மையம் பெறாத பத்து ஆண்டுகள்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் மரியா பற்றிய புதிய பார்வை, மரியா வணக்கம் நலிவுற வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது: 1) 1964 தொடங்கி, 1974 வரையிலான 10 ஆண்டுகளில் மரியாவைப் பற்றி இறையியல் நூல்கள் எதுவும் எழுதப்படவில்லை (1948-1957-க்கு இடைப்பட்ட காலத்தில் ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 1,000 நூல்கள் எழுதப்பட்டன என்பது நோக்கத்தக்கது). எனவே, 1964 - 1974-க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளைத் திருஅவையில்மரியா இல்லாத பத்து ஆண்டுகள்எனக் குறிப்பிடுவர். 2) சங்கத்திற்கு முன்பாக மரியா பற்றிய திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் காணப்பட்ட 21 விழாக்களைச் சங்கத்திற்குப் பின்பு 14 ஆகக் குறைத்தார்கள். 3) இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்பு இறைநம்பிக்கையாளர்கள் மரியாவிடம் கொண்டிருந்த பக்தி வணக்கத்தைத் தூய ஆவியாருக்கு வழங்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் மரியாவுக்கு அவர்கள் வழங்கிய ஒரு சில பண்பு நலன்களைஆறுதல் வழங்குபவர்’, ‘பரிந்து பேசுபவர்’, ‘திருஅவையின் ஆன்மா’ (Soul of the Church) - தூய ஆவியாருக்கு ஏற்றிக் கூறினார்கள். 4) இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய பண்பாட்டுச் சூழலும் மரியா வணக்கம் குறைவதற்குக் காரணமாய் அமைந்தது. மாறியுள்ள புதிய சூழலில், ஆண்களுடன் பெண்கள் அனைத்து நிலைகளிலும் சமமானவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததே அதற்குக் காரணம்.

இச்சூழலில் மரபில் உருவான மரியா பற்றிய பார்வைகள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்தும் கூறுகளாகவே பெரும்பாலும் காணப்பட்ட தால், பெண்ணிய இறையியலாளர்கள் பெண்ணடிமைத்தனத்தை நிலை நாட்டும் மரியா பற்றிய பார்வைகளைத் தவிர்த்தனர். இப்பின்னணியில் இறையியலாளர் கார்ல் ரானர் என்பவர்மாறிவரும் புதிய சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்கள் வாழ்வு அனுபவத்திலிருந்து மரியா பற்றிய புதிய பார்வையை வெளிக்கொணர வேண்டும்என்று கூறியது நோக்கத்தக்கது.

இருப்பினும், மரியாவின் படிப்பினையைப் பொறுத்தமட்டில் திருஅவை யின் மௌனம் என்பது, வெறும் 10 ஆண்டுகளே நீடித்தன. அதன் பின்பு, மரியா பற்றிய படிப்பினைகள் தொடர்ந்து பல திருத்தந்தையர்களால் வழங்கப்பட்டன. அவற்றை இங்கு காண்போம்.

) சங்கத்திற்குப் பிந்தைய காலத்தில் மரியா பற்றித் திரு அவையின் போதனைகள்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்பு வெளிவந்த திருத் தந்தையர்களின் படைப்புகள் அனைத்துமே சங்கத்தின் போதனை களைப் பின்பற்றியனவாகவே அமைந்தன. அவை கிறிஸ்து மைய மரியியலுக்கும், திருஅவை மைய மரியிய லுக்கும், கிறித்தவ ஒன்றிப்புசார் மரியிய லுக்கும் முக்கியத்துவம் வழங்கின. இப்பொழுது திருத்தந்தையர்கள் மரியா பற்றி எழுதிய படைப்புகளை இங்குக் காண்போம்.

