
மரியன்னை மாநாடு – 2023
மரியா நம் பயணத்தின் வழித்துணை!
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வண்ணம் ‘மரியன்னை மாநாடு - 2023’ ஆகஸ்டு 12 முதல் 15 வரை மிகச் சிறப்பாக நடந்தேறியது. நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு, ஆன்மிகப் புத்தெழுச்சியை மக்கள் உள்ளத்தில் எழுப்பும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தில் ஆகஸ்டு 12 ஆம் நாள் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மரியா கடவுளின் தாயாக வாழ்நாள் முழுவதும் இயேசுவோடு உடன் பயணித்தது போல, நமது தனிப்பட்ட வாழ்விலும், திரு அவையிலும், சமூக வாழ்விலும் அன்னை தொடர்ந்து இன்றும் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்திய பேராயர், ‘ஒன்றிப்பு’, ‘பங்கேற்பு’, ‘பங்களிப்பு’ எனும் முப்பெரும் இலக்கை இம்மாநாடு வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
நமது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் இலக்கை மரியன்னை முன்னறிவித்தது, அதன் சிறந்த மாதிரியாக உடன் வருகிறார் என்பதை இம் மாநாடு உறுதிப்படுத்தியது. ஆகஸ்டு 13 அன்று நிகழ்ந்த மரியன்னை தியானம், சிறப்பு வழிபாடுகள், திருப்புகழ் நிகழ்வுகள் மரியன்னை பக்தியை வளர்ப்பதாக அமைந்திருந்தன.
செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடைபெற்ற மரியின் கருத்தரங்கம், மரியன்னைப் பற்றியக் கோட்பாடு, விவிலியப் பின்னணி, மரியா புகழ் பாடலின் விடுதலைக் கூறுகள், மரியா பக்தி முயற்சிகள் மற்றும் மரியன்னை ஒன்றிப்பின் அடையாளம் போன்ற தலைப்புகளில் மரியன்னை பற்றியத் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள வழிகோலியது. இறுதி நாளில் லொயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ‘நம் வாழ்வில் அன்னை’ எனும் கருத்தரங்கு சிறுவர்கள், இளையோர் மற்றும் பெரியவர்களை, சிறப்பாக பக்தச் சபைகளை மரியன்னை பக்தியில் வளர வழிகாட்டியது. அன்றைய நிகழ்வுகள், குறிப்பாக சாட்சியப் பகிர்வு, மரியன்னை கண்காட்சி, உலகப் புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலங்களிலிருந்து இணையவழி திருச்செபமாலை ஆகியவை மரியன்னைத் திருத்தலத்திற்கே சென்று வந்த அனுபவத்தைத் தந்தன. இறுதியாக, பேராயர் தலைமையில் நினைவுத் திருப்பலியும், அன்னையின் தேர்ப்பவனியும், நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் நாட்டிய நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.
ஏறக்குறைய எண்பதாயிரம் மக்கள் கலந்துகொண்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிற்கு, உரோமை‘மரியன்னையியல்’ திருப்பீடக் கல்வி கழகத்தின் தலைவர் பேரருள்தந்தை டெனிஸ் OSM அவர்கள் வத்திக்கான் பிரதி நிதியாகக் கலந்துகொண்டார். மரியன்னையின் புகழ் பாடி, அவர் வழித்துணை நாடி கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இறைமக்கள் கூடிய இம்மாபெரும் மாநாட்டை சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம், அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது. மேலும், மாநாட்டின் விழா குழுவினர் அனைவரும் நம் பாராட்டுக்குரியோரே!
Comment