No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம்

3. இயேசு சபையினரின் பழைய மதுரை மறைப்பணித்தளம்

3.2. பண்டார சுவாமிகளும், உபதேசியார்களும்

பிராமணர்கள் மற்றும் உயர் குடிமக்களை மனமாற்றுவதற்காகப் பிராமண சந்நியாசிகளாக வாழ்ந்த இயேசு சபைத் துறவிகள் வெளிப்படையாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதியினருக்கு நற்செய்தி அறிவிக்க இயலவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான பறையர் கிறிஸ்தவர்கள் ஆன்மிக வழிகாட்டியின்றி தவித்தனர். எனவே, பிராமணர் அல்லாத மக்களின் நலன் கருதி அவர்களுக்கென்று தனியாகப் பணியாற்ற இயேசு சபையினர் தங்களுக்குள் ‘பண்டார சுவாமிகள்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் பிராமண சந்நியாசிகளிடம் வெளிப்படையான தொடர்பு வைத்துக்கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதியினர் பகுதியில் தங்கள் குடியிருப்புகளை  அமைத்துக் கொண்டு நற்செய்தி பணியாற்றினர்.

1638 இல் தலித் மக்கள் மத்தியில் பணியாற்றும் சூழ்நிலைப் பற்றி மறை மாநில அதிபர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவோடு விவாதிக்க நொபிலி கொச்சின் சென்றார். அப்போது பெட்ரோ தெ பாஸ்டோ என்ற அருள்சகோதரர், தலித் மக்களிடம் பணியாற்ற வேண்டிய அவசியத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்து, பண்டார சுவாமிகள் அமைப்பு நிறுவிட தந்தை நொபிலிக்குத் துணை நின்றார்.

ஒரு சில பிராமணர்களை மனம் திருப்ப போராடிக் கொண்டிருக்கும் போது, ஏராளமான தலித்துகள் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தது, மறைப் பணியாளர்களுக்கு ஒரு  புதிய செய்தியைத் தந்தது. எனவே, 1640 இல் பறையர் மக்களுக்குப் பணியாற்ற பண்டார சுவாமிகள் எனும் புதிய அமைப்பு மதுரை மறைத்தளத்தில் உருவாக்கப்பட்டு, பல்தசார் தெ கோஸ்தா முதல் பண்டார சுவாமியாக நியமிக்கப்பட்டார். இவ்வமைப்பில் மனுவேல் ஆல்வாரெஸ், புசே, லேனேஸ், அந்தோணி புரொ வென்சா, ஆன்ரூ பெரேரா, வீரமாமுனிவர், புனித அருளானந்தர் ஆகியோர் பண்டார சுவாமிகளாகப் பணியாற்றினர். இவர் கள் வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதியினரிடம் இயல்பாகச் சென்று நற்செய்தி அறிவித்தனர். ஆனால், பிராமணர்களிடம் மட்டும் செல்ல முடியவில்லை. ஆனால், பிராமண சந்நியாசிகளைவிட பண்டார சுவாமிகள் புகழ்பெற்று விளங்கினர். பல்தசார் தெ கோஸ்தா, மனுவேல் ஆல்வாரெஸ் சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். கிறிஸ்தவத்தில் சமத்துவம், சகோதரத்துவம் ஏற்பட வேண்டுமென்ற விழிப்புணர்வைத் தந்தனர். சாதிய மரபுகள், அடையாளங்களை அப்புறப்படுத்தி, உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வேறுபாடில்லாமல் அனைவரையும் ஆலய வழிபாடுகளிலும், சமய விழாக்களிலும் ஒன்றுதிரட்டிச் சமமாக அமர வைத்தனர். இதனால், சாதி வெறியர்களின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்கள்.

ஒருமுறை 1644 ஜனவரி 17 அன்று திருச்சியில் திருப்பலி முடிந்தவுடன், மார்டின் ஆல்வாரெசும், ஆறு பிராமணக் கிறிஸ்தவர்களும் ஆலயத்திலே கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு இருட்டறையில் அடைக்கப்பட்டனர். அதில் 12 வயது சிறுவனும் அடங்குவான். அவர்களைக் கைது செய்ததற்கு முன்பாக, பெயர்களைக் காவலர்கள் குறிப்பெடுக்கும்போது, பெண் ஒருவர் கோபம் கொப்பளிக்க அவர்களிடம் சென்று, “என் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள், நானும் கிறிஸ்துவுக்காக மரிக்கத் தயார்” என ஆவேசக் குரலெழுப்பினார். அருள்தந்தை ஆல்வா ரெசு கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஒரு போர்வீரர் உணர்ச்சிவசப்பட்டுத் தந்தையின் காலில் விழுந்து, ‘இயேசு கிறிஸ்து போற்றப்படுவாராக!’ என உரக்கக் கத்தினார்; அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுத் திருச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