1. ஒரு மாபெரும் அடையாளம் (Signum Magnum = A Great Sign)

1967, மே 13 ஆம் தேதியன்று, திருத்தந்தை ஆறாம் பால், ‘ஒரு மாபெரும் அடையாளம்எனும் திருத்தூது ஊக்கவுரையை வெளி யிட்டார். பாத்திமா நகரில் மரியா காட்சி கொடுத்ததன் 50 ஆம் ஆண்டு நினைவாக இத்திருத்தூது ஊக்கவுரையைத் திருத்தந்தை எழுதினார். இதில் கீழ்க்காணும் மரியா பற்றிய சிந்தனைகள் அழுத்தம் பெற்றன:

1) மரியா திருஅவையின் ஆன்மிகத் தாயாகத் திகழ்கின்றார். அதாவது, இவ்வுலகில் வாழும் நம்பிக்கையாளர்களுக்கு மட்டு மல்ல; மறு உலகில் உள்ள அனை வரின் தாயாகவும் உள்ளார். அவரிடம் நாம் செபிக்க வேண்டும் என்றும், மரியாவின் மாசற்ற இருதயத்திடம் நம்மையே நாம் தனிப்பட்ட விதத்தில் அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவ்வுரை கூறுகின்றது.

2) திருஅவை மரபில் மரியா வணக்கம் தொடர்ந்து இருந்து வருகின்றது. எனவே, மரியா வுக்கு நாம் தொடர்ந்து நமது வணக்கத்தை வழங்க வேண்டும்.

3) மரியா தன் நற்பண்புகளால் கிறிஸ்துவைப் பிரதிபலித்தார்; நாமும் மரியாவின் நற்பண்புகளை நமது மாதிரியாகக் கொண்டு, அவரைப் பிரதிபலிக்க வேண்டும்.

4) எந்த ஒரு தாயின் பணியும் பிள்ளைப் பேற்றுடன் நிறைவுறுவதில்லை; அவர்தம் பிள்ளை யைப் பேணி வளர்த்து, அறிவு புகட்டி வளர்க்கும் பணியையும் செய்ய வேண்டும். அவ்வகையில் மரியாவும் இயேசுவுக்குக் குழந்தைப் பருவத்தில் அறிவு புகட்டி வளர்த்தவர் எனும் முறையில், அவர் இயேசுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார் (எண் 9).

5) கிறிஸ்துவுக்குத் தன்னையே அர்ப்பணித்து, அவரின் மீட்புப் பணியில் பங்கேற்ற ஒரு மாபெரும் அடையாளமாய் (திவெ 12:1) மரியா உள்ளார்.

6) மரியா, திருஅவைகளின் ஒற்றுமையின் அடையாளமாய் உள்ளார். அவரின் பரிந்துரை ஒற்றுமையையும், மீட்பையும் அனைவருக்கும் கொணர்வதில் உதவும் என்கிறது இந்தத் திருத்தூது ஊக்கவுரை.

2. மரியா வணக்கம் (Marialis Cultus = Marian Cult)

1974, பிப்ரவரி 2 ஆம் தேதியன்று, திருத்தந்தை ஆறாம் பால், ‘மரியா வணக்கம்எனும் திருத்தூது ஊக்கவுரையை வெளி யிட்டார். இவ்வூக்கவுரை கிறிஸ் துவை மையப்படுத்திய விழா வாகியஆண்டவரைக் காணிக்கை யாக அர்ப்பணித்தல்விழாவன்று வெளியிடப்பட்டது. (இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பாக இவ்விழா மரியா தூய்மைப்படுத் தப்பட்ட நாளாகக் கொண்டாடப் பட்டது).

மரியா வணக்கம்எனும் இவ்வூக்கவுரை மரியாவைப் பற்றியோ, அவரின் பணி பற்றியோ அல்ல; இது மரியாவுக்கு வழங்கப் படும் வணக்கம் சார்ந்த ஒன்று; இவ்வூக்கவுரை மரியா சார்ந்த எந்த ஒரு படிப்பினையும் கிறிஸ்துவைச் சார்ந்த, அவருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறது (எண் 25). மரியா வணக்கம் புதுப்பிக்கப்படுவது தொடர்பாக இவ்வூக்கவுரை நான்கு வழிகாட்டு  நெறிமுறைகளை வழங்கியுள்ளது:

1) எல்லா வழிபாட்டு முறைகளைப் போன்று, மரியா வணக்கமும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்; மேலும், அது அடிப்படைக் கிறித்தவப் போதனைகளைப் பிரதி பலிப்பதாய் இருக்க வேண்டும் (எண் 30). 