முதல் தலித் கிறிஸ்தவர்

இராபர்ட் தெ நொபிலி மறைப்பணியின் நிமித்தம் சேலம் பகுதிகளுக்குச் சென்றுவிட, அவரால் திருமுழுக்குப் பெற்ற கம்மாளர் கிறிஸ்தவர் (பெயர் தெரியவில்லை) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த இயேசுயடியான் என்ற வெள்ளாளர் திருச்சியில் ஆர்வமுடன் மறைப்பணி புரிந்தனர். பறையர் சமூகத் தைச் சார்ந்த வள்ளுவன் என்று அழைக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பண்டார சுவாமிகள் 2000 சீடர்களைக் கொண்டிருந்தார். இவர் மதுரை நாயக்கரின் நன்மதிப்பையும், சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தார். இவரின் சீடராக விளங்கிய கம்மாளக் கிறிஸ்தவர், நொபிலி எழுதிய ‘உண்மை சமயத்தின் அடையாளங்கள்’ என்ற நூலை வள்ளுவனுக்கு வழங்கினார். நொபிலியின் தெளிவான சிந்தனை, ஆழமான ஆன்மிகக் கருத்துகள் வள்ளுவனைக் கிறிஸ்தவ நெறியின்பால் பெரிதும் ஈர்த்தன. எனவே, கிறிஸ்தவராக விரும்பினார். கம்மாளக் கிறிஸ்தவர், குமார மங்கலத்தில் தங்கியிருந்த நொபிலியிடம் 1626 ஜூலை 31 அன்று அவரை அழைத்துச் சென்றார். பிராமணச் சந்நியாசியான நொபிலி தாழ்த்தப்பட்டவரோடு உறவாடுவதில்லை, இருப்பினும், வள்ளுவனுக்கு மட்டும் ஒரு மாத கால மறைக்கல்வி புகட்டி, தனது கரங்களால் திருமுழுக்கு வழங்கி ‘ஹிலரி’ (முக்தியுடையான் (அ) மீட்பு அடைந்தவர்) என்ற பெயரைச் சூட்டினார். இவர் சேலத்திற்கு அருகிலுள்ள மேலமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருமுழுக்குப் பெற்றப் பிறகு திருச்சி திரும்பி நற்செய்திப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் வசித்த தனது உறவுகள் 700 பேர் திருமுழுக்குப் பெற துணை நின்றார். மேலும், திருச்சி நகரில் மக்களின் துணையோடு தலித் கிறிஸ்தவர்களுக்காக ஒரு சிற்றாலயத்தை எழுப்பினார். அந்நாள்களில் இம்மானுவேல் மார்ட்டின் திருச்சியில் மறைப்பணியாற்றினார். அவர் ஒரு பிராமண சந்நியாசியாக இருந்ததால், வெளிப்படையாகத் தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிக உதவி வழங்க இயலவில்லை. எனவே, கம்மாளர் கிறிஸ்தவர் தலைமையேற்றுச் செப வழிபாடுகளை நடத்தினார். பறையர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் திரளாக பக்தியுடன் கூடி இறை வேண்டல் செய்தனர். 1644 ஆம் ஆண்டு பதிவின் படி மதுரை மறைப்பணித் தளத்தில் மொத்தம் 4,183 கிறிஸ்தவர்கள் (1208 சாதிப்பிரிவினர் & 2,975 தலித் பிரிவினர்) வாழ்ந்தனர்.

முக்தியுடையானின் சீடர்களுக்குப் பிராமண சந்நியாசி ஜெகனி வாசகர் சுவாமிகள் (இம்மானுவேல் மார்டின்) திருமுழுக்களித்தார் என அறிந்து, ‘தலித் மக்களோடு பழகும் இவர் ஒரு பரங்கி, போலி பிராமண சந்நியாசி’ என இவர்மீது சாதிய சமய அடிப்படைவாதிகள் கோபங்கொண்டனர். தந்தை இம்மானுவேல் மற்றும் முக்தியுடையானைக் கைது செய்து சிறையில் கொடூரமாகத் தாக்கினர். சிறைச்சாலை முழுவதும் இரத்தம் கொட்டிக் கிடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களின் செந்நீர் இரத்த ஆறாக ஓடியது. அவர்கள் எழுப்பிய ஆலயமும் தரைமட்டமாக்கப்பட்டது. நொபிலியின் தலையீட்டால் இருவரும் விடுவிக்கப்பட்டனர். தந்தை பல்தசார் தெ கோஸ்தா வேண்டுகோளுக்கிணங்க தந்தை இம்மானுவேல் மார்டின் கரூரில் நற்செய்திப் பணி ஆற்றினார். அவருக்குத் துணையாக மிகுந்த வாஞ்சையுடன் இறைப்பணியாற்றிய வேதியர் முக்தியுடையான், 1665 ஏப்ரல் 01 அன்று மரித்தார். இவரின் புனித வாழ்வும், நற்செய்திப் பணியும் என்றும் புகழுக்குரியது.                (தொடரும்)

Comment