2) மரியா வணக்கத்தைத் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுடன் கலப்பதோ, மரியா வணக் கத்தைத் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு மாற்றாகச் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும். சங்கம் காட்டிய பாதையில் மரியா வணக்கம் இருக்க வேண்டும்.

3) கிறித்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் நோக்கில்மிகைப்படுத்தப்பட்டமரியா வணக்கத் தைத் தவிர்க்க வேண்டும்.

4) மாறியுள்ள புதிய சூழலில் இன்று பெண்கள் சமத்துவம் என்பது நாம் வாழும் வீடுகளிலும், அரசியல் தளத்திலும், பணியாற்றும் சமூகத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் காணப்படுகின்றது. எனவே, மரபில் மரியாவுக்கு வழங்கப்பட்ட பண்பு களை - ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர், ஆண்டவரின் அடிமையாய் வாழ்ந்தவர், ஆண்ட வரின் அழைப்புக்கு எப்பொழுதும்ஆம்என்று அமைதியாய் வாழ்ந்தவர், ஆண்டவரையே முற்றி லும் சார்ந்து வாழ்ந்தவர் - மட்டுமே கூறி, அப்பண்பு களை இன்று வாழும் பெண்களுக்கும் ஏற்றிக் கூறுவது பொருத்தமானது அல்ல (எண் 34). இன்றைய வரலாற்று-பண்பாட்டுச் சூழலில் வாழும் பெண்களின் நிலையானது மரியா வணக்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிறது இவ்வூக்க வுரையின்முன்னுரை’.

3. மீட்பரின் தாய் (Redemptoris Mater = Mother of the Redeemer)

திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்கள், தூய ஆவியாரின் பெருவிழா (1987) தொடங்கி, அன்னையின் விண்ணேற்புப் பெருவிழா (1988) வரையிலான காலத்தைமரியாவின் ஆண்டாகஅறிவித்தார். இந்த மரியாவின் ஆண்டை முன்னிட்டு 1987, மார்ச் 25 அன்று, ‘மீட்பரின் தாய்எனும் சுற்றுமடலை அவர் வெளியிட்டார். இந்தச் சுற்றுமடலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியா

2. பயணத் திரு அவையின் மையத்தில் மரியா

3. தாய்மையின் பணி

இச்சுற்றுமடல், தனது முன்னுரைப் பகுதியில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்டதிரு அவைஎனும் ஏட்டில் காணப்படும் மரியா பற்றிய படிப்பினையின் இறையியலை எடுத்துரைக்கின்றது.

இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியா:

கடவுளின் தாயாக இருக்க அழைக்கப்பட்டதன் மூலமாக, கடவுளின் மீட்புப் பணியில் நிறைவாகப் பங்கெடுக்க அழைக்கப்பட்டவராக மரியா திகழ் கின்றார். எனவேதான், கடவுள் அவரைப் பாவ மாசு ஏதுமின்றி காத்தார். மேலும், கடவுளின் அழைப்புக்கு மரியாஆம்எனக் கூறியது அவர் எவ்வாறு நம்பிக்கையின் மாதிரியாகத் திகழ்ந்தார் என்பதை எடுத்துரைக்கின்றது. அது மட்டுமல்ல; நம்பிக்கை யாளராக அவர் திகழ்ந்ததால் அவர் எதிர்கொள்ள விருந்த பாடுகளையும் இச்சுற்றுமடல் சுட்டிக்காட்டு கின்றது. இயேசு சிலுவையில் தொங்கியபோது, ‘அம்மா, இவரே உம் மகன்எனத் தம் சீடர்களுக்குத் தம் தாயை வழங்கியதன் மூலம் உலகிற்கே தாயாகும் பேறு மரியாவுக்கு வழங்கப்பட்டது.

பயணத் திருஅவையின் மையத்தில் மரியா:

இயேசுவின் பணி வாழ்வில் மட்டுமல்ல; திரு அவையின் பிறப்பிலும் மரியா சிறப்பான பங்காற்றி யுள்ளார். இவ்வாறாக, கிறித்தவர்களாகிய நாம், மரியா வழியாக இயேசுவைக் காணவும், இயேசு வழியாக மரியாவைக் காணவும் அழைக்கப்படு கின்றோம்.

தாய்மையின் பணி:

மீட்பரின் தாயாக மட்டுமின்றி, நம்பிக்கையாளர் கள் அனைவருக்கும் அவர் தாயாக உள்ளார். இயேசு மட்டுமே மீட்பராக இருந்தாலும், இந்த மீட்பரோடு இணைந்து இருப்பவராக மரியா இருக்கின்றார். இதன் மூலம் மீட்பைத் தேடும் அனைவருக்கும் தம் தாய்மையின் அன்பை அவர் வழங்கி வருகின்றார்.

இவ்வாறு மரியாவின் ஆண்டு நமக்கும், மீட்பரின் அன்னைக்கும் இடையே இருக்கும் உறவைப் புதுப்பிக்கவும், உறுதிப்படுத்தவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

4. பெண்ணின் மாண்பு (Mulieris dignitatem = The Dignity of a Woman)

1988, ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், ‘பெண்ணின் மாண்புஎனும் திருத்தூது மடலை வெளியிட்டார். திருத்தந்தை அவர்கள் 1987-1988 ஆம் ஆண்டைமரியாவின் ஆண்டாகஅறிவித்ததன் நினைவாக இந்தத் திருத்தூது மடலை எழுதினார். பெண்களின் அழைப்பையும், மாண்பையும் மையப்படுத்தியதாக இம்மடல் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மனிதருமே கடவுளின் சாயலிலும், உருவிலும் படைக்கப்பட்டவர். அவ்வகையில் பெண்களும், ஆண்களுக்குச் சமமானவர்கள். எனவே, அனைவரும் ஓர் அன்புச் சமூகமாக வாழ அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே இம்மடலின் மையச் சிந்தனை ஆகும். ஆகவே, பெண்கள் ஆண்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும் எனக் கூறுவது இறை விருப்பம் அல்ல; இது மானுடப் பாவத்தால் விளைந்த ஒன்றாகும் என்கிறது இம்மடல். இப்பின்னணியில்தான் இயேசு எவ்வாறு தமது பணியில் பெண்களின் மாண்பைப் போற்றி னார் என்றும், பெண்களின் விடுதலைக்கு அவர் எத்தகைய பணியாற்றினார் என்பதையும் இம்மடல் கூறுகின்றது.

மேலும், திருஅவையிலும், உலகிலும் பெண் களின் பல்வேறு பணிகளைப் பற்றி இம்மடல் எடுத் துரைக்கும்போது, பெண்களின் தாய்மை, கன்னிமை ஆகியவற்றை விரிவாக விளக்குகின்றது. தாய்மை, கன்னிமை ஆகிய இவ்விரண்டும் மரியாவின் வாழ்வில் முழு அர்த்தம் பெறுகின்றன. காரணம், கன்னியாக இருந்தே கடவுளின் தாயாகும் பேறு பெற்றார் மரியா. இவ்வாறு, கன்னிமையும், தாய்மை யும் அவரில் இணைந்தே காணப்பட்டன. இவ் விரண்டும் ஒன்று மற்றொன்றுக்கு எதிரானது அன்று. இவ்வாறு, தாய்மையையும், கன்னிமையை யும் இருவித அழைப்புகளாகக் கண்டு மானிடம் - குறிப்பாகப் பெண்கள் - வாழ்வதற்கு முன்வர வேண்டும் என இம்மடல் அழைப்பு விடுக்கின்றது.

(தொடரும்)

Comment